கட்டுரைகள்

தரவு, ஆதாரம் எதுவும் இன்றி அண்ணாமலை அவிழ்த்து விட்ட பொய்கள்!

இளசை கணேசன்

சங்கிகள் தரவுகளை, ஆதாரங்களை சரியாகத் தேடிப் பெறுவதும் இல்லை; அவற்றை உரிய முறையில் பயன்படுத்துவதும் இல்லை. காழ்ப்புணர்வுடன் அணுகியே தரந்தாழ்த்துவார்கள்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் “தமிழர்கள் திராவிடர்கள் அல்லர்” என்று சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளதாக, ம.பொ.சி. எழுதிய கட்டுரையை கோடிட்டுக் காட்டி நாடாளுமன்றத்தில் உண்மையை திரித்துப் பேசினார். 

சிலப்பதிகார வரிகள் எதனையும் நிர்மலா சீதாராமன் மேற்கோள் காட்டவில்லை. ம.பொ.சி கட்டுரையிலும் சிலப்பதிகார வரிகள் மேற்கோள் காட்டப்படவில்லை..

இதே போன்றுதான் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் சரியான தரவுகளோ ஆதாரங்களோ இல்லாத இரண்டு பொய்களை அவிழ்த்து விட்டுள்ளார்.

ஒன்று…

“1956 ஆம் ஆண்டு மதுரையில் நடந்த விழாவில் கடவுளை இழிவுபடுத்தி,  பகுத்தறிவு கருத்துக்களை பேசிய அறிஞர் அண்ணாவை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கடுமையாக சாடினார். மன்னிப்பு கேட்காவிட்டால் மீனாட்சி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்வதற்குப் பதில் ரத்தாபிஷேகம் நடக்கும் என தேவர் பெருமகனார் எச்சரித்தார். அதற்குப் பயந்து விழாவை நடத்திய பி.டி. ராஜனும் விழாவில் பேசிய அறிஞர் அண்ணாவும் ஓடி வந்து மன்னிப்பு கேட்டனர்”

– என்று உண்மையை திரித்துப் பேசி அண்ணாமலை சிக்கிக்கொண்டார்.

இரண்டு…

2023 செப்டம்பர் 10 அன்று மதுரையில் அண்ணாமலை பேசும்போது, “திருப்பாணாழ்வார் கோவிலுக்குச் சென்றால் அங்குள்ள நந்தியின் சிலை விலகி இருக்கிறது? கீழ் சாதியை சேர்ந்த ஒருவர் சிவனைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறார். அங்கிருந்தவர்கள் அனுமதிக்க மறுத்தனர். சிவனின் நந்தி சற்று விலகி அந்த மனிதர் சிவனைப் பார்க்க அனுமதித்தது. இதுதான் சனாதன தர்மம்.”

என்று மற்றொரு பொய்யை அண்ணாமலை அவிழ்த்து விட்டுள்ளார். 

இந்த இரண்டு புருடாக்களுக்கும் அண்ணாமலை ஆதாரம் எதையும் மேற்கோள் காட்டவில்லை. 

அறிஞர் அண்ணா பற்றிய அண்ணாமலையின் கூற்று தவறானது. அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று அதிமுகவில் எதிர்ப்புக் குரல் எழுந்தது.

“நான் ஆதாரம் இல்லாமல்  பேசவில்லை. தி இந்து ஆங்கில நாளிதழில் 1956 ஜூன் 1, 2, 3, 4 தேதிகளில் செய்தி வெளியாகி இருக்கிறது. தகுந்த ஆதாரத்துடன் தான்  பேசினேன். எனவே  மன்னிப்பு கேட்க மாட்டேன். பேசியதை வாபஸ் வாங்கவும் மாட்டேன்” என்று திமிராகப் பேசினார். 

அண்ணாமலைக்கு இருப்பது அதிகாரத் திமிர் மட்டுமல்ல. சங்கிகளுக்கே உரிய அயோக்கியத்தனமும் சேர்ந்து இருக்கிறது.

