உலக செய்திகள்கட்டுரைகள்

பிரான்சில் எழுச்சி: 21 ஆம் நூற்றாண்டில் மாற்றத்தின் நெருக்கடி 

அனில் ரஜீம்வாலே

பிரான்ஸ் கலாச்சார ரீதியாகவும், அரசியல், தத்துவ மற்றும் பொருளாதார ரீதியாகவும் வளம் மிகுந்த நாடு. இது வலிமையான பாசிச எதிர்ப்பு, மார்க்சிய, பின்–மார்க்சிய மற்றும் கற்பனாவாத மரபுகள், (மேற்கு ஐரோப்பிய நாடுகளின் சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்ட ஜனநாயக வழியில் அமைந்த கம்யூனிச கொள்கையான) யூரோ-கம்யூனிச, டிராட்ஸ்கியிச, அதிதீவிர இடதுசாரி, புதிய இடதுசாரி மற்றும் அதிதீவிர வலதுசாரி போக்குகள் ஆகியவற்றின் (கலைடாஸ்கோப் போல) பரந்த வண்ணமயமான கலவைகளைக் கொண்டுள்ள தேசமாகும்.

அது மட்டுமா, ஜீன் பால் சார்த்தரின் அதீதவாதம் (transcendentalism), உட்டோப்பிய கற்பனாவாதம், மார்க்சியத்தின் பன்முக நிறங்கள், இடது -வலது -மைய அரசியல் நிலைபாடுகள், நவீனவாதம் மற்றும் பின் நவீனத்துவம், தொழிலாளர் மையவாதம் (‘workerism’), ஃபேஷன் மற்றும் ஓவியங்கள், பண்டைய காலத்து பழமையானவை முதல் இன்றைய காலத்து அம்சங்கள் வரை என அனைத்தையும் உள்ளடக்கி எப்போதும் ஊசலாடிக் கொண்டிருக்கும் ஒரு பிரம்மாண்டமான, முழு பிரபஞ்சமே இத்தேசத்தின் வண்ணக் கலவையில் அடங்கியுள்ளது!

அந்தப் பிரான்ஸ் தேசம் 21ம் நூற்றாண்டின் எதார்த்தங்களை எதிர்கொள்வதில் தோல்வி அடைந்து இன்று நெருக்கடியில் உள்ளது,

பெரும்கொந்தளிப்பில் பிரான்ஸ்

சரிந்து வரும் கல்வி வசதிகள், விலைவாசி உயர்வு, பொதுச் சேவைகள் வீழ்ச்சி மற்றும் சமூகப் பாதுகாப்பு முறையில் அதிகரிக்கும் விரிசல்கள் ஆகியவற்றை எதிர்த்துப் பிரான்ஸ் கொந்தளிக்கிறது. கடந்த வாரம் 10 லட்சம் மக்கள் கலந்து கொண்ட பெருந்திரள் கண்டனப் போராட்டங்கள் பரவலான விரத்தியையும் கோபத்தையும் பிரதிபலித்தது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கடைகள் சேதப்படுத்தப்பட்டன; இவை அனைத்திலும் மிக மோசமான விஷயம், தென்மேற்கு பிரான்சில் உள்ள லிமோஜஸ் நகரில், 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நகர மண்டபம் எரிக்கப்பட்டது.

இந்த இயக்கம் செப்டம்பர் மாத மத்தியில் ஒரு பள்ளியில் தொடங்கியது; பாரிஸ் நகருக்குத் தென்கிழக்கில் உள்ள தொழிலாளர் வர்க்கப் புறநகர்ப் பகுதியான கிரெட்டெயிலில் அமைந்துள்ள லைசி செயிண்ட்-எக்சுபெரி என்ற அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் கூடுதல் ஆசிரியர்கள் கோரி போராடினர்; அப்போது மாணவர்களும் வகுப்புகளை விட்டு வெளியேறி  அவர்களுடன் போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.

கல்வி நிறுவனங்களில் நிலவும் தரம் குறைவு– உதாரணமாக, சேதமடைந்த மேசை, நாற்காலி, பெஞ்சுகள், கழிவறைகள் உள்பட வசதிகள் போதாமை, வகுப்புகளை நடத்த ஆசிரியர்கள் இல்லாதது மற்றும் குறிப்பாகச் சமீபத்திய உயர்ந்து வரும் வெப்பநிலையில் இருந்து பாதுகாப்பு வசதிகள் குறைவு போன்றவற்றை  எதிர்த்துத் தொடங்கிய ஒரு சாதாரணமான போராட்டம் இன்றைய நிலைமையைத் தூண்ட ஒரு சிறு தீப்பொறியானது.

