Uncategorizedகட்டுரைகள்

பேரிடரையும் புறக்கணிக்கும் பேரரசா ஒன்றிய அரசு?

பேராசிரியர் ராஜன்குறை கிருஷ்ணன், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுடெல்லி

வெந்த புண்­ணில் வேல் பாய்ச்­சு­வது என்று சொல­வ­டை­யா­கக் கூறு­வார்­கள். தமிழ்நாடு சந்­தித்த கடும் இயற்­கைப் பேரி­டர்­க­ளுக்­கான கூடு­தல் நிவா­ரண நிதி கோரிக்கை குறித்து ஒன்­றிய நிதி­ய­மைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன் பேசிய ஆண­வப் பேச்சு அனைத்­துத் தரப்­பி­ன­ரை­யும் கொந்­த­ளிக்க வைத்­துள்­ளது.

கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்ள லட்­சக்­க­ணக்­கான மக்­க­ளைக் குறித்து எந்த கவலையும் இல்­லாத, கரு­ணை­யும் இல்­லாத ஒன்­றிய நிதி­ய­மைச்­ச­ரின் பேச்சு ஆட்சியா­ளர்­க­ளின் மமதை எந்த அளவு செல்­லும் என்­ப­தையே காட்­டு­கி­றது. இத்தனைக்­கும் அவர் தப்­பும், தவ­று­மா­கப் பேசி­னா­லும், தமி­ழி­லேயே பேசி­ய­து­தான் மக்க­ளின் வேதனை அதி­க­ரிக்­கக் கார­ணம்.

வர­லாறு காணாத, வானிலை ஆய்­வு­க­ளின் கணிப்­பு­க­ளின் எல்­லைக்கு அப்­பாற்­பட்ட கடும் மழைப்­பொ­ழி­வு­கள் தலை­ந­கர் சென்­னை­யை­யும், அதை அடுத்து தென் மாவட்டங்­க­ளை­யும் நிலைகுலை­யச் செய்­துள்­ளன. முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­க­ளா­லும், அயரா களப்­ப­ணி­யா­லும் மக்­களை ஒட்­டு­மொத்த பாதிப்­பி­லி­ருந்து கூடி­ய­வரை காத்­துள்­ளது முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலை­மை­யி­லான தமிழ்­நாட்டு அர­சாங்­கம். ஆனா­லும் இயற்­கைப் பெருஞ்­சீற்­றம் மக்­க­ளின் வாழ்­வினை சீர்குலைத்துள்­ளது.

வழ­மை­யான பருவ கால மழை, வெள்­ளம், புய­லைத் தாண்­டிய இந்த கடும் பேரி­ட­ரின் தாக்­கத்தை எதிர்­கொண்டு மீட்பு பணி செய்ய கூடு­தல் நிவா­ரண நிதி கேட்டு ஒன்­றிய அரசை அணு­கி­யது தமிழ்­நாடு அரசு. உட­ன­டி­யாக 2,000 கோடி ரூபாயை தேசிய பேரிடர் நிதி­யி­லி­ருந்து இடைக்­கால நிவா­ர­ண­மாக ஒதுக்­கச் சொல்லி கோரி­யது.

இது தேசிய பேரி­டர் நிவா­ரண நிதி உரு­வாக்­கப்­பட்­ட­தற்­கான மூல­கா­ர­ணத்தை ஒட்டிய கோரிக்­கை­யா­கும். இது விதி­மு­றை­க­ளுக்கு அப்­பாற்­பட்­டதோ, தேசிய பேரி­டர் நிதி­யின் நோக்­கங்­க­ளுக்கு அப்­பாற்­பட்­டதோ அல்ல. அந்த நிதி­யின் நோக்­கமே வழக்கத்தை விட கடு­மை­யான இயற்­கைச் சீற்­றங்­களை மாநி­லங்­கள் சமா­ளிக்க கூடு­தல் நிதி­யைத் தரு­வ­து­தான்.

பிறகு எந்த கார­ணத்­தால் ஒன்­றிய நிதி­ய­மைச்­சர் கடும் சொற்­க­ளைப் பேச வேண்டும்? ஏன் அமைச்­சர் உத­ய­நிதி அமைச்­ச­ரின் மரி­யா­தைக்­கு­ரிய அப்பா வீட்டு சொத்தை கேட்­க­வில்லை என்று காட்­ட­மா­கச் சொல்ல நேர்­கி­றது? ஏன் தின­ம­லர் நாளி­தழ் உத­ய­நிதி காசுக்­காக நிர்­மலா சீதா­ரா­ம­னி­டம் கையேந்­து­வ­தாக கேலிச் சித்தி­ரம் வரை­கி­றது?

