கட்டுரைகள்வரலாறு

பொதுவுடைமைப் போராளி சேலம் ப.பரமசிவம் புகழ் ஓங்குக!

க.பாரதி

வாழ்க்கை மகத்தானது மக்களுக்காக வாழும் போது என்றார் மாமேதை காரல் மார்க்ஸ். இந்த முதலாளித்துவ சமூக அமைப்பில் சமரசமில்லா வாழ்க்கைக்கு தியாகம் அடிப்படையானது.

சாதிய ஒடுக்கு முறையையும் வர்க்க ஒடுக்கு முறையையும் எதிர்த்து எந்தவித சமரசமும் இல்லாமல் மார்க்சிய லெனினிய கோட்பாட்டில் உறுதியாக நின்று போராடுவது என்பது சவால்கள் நிறைந்தது. சமரசமில்லா வாழ்க்கையை வாழ்ந்து காட்டியவர் தோழர் ப.பரமசிவம்

கொடிய வறுமை ஏழ்மை வாட்டிய போதும் கட்சிக்காக அவர் அர்ப்பணித்துக் கொண்டு வாழ்ந்த வாழ்க்கையை அவருடைய நேர்மையை பல்வேறு தரப்பினரும் கூறும்போது மெய்சிலிர்க்கும்.

தோழர்.ப.பரமசிவம் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். அவரது பெற்றோர் பழனியப்பன் அழகம்மாள் தாரமங்கலத்தில் இருந்து சேலம் நகருக்கு கூலி வேலை செய்து பிழைப்பு நடத்துவதற்காக குடிபெயர்ந்தவர்கள். இவர்களுக்கு ஐந்து மகன்கள் ஐந்து மகள்கள் இவர்களில் பரமசிவம் அவர்கள்தான் எல்லோருக்கும் இளையவர்.

சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக இருந்தது. இலக்கிய பேராசான் ஜீவா அவர்கள் சீல்நாயக்கன்பட்டியில் உரையாற்றும்போது அதைக் கேட்கும் வாய்ப்பைப் பெற்ற பரமசிவம் கட்சி மீது பற்று கொண்டு கட்சி நடத்தக்கூடிய இயக்கங்களில் பங்கேற்கத் தொடங்கினார்.

தான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது ஜனசக்தி பத்திரிக்கையை விநியோகிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு சீல நாயக்கன்பட்டி பிரதேச கமிட்டி முழுவதும் சைக்கிளில் சென்று ஜனசக்தியை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டார்.

குடும்ப ஏழ்மையின் காரணமாக ஒன்பதாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை. அதனால் கைத்தறி நெசவுத் தொழிலுக்கு சென்ற தோழர் பரமசிவம் அங்கு தொழிற்சங்கம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு சீலநாயக்கன்பட்டி பகுதிகளில் கைத்தறி நெசவு தொழிற் சங்கத்தை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.

1964 ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. இதில் தனது சகோதரர்களில் ஒருவரான சின்ன பழனி அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். மற்ற அனைவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தொடர்ந்தனர்.

1972 ஆம் ஆண்டு நடைபெற்ற நில மீட்பு போராட்டத்தில் கலந்துகொண்டு மூன்று மாத காலம் சிறை தண்டனையை அனுபவித்த ப.பரமசிவம் அவர்கள் சிறையில் தலைவர்கள் நடத்திய மார்க்சிய வகுப்புகளின் காரணமாக, சிறையில் இருந்து வெளிவந்தவுடன் கட்சியின் முழு நேர ஊழியராக பணியாற்றத் தொடங்கினார். 1972 ஆம் ஆண்டு தான் பல்வேறு நெருக்கடிக்கு மத்தியில் தைலம்மாள் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவருடைய திருமணத்தை கே.பாலதண்டாயுதம் அவர்கள் நடத்தி வைத்தார். தொழிற்சங்கப் பணிகளோடு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சேலம் நகரப் பொறுப்புச் செயலாளராகவும் பொறுப்பேற்று பணியாற்றினார்.

சேலம் சீலநாயக்கன்பட்டி சுற்றுவட்டார பகுதியில் குடிநீரை அசுத்தப்படுத்துவதோடு நிலத்தடி நீரை மாசுபடுத்தி வந்த தோல் தொழிற்சாலையை அப்புறப்படுத்தக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்றப் போராட்டத்தில் கலந்து கொண்டு 17 நாள் சிறை தண்டனை அனுபவித்தார். இப்போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தது குறிப்பிடத்தக்கது.

தியாகச்செம்மல் கே.டி.கே.தங்கமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட முதல் செயலாளரும் சுதந்திரப் போராட்ட வீரருமான தோழர் கே.செல்வராஜ் அவர்களுடன் ஏற்பட்ட தொடர்பு தொழிற்சங்க பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வாய்ப்பை கொடுத்தது. இதனால் தொழிலாளர் நீதிமன்றங்களில் தொழிலாளர்களுக்காக வாதாடி நீதியைப் பெற்றுத் தரக்கூடிய அளவிற்கு தொழிற்சங்க அனுபவங்களை பெற்றுக் கொண்டார்.

