கட்டுரைகள்

பங்களிப்புக்கேற்ற நிதி பெறுவது மாநிலங்களின் உரிமையாக வேண்டும்

மே.து.ரா.

மாநிலங்களுக்குச் சேரவேண்டிய ஒன்றிணைந்த விற்பனை மற்றும் பணிகளுக்கான வரிப் பங்கினை உடனுக்குடன் வழங்கவேண்டிய நிலையிலிருக்கின்ற ஒன்றிய அரசு, கூடுதலாகக் கடந்த அக்டோபர் 31 அன்று ரூ.1,09,019 கோடிகளை விடுவித்துள்ளது..

உ.பி.க்கு ரூ.19,208 கோடி, பீகாருக்கு ரூ.10,845 கோடி, ம.பி.க்கு ரூ.8,010 கோடி, மேற்கு வங்கத்துக்கு ரூ.7,866 கோடி, ஆந்திராவுக்கு ரூ.4,597 கோடி, கர்நாடகாவுக்கு ரூ.4,504 கோடி, தமிழ்நாட்டுக்கு ரூ. 4,466 கோடி, கேரளாவுக்கு ரூ. 2,597 கோடி, தெலுங்கானாவுக்கு ரூ. 2,370 கோடி எனப் பகிர்வு அமைந்துள்ளது.

பா.ச.க. மாநிலங்களுக்குப் பெருந்தொகை

தென்னகத்தின் அய்ந்து மாநிலங்களுக்கும் கூட்டாக ரூ.18,534 கோடி வழங்கப்பட்டிருப்பினும், உ.பி.க்கு மட்டும் ரூ.19,208 கோடி சென்றுள்ளது. இன்னும் சொல்லப்போனால் பா.ச.க. ஆளும் மாநிலங்களுக்குப் பெருந்தொகை கொட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.

விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல்களை எதிர்கொண்டுள்ள உ.பி., உத்தரகண்ட், கோவா, மணிப்பூர், குசராத் ஆகிய மாநிலங்களில் தற்போது பா.ச.க. ஆட்சி நடைபெறுகிறது. பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியும் இமாச்சலத்தில் காங்கிரசும் ஆட்சி செய்கின்றன.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் மாநிலங்களுக்குத் தரப்பட்டுள்ள உரிமைகளைப் பறிக்கவும், சட்டப்பேரவை நிறைவேற்றிய சட்டங்களை முடக்கவும், தொழில் வளர்ச்சிகளைத் தடுக்கவும், முன்னேற்ற வழியில் செல்வதை முறியடிக்கவும் ஒன்றிய அரசு பல இடையூறுகளைச் செய்து வருகிறது என்பது தெரிந்ததுதான். இதன் அடிப்படையில் மாநில உரிமைகளை வென்றெடுப்பதற்காக பா.ச.க. அல்லாத ஆட்சியினரும் கட்சியினரும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

சமூக, பொருளிய, அரசியல், பண்பாட்டுப் போராட்டங்களாக அவை தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

அரசமைப்புச் சட்டம் ஏற்படுத்திய ஏற்றத்தாழ்வுகள்

ஆயினும், இத்தகைய உரிமைகளைப் பெறுவது மட்டுமே உண்மையான தன்னாட்சியாக அமைந்து விடாது என்பதை இத்தகைய நிதிப் பகிர்வுகள் தெளிவுபடுத்துகின்றன. அரசமைப்புச் சட்டத்தின் பிற உரிமைகள் மட்டுமல்லாது, நிதிப் பகிர்விலும் பல ஏற்றத்தாழ்வுகளை இந்திய ஒன்றியத்தின் அரசமைப்புச் சட்டம் உருவாக்கித் தந்துள்ளது.

இந்தச் சிக்கல் அல்லது தடை அல்லது நெருக்கடி இதோடு நின்று விடவில்லை. மாநிலங்களுக்குத் தருகின்ற நிதிப் பகிர்வுக்குப் பல்வேறு அளவுகோல்களை ஒன்றிய அரசு வகுக்கிறது. வருவாய் வேறுபாடு (45%), மக்கள் தொகை (15%), மாநிலத்தின் பரப்பு (15%), காடுகள் மற்றும் சுற்றுச்சூழல் நிலை (10%), பிறப்பளவு (12.5%), வரி முன்னெடுப்பு முயற்சிகள் (2.5%) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு 25ஆவது நிதி ஆணையம் நிதிப் பகிர்வினைச் செய்தது.

ஆனால், 26ஆவது நிதி ஆணையக் காலப் பகுதிக்காகச் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, மக்கள் தொகை (17.5), மக்கள் செயல் திறன் (10%), மாநிலப் பரப்பு (10%), காடுகள் (10%), நாட்டின் உற்பத்தியில் பங்களிப்பு (10%), கூட்டு உற்பத்தியில் தனியர் பங்களிப்பு (42.5%) எனப் புதிய கணக்கீடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன

வளர்ச்சி காணாத மாநிலங்களுக்கு முன்னுரிமை

இத்தகைய அளவீடுகள் அனைத்தும் ஏதோவொரு வகையில் வளர்ச்சி அடையாத, ஆனால் மக்கள் தொகை மிகுந்துள்ள மாநிலங்களுக்குச் சார்பாகவே அமைந்திருக்கின்றன.