மாணவர்கள் சேர்க்கை சரிந்தது காரணமாக சுமார் 1,588 ஆசிரியர் பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டது என மதிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் ஆதரவு பெறாத அரசாங்கம் 

இம்மானுவேல் மக்ரோன் பத்து ஆண்டுகளுக்கு முன்பு பிரான்சின்  மிக இளம் வயது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; மேலும், ஒருவேளை அவர் மிக பலவீனமான மற்றும் உறுதியற்றவரும் கூட. மக்களின் எதிர்பார்ப்புகளைப் நன்கு திட்டமிடப்படாத தவறான சீர்திருத்தங்கள் மூலம்  நிறைவேற்ற முயன்றார். ஓய்வுபெறும் வயதை 62லிருந்து 64 ஆக உயர்த்தியது, பொருளாதாரத்தில் எதிர்பாராத சுழல்களை ஏற்படுத்தியது. இது குழப்பங்களுக்குக் காரணமாகி பொருளாதாரம் முழுவதையும் பாதிப்பில் மூழ்கடித்ததுடன், கடுமையான எதிர்ப்புகளையும் எதிர்கொண்டது.

அரசு மொத்த நிதியில் தோராயமாக நான்கில் ஒரு பங்கு ஓய்வூதியங்கள் செலவிற்குச் சென்றது. இது அரசு கடன் பத்திரங்கள் பெருமளவில் விற்கப்பட்ட ஒரு காலகட்டத்தில் நிகழ்ந்தது; இதன் விளைவாகக் கடன் வாங்குவதற்கான செலவு கடுமையாக உயர்ந்தது (அதாவது borrowing costs of Government பட்ஜெட் பற்றாக்குறையை ஈடுகட்ட ஒரு அரசு மக்கள்/ வங்கி/ வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து கடனாகப் பெறும் தொகைக்குச் செலுத்தும் வட்டி மற்றும் இதர செலவுகள் உயர்தல்) இது கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியது.

ஒரு விசித்திரமான சூழல் உருவானது; இது, இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி, தலைமுறைகளுக்கு இடையிலான மோதலுக்கு வழி வகுத்தது

தொழில் துறை ஆற்றல்

ஜெர்மனிக்கு அடுத்தபடியாக பிரான்ஸ் ஒரு தனித்துவமான பொருளாதார அடையாளத்தை உடைய தேசம். ஆலைத் தொழிலாளர்கள் பாரிஸ் நகரத்தில் விடுமுறையைக் கழிக்குமளவு வசதி உள்ளவர்களாக இருந்தனர். நடுத்தர வர்க்கத்தினர் வசதி மற்றும் செல்வச் செழிப்பு உடையவர்களாக இருந்தனர். தொழிலாளர்களுக்கும் உயர்கல்வி வாய்ப்பு கிடைத்தது; அவர்கள் வார இறுதி நாட்களைக் கலாச்சாரக் கண்காட்சிகளில் செலவிடும் அளவு வசதி பெற்றிருந்தனர்.

ஏர்பஸ் மற்றும் கான்கார்டு விமானங்களைப் பிரான்ஸ் இணைந்து உருவாக்கியது. ஏர்பஸ் நிறுவனம் தீவிரமாக விரிவடைந்து பிரெஞ்சு ஃபேஷன் ஓர் உலகளாவியக் கலாச்சார ஏற்றுமதியாக மாறியது. மேலும் ஆடம்பரத்துறை போட்டியைத் தாண்டி வளர்ந்தது.

அந்தச் சகாப்தம் 2026ல் மறைந்து விட்டதாகத் தெரிகிறது

தொழில் துறையிலிருந்து சேவை துறைக்கு வேதனையான மாற்றம்:

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலகட்டம் ஆழமான கட்டமைப்பு மாற்றங்கள் நடைபெற்ற காலம் என்று அடையாளப்படுத்தப்பட்டது; தொழில்துறை விரிவடைந்த 1945 முதல் 1975 வரையான காலகட்டத்தில் ஏற்பட்ட தொழில் வளர்ச்சியைப் பிரான்ஸ் பொருளாதார நிபுணர் ஜான் ஃபோராஸ்டியே (Jean Fourastié) ‘ட்ரான்ட் குளோரியூஸ் (‘Trente Glorieuses’) அல்லது ‘முப்பது பொற்கால ஆண்டுகள்’ என்ற பதத்தைப் பயன்படுத்தி குறிப்பிடுவார்.

