கட்டுரைகள்

லூலாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி! இன்டெர்நெட் போரில் வென்ற இடதுசாரிகள்

வ.மணிமாறன்

லத்தீன் அமெரிக்காவில் வலதுசாரி அலையை பிரேசில் இடதுசாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். பிரேசில் அதிபர் தேர்தலில் லூயிஸ் இனாசியோ “லூலா” டா சில்வா நான்காவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறார்.

உலகமே உற்றுநோக்கிய பிரேசில் அதிபர் தேர்தல் அக்டோபர் மாதம் நடைபெற்றது. அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெற்ற முதல் சுற்றுத் தேர்தலில், தீவிர வலதுசாரி வேட்பாளரும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ஆதரவு பெற்றவருமான ஃபிளாவியோ பொல்சனாரோ 47.03 விழுக்காடு (5.61 கோடி வாக்குகள்), இடதுசாரி வேட்பாளரான லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா 45.16 விழுக்காடு (5.39 கோடி வாக்குகள்) பெற்றனர். லூலா சுமார் 22 லட்சம் வாக்குகள் பின்தங்கியிருந்தார்.

ஆனால், 2026 அக்டோபர் 25 அன்று நடைபெற்ற இரண்டாவது சுற்றுத் தேர்தல் அனைத்தையும் புரட்டிப் போட்டது. லூலா டா சில்வா 51.79 விழுக்காடு (6 கோடியே 42 லட்சத்து 56 ஆயிரத்து 232 வாக்குகள்) பெற்று வெற்றி அடைந்தார். முதல் சுற்று முடிந்தவுடன் “லூலாவின் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டது” என்று எழுதி மகிழ்ந்த கார்ப்பரேட் ஊடகங்களின் கண்களில் பிரேசில் மக்கள் மண்ணைக் கொட்டி விட்டனர்.

2022 தேர்தலில் ஃபிளாவியோவின் தந்தையான ஜெயிர் பொல்சனாரோவுக்கு எதிராக லூலா பெற்ற வெற்றியைவிட இரண்டு மடங்கு அதிகமாக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 2022-ல் லூலாவை பதவியேற்க விடாமல் தடுக்க, அதிகாரத்தில் இருந்த ஜெயிர் பொல்சனாரோ தீவிரமாக முயன்றார். அவருடைய மகன் ஃபிளாவியோ எதிர்பார்த்தபடியே லூலாவின் தற்போதைய வெற்றியை ஏற்க மறுத்துவிட்டார். ஆனால் அவருடையை தந்தையைப் போல், லூலா பதவியேற்பதைத் தடுப்பதற்கான அதிபர் பதவி அதிகாரம் ஃபிளாவியோவிடம் இல்லை. அவரது நெருங்கிய கூட்டாளிகளில் சிலர் ஏற்கனவே மியாமிக்குத் தப்பிச் சென்றுவிட்டனர். சில ஆண்டுகளுக்கு முன்பே அவரது சகோதரர் எடுவார்டோ டெக்சாஸுக்குத் தப்பிச் சென்று தங்கிவிட்டார்.

பண மோசடி, சமூக பாதுகாப்புத் திட்ட மோசடி உட்பட அடுத்தடுத்து வெளியான ஊழல்கள், பிரேசில் வரலாற்றிலேயே மிகப்பெரிய வங்கி மோசடியில் தொடர்பு ஆகியவற்றால் ஃபிளாவியோ பொல்சனாரோ திணறிக் கொண்டிருந்தார். மக்கள் விரும்பாத கொள்கைகளையும் அமைச்சரவை நியமனங்களையும் அறிவித்து கேலிக்கும் ஆளானார். தேர்தல் விவாதங்களில், முதலில் லூலாவைக் கேலி செய்யவும், பின்னர் ஒரு ராஜதந்திரியைப் போல் நடிக்கவும் ஃபிளாவியோ மேற்கொண்ட முயற்சிகள் அவருக்கே எதிராகத் திரும்பின.

லூலா டா சில்வாவின் வெற்றி – லத்தீன் அமெரிக்கா முழுவதும் பரவிவரும் வலதுசாரி வெற்றிகளின் அலையைத் தடுத்து நிறுத்தியுள்ளது. அமெரிக்காவின் இம்பீரியல் மியாமி திட்டத்திற்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 2024ல் டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற பிறகு, சர்வதேச அளவில் தீவிர வலதுசாரிகளுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வி இது என்றால் மிகையில்லை.

