கட்டுரைகள்

ஒற்றை வல்லரசு இனியில்லை: ரசிய, சீன, அமெரிக்க முத்தரப்புக்கான முன்மொழிவுகள்

மே.து.ரா.

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு தனி வல்லான்மை ஆற்றலாகத் தன்னைக் கருதிக்கொண்டு செயல்பட்டுவந்த அமெரிக்காவின் தலைமை என்றோ முடிவுக்கு வந்துவிட்டது.

இருப்பினும், தனது மேனிலையை மீண்டும் உறுதிப்படுத்த அமெரிக்கா மேற்கொண்ட அரசியல், பொருளிய, வணிக, படை முயற்சிகள் அனைத்தும் தற்போது பயனளிக்கவில்லை. அமெரிக்காவில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல்களிலிருந்து மீள, ரசியாவுடனும் சீனாவுடனும் தனது உறவுகளைப் புதுப்பிக்க அமெரிக்காவின் டிரம்ப் முனைப்புக் காட்டி வருகிறார்.

இந்த நிலையில், ரசியத் தலைவர் புதின், சீனாவின் சி சின்பிங், அமெரிக்காவின் டிரம்ப் ஆகியோர் உக்ரைன் போர் குறித்துக் கலந்துரையாடவேண்டும் என்று புதின் தெரிவித்த கருத்து இன்றைய உலக அரங்கின் புதிய போக்கினைத் தெளிவாக்கியிருக்கிறது என்றுதான் கூறவேண்டும். இதுவரை உக்ரைன் போர் குறித்துச் சீனா வெளிப்படையான சார்பு நிலையைப் பொதுவெளியில் தெரிவிக்கவில்லை. இருப்பினும், சீனத் தலைவரையும் இணைத்துப் புதின் பேசியிருப்பது வேறுபட்ட சூழ்நிலையொன்று உருவாகியுள்ளது என்பதைத்தான் காட்டுகிறது.

வலிமை கொண்ட நாடுகள்

இரண்டாம் உலகப் போரினை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அன்று வலிமை கொண்ட நாடுகளாக இருந்த சோவியத் ஒன்றியத்தின் தலைவர் ஸ்டாலின், அமெரிக்கத் தலைவர் ரூசுவெல்ட், இங்கிலாந்துத் தலைமையமைச்சர் சர்ச்சில் ஆகியோர் யால்ட்டாவில் 1945 பிப்ரவரியில் கலந்துரையாடிச் சில முடிவுகளை மேற்கொண்டனர். அடுத்து மீண்டும், 1945 சூலையில் சோவியத் ஒன்றியத்தின் ஸ்டாலினுடன், அப்பொதைய அமெரிக்கத் தலைவர் ட்ரூமன், இங்கிலாந்துத் தலைமையமைச்சர் அட்லி ஆகியோர் ஒன்று கூடிப் பேசினர்.

உலக அரங்கில் பெரும் நெருக்கடிகள் ஏற்படும் பொழுதெல்லாம் அன்றைய வளர்ந்த நாடுகளின் தலைவர்கள் கூடி முடிவெடுப்பது ஒரு வழமையாக இருந்து வந்திருக்கிறது. இவர்களுக்குள் கொள்கை நிலைகளிலும் நோக்கங்களிலும் எதிர்பார்ப்புகளிலும் ஒத்த கருத்துகள் இருக்க எப்போதும் வாய்ப்புகள் இருக்கவில்லையென்றாலும், அவ்வப்போதைய பதட்டங்களைக் குறைக்கும் முயற்சிகளாகவே அவை அமைந்தன என்பதையும் மறுப்பதற்கில்லை.

இரண்டாம் உலகப் போரினையடுத்து, இங்கிலாந்துக்குக் கீழ்ப்பட்டிருந்த நாடுகள் பல விடுதலை பெற்றதால், அது தனது பெருமைகளை இழந்துவிட்டது.