எனினும் மற்ற காரணங்களுக்கு மத்தியில் 1973 மற்றும் 1979ம் ஆண்டுகளின் எரிபொருள் எண்ணெய் நெருக்கடி, தொழில்துறை உற்பத்தி அடிப்படையிலான பொருளாதாரம் என்பதிலிருந்து தொழில்துறைக்குப் பிந்தைய சேவை சார்ந்த துறைகளுக்கு மாற வேண்டிய தொடர்ச்சியான சிக்கலான மாற்றங்களைக் கட்டாயப்படுத்தியது; இது உலகமயத்தின் செல்வாக்கையும் ஐரோப்பிய ஒருங்கிணைப்பு அழுத்தத்தையும் அதிகரித்தது.

1970களின் உலகளாவிய எண்ணெய் நெருக்கடி அதிர்ச்சிகள், எரிசக்திக்காக இறக்குமதியைச் சார்ந்திருக்கும் பிரான்சின் நிலையை வெளிப்படுத்தின. (இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு மேற்கு நாடுகள் உடன்பட்டு ஏற்றுக்கொண்ட) ‘கெயின்ஸ் பொருளியல் கருத்தொற்றுமை’ கொள்கையை இந்த எண்ணெய் நெருக்கடி சிதைந்தது; (கெயின்ஸ், பிரிட்டானிய பொருளாதார நிபுணர்) கெயின்சியத்திற்குப் பிந்தைய பொருளாதார உத்திகளின் மறுமதிப்பீடு தொடங்கியது.

தொழில்நுட்பப் புரட்சியின் உந்துதலாலும் ‘தொழில்மயத்திற்குப் பிந்தைய சேவைப் பொருளாதாரம்’ (post-industrial service economy) உருவாகத் தொடங்கியது என (அமெரிக்கப் பொருளாதார நிபுணர்) டேனியல் பெல் குறிப்பிட்டார். இன்று சேவை துறை பொருளாதாரத்தில் ஏறத்தாழ 80 சதவீதத்தைக் கொண்டுள்ளது

சிலர் இதைத் தொழில்மயம் நீக்கல் (‘de-industrialisation’) என்று அழைக்கிறார்கள். (அதாவது பெரும்பாலும் உற்பத்தித் துறையில் இருந்து சேவை துறைக்குப் பொருளாதாரம் மாறுவதை இது குறிக்கும்) ஆனால் இந்தக் கருத்து சரியானது அல்ல.

இந்த மாற்றத்தின் விளைவாகத் தொழில்துறை தொழிலாளர்களில் சுமார் 36 சதவீதத்தினர் குறைக்கப்பட்டனர்; இந்த அம்சம் ஒரு வகையில் தொழில்மயம் நீக்கல் என்ற சொற்பிரயோகத்தை  நியாயப்படுத்துகிறது..

வாராந்திர வேலை நேரத்தை 40 மணியிலிருந்து 35 மணி நேரமாகக் குறைத்தல், ஓய்வு பெறும் வயதை 60 ஆகக் குறைத்தல் மற்றும் சமூக நல சலுகைகளைத் தொடர்ந்து விரிவுபடுத்தல் போன்ற நடவடிக்கைகள் அதிக செலவுகளை ஏற்படுத்தும் ஒரு சூழலை உருவாக்கின.

இது, மலிவான உழைப்பைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்களால் மேற்கத்தியச் சந்தைகளை நிறைத்த சீனாவின் கடுமையான போட்டியுடன் உடன்நிகழ்வாக ஒரே காலகட்டத்தில் நடந்தது. வாரத்தில் அதிகபட்சம் 35 மணி வேலை நேரம் என்பது தவறான நேரத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றம் மற்றும் அழிவு ஏற்படுத்த வல்லது என்பதை நிரூபித்தது. இதனால் நவீன வர்த்தக வரலாற்றில் மிக மோசமான ஒரு‌ காலகட்டத்தில் பிரான்சின் ஓர் அலகு உற்பத்திக்கான உழைப்பின் செலவு மேலும் அதிகரித்தது.

