
கடந்த 50 நாட்களில் உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற மக்கள் போராட்டங்களும் தேர்தல்கள் மூலம் நடைபெற்ற ஆட்சி மாற்றங்களும் இடதுசாரிகளுக்கு நம்பிக்கையை உருவாக்கியுள்ளன.
பிரான்ஸ், கிரீஸ், அர்ஜென்டினா, வங்காள தேசம், இந்தோனேசியா, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெற்ற மக்கள் போராட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளார்கள். இதுவரை போராட்டங்களில் இந்த அளவு மக்கள் கூடுவதை நாம் பார்த்திருக்க முடியாது. அந்த அளவிற்கு ஆட்சியாளர்கள் மீதான அதிருப்தியின் விளைவுதான் இந்தப் போராட்டங்கள்.
அதேபோல் அமெரிக்கா, செர்பியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளில் நடைபெற்ற தேர்தல்களில் ஆளும் கட்சிகள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன. பிரேசிலில் மட்டும் சமூக நலத்திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தியதால் ஆளும் தொழிலாளர் கட்சி வெற்றியை தக்க வைத்துள்ளது.
நாடுகள் வேறுபட்டாலும், மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் பல நாடுகளில் ஒன்றாகவே இருக்கின்றன. வேலை இல்லை, வருமானம் போதவில்லை, விலைவாசி உயர்கிறது, கல்விக்கும் மருத்துவத்துக்கும் அதிகம் செலவாகிறது. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு ஆதார விலை இல்லை. தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்தில் அதிக நேரம் உழைக்க வேண்டும். இளைஞர்களுக்கு எதிர்காலம் மீதான அச்சம். இத்தகைய பிரச்சினைகளால் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடுகிறார்கள். தேர்தல்களில் ஆளும் கட்சிகளுக்கு எதிராக வாக்களிக்கிறார்கள்.
இந்தப் பிரச்சினைகள் ஏன் ஏற்படுகின்றன? இதற்கான அடிப்படைக் காரணங்கள் என்ன? மக்களின் வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துவது எப்படி?
இத்தகைய கேள்விகளை எழுப்பி மாற்றத்தை நோக்கி பயணிக்காமல் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாது. படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. வேலை கிடைத்தாலும் நிரந்தர வேலை இல்லை. ஒப்பந்த வேலை, குறைந்த ஊதியம், வேலைப் பாதுகாப்பின்மை போன்ற பிரச்சினைகளை இளைஞர்கள் சந்திக்கிறார்கள். அரிசி, பருப்பு, காய்கறி, பெட்ரோல், வீட்டு வாடகை, மின்சாரம் என எல்லாவற்றின் விலையும் உயர்கிறது. ஆனால் மக்களின் வருமானம் அதே அளவுக்கு உயர்வதில்லை. இதனால் குடும்பங்களை நடத்துவதே சிரமமாகிறது.
தொழிலாளர்கள் அதிக நேரம் உழைத்தாலும், அவர்கள் குடும்பத்துடன் நிம்மதியாக வாழ்வதற்குத் தேவையான ஊதியம் கிடைப்பதில்லை. ஆனால் நிறுவனங்களின் லாபம் தொடர்ந்து அதிகரிக்கிறது.
குழந்தைகளுக்குத் தரமான கல்வி கொடுக்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டால் மருத்துவம் பார்க்கவும் மக்கள் அதிகம் செலவு செய்ய வேண்டியுள்ளது. ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் இதனால் கடன் சுமைக்கு ஆளாகின்றன.
விதை, உரம், மின்சாரம், டீசல் என விவசாயச் செலவுகள் அதிகரிக்கின்றன. ஆனால் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. இதனால் விவசாயிகள் தொடர்ந்து நெருக்கடிகளைச் சந்திக்கிறார்கள்.
ஒருபுறம் சில பெரும் பணக்காரர்கள் மேலும் மேலும் செல்வம் சேர்க்கிறார்கள். மறுபுறம் கோடிக்கணக்கான மக்கள் உணவு, கல்வி, மருத்துவம், வீடு போன்ற அடிப்படைத் தேவைகளுக்காகப் போராடுகிறார்கள்.