இதற்­கெல்­லாம் அடிப்­ப­டைக் கார­ணம் ஒன்­றிய அர­சி­டம் குவிந்­துள்ள அதி­கா­ரம். அதனை கூட்­டாட்சி குடி­ய­ர­சாக உண­ரச்­செய்­யா­மல் ஒரு பேர­ர­சாக உண­ரச் செய்வது­தான் என்று எண்­ணா­மல் இருக்க முடி­ய­வில்லை. இது சாதா­ர­ண­மாக கூட்டாட்­சி­க­ளில் ஏற்­ப­டக்­கூ­டிய நடை­மு­றைச் சிக்­கல் போன்­ற­தல்ல. கூட்­டாட்சி தத்துவத்­தையே குழி­தோண்­டிப் புதைக்­கக் கூடிய பா.ஜ.க. அர­சாங்­கத்­தின் ஆணவமா­கும். பிரச்­சி­னையை விரி­வாக அல­சு­வோம்.

தேசி­யப் பேரி­டர் நிதி­யும், மாநி­லப் பேரி­டர் நிதி­யும்

அர­சின் எல்லா நிதி­க­ளும் வரி வசூல் மூல­மா­கவே உரு­வா­கி­றது என்­பது வெளிப்­ப­டை­யா­னது. அதா­வது மக்­க­ளின் வரிப்­ப­ணமே அர­சின் மூலா­தா­ரம். இந்­திய ஒன்­றி­யத்­தைப் பொறுத்­த­வரை வரு­மான வரி என்­பது ஒன்­றிய அர­சி­னால் மட்­டுமே வசூ­லிக்­கப்­ப­டு­கி­றது. விற்­பனை வரி விதிப்பு மாநி­லங்­க­ளி­டம் இருந்­தது, சமீ­பத்­தில் ஜி.எஸ்.டி. என்ற வடி­வில் ஒன்­றிய அர­சி­னால் வசூ­லிக்­கப்­பட்டு பின்­னர் மாநி­லங்­க­ளுக்­குப் பகிர்ந்­த­ளிக்­கப்­ப­டு­கி­றது.

எனவே வரி வரு­வாய் என்­ப­தில் மாநில அர­சு­க­ளுக்­கென தனி­யான வரி விதிப்பு வாய்ப்­பு­கள் அதி­கம் இல்லை. ஒரு சில அம்­சங்­கள் மட்­டுமே அதன் வரு­வாய்க்கு வழி­யாக உள்­ளன. மாநில அரசு ஒன்­றிய அர­சின் நிதிப் பகிர்­வையே பெரு­ம­ளவு சார்ந்­துள்­ளது. ஆனால் வரி செலுத்­தும் மக்­கள் அனை­வ­ரும் வெவ்­வேறு மாநி­லங்­க­ளில்­தான் வாழ்­கி­றார்­கள் என்­ப­தை­யும் நாம் மறந்­து­விட முடி­யாது.

இந்த நிலை­யில் இயற்­கைச் சீற்­றம், பேரி­டர்­க­ளின் தாக்­கத்­தால் பாதிக்­கப்­ப­டும் மக்க­ளுக்கு நிவா­ர­ணம் அளிப்­பது மாநில அர­சு­க­ளின் பொறுப்­பா­கவே உள்­ளது. ஒன்றிய அரசு தேசிய பேரி­டர் நிதி (National Disaster Response Fund) என்று ஒன்றை செஸ் என்ற கூடு­தல் வரி­களை ஒரு சில பொருட்­கள் மேல் விதிப்­ப­தால் வசூ­லிக்­கி­றது. இந்த நிதிக்கு தனி நபர்­க­ளும் நன்­கொடை வழங்­க­லாம். பின்­னர் அதன் ஒரு பகு­தியை மாநில பேரி­டர் நிதி (State Disaster Response Fund) உரு­வாக்­கத்­துக்­குக் கொடுத்து விடுகிறது. ஒன்­றிய அரசு 75%, மாநில அரசு 25% பங்­க­ளித்து மாநில பேரி­டர் நிதி உருவாக்­கப்­ப­டு­கி­றது.