அதிகரிக்கும் பொருளாதாரக் கட்டமைப்பு நெருக்கடி 

பொருளாதாரத்தில் அரசின் உயர் கூடுதல் பங்கேற்பு (‘dirigisme’) உள்ள பிரான்ஸ், மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அடிப்படையில் உலகின் 7வது பெரிய பொருளாதாரம்; மற்றும் வாங்கும் சக்தி சமத்தன்மையின்படி (PPP, பர்ச்சேசிங் பவர் பேரிட்டி-படி) 9வது பெரிய பொருளாதாரம். உலக ஜிடிபி-யில் அதன் பங்கு மூன்று சதவீதம்; ஐரோப்பாவில் மிகப் பெரிய அன்னிய நேரடி முதலீடு (FDI) செய்யப்படும் நாடு; ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுகளுக்காகச்  செலவிடுவதில் 2வது பெரிய நாடு; பெரும்வர்த்தகம் செய்வதில் உலகில் 5வது மற்றும் ஐரோப்பாவில் 2வது பெரிய நாடு.

(கடந்த ஆண்டு 10 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகையுடன்) உலகிலேயே அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நாடாகத்ன திகழும் பிரான்ஸின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தில், பாரிஸ் நகரம் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது; மேலும் இது ஐரோப்பாவின் மிகப் பெரிய பொருளாதார மையங்களில் இரண்டாவதாக உள்ளது.

இது 2008லும் 2014லிலும் நெருக்கடியான ஒரு கட்டத்தில் நுழைந்தது; அதன் பிறகு இது உண்மையில் முழுமையாக மீண்டு வரவில்லை.

இன்று பிரான்சின் பொது கடன் சுமை ஜிடிபி-யில் 120 சதவீதத்தை நெருங்குகிறது. 2025ல் வர்த்தக நிறுவனங்களின் தோல்விகள் 68,500ஐ கடந்தன; இது ஐந்து தசாப்தங்களில் இல்லாத உயர்ந்த பட்ச அளவாகும், மற்றும் தொடர்ச்சியாக 5வது ஆண்டாக இந்த வருடாந்திர அதிகரிப்புப் பதிவாகியுள்ளது. வேலையின்மை 8 சதவீதத்தைத் தாண்டி உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி வெறும் ஒரு சதவீதத்திற்குக் குறைவானதாக மந்தமாக உள்ளது.

2025-26-ஆம் ஆண்டில் 0.8 சதவீத அளவிலான மந்தமான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி, ஜிடிபி-யில் 5 சதவீதத்திற்கும் அதிகமான அரசுப் பற்றாக்குறை, ஓய்வூதியங்களுக்காக ஜிடிபி-யில் 13 சதவீதத்திற்கும் மேலான செலவு, 2025-ல் 18.2 சதவீதம் மட்டுமேயான தனியார் சேமிப்பு விகிதம் மற்றும் நுகர்வு வளர்ச்சியில் சரிவு — இவையே அந்தப் பிரச்சனைகளாகும்.

அக்டோபர் 20, 2026 அன்று, தர மதிப்பீட்டு நிறுவனமான ஃபிட்ச் (Fitch), பிரான்சின் கடன் மதிப்பீட்டுத் தரத்தைக் குறைத்தது. முன்னதாக, கேபிஆர்ஏ (KBRA – Kroll Bond Rating Agency) தர மதிப்பீட்டு நிறுவனம், நிதிப் பற்றாக்குறைகள் மற்றும் மோசமடைந்து வரும் கடன் போக்குகள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, பிரான்சின் நீண்டகால கடன் மதிப்பீட்டை ‘AA-‘ நிலைக்குக் குறைத்திருந்தது. 2030-ஆம் ஆண்டிற்குள் பிரான்சின் கடன்-ஜிடிபி விகிதம் 130 சதவீதத்தை எட்டும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) கணித்துள்ளது.

பிரான்ஸ் எப்படி இந்த நிலைக்கு வந்தது? இது கட்டமைப்பு முறிவுகள் (structural fractures) மற்றும் தவறான முடிவுகளின் ஒட்டுமொத்த விளைவாகும்.

“(வலிமையான மத்திய அதிகாரத்திற்கு மாறாக அரசியல் அதிகாரம் கூறுபட்டிருக்கும்) சிதைந்த அரசியல் சூழல், கடன் அளவீடுகளில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது… இது பற்றாக்குறையை உயர் மட்டத்திலேயே நீடிக்கச் செய்கிறது” என்று KBRA-வின் மூத்த இயக்குநர் கென் ஈகன் 2025 டிசம்பரில் குறிப்பிட்டார்.

