கட்டுரைகள்

ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தடுத்திடுக!

இரா.ஆறுமுகம்

மூன்று நாள்கள் விடுமுறை அமைந்துவிட்டால் போதும்! சொந்த ஊரை நோக்கி தமிழ்மக்கள் ஓடுகிறார்கள். இந்தியாவிலேயே பெருமளவில் நகர்மயமாகியிருப்பது தமிழ்நாடுதான்.

எந்த நகரத்தில் பணிபுரிந்தாலும், சொந்தங்கள் மீதும், பிறந்த மண்மீதும் உள்ள காதலும், ஏக்கமும் நெஞ்சில் நிலைகொண்டிருப்பதால் வாய்ப்புக் கிடைத்ததும் மடைதிறந்த வெள்ளமாய் மக்கள் புறப்பட்டு விடுகிறார்கள்.

இதனைப் பயன்படுத்தி, பல ஆம்னி பேருந்து நிறுவனங்கள் பயணக் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்தி பயணிகளிடம் பெரும் கட்டணக் கொள்ளையடித்து விடுகிறார்கள்.

எவ்வளவு கூட்டம் இருந்தாலும், அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை உயர்த்துவதில்லை. இப்போது ஆன்லைன் மூலமே பயணச்சீட்டை முன்பதிவு செய்யும் வசதியும் தரப்பட்டுள்ளது.

ஆனால், தனியார் ஆம்னி பேருந்துகளில் சில மாதங்களுக்கு முன்பே, முன்பதிவு செய்திருந்தாலும், பயண நாளன்று வழித்தடம் ரத்து செய்யப்பட்டதாகத் தகவல் வருகிறது. எனினும், அதிகக் கட்டணத்தில் அதே பேருந்து இயக்கப்படுவதும் தொடர்கிறது.

பயணிகளின் முன்பதிவையும், அவர்களின் பயணத் தேவையையும் பயன்படுத்தி கடைசி நேரத்தில் அவர்களை நிர்ப்பந்திக்கும் வகையில் செயற்கையான கட்டண உயர்வு திணிக்கப்படுகிறது.

உதாரணமாக, சென்னை–நாகர்கோவில் பேருந்துக் கட்டணம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் குளிர்சாதனப் பேருந்தில் ரூ908|-, குளிர்சாதன வசதியற்ற பேருந்தில் ரூ498/-தான். விழாக் காலத்திலும் இதே கட்டணம்தான். ஆனால் தனியார் ஆம்னி பேருந்துகளில் சாதாரணமாக ரூ.1,500 அளவில் இருக்கும் கட்டணம் பண்டிகை காலங்களில் ரூ.5,000 ஆகவும், அதற்கும் அதிகமாகவும் உயர்த்தப்படுகிறது.

நெருக்கடியில் சிக்க வைத்து கட்டண உயர்வு!

முன்பதிவு செய்தவர்களை, பேருந்து ரத்து என அறிவித்து, செயற்கையாக நெடு தேவையைக் காரணம் காட்டி கட்டணத்தை மூன்று மடங்கு, நான்கு மடங்கு உயர்த்துவது பொதுப் போக்குவரத்து சேவையை வணிகச் சுரண்டலாக மாற்றுவதாகும்.

சுமார் 4,000 ஆம்னி பேருந்துகள் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படுவதாகக் கூறப்படும் நிலையில், இத்துறையில் அரசு உரிய கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க நிர்வாகி ஒருவர், கடந்த ஆட்சிக் காலத்தில் லஞ்சம் மற்றும் ஊழல் இருந்ததால் கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், தற்போது அதற்கான அவசியம் இல்லை என்றும் பேட்டி அளித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

லஞ்சம் மற்றும் ஊழல் இருந்தால், அதனை வெளிப்படையாக அரசிடம் புகார் செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, அதன் சுமையைப் பயணிகளின் மீது சுமத்துவது எந்த வகையிலும் நியாயமானது அல்ல.

செயலிகளில் முன்பதிவு- கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை

ஆம்னி பேருந்து துறையில் ஆன்லைன் முன்பதிவுகளின் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள், பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இயங்குவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஒரு செயலியில் குறைந்த கட்டணத்தில் காட்டப்படும் பயணச்சீட்டு பின்னர் ரத்து செய்யப்படுவதையும், அதே பேருந்து அதிகக் கட்டணத்தில் மீண்டும் இயக்கப்படுவதையும் குறித்து அரசு முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.