அரசின் முடிவுகளில் சாதாரண மக்களின் கருத்துகளுக்கு உரிய முக்கியத்துவம் கிடைப்பதில்லை. பணமும் அதிகாரமும் உள்ளவர்களின் செல்வாக்கு அதிகரிக்கிறது. மக்கள் போராடுவதற்கும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவதற்கும் தடைகள் ஏற்படுகின்றன. இந்தப் பிரச்சினைகளைத் தனித்தனியாகப் பார்த்தால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. மார்க்சியம் இவற்றின் பின்னால் இருக்கும் பொருளாதார அடிப்படையைப் பார்க்கச் சொல்கிறது.
முதல் காரணம் மக்களின் தேவையைவிட லாபத்திற்கே முக்கியத்துவம். முதலாளித்துவப் பொருளாதாரத்தில் பெரும்பாலும் நிறுவனங்களின் முக்கிய நோக்கம் லாபம் சம்பாதிப்பதாக இருக்கிறது. மக்களுக்கு என்ன தேவை என்பதைவிட, எதில் அதிக லாபம் கிடைக்கும் என்பதற்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதனால் கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படைத் தேவைகள்கூட வியாபாரப் பொருளாக மாறுகின்றன.
இரண்டாவது காரணம் செல்வமும் உற்பத்தியும் சிலருடைய கட்டுப்பாட்டில் இருப்பது. நிலம், தொழிற்சாலைகள், பெரிய நிறுவனங்கள், இயந்திரங்கள், பெரும் முதலீடுகள் போன்றவை பெரும்பாலும் ஒரு சிறிய முதலாளி வர்க்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.
மூன்றாவதாக ஒரு தொழிற்சாலையில் தொழிலாளர்கள் உழைக்கிறார்கள். பொருட்களை உற்பத்தி செய்கிறார்கள். அந்த உற்பத்தியின் மூலம் நிறுவனம் லாபம் சம்பாதிக்கிறது. ஆனால் அந்த லாபத்தில் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் பங்கு குறைவாக இருக்கிறது. இதுவே மார்க்ஸ் விளக்கிய உபரி மதிப்பு மற்றும் சுரண்டல் பற்றிய அடிப்படைக் கருத்தாகும்.
நான்காவதாக பொதுத்துறையைப் பலவீனப்படுத்துவது, கல்வி, மருத்துவம், போக்குவரத்து, மின்சாரம் போன்ற துறைகளில் அரசின் பொறுப்பு குறைக்கப்பட்டு தனியார் நிறுவனங்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும்போது, சாதாரண மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
ஐந்தாவது காரணம் பணக்காரர்களின் அரசியல் செல்வாக்கு.
பெரும் பணக்கார நிறுவனங்களும் முதலாளிகளும் அரசின் கொள்கை முடிவுகளில் அதிக செல்வாக்கு செலுத்தும்போது, சாதாரண மக்களின் தேவைகள் பின்தள்ளப்படுகின்றன. இதனால் பொருளாதார ஏற்றத்தாழ்வு மட்டுமல்ல, அரசியல் ஏற்றத்தாழ்வும் உருவாகிறது.
இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் என்ன? பிரச்சினைகளைச் சொல்வதோடு நின்றுவிடக் கூடாது. மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் தீர்வுகளையும் முன்வைக்க வேண்டும்.
அனைவருக்கும் வேலை: அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். பொதுத்துறையை விரிவுபடுத்த வேண்டும். விவசாயத்தையும் சிறு தொழில்களையும் பாதுகாக்க வேண்டும்.
உழைப்புக்கு ஏற்ற ஊதியம்: தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்க வேண்டும். ஒப்பந்த வேலை முறையைக் கட்டுப்படுத்தி நிரந்தர வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். தொழிற்சங்க உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்.
அனைவருக்கும் தரமான கல்வி, மருத்துவம்: கல்வியும் மருத்துவமும் ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் தரமான இலவசக் கல்வியும் மருத்துவமும் கிடைக்க வேண்டும்.