சேலம் நாமக்கல் கிருஷ்ணகிரி தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் தொழிலாளர்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் தொழிற்சங்க தலைவர் என்ற முறையில் வழக்கறிஞர்கள் கூட இவரைத்தான் அணுகுவார்கள்.

ஏற்காடு தேயிலைத் தோட்ட தொழிலாளர் சங்க பொறுப்பில் பணியாற்றும்போது ஏற்காட்டில் உள்ள எஸ்டேட்டில் கூலித் தொழிலாளியாக பணிபுரியும் இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் மரணமுற்றார்.

தோட்ட தொழிலாளர்களை ஒன்று திரட்டி உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கேட்டு தொடர் போராட்டங்களை பி. பரமசிவம் அவர்கள் நடத்தினார். தேயிலை தோட்ட முதலாளி சமூக விரோதிகளை ஏவி விட்டு அவரைக் கொலை செய்ய முயற்சித்தார். அதில் இருந்து தப்பித்து ஏற்காடு மலையிலிருந்து பிரதான சாலையில் அல்லாமல் மரங்களும் முட்புதர்களும் நிறைந்த வழிகளில் நடந்து ஆடைகள் கிழிக்கப்பட்ட நிலையில் சேலம் வந்தடைந்தார்.

தொடர்ந்து அவர் நடத்திய போராட்டத்தின் காரணமாக அந்த இளம் பெண்ணின் உடல் தோண்டப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அந்தப் பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. தோட்ட முதலாளியின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

1950இல் சேலம் சிறைச்சாலையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிர் தப்பிய சுதந்திரப் போராட்ட வீரர் தோழர் கே.எஸ். உத்தமங்கலிங்கம் அவர்களோடு இணைந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பலப்படுத்தும் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். தோழர் பரமசிவம் சேலம் நகரச் செயலாளராக பொறுப்பு வகித்தபோது சேலத்தில் நடைபெற்ற லாட்டரிச் சீட்டு விற்பனை கள்ளச் சாராய வியாபாரம் போன்ற சமூக விரோதச் செயல்களை எதிர்த்தும், ரவுடிகளின் அட்டூழியத்தை எதிர்த்தும் தொடர் போராட்டங்களை நடத்தி சேலம் நகர சுற்றுவட்டார பகுதிகளிலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைப் பலப்படுத்தினார்.

மார்க்சிய லெனினிய கொள்கையில் உறுதியாக நின்று சக தோழர்களிடம் இருக்கும் அந்திய வர்க்கப்போக்குகளை மிகவும் கறாராக இவர் களைவதற்கு முயற்சிக்கும் போது சில பல நேரங்களில் சக தோழர்களின் வெறுப்புக்கும் உள்ளாகி விடுவார். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாதவர். தினந்தோறும் நடந்தே கட்சி அலுவலகத்திற்கு சென்று கட்சிப்பணியை மேற்கொள்வார்.

சுற்று வட்டார மக்களுக்கு பிரச்சினை ஏற்பட்டால், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்பார். மக்கள் பிரச்சினைக்காக மனு எழுதிக் கொடுப்பதிலேயே நேரம் கழிந்து விடும்.

நேர்மையான வாழ்க்கையை நடத்தி வந்த பரமசிவம் அவர்கள் லஞ்ச ஊழல் எங்கு நடந்தாலும் அதை எதிர்த்துப் போராடுவார். அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குகிறார்கள் என்று தகவல் தெரிந்தால் உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் கொடுத்து லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை அவர்கள் லஞ்சப்பணம் வாங்கும் போதே கையும் களவுமாக பிடித்துக்கொடுப்பார்.

ஆழ்ந்த வாசிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி, தனது உள்ளூர் மக்கள் படிக்க வேண்டும், அரசியல் வரலாறு அறிவியலை எல்லாம் தெரிந்து கொள்ள தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பகத்சிங் படிப்பகத்தை உருவாக்கினார்.

பழங்குடி மக்களின் மீது உள்ள பற்று காரணமாக கட்சி தொழிற்சங்க பணியோடு பழங்குடி மக்களின் உரிமைக்காக தொடர்ச்சியாக போராடியவர். ஏற்காடு நகர பகுதியில் தொடங்கி அனைத்து மலை கிராமங்களுக்கும் நடந்தே சென்று பழங்குடி மக்கள் சங்கத்தை பலப்படுத்தினார்.

ஏற்காடு மலைப்பகுதியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோவிலூர் என்ற கிராமத்திற்கு சாலை வசதி இல்லாமல் இருந்தது. அரசிடம் பலமுறை முறையிட்டும் போராட்டம் நடத்தியும் சாலை வசதியை ஏற்படுத்தி தராத போது கோவிலூர் கிராம மக்களை அணி திரட்டி கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டார்.