போரில் பெருமளவில் உயிர், பொருள், கட்டமைப்பு இழப்புகளைக் கண்டிருந்தாலும் சோவியத் ஒன்றியம் தனது ஆற்றலை இழக்கவில்லை.

இதனால், சோவியத் ஒன்றியமும் அமெரிக்காவும் இரண்டு பெரும் ஆற்றல்களாக உலக அரங்கில் நிலைகொண்டன. கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் மக்கள் சீனம் மலர்ந்திருந்தாலும், அது வலிமை பெற்ற நாடாக அப்போது முன்னேறியிருக்கவில்லை.

புதிய நாடுகள் முன்னேற சோவியத் உதவிகள்

புதிதாக விடுதலை பெற்ற நாடுகள் வளர்ச்சி பெறும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளக்கூடாது என்பதை அடிப்படையாகக் கொண்டு, அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் தொடர்ந்து அவற்றைத் தங்களது அங்காடிகளாகவே நீடிக்க முனைந்தன.

ஆனால், சோவியத் ஒன்றியம், உயர் நுட்ப, பொருளிய உதவிகளை வழங்கிப் புதிய நாடுகள் தொழில் வளர்ச்சியில் முன்னேற உறுதுணையாக இருந்தது.

சோவியத் ஒன்றியத்தின் துணையோடு புதிய நாடுகள் சோசியலிசக் கொள்கைகளைத் தழுவிக்கொள்வதைத் தடுக்க அமெரிக்கா அச்சுறுத்தும் பல நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.

இதனால் கொரியப் போர் மூண்டு, வட, தென் கொரிய நாடுகளாகப் பிரிக்கப்பட்டன. வியட்நாமில் அமெரிக்கப் படைகள் ஊடுருவிப் பல்லாண்டுகள் தொடர்ந்து மக்களைக் கொன்று குவித்தன. இருப்பினும் சோவியத் ஒன்றியம் மற்றும் சீனாவின் துணையுடன் வியட்நாம் வெற்றி கண்டது. இத்தகைய முரண்களுக்கிடையில் ஏற்பட்ட நெருக்கடிகளைத் தீர்க்க அல்லது குறைக்க அவ்வப்போது இரு பெரும் ஆற்றல்களும் கூடிப் பேசுவது இயல்பாக இருந்தது. இவற்றுக்கிடையில், அணுக்கருவிகளின் உற்பத்தி, விண்வெளி ஆய்வுகள் போன்றவையும் சேர்ந்துகொண்டன.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சோவியத் ஒன்றியத்தின் குருச்சேவ், அமெரிக்கத் தலைவர் ஐசன்கோவர் ஆகியோர் சுவிட்சர்லாந்தில் 1955இல் பேச்சுக்கள் நடத்தினர். அடுத்து, குருச்சேவ், கென்னடி இருவரும் 1961இல் ஆத்திரியாவின் வியன்னாவில் கலந்து பேசினர். மீண்டும் 1967இல் அமெரிக்கத் தலைவர் லின்டன் சான்சனும் சோவியத் ஒன்றியத்தின் தலைமையமைச்சர் கோசிசினும் வியத்நாம் போர் குறித்து உரையாடினர். 1972இல் மாஸ்கோ சென்ற நிக்சன், அணுக்கருவிகளின் கட்டுப்பாடு பற்றி பிரச்னேவ், கோசிசின் ஆகியோருடன் முடிவுகள் காண முயற்சித்தார்.

இரு பெரும் ஆற்றல்களின் இது போன்ற காணல்கள் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு முன்னரும் பின்னரும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

அண்மையில் அமெரிக்காவின் அலாசுகா மாநிலத்தில் டிரம்பும் புதினும் முடிவுகாண முயன்றனர். அத்துடன், அவர்கள் இருவரும் அவ்வப்போது தொலைபேசியிலும் கலந்துரையாடுகின்றனர்.