ஆன்லைன் முன்பதிவு முறையைப் பயன்படுத்தி செயற்கையாக பற்றாக்குறையை உருவாக்கி கட்டணத்தை உயர்த்தக் கூடாது.

தனியார் முன்பதிவுத் தளங்களினைச் சார்ந்திருப்பதால், பேருந்து உரிமையாளர்கள், அவர்களுக்கு கமிஷன் தரவேண்டியிருப்பதாகவும், அதனால் அதிகக் கட்டணம் வசூலிப்பதாகவும் சொல்லப்பட்டது. இதற்குத் தீர்வு காணவும், கமிஷன் செலவைக் குறைத்து அதன் பயனை பயணிகளுக்கு வழங்கவும் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள் இணைந்து “ரோமி” (www.roamie.co.in) என்ற முன்பதிவு இணையதளம் மற்றும் செயலியை உருவாக்கியுள்ளதாகவும் சில நாட்களுக்கு முன் செய்தி வந்தது. ஆனாலும், வருகிற தீபாவளி பண்டிகைக்காக வருகிற 6-ந் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு தென் மாவட்டங்கள் உள்பட தமிழகத்தில் பல பகுதிகளுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் சாதாரண நாட்களில் இருக்கும் கட்டணத்தைவிட அதிக கட்டணத்தை நிர்ணயித்துள்ளனர். அதில் சில பேருந்து நிறுவனங்கள் விமான டிக்கெட் அளவுக்குக் கட்டணத்தை நிர்ணயித்துள்ளன. தனி செயலி வைத்தாலும் ஏன் கட்டணம் குறையவில்லை? சென்ற அரசில் லஞ்சம் ஊழல் இருந்ததுதான் காரணம் என்றால், இப்போதுதான் லஞ்ச ஊழல் இல்லாத அரசு இருக்கும்போது, விமானக் கட்டணத்தை எட்டுவது ஏன்?

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சென்ற அரசைக் காரணம் காட்டி இந்த அரசிடம் நெருங்க முயற்சிப்பதையோ, செயலிகளுக்கு கமிஷன் கொடுப்பதால்தான் கட்டண உயர்வு என காரணம் சொல்வதையோ அரசு நம்பி விடக்கூடாது.

எனவே,

  • பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகள் வசூலிக்கும் கட்டணத்தை அரசு உடனடியாக கண்காணித்து, அதிகப்படியான கட்டண வசூலை தடுத்து நிறுத்த வேண்டும்.
  • பயணிகள் முன்பதிவு செய்த பின்னர், திட்டமிட்டு வழித்தடத்தை ரத்து செய்யும் நடைமுறையை தடுத்து நிறுத்த வேண்டும்.
  • முன்பதிவு ரத்து செய்தால், பயணிகளுக்கு முழுத் தொகையையும் உடனடியாகத் திருப்பி வழங்குவதுடன், மாற்றுப் பயண ஏற்பாட்டையும் உறுதி செய்ய வேண்டும்.
  • RedBus உள்ளிட்ட அனைத்து ஆன்லைன் முன்பதிவு தளங்களிலும் காட்டப்படும் கட்டணம், பேருந்து இயக்கப்படும் இறுதி கட்டணம் ஆகியவற்றை அரசு கண்காணிக்க வேண்டும்.
  • ஒரே வழித்தடத்தில் பண்டிகை காலம் என்பதற்காக எவ்வளவு கட்டணம் உயர்த்தப்படுகிறது என்பதற்கான வெளிப்படையானக் கட்டண விதிமுறையை அரசு உருவாக்க வேண்டும்.
  • ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கூறும் லஞ்சம்–ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து அரசு முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்.
  • போதிய பணியாளர்கள் இல்லாமலும், உதிரி பாகங்கள், டயர்கள் இல்லாமலும் நூற்றுக்கணக்கான போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவற்றைச் சரி செய்து பண்டிகை காலங்களில் பொதுமக்களின் போக்குவரத்துத் தேவையை சமாளிக்கும் வகையில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும்.
  • அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு தேவையான அளவு நிதி வழங்கி, கூடுதல் பேருந்துகள், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • போக்குவரத்து என்பது பொதுமக்களின் அத்தியாவசிய சேவை. அதை முழுமையாக சந்தையின் கட்டுப்பாட்டில் விட்டுவிடக் கூடாது.
  • பண்டிகைக் காலங்களில் கட்டணக் கொள்ளையை இனியும் அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது.
  • பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்தி – தனியார் கட்டணக் கொள்ளையை தடுக்க வேண்டும்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button