
மாமேதை லெனின் அவர்களின் வழிகாட்டுதலில், போல்ஷிவிக் கட்சியின் தலைமையில் தொழிலாளர்களும், விவசாயிகளும், ராணுவ வீரர்களும் ஒன்று சேர்ந்து ஆயுதமேந்தி கிளர்ந்தெழுந்ததன் விளைவாக 1917, நவம்பர் 7 ஆம் தேதி, ருஷ்யாவில் சோசலிசப் புரட்சி வெற்றி வாகை சூடியது.
உழைக்கும் மக்கள் ஒன்று சேர்ந்து நிலப்பிரபுக்களையும், முதலாளிகளையும் அவர்களின் கூலிப்பட்டாளத்தையும் முறியடித்து சுரண்டல் அமைப்பை தகர்த்தெறிந்தனர். தொழிலாளி வர்க்கம், விவசாயிகளோடு சேர்ந்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது.
மனித சமுதாயம் சுரண்டல் அமைப்பிலிருந்து விடுபடுவதற்கும், மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோரால் கண்டறியப்பட்ட விஞ்ஞானக் கம்யூனிசத்தின் கருத்துகளை செயல்படுத்துவதற்கும் இந்த நவம்பர் சோசலிசப் புரட்சி அடித்தளமாக விளங்கியது.
ஐரோப்பிய நாடுகளில் முதலாளித்துவம் வளர்ச்சி பெற்று ஏகாதிபத்திய முதலாளித்துவமாக மாறிய காலகட்டத்தில் உலக செல்வ வளங்களைக் கைப்பற்றும் பேராசையின் காரணமாக 1914 ஆம் ஆண்டு முதலாம் உலகயுத்தம் வெடித்தது. ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் தோற்றத்தையும், அதன் யுத்த களவாணித் தனத்தையும் மார்க்சீய வழியில் கண்டறிந்த மாமேதை லெனின் அவர்கள், “போருக்கு எதிராக போர் தொடுப்போம்” என்ற முழக்கத்தை வெளியிட்டார். ஒரு நாட்டின் ராணுவ வீரர்களாக இருக்கிற தொழிலாளர்களே! இன்னொரு நாட்டின் இராணுவ வீரர்களான தொழிலாளர்களை சுட்டுக் கொல்ல வேண்டாம். உங்கள் நாட்டில் உங்களைச் சுரண்டுகிற பிற்போக்கு முதலாளிகள் மீது உங்கள் துப்பாக்கிகளைத் திருப்புங்கள் என்று அறைகூவல் விடுத்தார்.
உலகப்போர் உக்கிரமாகவும், அக்கிரமமாகவும் நடந்து கொண்டிருந்த அந்த மூன்று ஆண்டு காலத்தில் தோழர் லெனின் அவர்களும், போல்ஷிவிக் கட்சியும் ருஷ்ய தொழிலாளர்களையும், விவசாயிகளையும் தங்களது எழுத்துக்களாலும், பேச்சுகளாலும் புரட்சிகர படைப்பிரிவுகளாக மாற்றினர்.
“உழுபவனுக்கு நிலம் சொந்தம்”, “தொழிலாளர்களுக்கு தொழிற்சாலைகள் சொந்தம்”, “போர் புரியும் வீரர்களின் துன்பத்தைப் போக்க சமாதானம்” என்ற கொள்கை பிரகடனத்தை தோழர் லெனின் வெளியிட்டார். உழைக்கும் மக்களின் புரட்சி வெற்றியடைந்தது.
1917, நவம்பர் 7 ஆம் தேதி (ஜூலியன் காலண்டரின்படி அக்டோபர் 25) மாமேதை லெனின் தலைமையில் நடந்த இந்த சோசலிசப் புரட்சியின் போது (BOLSHEVIK TAKE OVER) நேரடி உயிரிழப்புகளோ, பொருட்சேதங்களோ பெரிய அளவில் ஏற்படவில்லை. மிக, மிக குறைந்த அளவிலேயே ஏற்பட்டது, ரத்தம் சிந்தாமல், பொருள்கள் சூறையாடப்படாமல் அமைதியாக புரட்சி வெற்றி பெற்றது.