பொய்யான தரவுகளை தாராளமாகவும், உண்மைத் தரவுகளை திரித்தும் பொய்களை அன்றாடம் அவிழ்த்து விடாமல் சூழ்ச்சிக்கார சங்கிகளால் இருக்க முடியாது.

இதில், அண்ணாமலை முதலிடத்தில் இருக்கிறார். பொருத்தமான நூல்களை புரட்டி, தரவுகளைத் தேடி, ஆதாரங்களுடன் பேசும் வழக்கம் அண்ணாமலைக்கு அறவே இல்லை.

முகநூல்களில் சங்கிகள் பதிவிடும் செய்திகளையே ஆதாரங்களாகக் கொண்டு அண்ணாமலை அளந்து விடுகிறார்.

அறிஞர் அண்ணா குறித்து பேசியதில் அண்ணாமலை எதை மறைத்திருக்கிறார்? எதைத் திரித்திருக்கிறார்? எதை ஆதாயமாக்குகிறார்?

1956ல் நடந்தது என்ன?

மீனாட்சி அம்மன் கோவில், மேல ஆடி வீதியில் மதுரை தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழா நடந்தது. நிகழ்ச்சியில் சங்கப் பாடல் ஒன்றை சிறுமி மிகச் சிறப்பாக பாடினாள்.

அடுத்துப் பேச வந்த அறிஞர் அண்ணா, தனக்கே உரிய பாணியில் “இந்தச் சிறுமி சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட சங்கப் பாடலை மிகச் சிறப்பாகப் பாடினாள். இதைக் கூட பக்த சிரோன்மணிகள் உமையம்மையின் புனிதப் பாலை அருந்தியதால்தான் சிறுமியால் இப்படிப் பாட முடிந்தது என்று கூறி விடுவார்கள். நாம் இப்படிப்பட்ட புரட்டுகளில் இருந்து மீண்டு, உண்மை எது? என்பதை பகுத்தறிந்து தெளிவாகும் நிலைக்கு வந்து விட்டோம்” என்று பேசினார்.

இதற்கு மறுப்புத் தெரிவித்துப் பேசிய முத்துராமலிங்கத் தேவர், “மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்திலேயே நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் வகுப்புவாத அமைப்புகளின் சில தலைவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது எப்படி?, இது மீனாட்சியம்மன் ஆலயம். இங்கு தான் படித்த படிப்பை மறந்து, கட்சியின் தலைவர் என்ற தலைமைப் பண்பை மறந்து, தான் கொண்டிருந்த நாத்திகப் பண்பை மட்டும் மறக்காமல் பேசியவரை, இங்கு பேச விட்டது யார்? ஆலயத்தில் தெய்வ நிந்தனைப் பேச்சு நடந்தது நல்லதல்ல. இனி அவ்வாறு நடக்கக் கூடாது. விழா நிகழ்ச்சிகளை தமுக்கம் மைதானத்திற்கு மாற்ற வேண்டும்”  என்று வலியுறுத்தினார்.

அதன்படி மறுநாள் விழா தமுக்கம் மைதானத்திற்கு மாற்றப்பட்டது.

தேவர் பேசும்போது யாருடைய பெயரையும், ஏசப்பட்ட பேச்சுக்களின் பொருள் பற்றியும் விமர்சனம் செய்யவில்லை. யாரையும் மிரட்டவில்லை! யாருக்கும் எச்சரிக்கை விடவில்லை!

அண்ணாமலை காட்டும் ஆதாரமான 1956 ஜூன் 1, 2, 3, 4 தேதிகளில், அப்படி எந்தச் செய்தியும் தி இந்து நாளிதழ்களில் வெளியாகவில்லை. 

முத்துராமலிங்கத் தேவர் தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். மிரட்டவோ எச்சரிக்கை விடவோ இல்லை. 

அறிஞர் அண்ணாவும் பி.டி.ராஜனும் பயப்படவும் இல்லை. ஓடி வரவும் இல்லை. ஓடி வந்து மன்னிப்பு கேட்கவும் இல்லை!

மீனாட்சி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்வதற்குப் பதில் ரத்தாபிஷேகம் நடக்கும் என்று தேவர் பேசியதாக குரல் பதிவோ எழுத்துப் பதிவோ இல்லை.