விவசாயிகளுக்குப் பாதுகாப்பு: விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும். விவசாய இடுபொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும். விவசாயிகளுக்குத் தேவையான கடன் மற்றும் அரசின் ஆதரவு கிடைக்க வேண்டும்.
பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்தல், அதிக வருமானம் மற்றும் செல்வம் கொண்டவர்களிடம் அவர்களின் பொருளாதாரத் தகுதிக்கேற்ப வரி வசூலிக்க வேண்டும். அந்த வருவாயை மக்கள் நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்த வேண்டும்.
ஊழலை ஒழித்தல்: அரசின் வரவு செலவுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும். பொதுச் சொத்துகள் தனியார் லாபத்திற்காகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க வேண்டும். மக்கள் அரசின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் உரிமை பெற வேண்டும்.
ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்தல்: தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள் தங்கள் உரிமைகளுக்காக அமைப்புகளை உருவாக்கவும் போராடவும் முழு உரிமை வேண்டும்.
இந்த மாற்றங்களை எப்படி உருவாக்குவது?
மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட வேண்டுமானால் தேர்தலில் வாக்களிப்பது மட்டும் போதாது. தொடர்ச்சியான மக்கள் இயக்கங்களும் தேவை. தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
வேலையின்மை, விலைவாசி உயர்வு, ஊதியப் பிரச்சினை, கல்வி, மருத்துவம் போன்ற மக்கள் பிரச்சினைகளுக்காகத் தொடர்ந்து போராட வேண்டும்.
இளைஞர்களுக்கு அரசியல் மற்றும் சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
மக்கள் பிரச்சினைகளுக்கான மாற்றுக் கொள்கைகளை உருவாக்கி மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
தேர்தல் களத்திலும் மக்கள் போராட்டக் களத்திலும் இடதுசாரி இயக்கங்கள் வலிமையாகச் செயல்பட வேண்டும்.அரசின் முடிவுகளில் சாதாரண மக்களின் பங்கேற்பையும் அதிகாரத்தையும் அதிகரிக்க வேண்டும்.
தேர்தலில் ஒரு கட்சி வெற்றி பெறுவது மட்டுமே சமூக மாற்றம் அல்ல. மக்களின் வாழ்க்கையிலும் பொருளாதாரத்திலும் உண்மையான மாற்றம் ஏற்பட வேண்டும்.
அதற்குத் தொடர்ச்சியான மக்கள் ஒற்றுமையும் அமைப்பு சார்ந்த போராட்டங்களும் அவசியம்.
உலகின் பல நாடுகளில் மக்கள் ஏன் போராடுகிறார்கள்? ஏன் ஆளும் கட்சிகளுக்கு எதிராக வாக்களிக்கிறார்கள்? அவர்களின் வாழ்க்கையில் மாற்றம் வேண்டும் என்பதற்காகத்தான்.
இந்தப் பிரச்சினைகளுக்குத் தற்காலிகத் தீர்வுகள் மட்டும் போதாது. அவற்றை உருவாக்கும் பொருளாதார அமைப்பிலும் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதையே மார்க்சியம் வலியுறுத்துகிறது.
மக்களின் உழைப்பால் உருவாகும் செல்வம் ஒரு சிலருடைய லாபத்திற்காக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் பயன்பட வேண்டும்.
இறுதியாக நாம் மூன்று கேள்விகளை எழுப்ப வேண்டும். மக்களின் உழைப்பால் உருவாகும் செல்வம் யாருக்குச் செல்கிறது? நாட்டின் வளங்கள் யாருடைய நலனுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன? அரசியல் அதிகாரம் உண்மையில் யாருடைய கைகளில் இருக்கிறது?
இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தேடுவதும், சமத்துவ சமூகத்தை உருவாக்குவதற்காக மக்களை ஒன்றிணைப்பதுமே இடதுசாரி இயக்கங்களின் முக்கியமான கடமையாகும்.