அரசு அலுவலர்களுக்கு என்று கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான வீடுகள் ஏற்காடு நகரப் பகுதியில் இருந்தன. அந்த வீடுகளை பழங்குடி மக்களில் உள்ள விதவைகளுக்கு வழங்க வேண்டும் என தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்தவர் பரமசிவம்.

அதேபோல் சேலம் பெத்தநாயக்கன்பாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட மண்ணூர் மலைப்பகுதியில் வாழும் மக்களுக்கு எட்டு கிலோமீட்டர் தொலைவுக்கு பல்வேறு போராட்டங்களை நடத்தி சாலை அமைத்துக் கொடுப்பதற்கு காரணமாக இருந்தவர்.

சேலம் சீலநாயக்கன்பட்டி அருகில் உள்ள மலையடிவாரப் பகுதியில் உள்ள நிலங்களை கையகப்படுத்தி வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் வழங்கினர். அந்தப் பகுதிக்கு சுபாஷ் சந்திர போஸ் நகர் என பெயர் சூட்டப்பட்டது. இதற்கு முக்கிய காரணமாக இருந்து பல்வேறு அடக்கு முறையை சந்தித்து மக்களுக்கு நிலத்தையும் வீட்டையும் உத்தரவாதப்படுத்தியதோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு என்று 2000 சதுர அடி நிலத்தை பெற்றுக் கொடுத்தார்.

தான் ஏற்றுக்கொண்ட மார்க்சிய லெனினியக் கொள்கையில் உறுதியாக நின்றவர். யாரிடமும் விருப்பு வெறுப்பு பாராட்டாமல் விமர்சனம் சுயவிமர்சனம் என்ற அடிப்படையில் உட்கட்சி வாழ்க்கையை மேற்கொண்டார்.

தொடர் வாசிப்பில் கவனம் செலுத்தி ஜனசக்திகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ள ப.பரமசிவம் அவர்கள் ‘பேய்களும் மூடநம்பிக்கைகளும்’, ‘புதுவாழ்வு’, ‘கடவுளின் தடம்’ உள்ளிட்ட நூல்களையும் எழுதி உள்ளார்.

இதில் ‘கடவுளின் தடம்’ என்னும் நூல் வெளியிடுவதற்கு முன்பாகவே அவர் மரணம் அடைந்து விட்டார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 வது மாநில மாநாடு சேலத்தில் நடைபெற்ற போது. சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டங்களையும் அதன் வரலாற்றையும் தொகுத்து ஜனசக்தியில் கட்டுரைகள் எழுதி வந்த பரமசிவம் அதை புத்தகமாகவும் வெளியிட முயற்சித்தார்.

தோழர் ப.பரமசிவம் அவர்களின் வாழ்க்கைக்கு மிகவும் துணையாக நின்றவர் அவரது இணையர் தைலம்மாள் அவர்கள்தான். அவர் சிறிய அளவிலான டிபன் கடை வைத்து அதில் வரும் வருமானத்தை வைத்து சதீஷ் பாலன், சிங்காரவேல் ஆகிய இரு மகன்களை வளர்த்ததோடு அவ்வபோது தோழர் பரமசிவம் அவர்கள் கட்சி பணிக்குச் செல்ல நிதி உதவியும் செய்தார்.

அவர் கடந்த பிப்ரவரி மாதம் 5 ந்தேதேதி காலமானார். அவர் மரணமடைவதற்கு முன்னதாகவே எந்தவித சடங்குகளும் என் உடலுக்கு செய்யக்கூடாது என மரணசாசனம் எழுதி வைத்திருந்தார்.

அது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது.

தோழர் பரமசிவம் அவர்களின் சகோதரி சின்னம்மாள் மகன் ஏ.கந்தன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். மற்றொரு சகோதரி அங்கம்மாள் மகன் ஏ.லோகநாதன் சேலம் மாவட்ட குழு உறுப்பினராக பணியாற்றி வருகிறார். சகோதரி சின்னம்மாள் அவர்களின் பேரன் க.பாரதி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநில செயலாளராக செயல்பட்டு வருகிறார்.

மூத்த சகோதரி பாப்பம்மாள் மகள் குப்பாயி அவர்களின் பேரன் பா.தினேஷ் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநில செயலாளராக செயல்பட்டு வருகிறார்.

அவரது குடும்பத்தில் இருந்து ஒருவர் கூட இடதுசாரி கட்சிகளை தாண்டி வேறொரு அரசியல் கட்சிக்கு செல்லவில்லை என்பது மிக முக்கியமானது.

தோழர் ப. பரமசிவம் அவர்களின் படத்திறப்பு விழாவும் அவர் எழுதிய “கடவுளின் தடம்” எனும் நூல் வெளியீட்டு விழாவும் நவம்பர் 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறுகிறது.

தோழர் ப.பரமசிவம் புகழ் ஓங்குக!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button