கட்டுரைகள்

மகாத்மாவின் உயிரைப் பறித்த இந்து மதவாதம்

த.லெனின்

தேசப்பிதா காந்தியடிகளை 1948 ஜனவரி 30 அன்று  நாதுராம் கோட்சே சுட்டுக் கொலை செய்தார். சாவர்க்கரின் வழிகாட்டலில் 1934ல் இருந்து தொடர்ந்து 5 முறை அவரை கொலை செய்ய நடந்த முயற்சிகள் தோல்வி அடைந்தன. ஆறாவது முறை நடந்த முயற்சியில் காந்தியடிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்துத்துவ வாதிகள் திட்டமிட்டு அரங்கேற்றிய படுகொலைகளால் நாடே திகைத்து நின்றது. இப்படுகொலை குறித்து சங் பரிவார் அமைப்புகளும் அதன் தலைவர்களும் மகிழ்ச்சி  அடைந்தனர். ஆனால், வெளியுலகிற்கு மழுப்பலான பதில்களையே சொல்லி வருகின்றனர்.

முதல் முயற்சி

1934 ஜூன் 25 அன்று, காந்தியடிகள் புனேவுக்கு மாநகராட்சி அரங்கத்தில் உரையாற்ற தன் மனைவி கஸ்தூரிபாயுடன் மகிழுந்தில் சென்றார். இன்னொரு மகிழுந்தும் உடன் சென்றது. காந்தியும் அவரது மனைவியும் இருந்த மகிழுந்துக்கு முன்னரே, மற்றொரு மகிழுந்து மாநகராட்சி அரங்கத்தை சென்றடைந்தது. அந்த மகிழுந்து நுழைந்த சில நிமிடங்களில் அதனை நோக்கி எறியப்பட்ட கையெறி குண்டு வெடித்தது. இதனால் புனே மாநகராட்சித் தலைமை அதிகாரி, இரண்டு காவலர்கள் மற்றும் ஏழு உறுப்பினர்கள் பலத்த காயமடைந்தனர். காந்தி எந்தக் காயமுமின்றி உயிர் தப்பினார். இந்த நிகழ்வு குறித்து எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. யாரும் கைது செய்யப்படவில்லை. இது குறித்து கப்பூர் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாவது முயற்சி

மே 1944, காந்தியடிகள் அகா கான் அரண்மணை சிறையில் இருந்த போது, மலேரியாவால் பாதிக்கப்பட்டதால் விடுவிக்கப்பட்டார். மருத்துவர் அறிவுறுத்தலின் படி பஞ்ச்கனி மலை வாழ்விடத்தில் தங்கவைக்கப்பட்டார். அவர் இருப்பிடத்தை எப்படியோ அறிந்த நாதுராம் கோட்சே குழுவினர், 20 இளைஞர்களுடன் சிறப்பு பேருந்தில் அங்கு சென்றனர். மாலையில் அங்கு நடந்த பிரார்த்தனை கூட்டத்திற்குள் காந்தி எதிர்ப்பு முழக்கங்களை முழங்கிக்கொண்டே, மிகுந்த ஆவேசத்துடன் உள்ளே நுழைந்தனர். அங்கு பெரும் கூட்டம் திரண்டிருந்ததால், அவர்களால் காந்தியை நெருங்க முடியவில்லை. காந்தியை பத்திரமாக அவரது தொண்டர்கள் அழைத்துச் சென்று விட்டனர்.

மூன்றாவது முயற்சி

காந்தி முகமது அலி ஜின்னாவுடன் பேச்சுவர்த்தை நடத்துவதற்காக 1944 செப்டம்பர் 9 அன்று சேவா கிராம் ஆசிரமத்திலிருந்து மும்பைக்கு பயணமானார். வழியில் இந்து மகா சபாவினர் இடைமறித்து மும்பையில் முகமது அலி ஜின்னாவை சந்திப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். அந்தக் கூட்டத்தின் தலைவனாக இருந்த நாதுராம் கோட்சே காந்தியைக் கொல்ல முயன்றான். அங்கிருந்த காவலர்கள், “எதற்காக காந்தியை கொல்ல முயற்சிக்கிறாய்?” என்று அவர்களிடம் கேட்டதற்கு, சாவர்க்கர் கட்டளைப்படி அவரைக் கொல்லவேண்டும் என்று கூறியதாக டாக்டர் சுசிலா நாயர் கப்பூர் ஆணையத்தில் அளித்த சாட்சியத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் அதே ஜின்னாவின் முஸ்லிம் லீக் அமைச்சரவையில் தான் இந்து மகாசபை தலைவர்களான சியாமா பிரசாத் முகர்ஜி உள்ளிட்டவர்கள் கூட்டணி அமைச்சர்களாக இருந்து செயல்பட்டார்கள். அங்கு வராத ஆத்திரம் காந்தியின் மீது மட்டும் எப்படி வந்தது? ஏனெனில், காந்தி இந்து – முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தினார். மத சார்பற்ற கொள்கையைப் பேசினார் என்பதே காரணமாகும்.