இது அண்ணாமலையின் திரித்தல். அப்பாட்டமான பொய்.

அண்ணாமலையின் இந்த பேச்சு முத்துராமலிங்கத் தேவரை மறைமுகமாக வன்முறையாளராக சித்தரிப்பதாகும்.

தேவர் எதற்கும் பயப்படாத துணிச்சல்காரர். ஆனால் வன்முறையை விரும்பாதவர். இதை அண்ணாமலை மறைக்கிறார்.

அறிஞர் அண்ணாவுடன் மோத விரும்பினால், அவர் எழுதிய ‘ஆரிய மாயை’யை எதிர்த்து அண்ணாமலை முழங்கலாமே!

இப்போது தேவரை அறிஞர் அண்ணாவுடன் ஏன் மோத விட வேண்டும்? அண்ணாமலைக்கு இந்த அவசியம் ஏன் ஏற்பட்டது?

வரும் நாடாளுமன்றத் தேர்தலில்  முக்குலத்தோர் வாக்குகளை பெறுவதற்கான அண்ணாமலையின் சூழ்ச்சி என்பதைத் தவிர எதுவுமில்லை.

அடுத்து நந்தி விலகி தரிசனம் தந்தது பற்றிய அண்ணாமலையின் பேச்சு குறித்துப் பார்ப்போம்.

இசைக்குப் பெயர் பெற்ற பாணர் குலம், காலப்போக்கில் தீண்டாமைக்கு ஆளானது. இந்தப் பாணர் குலத்தில் பிறந்தவர்தான் திருப்பாணாழ்வார்.

திருமாலைப் போற்றி நாலாயிரம் திவ்ய பிரபந்தம் பாடிய 12 ஆழ்வார்களில், 11வது ஆழ்வார் திருப்பாணாழ்வார்.

தனது சாதி இழிவை நினைத்து திருவரங்கம் கோயிலுக்குள் நுழைய அஞ்சி, காவிரியின் மறு‌கரையில் நின்று  ‘பண்’ (பாடல்) இசைத்து திருமாலை பாடினார்.

திருமாலுக்கு திருமஞ்சனம் செய்வதற்கு லோகசாரங்கர்‌ என்னும் கோயில் பட்டர் நீர் எடுத்து வரும் போது, திருப்பாணாழ்வார் தன்னை மறந்து பாடிக்கொண்டிருக்கிறார்.

தீண்டாமை கருதி தள்ளி நிற்பதற்காக அவர் மீது கல்லை எரிகிறார்.. அந்தக் கல் திருப்பாணாழ்வார் மண்டையில் பட்டு குருதி வழிகிறது.

பாணரின் பக்தியை பட்டருக்கு உணர்த்த திருமால், ரத்தம் வழியும் தன் முகத்தைக் காட்டுகிறார்.

“நீ கல்லை எறிந்தது என் பக்தன் முகத்தில் அல்ல; எனது முகத்தில்” என்பதை உணர்த்தியதுடன், தனது பக்தனை தோலில் சுமந்து வருமாறு லோகசாரங்க பட்டருக்கு திருமால் ஆணையிடுகிறார்.

திருப்பாணாழ்வார் பற்றி கூறப்படுவது இதுதான். இது சனாதன தர்மத்துக்கு எதிரானது. சாதியப் பிளவையும் தீண்டாமையையும் ஏற்படுத்திய சனாதனத்தை நிராகரித்த, தமிழர்களின் வைணவ வழிபாட்டு நெறியாகும்

இந்த நிகழ்வு ஆழ்வார், பாணர் குலம், திருமால், வைணவம் திருவரங்கம் என்பதோடு‌ தொடர்புடையது. 

இதை திருப்பாணாழ்வார் கோயில், நந்தி, சிவன், சைவம் என்று அண்ணாமலை உளறிக் கொட்டுகிறார்.

திருநாங்கூர் கோவில் சீர்காழி அருகே இருக்கிறது. இது நாராயணப் பெருமாள் திருத்தலம்.108 வைணவ தலங்களில் இதுவும் ஒன்று.