ஆனால், ஒரு மாநி­லத்­தில் ஒரு சந்­தர்ப்­பத்­தில் ஏற்­ப­டும் பேரி­ட­ரின் கடுமை அதி­க­மாக இருந்­தால் அந்த மாநி­லத்­தின் பேரி­டர் நிதி­யி­லி­ருந்து மட்­டும் அத­னால் நிவா­ர­ணம் அளிக்க முடி­யாது. அப்­ப­டிப்­பட்ட கடு­மை­யான பாதிப்­பு­கள் ஏற்­ப­டும்­போது மாநிலங்கள் ஒன்­றிய அர­சி­டம் கூடு­தல் ஒதுக்­கீட்டை தேசிய பேரி­டர் நிதி­யி­லி­ருந்து பெற்­றுக் கொள்­ள­லாம் என்­பதே இந்த நிதி­யின் நிர்­வாக விதி.

பேரி­டர் நிதி மேலாண்­மைக்­காக 2010ஆம் ஆண்டு வெளி­யி­டப்­பட்ட வழி­காட்டு நெறிமு­றை­க­ளின் விதி 3.1 தெளி­வாக இந்த நோக்­கத்­தைக் கூறு­கி­றது.

3.1 Natural Calamities of cyclone, drought, earthquake, fire, flood, tsunami, hailstorm, landslide, avalanche, cloud burst and pest attack considered to be of severe nature by Government of India and requiring expenditure by a State Government in excess of the balances available in its own State Disaster Response Fund (SDRF), will qualify for immediate relief assistance from NDRF.

தமி­ழில்: புயல், பஞ்­சம், நில­ந­டுக்­கம், நெருப்பு, வெள்­ளம், சுனாமி, ஆலங்­கட்டி மழை, நிலச்­ச­ரிவு, பனிப்­பா­றைச் சரிவு, மேக உடைப்பு மற்­றும் கிருமி தாக்­கு­தல் ஆகிய இயற்­கைப் பேரி­டர்­க­ளின் தன்­மையை கடு­மை­யா­ன­தாக ஒன்­றியஅரசு மதிப்பிடுவதும், மாநில அர­சின் வச­முள்ள மாநில பேரி­டர் நிதியை விட அதி­க­மான நிதி நிவா­ர­ணத்­துக்கு தேவைப்­ப­டு­வ­தும், தேசிய பேரி­டர் நிதி­யி­லி­ருந்து உட­னடி நிவா­ர­ணம் பெறு­வ­தற்­கான தகு­தி­க­ளா­கும்.

இதி­லி­ருந்து நாம் புரிந்­து­கொள்­வது என்ன? இரு விதங்­க­ளில் தேசிய பேரி­டர் நிதி, மாநில பேரி­டர்­க­ளைச் சந்­திக்க பகி­ரப்­ப­டு­கி­றது.

ஒவ்­வோர் ஆண்­டும் முன் தீர்­மா­னிக்­கப்­பட்ட அளவு நிதி மாநில பேரி­டர் நிதிக்கு வழமை­யான பாதிப்­பு­க­ளைச் சமா­ளிக்க தரப்­ப­டும் (தமிழ்­நாட்­டுக்கு இவ்­வ­கை­யில் வழங்­கப்­ப­டு­வது ரூ.900 கோடி).

மேல­தி­க­மா­கக் கடு­மை­யான பாதிப்­பு­கள் ஏற்­ப­டும்­போது மாநில அர­சு­கள் மேல­திக நிதி­யைக் கோரிப்­பெ­ற­லாம் (தமிழ்­நாடு உட­னடி இடைக்­கால நிவா­ரண தொகையாகக் கேட்­பது ரூ.2,000 கோடி).

யாரை குழப்­பு­கி­றார் நிர்­மலா சீதா­ரா­மன்?

தமிழ்­நாடு மிகக் கடு­மை­யான வெள்­ளத்­தை­யும், மழைப்­பொ­ழி­வை­யும் சந்­தித்­துள்­ள­தால் அதன் நிர்­ண­யிக்­கப்­பட்ட மாநில பேரி­டர் நிதி­யான 1,200 கோடி ரூபாய் நிவா­ர­ணத்­துக்­குப் போதாது என்று மதிப்­பிட்டு, கிட்­டத்­தட்ட 12,000 கோடி ரூபாய் நிவா­ரண உத­வி­கள் செய்ய தேவைப்­ப­டும் என்று கரு­து­கி­றது. அத­னால் உட­னடி இடைக்­கால நிவா­ர­ண­மாக 2,000 கோடி ரூபா­யா­வது தேசிய நிதி­யி­லி­ருந்து விடு­விக்­கச் சொல்லி கோரு­கி­றது.