கல்வியறிவு, நுட்ப ஆற்றல், தொழில் வளர்ச்சி, வேளாண் உற்பத்திப் பெருக்கம், வேலை வாய்ப்புகள், போக்குவரவு, வாங்கும் ஆற்றல், உடல் நலம், மகளிர் – குழந்தைகள் முன்னேற்றம், குடிநீர், உணவுக் காப்பு, ஊரக வளர்ச்சி, சமூக நீதி முன்னெடுப்புகள், அனைவருக்கும் இணையான வாய்ப்புகள் என்பன போன்ற இன்னும் பல போக்குகளை உள்ளடக்கி வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அடிப்படைகளை அமைத்துத் தந்திருக்கின்ற கூறுகள் எவையும் கணக்கில் கொள்ளப்படவில்லை.

இந்திய ஒன்றியத்திலுள்ள மாநிலங்களை உ.பி., பீகார் போன்று அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கிக்கொள்ளாத மாநிலங்கள், தமிழ்நாடு, கேரளம் போன்று அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கிக்கொண்ட மாநிலங்கள் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

அத்துடன் தமிழ்நாடு, கேரளம் போன்று மாநிலம் முழுவதும் பரவலான வளர்ச்சி, மராட்டியம், குசராத் போன்று குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் வளர்ச்சி என்றும் பாகுபடுத்தலாம்.

பரவலாக வளர்ச்சி கண்டு, ஒரு குறிப்பிட்ட கட்டத்தை எட்டியுள்ள மாநிலங்களுக்கான அடிப்படை வேண்டுதல் வேறு. இன்னும் முழுமையாக வளர்ச்சி பெற்றுவிடவில்லை என்றாலும், அவை அடுத்த கட்டத்தை எட்டியுள்ளன. வளர்ச்சி அடையாத மாநிலங்கள், அடுத்த கட்டத்தை அடைவது என்பது உடனடி வேண்டலாக இருக்கிறது. இரண்டு வேறுபட்ட நிலைகளையும் எண்ணித் திட்டங்களை வகுக்கவேண்டும்.

வரி வாய்ப்புகள் இல்லாத மாநிலங்கள்

முன்னர், விற்பனை வரி மாநிலங்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தது. உற்பத்திப் பெருக்கம், வாங்கும் ஆற்றல் ஆகியவற்றுக்கேற்பப் பொருள்களின் விற்பனை வரியை உயர்த்துவதும் தாழ்த்துவதும் வழமையாக இருந்தது. இன்று இவற்றையெல்லாம் ஒன்றிய அரசுதான் முடிவு செய்கிறது. பத்திரப் பதிவு, மது விற்பனை போன்றனவே இப்போது மாநிலங்களுக்கு பெரிதும் வருவாய் தருகின்றன.

ஆனால், ஒன்றிய அரசுக்குத் தனியர் வருமான வரி, நிறுவன வருமான வரி, சொத்து வரி, மூலதனப் பயன் வரி, மரபுரிமை வரி, கொடை வரி பங்குகள் அல்லது முதலீடுகள் விற்பனை வரி போன்றவை நேரிடையான வரிகளாக வருகின்றன. இவை ஒன்றிய அரசின் வருவாயில் 61% அளவில் மிகுந்துள்ளன.

ஒன்றிணைந்த விற்பனை மற்றும் பணிகள் வரி, ஏற்றுமதி இறக்குமதி வரிகள், உள்நாட்டு உற்பத்தி வரிகள் போன்ற மறைமுகமாகப் பெறும் வரிகள் 39% உள்ளன. இவ்வாறெல்லாம் ஒன்றிய அரசுக்குக் கிடைக்கும் வருவாய், நாட்டின் காப்பு, சாலை வளர்ச்சி, தொடர் வண்டிக் கட்டமைப்புகள் போன்ற ஒன்றிய அரசின் நேரடியான துறைகளுக்குச் செலவிடப்படுகின்றன. வருவாயில் 41% மட்டுமே மாநிலங்களுக்குப் பிரித்துத் தரப்படுகிறது.

இவையன்றி, குறிப்பிட்ட சில பணிகள் அல்லது நோக்கங்களுக்காகத் தற்காலிகமாக வரிகள் பெறவும், வரிகளின் மேல் கூடுதல் வரிகளை விதிக்கவும் ஒன்றிய அரசுக்கு அரசமைப்புச் சட்டம் உரிமை தந்துள்ளது.

தற்காலிகமாகக் கூடுதல் வரிகளாகத் தொடங்கி, தற்போது நிலையானவையாக அவை மாறிவிட்டன. உடல் நலன், கல்வி, வேளாண் கட்டமைப்பு மேம்பாடு போன்ற நோக்கங்களை நிறைவேற்ற, பெட்ரோல், டீசல், தனியர் வருவாய், நிறுவன வருவாய், உற்பத்தி, விற்பனை போன்றவற்றுக்கான வரிகளோடு இத்தகைய கூடுதல் வரிகள் பெறப்படுகின்றன. இவை மறைமுக வரியில் ஏறக்குறைய 14% ஆகிறது.