திருமங்கை ஆழ்வாரால் பாடல் பெற்ற திருத்தலமாகும்.

இங்கும் நந்தி விலகி காட்சி தரும் நிகழ்வு எதுவும் நடக்கவில்லை.

திருப்பனந்தாள் திருத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. இங்குள்ள இறைவனின் திருப்பெயர் அருண ஜடேஸ்வரர். இவருக்கு செஞ்சடையப்பர் என்ற பெயர் உண்டு. இது நாயன்மார்கள் வழிபடும் தலமாகும்.

இங்கு தாடகை என்ற பெண்ணொருத்தி புத்திர வரம் வேண்டி இறைவனை தரிசிக்கச் சென்றாள். மலர்களை எடுத்தார்; மாலை தொடுத்தார். ஈசனுக்கு சார்த்த முற்படும் போது, இறைவன் இவரது பக்தியை சோதிக்க, அவளது மார்பகச் சேலையை நழுவச்‌‌ செய்தான்.

ஐயோ நான் என்ன செய்வேன்! என்று நழுவிய சேலையை இரண்டு முழங்கைகளில் ஏந்திக் கொண்டு மாலையோடு நின்றாள். ஈசன் திருமுடி தாழ்த்தி பக்தையின் மாலையை பெற்றுக் கொண்டார்.

மாலையைப் பெற்றுக்கொண்ட இறைவன், ஒழுக்கம் கருதி குனிந்த தலை நிமிரவில்லை. யானை கட்டி இழுத்து பார்த்தார்கள், குனிந்த தலை நிமிரவில்லை. நாயன்மார்கள் இறைவன் திருநாமத்தைப் பாடிய பின்புதான் இறைவன் தலைநிமிர்ந்தார்.

இது திருப்பனந்தாள் தலத்தின் சிறப்பு. இதுவும் சனாதன நெறி அல்ல. சிவ வழிபாட்டின் சைவ நெறி.

சைவ, வைணவ நெறிகளை சனாதனத்திற்குள் அடக்க முடியாது. அதற்கும் சனாதனத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 

நந்தியை விலகி இருக்கச் செய்து, சிவபெருமான் காட்சி தந்த இடம்…  

  • திருப்பாணாழ்வார் கோவில் இல்லை.
  • திருநாங்கூர் கோவில் இல்லை.
  • திருப்பனந்தாள் திருத்தலம் இல்லை.
  • நந்தி விலகி காட்சி தந்த இடம் ‘தில்லை’.

புலையர் குலத்தில் பிறந்த நந்தனார், சைவ சமயத்தைச் சேர்ந்தவர். நாயன்மார்கள் வரிசையில் சேர்க்கப்பட்டவர். சிவனின் திருவடியைத் தவிர, மறந்தும் மற்றதை நினைவு கொள்ளாதவர். தில்லை சிவபெருமானை தடையின்றி நேரில் வழிபட வேண்டும் எனத் துடித்தவர்.

தன்னுடைய தீண்டாமை குலத்தை எண்ணி நாளை போவோம்! நாளை போவோம்! என்றே தள்ளிப் போட்டதால் திருநாளைப் போவார் என்றும் அழைக்கப்பட்டவர்.

பல்வேறு தடைகளைத் தாண்டி சிவபெருமானைத் தரிசித்த போது…

“சற்றே விலகியிரும் பிள்ளாய்” என்று நந்தியை விலகச் செய்து சிவபெருமான் நந்தனாருக்கு காட்சி தந்தார்.

இவை பற்றி எதுவும் தெரியாமல், சனாதனத்துக்கு முட்டுக் கொடுப்பதற்காக எதை எதையோ உளறிக்கொட்டுகிறார் அண்ணாமலை. 

அவையெல்லாம் பொய்யும் புரட்டுகளாகவும் சனாதனம் விளைவித்த சாதிப் பாகுபாடு, தீண்டாமை, சமத்துவமின்மை என்பதற்கு எடுத்துக்காட்டுகளாகவும் இருக்கின்றன. 

பொய்யைச் சொன்னாலும் பொருத்தமாகச் சொல்லுங்கள் அண்ணாமலை அவர்களே.

– இளசை கணேசன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button