லூலாவைப் பொறுத்தவரை எதிர்பார்ப்புகளுக்கு மாறான வெற்றி இது.ஏனென்றால், அக்டோபர் 4 அன்று நடைபெற்ற முதல் சுற்றுத் தேர்தலில் 22 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியிருந்த லூலா, இரண்டாம் சுற்றுத் தேர்தலில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட புதிய வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

லூலாவின் தேர்தல் பரப்புரையை சீர்குலைக்க, பன்னாட்டு பெரும்தொழில்நுட்ப நிறுவனங்கள், அமெரிக்கா மற்றும் பிரேசில் தேர்தல் நீதிமன்றத் தலைவர், பாரம்பரிய ஊடகங்களில் சிலவும் சேர்ந்து தீவிரமாக முயன்றன. அவற்றுடன் இணைய வழியில் தவறான செய்திகளைப் பரப்பும் மிகவும் சக்திவாய்ந்த சமூக ஊடகங்களும் இணைந்து பரப்புரையை சீர்குலைக்கும் வேலையில் ஈடுபட்டன. இவை அனைத்தையும் மீறி லூலா வெற்றி பெற்றிருக்கிறார். இது வலதுசாரிகளுக்கு சாதகமாக சிலிக்கான் பள்ளத்தாக்கின் அல்காரிதம்களும் பன்னாட்டுப் பெருநிறுவனங்களும் வளைக்க முயன்ற தேர்தல் களத்தை, அமைப்பாகத் திரண்ட உழைக்கும் மக்கள் – இடதுசாரிகள் மீட்டுப் பெற்ற வெற்றியாகும்.

லத்தீன் அமெரிக்காவிலேயே மிகப்பெரிய பொருளாதாரத்தையும் மக்கள் தொகையையும் கொண்ட பிரேசில் நாட்டின் தேர்தல் முடிவு, அந்நாட்டின் எல்லைகளைத் தாண்டிப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. அமெரிக்காவின் மிரட்டல்கள், வரிகள் மற்றும் பொருளாதாரப் போர்களை எதிர்கொள்ளும் திறன் கொண்ட நாடு. இதனால்தான் அதன் அண்டை நாடுகளின் வலதுசாரி அரசுகள் கூட லூலாவின் வெற்றியை ஏற்றுக்கொண்டுள்ளன.

கற்க வேண்டிய பாடங்கள்

முதலாவதாக, சமூக, அரசியல் சிதைவுகளின் விளைவுகளை எதிர்கொள்ள மக்கள் தெருவில் இறங்கிப் போராடுவது அவசியமானதும் முக்கியமானதும் ஆகும்.

முதற்கட்டத் தேர்தலில் லூலாவுக்கு பின்னடைவு ஏற்பட்டதால், இரண்டாம் கட்டத் தேர்தலுக்கு முந்தைய நாள், பிரேசில் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிகப் பெரும் பேரணிகள் நடைபெற்றன. ரியோ டி ஜெனிரோவில் லூலாவுடன் இணைந்து சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்ற பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

சாவோ பாலோ நகரில் முக்கிய சாலையான ‘அவெனிடா பாலிஸ்டா’வில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் குவிந்து ஆவேச முழக்கமிட்டனர். இதேபோன்று, சிறிய நகரங்கள் உட்பட பிரேசிலின் அனைத்து நகரங்களிலும் மக்கள் பெரிய அளவில் பங்கேற்ற பேரணிகள் நடைபெற்றன. மக்கள் தெருவில் இறங்கிப் போராடுவது, அவர்களின் ஆற்றலைக் கட்டவிழ்த்து விடுவதுடன், தேர்தல் வெற்றியையும் எளிதாக்கி இருக்கிறது.

இரண்டாவதாக, அமெரிக்க தொழில்நுட்ப பெருநிறுவனங்கள், குறிப்பாக மெட்டா, அல்காரிதத்தை தீவிர வலதுசாரிகளுக்குச் சாதகமாகத் திருப்பிய போதிலும், இன்டர்நெட் போரில் இடதுசாரிகள் வெற்றி பெற்ற முதல் தேர்தல் இதுவாகும். முதற்கட்டத் தேர்தல் முடிவடைந்து, மூன்று வாரங்களுக்கும் குறைவான காலத்தில் வாட்ஸ்அப் சேனல் ஒன்றின் மூலம் திரட்டப்பட்ட, ஒரு கோடி பேரைக் கொண்ட ‘லூலாவின் இராணுவம்’ என்ற இணையப் படை இதில் முக்கியப் பங்காற்றியது.

அல்காரிதத்தை தீவிர வலதுசாரிகளுக்கு எதிராகத் திருப்பியது, தேசிய கால்பந்து அணியின் ஜெர்சி போன்ற பிரேசிலின் சின்னங்களை மீட்டுப் பயன்படுத்தியது போன்றவையும் பெரும் பங்காற்றின.

இந்த இன்டர்நெட் போரில், புதிய தலைமுறை இடதுசாரிகள் ஒருங்கிணைந்த சமூக ஊடகப் பரப்புரையை, தங்களின் தாக்குதல்களை மேற்கொண்டு வென்றுள்ளனர்.

டிஜிட்டல் தொழில்நுட்ப, டிஜிட்டல் முதலாளித்துவ காலத்தில் இடதுசாரிகள் முன்னெடுக்க வேண்டிய பாதையை, பாடங்களை பிரேசில் கொடுத்திருக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button