2026-27ஆம் ஆண்டில் ரூ. 6.05 லட்சம் கோடி கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இவ்வாறு கூடுதல் வரிகளில் கிடைக்கின்ற வருவாய் மாநிலங்களுக்குப் பிரித்துத் தரப்படுவதில்லை. பிரித்துத் தரப்படும் தொகையில் இத்தகைய கூடுதல் வரிகள் உள்ளடங்கவில்லை.

மேலும், வரியில்லா வருவாய் என்ற பிரிவிலும் ஒன்றிய அரசுக்கு 10% அளவுக்கு நிதி கிடைக்கிறது.

மூன்று முரண்கள்

இங்கு மூன்று வகையான முரண்களை உற்று நோக்கவேண்டும். முதலாவது, ஒன்றிய அரசின் பொறுப்பிலுள்ள துறைகளின் செலவுகளுக்காகும் தொகையைவிடப் பல பங்கு மிகுதியான நிதியினைப் பெறும் வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

அடுத்து, அரசமைப்புச் சட்டம் தந்துள்ள உரிமைகளைப் பயன்படுத்திச் செயல்படக்கூடிய அளவுக்கு மாநிலங்களிடம் வருவாய் வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை.

மூன்றாவதாக, மாநில அரசுகள் ஏற்படுத்தித் தரும் கட்டமைப்புகள் வழியாக ஒன்றிய அரசு பெறுகின்ற வரி வருவாயில் மாநில அரசுக்குரிய பங்கு தரப்படுவதில்லை.

நேரிடையான வரி, மறைமுக வரி என்று எதை எடுத்துக்கொண்டாலும், அந்த வரிகள் அனைத்தும் மாநிலங்களுடைய வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றின் பயனாகவே கிடைக்கின்றன. தொழில் வளர்ச்சி, உற்பத்திப் பெருக்கம், தனியர் வருவாய், நிறுவன வருவாய் என அனைத்தும் மாநில அரசின் தனிப்பட்ட நிதிச் செலவின் பயனாக ஏற்படுத்தப்பட்ட கட்டமைப்புகளால்தான் கிடைக்கின்றன. இதனால் மாநில மக்கள் வாங்குகின்ற ஆற்றலைப் பெருக்கிக்கொள்வதால், பயன்படு பொருள்கள் விற்பனையாகின்றன. இதனால், விற்பனை வரி போன்றவை மட்டுமல்லாமல், வருமான வரியும் ஒன்றிய அரசுக்குச் செல்கிறது.

தொடர்வண்டிகள், தொலைத் தொடர்புகள், அஞ்சல்கள் எனப் பல்வேறு பணிகளை ஒன்றிய அரசு செயல்படுத்தினாலும், அவற்றின் வழியாக ஒன்றிய அரசு நிதியை ஈட்டுகிறது. தொடர் வண்டிக் கட்டமைப்புகளில் மாநில அரசின் நிதிப் பங்களிப்பு ஏதோவொரு வகையில் உள்ளடங்கியிருக்கிறது. இவற்றின் பயன்பாடு மக்களுடைய செலவிடும் ஆற்றலைப் பொறுத்து அமைகிறது.

குடிமைப் பொருள்கள், முதியோர், மகளிர் பணக்கொடை, கட்டணமில்லாப் பேருந்துப் பயணம், வேளாண்மைக்குத் தொகையில்லா மின் இணைப்புகள் போன்றனவும் மாநில அரசின் தனிப்பட்ட நிதியிலிருந்து செயல்படுகின்றன.

ஆனால், இவற்றைப் பயன்படுத்திப் பெறப்படும் வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றின் பயன்களை ஒன்றிய அரசு அள்ளிச் சென்றுவிடுகிறது.

மாநிலத்தின் பங்களிப்பு மதிக்கப்படவேண்டும்

ஒரு மாநிலத்தில் உருவாகும் வரி வருவாய் அளவினை அறிவியல் அடிப்படையில் கணக்கெடுத்து, அதனை அடிப்படையாகக் கொண்டு ஒன்றிய அரசின் நிதிப் பகிர்வு இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டிய சூழல் இப்போது உருவாகிவிட்டது.

அடுத்து இந்த வரிகளைப் பெறுகின்ற உரிமைகளைக்கூட மாநில அரசுகள் பெறவேண்டும் என்னும் வேண்டுகோளும் முன்வைக்கப்பட வேண்டும்.

சமூக, அரசியல், பண்பாட்டு விடுதலை என்பவை பொருளிய விடுதலையோடு இணைந்தவை. பொருளியத் தன்னிறைவு அடையாமல் பிற உரிமைகள் கிடைத்தாலும், அவற்றைப் பயன்படுத்த இயலாத சூழல்கள் ஏற்படலாம்.

எனவே, தன்னாட்சி என்பதுடன், வரிகளைப் பெறுவதிலும் பகிர்வதிலும் உரிய பங்குவேண்டும் என்பதை முன்நிறுத்தவேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button