தமிழகம்

தமிழ்நாடு முழுவதும் ஏஐடியூசி ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஏஐடியுசியின் 21வது மாநில மாநாட்டு அறைகூவலின்படியும், தோழர் குருதாஸ் தாஸ் குப்தா நினைவு தினமான 31.10.2026 அன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு அரசு தொழிலாளர் கொள்கையை அறிவிக்க வேண்டும், அனைத்து நலவாரியங்களிலும் முத்தரப்பு குழுக்களை உடனே நியமிக்க வேண்டும். அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் காண்ட்ராக்ட் மற்றும் அவுட்சோர்சிங் முறைகளை முற்றிலுமாக நீக்கிவிட்டுத், தகுதி வாய்ந்த தொழிலாளர்களை நிரந்தர தொழிலாளர்களாக நியமிக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளில் 450 நாட்கள் பணி புரிந்த அனைத்துத் தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தனியார் துறைகளிலும் இதை அமல்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூபாய் 42 ஆயிரம் என நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தி முழக்கமிட்டனர். இந்தப் போராட்டங்களில் தோழர் குருதாஸ் தாஸ் குப்தா உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

செங்கல்பட்டு: கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் துணைத் தலைவர் ஆர்.தேவராஜன் தலைமை தாங்கினார். தேசியச் செயலாளர் டி.எம். மூர்த்தி சிறப்புரையாற்றினார். மாநிலத் துணைத் தலைவர் எம்.சங்கையா, மாவட்டப் பொதுச் செயலாளர் எம் ஜஹாங்கீர், மாவட்ட தலைவர் வி.ஆதிமூலம், உடலுழைப்பு சங்க செயலாளர் பி.ரவிச்சந்திரன், ஆட்டோ சங்க செயலாளர் க.ஜெகதீசன், ஊரி சங்க செயலாளர் எம்.இராமு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

கோவை: ஏஐடியூசி மாவட்டத் தலைவர் எம்.ஆறுமுகம் எக்ஸ் எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டப் பொதுச் செயலாளர் சி.தங்கவேல், கட்டடத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.செல்வராஜ் ஆகியோர் உரையாற்றினர். இதில் லேபர் யூனியன் பொதுச் செயலாளர் ஆர்.பாலகிருஷ்ணண், பொறியியல் பொது தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் கே.எம்.செல்வராஜ், கட்டடத் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் கோட்டை ஆர்.நாராயணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

ஈரோடு: பெருந்துறை அண்ணா சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஏஐடியுசி மாநிலச் செயலாளர் எஸ்.சின்னசாமி, மாவட்டச் செயலாளர் எம்.செங்கோட்டையன், கைத்தறி நெசவுத் தொழிலாளர் சங்கத் தலைவர் எஸ்.பொன்னுசாமி உள்ளிட்டோர் உரையாற்றினர். முன்னதாக சங்க அலுவலகத்தில் எஸ்.விஜயலட்சுமியும், அண்ணா சிலை அருகில் மூத்த தோழர் எம்.நாகப்பனும் கொடியேற்றி வைத்தனர். சிவகிரி, பவானி, கோபி, சத்தி ஆகிய மையங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அம்பேத்கர் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஏஐடியுசி மாவட்டத் தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். இதில் ஆஷா பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

நெல்லை: நெல்லை ஏஐடியுசி அலுவலகத்தில், மாவட்டத் தலைவர் ஆர்.சடையப்பன் தலைமையில், ஏஐடியுசி கொடியை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் டி.இசக்கிதுரை ஏற்றினார். ஏஐடியூசி மாநிலத் தலைவர் எஸ்.காசிவிஸ்வநாதன் உறுதிமொழி வாசித்தார். ஏஐடியூசி மாவட்டப் பொதுச் செயலாளர் ஆர்.ரெங்கன், மாவட்ட துணைச் செயலாளர் ஏ.சேதுராமலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று, வி.கே.புரம், அம்பை, வள்ளியூர், பத்தமடை, களக்காடு, அரசு போக்குவரத்துக் கழக பணிமனை ஆகிய இடங்களில் அமைப்பு தினம் கொண்டாடப்பட்டது.

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் என்.கே.ராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட கவுரவத் தலைவர் எஸ்.பி.ராதா, மாவட்டத் தலைவர் ஜி.லோகநாதன், மீனவர் சங்க மாவட்டச் செயலாளர் சி.ஆர். செந்தில்வேல், கைத்தறி சங்க மாவட்டச் செயலாளர் கே.ஆர்.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

திருவண்ணாமலை: திருவண்ணா மலை நகரத்தில் ஏஐடியூசி மாவட்டத் தலைவர் வி.குப்புரங்கன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வே.முத்தையன், இரா.தங்கராஜ், எம்.எஸ்.மாதேஸ்வரன், த.ராசேந்திரன், சி.பன்னீர்செல்வம், எம்.முபாரக், எம்.லோகநாதன், பி.கனகராணி, க.ஜோதி. ஆர்.சுதா, சி.சரவணண் ஆகியோர் பேசினர்.

