வரலாறு

வேலைநிறுத்தத்தை வழிநடத்திய வ.உ.சிதம்பரனார்

ஏஐடியுசி: எழுச்சியின் வரலாறு -5

ஏஐடியுசி: எழுச்சியின் வரலாறு -5

வேலைநிறுத்தத்தை வழிநடத்திய வ.உ.சிதம்பரனார்

1908-ம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி வ.உ.சி தலைமையில் கோரல் மில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது. நெல்லை, சிவகாசியில் இருந்த காவல்துறையினர் தூத்துக்குடியில் குவிக்கப்பட்டனர்.

“இந்தப் பவளத் தொழிற்சாலையினர் இந்தியக் கூலியாட்களை கொடுமைப்படுத்தி வேலை வாங்கியது மட்டுமல்லாமல், மிகவும் கொடுமையாய் நடத்தி போதிய சம்பளம் தராமலும் செய்ததே இந்த போராட்டத்திற்குக் காரணம்” என்று சுதேசமித்திரன் பத்திரிகை பதிவு செய்தது.

வேலைநிறுத்தம் நடைபெற்ற நாட்களில் கோரல் மில் தொழிலாளர்களிடையே வ.உ.சியும் சுப்பிரமணிய சிவாவும் உரையாற்றினர். அந்தக் கூட்டங்களில் வெள்ளையர்களின் தொழிலாளர் விரோதப் போக்கையும், மனிதநேயமற்ற தன்மைகளையும் அவர்கள் சாடினர்.

சுப்பிரமணிய சிவா பேசும் போது, “நானும் பிள்ளையும் பேசக்கூடாது என கலெக்டர் உத்திரவிட்டிருக்கிறார். அய்ரோப்பியர்கள் சுயநலமிக்கவர்கள்; பொறுமையற்றவர்கள்; இந்தியரின் பேச்சை தவறாகவேதான் எடுத்துக் கொள்வார்கள். இது வெள்ளையர் மில் என்பதால் ஸ்பெஷல் போலீஸை அனுப்பியும், சுடச் சொல்லியும், சுதேசிகளை ஆத்திரமூட்டுகிறார்கள். இதுவே இந்தியர் மில் என்றால் ஒதுங்கி நிற்பார்கள்”

அடுத்து பேசிய வ.உ.சி. சொன்னார்:

“டிஸ்ட்ரிக்ட் மாஜிஸ்ட்ரேட் இங்கு என்னைப் பேசக் கூடாது என உத்திரவிட்டார். அவருடன் நான் பேசினேன். நாம் ஏதேனும் விஷமம் செய்வோம் எனக் கருதினார். நான் ஒரு வக்கீல். எது தேசத்துரோகம், எது விசுவாசம் என்பது எனக்கு நன்கு தெரியும். என்னுடைய தலையீட்டால் கோரல் மில் ஸ்ட்ரைக் நடக்கவில்லை. ஆனால் கூலிகளைப் பட்டினி போடுகிற மில் முதலாளியால் நடக்கிறது. அந்தக் கூலிகள் இந்த நாட்டின் குழந்தைகள். இவர்களைப் பாதுகாப்பது என் கடமை என்று அவருக்குப் பதில் சொன்னேன். இந்த மில் போனால்,  நாடு முழுதும் நன்கொடை வசூலித்து நமக்கான சுதேசி மில்லை நாமே கட்டுவோம். நமக்கொன்றும் கவலையில்லை. ஸ்ட்ரைக் முடியும் வரை  இந்த ஊர் நமக்குச் சோறு போடும்” என்றார்.

வ.உ.சியின் பேச்சுகள் தொழிலாளர்களின் ஊக்கத்தையும், உறுதியையும் வலுப்படுத்தின. கோரல் மில் வேலைநிறுத்தம் தொடர்ந்து நடைபெற்றது. இதனால் மில் முதலாளிகள் வ.உ.சி மீது தீரா கோபமடைந்தனர்.

வேலைநிறுத்தம் செய்வதற்குத் தூண்டிவிட்டவர் வ.உ.சி-தான் என்று அவர் மீது வழக்கு தொடுத்தார்கள். கூட்டங்களில் வ.உ.சி பேசினால் கலகம் ஏற்படும், அமைதி குலையும் என்று சொல்லி அவர் கூட்டங்களில் பேசக் கூடாது என்று வ.உ.சியை நேரிடையாகவே அழைத்து மாஜிஸ்திரேட் எச்சரித்தார். மாஜிஸ்திரேட்டின் எச்சரிக்கையை வ.உ.சி மதிக்கவில்லை. அவர் தொடர்ந்து தொழிலாளர்களின் கூட்டங்களில் பேசி வந்தார்.

கட்டுரையாளர்:
டி.எம்.மூர்த்தி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button