நேட்டோ அமைப்பு அமெரிக்கா இல்லாமல் தனித்துச் செயல்படும் நிலையிலில்லை. சோவியத் ஒன்றியத்தின் தலைமையிலான வார்சா நாடுகளின் அமைப்பு சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னர் செயல்படவில்லை.

உலகில் நடைபெறும் அனைத்துச் செயல்பாடுகளும் ரசியா, அமெரிக்கா ஆகியவற்றையே நடுவப்படுத்திக் கொண்டுள்ளன. சோவியத் ஒன்றியம், அமெரிக்கா ஆகிய இரண்டிலும் இணையாமல், அணிசாரா நாடுகள் என்ற அளவில் இந்தியா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் அமைப்பு இருந்தது. ஆனால், அவை யாவும் பெரிதும் சோவியத் ஒன்றியத்தின் அறிவியல் நுட்ப, பொருளிய உதவிகளை ஏற்றுக்கொண்ட நாடுகளாகவே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இதனால்தான், சோவியத் வீழ்ச்சியையடுத்து, அந்த அமைப்புச் செயல்படா நிலை ஏற்பட்டுவிட்டது. அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளின் சுரண்டலை அல்லது ஊடுருவலை முழுமையாகத் தடுத்து நிறுத்தக்கூடிய பெரும் ஆற்றலாகச் சோவியத் ஒன்றியம் விளங்கியதைக் காண முடிகிறது.

அமெரிக்க முயற்சிகளுக்குத் தடை

1970களின் இறுதியில் அமெரிக்காவின் துணை பெற்றிருந்த ஈரான் மன்னரை ஆட்சியிலிருந்து அகற்றி, அமெரிக்கத் தூதரகப் பணியாளர்களை நீண்ட காலம் சிறைப்பிடித்திருந்த இசுலாம் பிரிவினரை எதிர்த்து எதுவும் செய்ய முடியாமல் அமெரிககாவைத் தடுத்தது அன்றைய சோவியத் ஒன்றியம்தான்.

ஆனால், சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு 2001இல் (9/11) உலக வணிக நடுவம் தாக்குதலுக்குள்ளான பின்னர், 2003இல் வேதியல் போர்க் கருவிகள் இருப்பதாகக் கூறி ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்துப் பெரும் அழிவினை உண்டாக்கியது. ஈராக் தலைவர் சதாம் உசேன் கொல்லப்பட்டார்.

ஆப்கானித்தானுக்கும் அமெரிக்கப் படைகள் சென்று பல்லாண்டுகள் நிலைகொண்டிருந்தன. அமெரிக்க படைகளோடு அய்ரோப்பிய மற்றும் பிற நாடுகளின் படைகளும் சேர்ந்துகொண்டன.

சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு நெருக்கடியில் சிக்கியிருந்த ரசியாவும், முன்னேற்றப் படிகளில் ஏறிக்கொண்டிருந்த சீனாவும் அய்.நா.வின் காப்புக்குழுவில்கூட எதிர்ப்புத் தெரிவிக்க முடியாமலிருந்தன.

மாறிய உலக நிலைமைகள்

இன்று அந்த நிலை முற்றிலும் மாறிவிட்டது. ரசியா தனது வளங்களைக் கொண்டு பொருளிய வலிமையைப் பெருக்கிக்கொண்டது. அனைத்து நிலைகளிலும் சீனா முன்னேறி, வலிமையான கட்டமைப்பைக் கொண்ட நாடாக உருவாகிவிட்டது.

உலக அரங்கில் இன்று மேன்மை பெற அறிவியல் நுட்ப அறிவு, மனித வளம், தொழில் உற்பத்தி, வணிகப் பெருக்கம், படை வலிமை, அரசியல் செல்வாக்கு போன்ற பல நிலைகளிலும் முன்னேற்றம் கண்டிருக்கவேண்டும். அப்போதுதான் அமெரிக்காவின் வல்லான்மையினை எதிர்த்து நிற்கவியலும். இதில் அமெரிக்காவைச் சீன அனைத்து வகையிலும் விஞ்சி வருகிறது.