அரியலூர்: அரியலூரில் அண்ணாசிலை அருகே மாவட்டத் தலைவர் ஆர்.தனசிங் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனையடுத்து, நகராட்சி அலுவலகம் எதிரே செயலாளர் ரெ.நல்லுசாமி தலைமையில், உள்ளாட்சி சம்மேளன மாநிலச் செயலாளர் டி.தண்டபாணி, ஏஐடியுசி அலுவலகத்தில் மாவட்டப் பொருளாளர் து.பாண்டியன் முன்னிலையில் ஜி.ஆறுமுகமும் ஏஐடியூசி கொடி ஏற்றினர்.

பெரம்பலூர்: பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில், கட்டட தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் இளங்கோவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் கல்யாணி, மாவட்டத் துணைச் செயலாளர் கவிதா, பெரம்பலூர் நகர கிளைச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் மாவட்ட பொறுப்பாளர் எம்.சுந்தரேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏஐடியூசி மாநிலச் செயலாளர் ஆர்.ஆறுமுகம், சிபிஐ மாவட்டச் செயலாளர் எம்.நந்தி, விவசாய சங்க மாவட்டத் தலைவர் ஏ.சி.சாமிக்கண்ணு, விவசாய சங்க மாவட்டச் செயலாளர் முல்லை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கரூர்: கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு, மாவட்டச் செயலாளர் ஜி.பி.எஸ்.வடிவேலன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஐ மாவட்டச் செயலாளர் கே.கலாராணி, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் எம்.ரத்தினம், ஏஐடியுசி கௌரவத் தலைவர் கே.குப்புசாமி, தலைவர் ஜி.விஜயகுமார், கே.என்.நாட்ராயன், ஆர்.அறிவழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சேலம்: சேலம் கோட்டை ஸ்டேட் வங்கி அருகில், ஏஐடியுசி மாவட்டப் பொதுச்செயலாளர் எஸ்.சம்பத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத் துணைத் தலைவர் ஏ.மோகன், சிபிஐ மாவட்டச் செயலாளர் என்.கே.செல்வராஜ், கட்டட சங்க மாநிலப் பொதுச் செயலாளர் எம்.முனுசாமி, மாநிலக் குழு உறுப்பினர் கே.வி.ராஜேந்திரன், விதொச மாவட்டச் செயலாளர் எஸ்.தனகோட்டி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மேட்டூர் அனல் மின் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு மின்சாரத் தொழிலாளர் சம்மேளனத்தின் மேட்டூர் அனல் மின் நிலைய கிளைத் தலைவர் ஆர்.ராஜ்குமார் தலைமை தாங்கினார். மூத்த தோழர் பி.ஜெயக்குமார் கொடியேற்றினார். ஏஐடியுசி மாநிலக்குழு உறுப்பினர் கே.வி.ராஜேந்திரன் விளக்கிப் பேசினார். சையத் அப்துல் முத்தலிப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாமக்கல்: ஏஐடியூசி அமைப்பு தின கருத்தரங்கம், திருச்செங்கோடு நகர சிபிஐ அலுவலகத்தில் நடைபெற்றது. ஏஐடியூசி மாவட்டத் தலைவர் பி.தனசேகரன் தலைமை தாங்க, மாவட்டப் பொதுச் செயலாளர் என்.முருகராஜ், சிபிஐ மாவட்ட செயலாளர் க.அன்புமணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மத்திய சென்னை: அம்பத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் பி.மாரியப்பன் சிறப்புரையாற்றினார். இதில் ஆட்டோ சங்கத் தலைவர் நாகப்பன், பகுதி செயலாளர் கணேசன், பகுதி துணைச் செயலாளர் மணிகண்டன் ஆகியோர் பங்கேற்றனர்.

தென்சென்னை: அசோக் நகரில் உள்ள ஜீவா இல்லத்தில், கொடியேற்றுதல் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் சுப்பிரமணி தலைமையில் நடைபெற்றது. கௌரவத் தலைவர் எஸ்.ஏழுமலை நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ஆ.பாஸ்கர் சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார். உடலுழைப்புத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் மா.பிரபாகரன், கோவிந்தன், மாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருச்சி: திருச்சி மாநகரில் மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் க.சுரேஷ் துவக்க உரையாற்றினார். பொருளாளர் ராமராஜ், துணைத் தலைவர்கள் சிவா, செல்வகுமார், ஜெயக்கொடி, செயலாளர்கள் லோகநாதன் சுந்தர்ராஜ், ஜனசக்தி உசேன், முருகன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ஏஐடியுசி மாநிலச் செயலாளர் தில்லைவனம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏஐடியுசி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.சந்திரகுமார் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். ஏஐடியுசி மாவட்டத் தலைவர் வெ.சேவையா, மாவட்டச் செயலாளர் துரை.மதிவாணன், மாவட்ட பொருளாளர் தி.கோவிந்தராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button