இப்­படி தேசிய பேரி­டர் நிதி­யி­லி­ருந்து கூடு­தல் பணம் வேண்­டு­மென்­றால் ஒன்­றிய அரசு பேரி­டரை “கடு­மை­யான பேரி­டர்” என்று அங்­கீ­க­ரிக்க வேண்­டு­மென்று பார்த்தோம். அதன் பிறகு செல­வு­க­ளைச் சமா­ளிக்க மாநில பேரி­டர் நிதி போதாது என்­ப­தை­யும் ஏற்­கும்­போ­து­தான் அது கூடு­தல் நிதி­யைத் தரும்.

இந்த அங்­கீ­கா­ரத்­தைத்­தான் “தேசிய பேரி­டர்” என்று அறி­விக்க கோரு­வ­தாக பொது வழக்­கில் கூறப்­ப­டு­கி­றது. எந்த பேரி­ட­ரும் ஒட்­டு­மொத்த தேசத்­தை­யும் தாக்­காது; ஒரு சில மாவட்­டங்­க­ளைத்­தான் பெரி­தும் தாக்­கும். ஆனால், கூடு­தல் நிவா­ர­ணத் தொகை தேசிய பேரி­டர் நிதி­யி­லி­ருந்து வரு­வ­தால்­தான் அதை தேசிய பேரி­டர் என்று குறிப்பிடு­கி­றார்­கள்.

இந்த எளிய உண்­மையை திரித்­துப் பேசிய ஒன்­றிய நிதி­ய­மைச்­சர் நிர்­மலா சீதாராமன் “தேசிய பேரி­டர்வு” என்று எதை­யும் அறி­விப்­ப­தில்லை என்று மீண்­டும், மீண்­டும் சொன்­னார். பேரி­டர் என்ற வார்த்­தையை தவ­றா­கப் “பேரி­டர்வு” என்று கூறினா­லும், அதை வாய் தவறி சொல்­லா­மல் பல­முறை அழுத்­தம் திருத்­த­மாக “பேரிடர்வு” என்றே கூறி­னார். உச்­ச­கட்ட மமதை அவர் கூற்­றில் வெளிப்­பட்­டது.

சென்­னை­யி­லும், தூத்­துக்­குடி, திரு­நெல்­வேலி மாவட்­டங்­க­ளி­லும் வீடு வாசலை விட்டு வெளி­யேறி அக­தி­க­ளாக இருக்­கும் மக்­க­ளின் நிலையை ஒரு நிமி­ட­மா­வது எண்­ணிப்­ பார்த்­தி­ருந்­தால் அவர் இப்­ப­டிப் பேசி­யி­ருப்­பாரா? அவர் என்ன சொல்­லி­யி­ருக்க வேண்­டும்?

“ஒன்­றிய அரசு மாநில பேரி­டர் நிதிக்­கு­ரிய தொகையை முன் கூட்­டியே கொடுத்­து­விட்­டது. கூடு­தல் நிதி கொடுப்­பது குறித்து விரை­வில் முடி­வெ­டுக்­கி­றோம். மக்­க­ளுக்கு ஏற்­பட்ட துன்­பங்­கள் கவ­லை­ய­ளிக்­கின்­றன. நிச்­ச­யம் ஆய்­வுக்­கு­ழு­வின் அறிக்­கையை ஆராய்ந்து பார்த்து ஆவன செய்­வோம்” என்று கூறி­யி­ருந்­தால் அது கண்­ணி­ய­மான சொற்­க­ளாக இருந்­தி­ருக்­கும்.

ஆனால் மாநில பேரி­டர் நிதிக்கு வழ­மை­யாக வழங்க வேண்­டிய நிதி­யைக் கொடுத்­ததே ஏதோ இந்த கடும் பேரி­டரை சந்­திக்­கக் கொடுத்­தது போலத் திரித்­துப் பேசு­வ­தும், பேரி­ட­ரின் கடு­மை­யைக் குறித்த மாநில அர­சின் அறி­விப்­பினை அவ­ம­தித்து ஏள­னம் செய்­யும் வகை­யில் பேசு­வ­தும் ஆண­வப் போக்­கையே வெளிப்­ப­டுத்­து­கி­றது.