“நவம்பர் சோசலிசப் புரட்சி என்பது உலகில் இஸ்லாம் மார்க்கத்தின் உதயத்திற்கு பின்னர் நடந்த வரலாற்று நிகழ்ச்சிகளில் எல்லாவற்றையும் விட மிக, மிக முக்கியத்துவமிக்க நிகழ்ச்சியாகும்” என்று இங்கிலாந்தைச் சேர்ந்த அறிவியல் புதினங்களின் தந்தை எச்.ஜி.வெல்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
“நவம்பர் சோசலிசப்புரட்சி, ரோமானியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் நடந்த நிகழ்வுகளில் அனைத்தைக் காட்டிலும் மகத்தான நிகழ்வு” என்று அமெரிக்காவின் ரோமன் கத்தோலிக்க வரலாற்றுப் பேராசிரியர் இ.ஏ.வால்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
“உலகில் கிறிஸ்துவின் பிறப்பிற்குப் பின்னர் நடந்த வரலாற்று சம்பவங்களில் மகத்தான சம்பவம் ருஷ்யாவில் நடந்த நவம்பர் புரட்சி” என்று பிரிட்டிஷ் வரலாற்று ஆசிரியர் ஹாரோல்டு லாஸ்க்கி குறிப்பிட்டுள்ளார்.
“ருஷ்யாவில் நடந்த போல்ஷிவிக் புரட்சி (நவம்பர் சோசலிசப் புரட்சி) புதிய யுகத்தின் சூரிய உதயத்தை அறிவிக்க வந்த விடிவெள்ளி”, “மனித வரலாற்றின் புதிய விடியல்” என்று வர்ணித்தார் இந்திய தேசியக்கவி இரவீந்திரநாத் தாகூர்.
“மாகாளி பராசக்தி உருசிய நாட்டினில்
கடைக்கண் வைத்தாள் அங்கே
ஆகா வென்றெழுந்ததுபார் யுகப்புரட்சி;
கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்
…………..
வையகத்தீர், புதுமை காணீர்!
குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு!
மேன்மையுறக் குடிமை நீதி!
கடியொன்றில் எழுந்ததுபார் குடியரசு என்று
உலகறியக் கூறிவிட்டார்.
அடிமைக்குத் தளையில்லை
யாரும் இப்போது அடிமையில்லை
அறிக என்றார்”
என்று உலகத்திலேயே முதன் முதலாக புகழ்ந்து வரவேற்றுப் பாடினார் மகாகவி பாரதியார்.
இவ்வாறு உலகம் முழுவதும் பேரறிஞர்களும், பெருங்கவிஞர்களும் 1917, நவம்பர் 7-ல் நடந்த சோசலிசப் புரட்சியைப் பற்றி புகழ்ந்தார்கள், வரவேற்றார்கள்.
இந்தப் புரட்சிக்குப் பின்னர் பல வேதனைகளையும், சோதனைகளையும் கடந்து பல பல சாதனைகளைப் படைத்தது சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் (USSR).
“சோவியத் சோசலிசப் புரட்சி மனித குலத்தை ஒரு மாபெரும் பாய்ச்சலில் முன்னேறச் செய்துள்ளது”, “அணைக்கவே முடியாத ஒரு பிரகாசமான சுடரொளியை ஏற்றி வைத்துள்ளது”, “உலகம் முன்னேறிச் செல்ல வேண்டிய அந்தப் புதிய நாகரிகத்துக்கான அடித்தளங்களை இந்தப் புரட்சி படைத்துள்ளது” என்று புகழ் மாலை சூட்டினார் இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள்.
இரத்தம் சிந்தாமல், உயிர்பலி எடுக்காமல், பொருட்சேதம் இல்லாமல் வெற்றி பெற்ற அந்தப் புரட்சி உலகத்தையே புரட்டிப் போட்டது. சொந்த நாட்டில் கல்லாமை ஒழித்தது, இல்லாமையை இல்லமலாக்கியது. நோய்கள் ஒழிக்கப்பட்டது, பெண்களுக்கு பரிபூரண விடுதலையை அமைத்தது, வேலையில்லா நிலைக்கு வேலை இல்லாமல் செய்தது, பிறப்பவர் முதல் இறப்பவர் வரை அனைவருக்கும் சமூகப் பாதுகாப்பை வழங்கியது.
உலகில் இந்தப் புரட்சியின் தாக்கத்தால் ஒடுக்கப்பட்ட அடிமைப்பட்டுக்கிடந்த நாடுகள் விடுதலையடைந்தன. சோசலிச ஜனநாயக சக்திகள் உலகெங்கும் வீறு கொண்டெழுந்தன. 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஏகாதிபத்தியம் – பாசிசமாக உருவெடுத்து, உலகைக் கொள்ளையடிக்க புறப்பட்டது. இத்தாலியின் முசோலினியும், ஜெர்மனியின் ஹிட்லரும் புது அவதாரமெடுத்து உலகை அழிக்கப் புறப்பட்டனர். பாசிசமும், நாசிசமும் மனிதகுலத்தை நாசம் செய்ய முற்பட்டது.