அரசாங்கம் கடன் பெறுகின்ற செயல்பாடு செலவு மிக்கதாக மாறியுள்ளது; இது அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனுக்குச் சிக்கலை ஏற்படுத்துகிறது. சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) அல்லது ஐரோப்பிய மத்திய வங்கியை அணுகுவதற்கான வாய்ப்பும் மேலும் கடினமாகிறது. 2025ஆம் ஆண்டின் இறுதியில் பிரான்சின் கடன்கள் 3.46 ட்ரில்லியன் யூரோக்கள் அளவை எட்டியது.

2008ன் அதிர்ச்சி மற்றும் கோவிட் நெருக்கடி

2008 ஆம் ஆண்டின் உலகளாவிய நிதி நெருக்கடி பிரான்சின் நிதி மேலாண்மை குறைபாடுகளை வெளிப்படுத்தியது. ஊக்கமளித்து நிதி நிலையை நிலைப்படுத்தும் கொள்கையை, அதற்கேற்ற நடவடிக்கைகள் இல்லாமல், தேர்ந்தெடுத்தது; பொருளாதாரம் கீழ் நோக்கிச் சரிந்த வேளையில் பிரான்ஸ்  மக்களுக்கானப் பொதுச் செலவிடுவதை அதிகரித்தது,  நல்வாழ்வுக்கான செலவுகளை விரிவுபடுத்தியது.

ஆனால் அது தவறான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை. பொருளாதாரக் கட்டமைப்புப் பற்றாக்குறை முழுமையாகச் சரி செய்யப்படாத நிலையில், அது அடுத்த பெரும் நெருக்கடியின்போது பிரான்சை உயர்மட்ட அளவிலான கடன் சுமையை நேரடியாக எடுத்துச் செல்லும்படி விட்டது.

2018 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில், கோவிட் 19 பெருந்தொற்று தொடர்பான நெருக்கடியும், முந்தைய நெருக்கடிகளின் அலைகளும் முழு வீச்சில் தாக்கியது; இதை எதிர்கொள்ள பிரான்ஸ் நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்களைப் பொருளாதார ஆதரவு மற்றும் நிவாரண திட்டங்களில் செலவிட்டது. அந்தச் செலவுகள் ஓரளவு நியாயப்படுத்தக் கூடியன என்ற போதிலும் அவை 2024ல் ஜிடிபி யில் 5.8 சதவீதம் அளவு நிதி பற்றாக்குறையை ஏற்படுத்தியது –அது ஐரோப்பிய யூனியனின் அனுமதிக்கப்பட்ட உச்சவரம்பிற்கு இரண்டு மடங்கான அளவாகும்.

2026 ஆம் ஆண்டின் எதார்த்தம்

தற்போது உடனடியாகப் பிரான்சின் பொருளாதாரக் கட்டமைப்பு மிகவும் அழுத்தத்துக்கு உள்ளான மற்றும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில்  உள்ளது; இது மீட்சி பெறுவதை  மிகவும் கடினமாக்கி உள்ளது. பொது கடன் ஜிடிபி பங்கில் 120 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளத்துடன், அது 2027 வாக்கில் 122% நோக்கி வேகமாக அதிகரித்து வருகிறது.  கடனுக்கு வட்டி கட்டும் திருப்பிச் செலுத்தும் சேவைக்கான செலவு 60 பில்லியன் ஈரோக்களாக மதிப்பிடப்பட்டுள்ளது; 2020ல் இருந்து இது சுமார் இரண்டு மடங்காகி உள்ளது. 1974க்கு பிறகு வணிக நிறுவனங்களின் தோல்விகள் மிக மோசமாக உள்ளது.

நெருக்கடியின் பாடங்கள்: சர்வதேச நிதி ஏகபோக அமைப்பிலும், ஏகாதிபத்திய அமைப்புகளில் ஒன்றிலும் முதலீடு செய்வதில் தோல்வி   

பிரான்சின் கதை என்பது, உலகப் பொருளாதாரப்  பின்னடைவு தேக்கத்துடன் இணைந்த ஆழமான கட்டமைப்பு நெருக்கடியை முறியடிப்பதில் தோல்வி அடைந்த கதை.

2026-ஆம் ஆண்டில் பிரான்ஸ் செலுத்த வேண்டிய 59.3 பில்லியன் யூரோ அளவிலான ஆண்டு வட்டிச் சுமை, தொழில் துறையில் முதலீடு செய்வதையோ, அல்லது கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவச் சேவைகளில் முதலீடு செய்வதையோ இயலாத ஒன்றாக்கி விட்டது.  தொடர்ந்து அதிகரித்து வரும் பற்றாக்குறைச் செலவினங்கள், எந்தவித ஆக்கபூர்வமான முதலீடும் இன்றி, நாட்டின் கடன் சுமையை மேலும் அதிகரிக்கின்றன.

கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடு

பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் (PCF) தேசியச் செயலாளர் ஃபேபியன் ரூசெல், கம்யூனிஸ்ட் மாணவர்கள் மற்றும் இளம் கம்யூனிஸ்டுகள் யூனியன் அமைப்புடன் இணைந்து, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், “போராட்டங்களை ஒடுக்குவதற்காக அரசாங்கம் அடக்குமுறையைத் தேர்ந்தெடுக்கிறது” என்று குற்றம் சாட்டினார்.

மேலும் அவர், “உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் போராட்டத்திற்குப் பின்பு உந்துசக்தியாக இருக்கும் கோபத்தைப் புரிந்துகொள்ள வேண்டிய கடமை நமக்கு உண்டு.” தலைநகரின் வீதிகளில் மாணவர்கள் போராட்டத்துடன் இணைந்து கொள்வதற்காகப் புறப்படுவதற்குச் சற்று முன்பு இவ்வாறு கூறினார்; இது, அரசாங்கத்தையே அதிரவைக்கும் வகையிலான நாடு தழுவிய போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ரூசெல் கட்சியின் வேட்பாளர் ஆவார். கட்டமைப்பு மற்றும் கல்விச் சீர்திருத்தங்களுக்காகப் பில்லியன் கணக்கான யூரோக்களைக் கோரி, அவர் 2027-32 இளைஞர் திட்டத்தை வெளியிட்டுள்ளார். தேசியத் தொழிற்சங்க மையமான CGT, வெகுஜன இயக்கத்தைத் தீவிரமாக ஆதரிக்கிறது. “60 சதவீதப் பள்ளிகள் 1980-களுக்கு முன்பு கட்டப்பட்டவை, அவற்றில் சில இப்போது மாணவர்கள் தங்கிப் படிக்கத் தகுதியற்றவைகளாக  உள்ளன,” என்று ரூசெல் குறிப்பிட்டார்

தீவிர வலதுசாரிகள் அச்சுறுத்தல்

தீவிர வலதுசாரிகளும் நவ-பாசிசவாதிகளும் மக்கள் மத்தியில் நிலவும் அதிருப்தியைப் பயன்படுத்தி வளர்ந்து வருகின்றனர்; அவர்கள் தற்போதைய இயக்கத்தையும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அதேபோல், தீவிர இடதுசாரிகளும் ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபட்டு, வலதுசாரிகளுக்கு மட்டுமே சாதகமான சூழலை உருவாக்குவதில் உதவுகின்றனர். எனவே, உண்மையான இடதுசாரி சக்திகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

1968 மே மாதத்தில், ‘புதிய இடதுசாரிகளை’ (New Left) மையமாகக் கொண்டு நடைபெற்ற மாணவர்கள் கிளர்ச்சி நினைவுக்கு வருகிறது. இது ‘கோலிசத்திற்கு’ (Gaullism – பிரெஞ்சு எதிர்ப்புப் படையின் தலைவரான சார்லஸ் டி கோல் முன்வைத்த தேசியவாதக் கொள்கை ஆகும்) மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தது. பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF), எரிக்கப்படும் ஒவ்வொரு காருக்கும் ஈடாக, ஆளும் தரப்புக்கு நடுத்தர வர்க்கத்தின் கணிசமான வாக்குகள் கிடைப்பதாகக் குறிப்பிட்டதை நினைவு கொள்ள வேண்டும்.

1968-ஆம் ஆண்டு போராட்டக் கிளர்ச்சியுடன் செய்யப்படும் தவறான ஒப்பீடுகளைத் தவிர்க்க வேண்டும்; சேவைத் துறை ஆதிக்கம் செலுத்தும் இன்றைய மாறியுள்ள பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப, உண்மையான செயல்திட்ட வியூகங்களை வகுக்க வேண்டியது அவசியம். பிரான்சில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, 21-ஆம் நூற்றாண்டின் தனித்துவமான அடையாளங்களைக் கொண்ட ஒரு மக்கள் இயக்கமாக உருவெடுத்து, மேற்கு ஐரோப்பா முழுமைக்கும் பரவியுள்ளது.

–நன்றி : நியூ ஏஜ் (அக். 25 31)
–தமிழில் : நீலகண்டன்,
என் எஃப் டி இ, கடலூர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button