யார் வீட்டு சொத்து?

தேசி­யப் பேரி­டர் நிதி எங்­கி­ருந்து வரு­கி­றது? ஒன்­றிய அரசு நில­வில் பயிர் செய்து கொண்டு வரு­கி­றதா? அது தமிழ் நாட்டு மக்­க­ளும் தரும் வரிப்­ப­ணம்­தானே? இங்கே புகைக்­கப்­ப­டும் ஒவ்­வொரு சிக­ரெட்­டி­லி­ருந்­தும் பெறப்­ப­டும் செஸ் வரி­யும்­தானே தேசிய பேரி­டர் நிதி? அது மாநி­லங்­கள் தேவைப்­பட்­டால் கேட்­டுப் பெறத்­தானே இருக்­கி­றது?

இதைச் சுட்­டிக்­காட்­டத்­தான் அமைச்­சர் உத­ய­நிதி உங்­கள் “மரி­யா­தைக்­கு­ரிய” அப்­பா­வின் வீட்டு சொத்தா என்று கேட்­டார். ஒன்­றிய ஆட்­சி­யா­ளர்­கள் தங்­கள் பத­விக்­கு­ரிய கண்­ணி­யத்­து­ட­னும், பொறுப்­பு­ட­னும், மக்­கள் மீதான அக்­க­றை­யு­ட­னும் பேசி­னால் இது போல கேட்க வேண்­டிய தேவை எழாது.

உண்­மை­யில் பேரி­டர் எவ்­வ­ளவு கடு­மை­யா­னது, அதற்கு நிவா­ர­ணம் வழங்க எவ்­வ­ளவு பணம் தேவைப்­ப­டும் என்­ப­தை­யெல்­லாம் கணக்­கீடு செய்ய கால அவ­கா­சம் தேவைப்­ப­டும். ஆனால் சேதங்­க­ளின் பரி­மா­ணம் கண்­கூ­டாக இருக்­கும்­போது இது “கடு­மை­யான” பேரி­டர், ஆங்­கி­லத்­தில் சொன்­னால் “Severe” என்­ப­தை­யும், அதற்கு மாநில நிதி­யான 1200 கோடி ரூபாய் போதாது என்­ப­தை­யும் மதிப்­பிட அதிக அவ­கா­சம் தேவை­யில்லை.

எனவே இடைக்­கால நிதி­யாக மாநில அரசு கேட்­கும் கூடு­தல் 2,000 கோடி ரூபாயை உடனே ஒன்­றிய அரசு விடு­விக்க வேண்­டும். ஏனெ­னில் வழி­காட்டு நெறி­மு­றை­க­ளில் “உட­னடி” (Immediate) என்ற வார்த்­தை­யும் இடம் பெற்­றி­ருப்­பதை மேலே காட்­டிய விதி­முறை 3.1இல் காண­லாம். பின்­னர் விரி­வான கணக்­கீட்­டிற்­குப் பிறகு கூடு­தல் தொகை­யைத் தர­லாம்.

பேர­ர­சாக கரு­திக்­கொள்­கி­றதா ஒன்­றிய அரசு?

தின­ம­லர் நாளேடு கருத்­தி­யல் அள­வில் பார­தீய ஜனதா கட்­சியை ஆத­ரிக்­கக் கூடி­யது என்­பது அனை­வ­ரும் அறிந்­ததே. ஆனால், அது அர­சி­ய­ல­மைப்பு சட்­டம் வகுத்­துள்ள கூட்­டாட்சி தத்­து­வத்தை மதிக்க வேண்­டும். ஒன்­றிய நிதி­ய­மைச்­சர் கையில் பணத்தை வைத்து விசி­றிக்­கொள்­வது போல­வும், அமைச்­சர் உத­ய­நிதி அவ­ரி­டம் யாச­கம் கேட்­பது போல­வும் கேலிச்­சித்­தி­ரம் வரை­வது அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்தை கேவ­லப்­ப­டுத்­து­வ­தா­கும்.