அய்.நா. வழியாக வடகொரியா மீது பல தடைகள் இருப்பினும், ரசியாவும் சீனாவும் அவற்றை மீறி உறவை மீண்டும் உறுதிப்படுத்திக்கொண்டுள்ளன. அனைத்துக்கும் மேலாக, ரசியாவுக்கும் வடகொரியாவுக்கும் நேரிடையாக வானூர்தி, தொடர்வண்டித் தொடர்புகள் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளன. சீனாவையும் வடகொரியாவையும் இணைக்கும் வகையில் மூன்று கிலோமீட்டர் அளவிலான தரைவழிப் பாலமும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

ரசிய, சீன நுட்பத் துணை

ஈரான் மீது அமெரிக்காவும் இசுரேலும் தாக்குதல்களை நடத்தியபோது, ஈரான் நிலைகுலைந்துவிடவில்லை. சவுதி அரேபியா போன்ற அமெரிக்காவுக்குத் துணை நிற்கும் நாடுகளின் மேல் ஆளில்லா வானூர்திகளை ஏவிக் கட்டமைப்புகளை நிலைகுலையச் செய்து வருகிறது.

இத்தகைய போர் நடவடிக்கைகளுக்கு மிக நுட்பமான அறிவுத் திறன் வேண்டும். பகைநாட்டின் உள்தகவல்களை அறிதல் வேண்டும். ஏவுகணைகளைச் செலுத்த ஆளில்லா வானூர்திகளுக்கு வேண்டிய செயற்கைக்கோள் வழிகாட்டுதல் மற்றும் இணையத் தொடர்புகள் வேண்டியுள்ளது. துல்லியமாக இலக்குகளைத் தாக்கவும் விரைந்து பாய்ந்து செல்லவும் இவை அடிப்படையாக அமைகின்றன. இத்தகைய பங்களிப்பினை ரசியாவும் சீனாவும் தடையின்றி வழங்கி வருகின்றன.

இத்தகைய செயற்கைக்கோள் மற்றும் இணைய உதவிகளின்றி உக்ரைன் தனது ஏவுகணைத் தாக்குதலை நடத்த இயலாது.

எனவே, இன்றைய போர்முறையில் அமெரிக்காவுக்கு எதிராக ரசிய, சீன நாடுகளின் துணை வேண்டியுள்ளது. அதைப் போன்றே உக்ரைனுக்கு அமெரிக்காவின் துணை வேண்டியுள்ளது. உக்ரைனை நோக்கி வரும் ரசிய ஏவுகணைகளைத் தடுத்து நிறுத்தும் ‘பேட்ரியாட’ போன்ற கருவிகளையும் அமெரிக்காதான் தந்தாக வேண்டும். அமெரிக்கா மறுக்கும்போது இவற்றைத் தருகின்ற அளவு நேட்டோ நாடுகளோ அய்ரோப்பிய ஒன்றிய நாடுகளோ நுட்ப அறிவில் முன்னேறியிருக்கவில்லை.

இந்த நிலையில்தான், புதின் வளமும் வலிமையையும் கொண்ட ரசிய, சீன, அமெரிக்கத் தலைவர்கள் கூடிப் பேசவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இதில் அய்ரோப்பிய ஒன்றியத்துக்கு இடமில்லை. இது உக்ரைன் போருக்கும் அப்பால் காணப்பட வேண்டியதாகும். சீனாவின் வளர்நிலைக்கான ஏற்பாகும். அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளைக் கட்டுப்படுத்தும் முன்மொழிவாகும்.

இன்று, ஆப்பிரிக்கா உள்ளிட்ட உலகின் தென்பகுதி நாடுகளுக்கு அனைத்து வகையிலும் துணை நிற்பவை ரசியாவும் சீனாவும்தான்.

இந்தப் புதிய வளர்ச்சி, உலக அரங்கில் புதிய மாற்றங்களைக் கொண்டுவரும் என்பதில் அய்யமில்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button