நான்காவது முயற்சி

1946 ஜூன் 29 அன்று காந்தி பயணித்த சிறப்புத் தொடர்வண்டி மும்பை அருகே தடம்புரண்டது. இருப்புப்பாதையின் கடையாணிகளை விசமிகள் திட்டமிட்டு கழற்றியதால்தான் தொடர்வண்டி தடம்புரண்டதாக அதன் ஓட்டுநர் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். காந்தி பயணிக்கும் சிறப்புத் தொடர்வண்டி மட்டுமே அந்த வழியில் செல்வதாக இருந்தது. வேறு எந்த வண்டியும் செல்லவில்லை என்பது மிகவும் முக்கியமானது.

ஐந்தாவது முயற்சி

1948 ஜனவரி 20, மதன்லால் பக்வா, சங்கர் கிஸ்தயா, திகம்பர் பட்கே, விஷ்ணு கார்கேற், கோபால் கோட்சே, நாதுராம் கோட்சே மற்றும் நாராயண் ஆப்தே ஆகியோர் டெல்லியில் உள்ள பிர்லா பவனில் கூடினர். காந்தியின் மீதான அடுத்தகட்டத் தாக்குதலுக்குத் திட்டமிட்டனர். காந்தி பேசும் மேடை அருகே வெடிகுண்டை வெடிக்கச் செய்வது, அப்பொழுது பதற்றம் ஏற்படுதைப் பயன்படுத்தி காந்தியை சுட்டுக்கொல்வது என முடிவெடுத்தனர். திகம்பர் பக்டே, சங்கர் கிஸ்தி இருவரில் யாராவது ஒருவர் நிலைமைக்குத் தகுந்தார்போல் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது என்ற தீர்மானத்தின்படிப் புறப்பட்டனர். அதன்படி தனியார் வாகனத்தை பயன்படுத்தி காந்தி பேசும் மேடையருகே குண்டை வெடிக்க வைக்க மத்னலால் பக்வா முயற்சித்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக குண்டு வெடிக்கவில்லை. இதனால் ஐந்தாவது முயற்சியும் தோல்வியுற்றது. மதன்லால் பக்வா தவிர மற்றவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். காவல்துறை மதன்லால் பக்வாவை விசாரித்ததில் உண்மைகள் தெரிய வந்தன. ஆனால் காவல்துறையால் உடனிருந்தவர்களை பிடிக்க முடியவில்லை. அவர்கள் தங்கியிருந்த இருப்பிடத்துக்குச் சென்ற போது தப்பிச் சென்று விட்டதாக காவல்துறை பதிவுகள் அலட்சியமுடன் கூறுகின்றன.

இறுதி முயற்சி – மகாத்மா சுட்டுக்கொலை

1948 சனவரி 30 அன்று, புதுடெல்லியில் உள்ள பிர்லா மாளிகையில் வல்லபாய் படேலிடம் காந்தியடிகள் பேசிவிட்டு, தன் பேரனின் மருமகளான அபா காந்தி, கொள்ளுப்பேத்தி மனுபென் காந்தி துணையுடன் மாலை கூட்டுப் பிரார்த்தனைக்கு சென்றார். அப்போது, நாதுராம் கோட்சே தனது பெரெட்டா எம்-1934 அரை தானியங்கி துப்பாக்கியை எடுத்து காந்தியை மூன்று முறை சுட்டான். ‘ஹே ராம்’ என்று இரண்டு முறை உயிர் போகும் தருணத்திலும் கூட காந்தி கூறியதாக கொள்ளுப்பேத்தி மனுபென் கூறியுள்ளார். காந்தியின் உடலில் பாய்ந்த கோட்சேவின் துப்பாக்கிக் குண்டுகள், சில நிமிடங்களில் அவரது உயிரைப் பறித்துவிட்டன.

டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் துணைத்தூதரான ஹெர்பர்ட் ரெய்னர், கோட்சேவை முதலில் பிடிக்கிறார். ராயல் இந்திய விமானப்படை காவலர்கள் அவனிடம் இருந்த துப்பாக்கியை பறிக்கின்றனர். அங்கு திரண்டிருந்த தேசபக்தர்கள்,  கோட்சே மீது தாக்குதல் நடத்த தொடங்கினர். அவனை காவல்துறையினர் மீட்டு அழைத்துச் சென்றனர். துப்பாக்கியால் சுடும் போது, கோட்சே தனது கையில் இஸ்மாயில் என பச்சை குத்தி இருந்தது பின்பு தெரியவந்தது.

தேசப்பிதாவை படுகொலை செய்ததை இந்துமகா சபா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் இனிப்பு வழங்கி கொண்டாடியதும், அவர்கள் மீது மக்கள் எதிர்தாக்குதல் நடத்திய சம்பவங்களும் செய்திகளாக வெளிவந்தன.

மகாத்மா காந்தியடிகளின் உயிரைப் பறித்ததில் இருந்தே இந்திய வகைப்பட்ட பாசிசத்தின் கொலை பாதகங்கள் அரங்கேறத் தொடங்கின.

கட்டுரையாளர்: த.லெனின்
மாநிலக்குழு உறுப்பினர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button