உலக வரலாறு காணாத போர் – “இரண்டாம் உலக மகாயுத்தம்“ 1939 ஆம் ஆண்டு வெடித்தது. சிறு, சிறு நாடுகளெல்லாம் சின்னாபின்னபடுத்தப்பட்டன. மிருக வெறியுடன் சோவியத் யூனியனுக்குள் பாசிச, நாசிசப் படைகள் புகுந்தன.
சோவியத் செஞ்சேனையும், மக்களும் உலகைக் காப்பாற்ற ஈடு இணையில்லா தியாகங்களைச் செய்தனர்.
2 கோடியே 70 இலட்சம் சோவியத் மக்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர். வளர்ச்சி பெற்ற 1170 நகரங்கள் தரை மட்டமாகின. 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களின் சொத்துக்கள் நாசமாக்கப்பட்டன.
இவ்வளவையும் இழந்து உலக மக்களைக் காப்பாற்றிய இலட்சியம் எது? 1917, நவம்பர் சோசலிசப் புரட்சியின் இலட்சியமேயாகும்.
1917 ஆம் ஆண்டு தொடங்கி, 1991 ஆம் ஆண்டு வரை 74 ஆண்டுகள் உலகில், நவம்பர் புரட்சியின் இலட்சியம் மகத்தான பல சாதனைகளை நிகழ்த்தியது.
1991 ஆம் ஆண்டு, உலகில் பல சோதனைகளையும், வேதனைகளையும் நிகழ்த்திவிட்டது.
சோவியத் யூனியன் பல நாடுகளாக சிதறியது. ஐரோப்பாவில் இருந்த சோசலிச நாடுகளிலும் சோசலிச ஆட்சி முறை அகற்றப்பட்டது.
வலிமை பெற்ற சோசலிச முகாம் இருந்த வரைக்கும், வேறு வழி இன்றி தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கிய முதலாளித்துவ முகாம், அந்த உரிமைகளை எல்லாம் பறித்தது. தனியார் மயம், தாராளமயம், உலகமயம் என்ற ரீகன்- தாட்சர் பொருளாதாரக் கொள்கைகள் உலக நாடுகள் மீது திணிக்கப்பட்டன. புதுத்துறைகள் வளர்முக நாடுகளின் பொதுத் துறைகள் சீர்குலைக்கப்பட்டன. அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ஒரு துருவ உலகுக்கு இழுத்துச் சென்றன.
ஆனால் முழு முதலாளித்துவத்தில், ஏழைகள் பெரும் ஏழைகளாவதும், ஒரு சில முதலாளிகள் உலகத்தையே வாங்கி குவிக்கும் செல்வந்தர்களாக உயர்ந்திருப்பதும் கடந்த 30 ஆண்டுகளில் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து மக்கள் அணி திரண்டு பிரம்மாண்டமான போராட்டங்களை உலக நாடுகள் முழுவதிலும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அன்றே சொன்னார் சிந்தனை சிற்பி சிங்காரவேலர்
1925 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி இந்தியாவில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி துவக்கப்பட்ட போது, அந்த மாநாட்டுக்கு தலைமை தாங்கிய தமிழ்நாட்டைச் சார்ந்த தோழர் மா.சிங்காரவேலர் தனது தலைமை உரையில் இந்த நவம்பர் புரட்சி குறித்து குறிப்பிடுகிறபோது,
“மாமேதை லெனின் அவர்களின் அரசியல் சிந்தனையிலும், தத்துவத்திலும் உருவாகிய மாபெரும் இந்த சோசலிச புரட்சி ஒருவேளை அழிக்கப்படலாம். சில சுயநலமிக்க மனிதர்களால் துடைத்தெறியவும் படலாம். ஆனால், இந்தப் புரட்சியானது மீண்டும், மீண்டும் புணரமைக்கப்படும், உலகெங்கும் உள்ள தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும், இந்தப் புரட்சியின் இலட்சியம் உயரிய வாழ்வை அளிக்கும் என்பது மட்டும் உறுதி” என்று தெளிவுறக் கூறினார்.
தோழர் மா.சிங்காரவேலர் நுண்மாண் நுழைபுலத்தோடு கூறிய அந்தக் கருத்து இன்று உலகெங்கும் அரங்கேறி வருகிறது. நவம்பர் புரட்சியின் இலட்சியம் மீண்டும் உயிர்ப்பித்து புணரமைக்கப்பட்டு வருகிறது.
வெல்க நவம்பர் சோசலிசப் புரட்சியின் இலட்சியம்
வாழ்க மாமேதை லெனினின் திருப்புகழ்.