மாநில அர­சு­கள் ஒன்­றிய அர­சுக்கு கப்­பம் கட்­டும் சிற்­ற­ர­சு­கள் அல்ல. ஒன்­றிய அரசு அவற்றை அடக்கி ஆளும் பேர­ர­சும் அல்ல. இறை­யாண்மை, இறை­யாண்மை என்று மூச்­சுக்கு முந்­நூறு முறை புலம்­பும் பா.ஜ.க. கட்­சி­ யி­னர் இறை­யாண்மை அர­சி­டம் இல்லை, அது மக்­க­ளி­டம் இருக்­கி­றது என்­பதை புரிந்­து­கொள்ள வேண்­டும். ஏனெ­னில் இது மக்­க­ளாட்சி.

அனைத்து மாநில மக்­க­ளின் உழைப்­பில்­தான், உற்­பத்­தி­யில்­தான், வரிப்­ப­ணத்­தில்­தான் தேசம் என்­பது சாத்­தி­ய­மா­கி­றது. அதி­கா­ரம் என்­பது அவர்­கள் கையில்­தான் உள்­ளது. ஆட்­சி­யா­ளர்­கள் மக்­க­ளுக்கு சேவை செய்­யவே அவர்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ளார்­கள். ஒன்­றிய அர­சாங்­கத்தை வாக்­க­ளித்து உரு­வாக்­கிய மக்­கள்­தான், மாநில அர­சை­யும் வாக்­க­ளித்து உரு­வாக்­கி­யுள்­ளார்­கள்.

மாநில மக்­க­ளுக்கு ஒரு பேரி­டர் பாதிப்பு என்­றால் அவர்­கள் ஏன் யாச­கம் கேட்க வேண்­டும்? யாரி­டம் கேட்க வேண்­டும்? அவர்­கள் உரி­மை­யைத்­தான் கேட்­கி­றார்­கள். மாநில அர­சாங்­கம் அத­னால் ஆன அனைத்­தை­யும் செய்து வரு­கி­றது. மேலும் மேம்­பட்ட நிவா­ர­ணம் வழங்க அதற்கு கூடு­தல் நிதி தேவைப்­ப­டு­கி­றது. அதைக் கேட்­டால் அதன் பெயர் யாச­கமா? அமைச்­சர் உத­ய­நி­தி­யின் சுய­ம­ரி­யாதை மிக்க உரி­மைக்­கு­ர­லைக் கேட்டு மிரண்­டு­தானே தின­ம­லர் கேலிச்­சித்­தி­ரம் வரை­கி­றது?

ஒன்­றிய நிதி­ய­மைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன் இது­வரை மக்­களை தேர்­தல் களத்­தில் சந்­தித்­த­தில்லை. வாக்கு கேட்­ட­தில்லை. கட்­சி­யால் மாநி­லங்­க­ளவை உறுப்­பி­ன­ரா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு அமைச்­ச­ராகி விடு­கி­றார். அவர் மாநி­லங்­க­ளவை உறுப்­பி­னர் பத­வியை ராஜி­னாமா செய்­து­விட்டு எதிர்­வ­ரும் 2024 தேர்­த­லி­லா­வது மக்­க­ளவை தொகுதி ஒன்­றில் களம் காண வேண்­டும். அப்­போ­து­தான் இது மக்­க­ளாட்சி என்று அவ­ருக்­குப் புரி­யும்.

தின­ம­லர் நாளேடு மக்­கள் வாங்­கு­வ­தால்­தான் நிலைத்­தி­ருக்­கி­றது. மக்­கள் உணர்­வு­கள் புரி­யா­மல் அது கேலிச்­சித்­தி­ரம் வரைந்­தால் அதை­யும் ஒரு நாள் மக்­கள் புறக்­க­ணிக்­கக் கற்­பார்­கள். மக்­க­ளாட்­சி­யில் மக்­க­ளின் உரி­மை­க­ளுக்­குக் குரல் கொடுக்க வேண்­டிய ஊட­கங்­களே ஆட்­சி­யா­ளர்­க­ளின் ஆண­வத்­துக்கு வெண்­சா­ம­ரம் வீசக்­ கூடாது.

கட்டுரையாளர்:
பேராசிரியர் ராஜன்குறை கிருஷ்ணன்
அம்பேத்கர் பல்கலைக்கழகம்
புதுடெல்லி

நன்றி: மின்னம்பலம், வலைத்தளம் (https://minnambalam.com/)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button