கட்டுரைகள்

தமிழ்நாடு முதன்மை மாநிலம்

இரா.முத்தரசன்

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கிட வேண்டும் என்றுதான் ஒவ்வொரு தமிழ்க்குடிமகனும் விரும்புவான்.

மாநிலத்தை யார் ஆட்சி புரிவது என்பதனை தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

அம்மக்கள் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் செய்து, த.வெ.க. என்ற கட்சிக்கு மற்ற கட்சிகளை விட கூடுதல் இடங்களில் (108) வெற்றி பெறச் செய்தனர்.

கொல்லைப்புறக் கதவைச் சத்தமில்லாமல் திறந்து கொண்டு அரியணையில் அமர ஆலவட்டம் போட்ட பா.ஜ.க. வின் கபட நாடகத்தை நன்கு அறிந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களின் ஆதரவை த.வெ.க. அரசு அமைக்க வெளியிலிருந்து ஆதரவு எனும் நல்முடிவை மேற்கொண்டனர்.

மேலும் சில கட்சிகள் ஆதரவு மட்டும் அல்ல – ஆட்சியிலும் பங்கு என்ற முடிவோடு அமைச்சரவையிலும் இணைந்தனர்.

இதன் காரணமாக ஜோசப் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்று, ஐந்து மாதங்கள் உருண்டோடியுள்ளன.

மாற்றத்தை முன்வைத்து ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ள புதிய அரசிடம், புதிய முதலமைச்சரிடம் மக்கள் எதிர்பார்ப்புகள் ஏராளம்! ஏராளம்!!

முழு நிறைவு பெற முடியாவிட்டாலும், அடிப்படையான ஒரு சில பிரச்சனைகளுக்காவது தீர்வு கிடைக்கும் எனும் மக்களின் நம்பிக்கை பொய்த்திடலாகாது.

வெளிப்படைத்தன்மையை மக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றார்கள். இந்தியாவின் ஏனைய மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாடு மாநிலம் முதன்மை மாநிலமாக, முன்மாதிரி மாநிலமாக விளங்கிட வேண்டும் என எதிர்பார்ப்பதற்கு உரிய நியாயங்கள் இங்கே நிரம்பவே உள்ளன.

1957-க்கு முன்னதாக மின்துறை தனியார் வசம் என்று இருந்ததை மாற்றி பொதுத்துறை நிறுவனமாக உருவாக்கப்பட்டு, தமிழகத்தின் குக்கிராமங்கள் வரை மின்சாரம் கொண்டு செல்லப்பட்டு சாதனை படைத்துள்ளதை மறுப்பதற்கு இல்லை. பல்லாயிரக்கணக்கானத் தொழிலாளர்கள் மின்வாரியத்தில் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வருகின்றனர் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்றல்ல.

இயற்கை சீற்றங்களால் பெரும் பாதிப்புக்குள்ளாவதில் மின்சாரமும் ஒன்று. மின்கம்பங்கள் அனைத்தும் சாய்ந்தும், முறிந்தும், கம்பிகள் அறுந்தும், முழுமையாக, மின்சாரம் தடைப்பட்டால் வெளிச்சம் மட்டுமல்ல, குடிப்பதற்கு கூட குடிதண்ணீர் கிடைக்காது, மருத்துவமனைகள் இயங்காது என்ற மிக மோசமான நிலை உருவாகிவிடும் – கண நேரத்தில் மின்வாரிய தொழிலாளர்கள் இரவு என்றும், பகல் என்றும் பாராது – மின் கம்பங்களைச் சுமந்து சென்று நடுவதிலும், புதிய மின் கம்பிகளை சுமந்து சென்று பொருத்தி இரண்டொரு நாளில் மின்னல் வேகத்தில் மின் இணைப்பைத் தந்து ஒளிரச் செய்து சாதனை படைத்ததை பல்வேறு சந்தர்ப்பங்களில் நேரில் பார்த்து பாராட்டி மகிழ்ந்துள்ளோம்.

கடந்த சில மாதங்களாக ஆங்காங்கே மின்சாரம் இல்லை என்ற நிலை ஏற்பட்டு இருள் சூழ்ந்த நிலையில் மக்கள் வீதிக்கு வந்து தன்னெழுச்சியாக போராடி வருவதை நாள்தோறும் பார்த்து வருகின்றோம்.

வீடு கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் மின்சாரக் கட்டணம் வழக்கத்தை விட மிக அதிக அளவில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதையும், அதனை எதிர்த்து மக்கள் குரல் எழுப்புவதையும் இன்றும் பார்த்து வருகின்றோம்.

பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டிய அரசு, பல்வேறு காரணங்களை கூறியது. மின்வாரிய தலைமை அதிகாரிகளை அடிக்கடி மாறுதல் செய்தது. மின்வெட்டு கிடையாது, பல இடங்களில் தொழிலாளர்கள் வேண்டுமென்றே அரசுக்கு அவப்பெயர் ஏற்பட வேண்டும் என்பதற்காக பணிபுரிய மறுக்கின்றார்கள் என தொழிலாளர்கள் மீது பழி போட்டது.

மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை ஒரு சில இடங்களில் தவறு நடந்துள்ளது அதனை சரி செய்து வருகின்றோம் என்றது.

இவ்வாறு பல்வேறு கதைகளை கதைக்கதையாகக் கூறி தற்போது தேவையான அளவிற்கு நம்மிடம் மின்சாரம் இல்லை – ஆகவே, வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்க முடிவு செய்து விட்டோம் என்று அறிவித்து, அதற்கான பணியிலும் மிக மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது.

ஒவ்வொரு மாநிலமும் தங்களுடைய மாநிலத் தேவைக்காக மின்சாரம் வெளிச்சந்தையில் கொள்முதல் செய்யத்தான் செய்கின்றன. அவ்வாறு நாட்டிலுள்ள மாநிலங்கள் ஒவ்வொன்றும் ஒரு யூனிட் மின்சாரத்தை என்ன விலை கொடுத்து வாங்கியுள்ளது என்கின்ற விவரங்களை ஜம்மு காஷ்மீரில் தொடங்கி நமது குமரி முனைவரை மாநில வாரியாக சற்று பொறுமையுடன் பார்ப்பது நல்வினை ஆற்றும் எனத் தோன்றுகிறது.

குறைந்தபட்சம் யூனிட் ஒன்று 4.10 எனத் தொடங்கி, அதிகபட்சம் 8.90 என்ற அளவில் மாநிலங்கள் மின்சாரத்தை கொள்முதல் செய்யும் நிலையில், தமிழ்நாடு மாநிலம் மட்டும் ஒரு யூனிட் ரூபாய் 35.00 என விலை நிர்ணயம் செய்து வாங்குவது ஏன்? என்ற நியாயமான வினாவிற்கு இந்நாள்வரை நேர்மையான பதில் இல்லையே ஏன்? ஒரு யூனிட் ரூபாய் 35க்கு கொள்முதல் செய்தால் ஒரு லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். அப்பெருந்தொகையை யாருடைய தலையில் கட்டப் போகின்றார்கள்?

லட்சம், கோடிகளில் விரல் விட்டு எண்ணக்கூடிய சில நபர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு பயன் பெறுவார்கள்! கோடிக்கணக்கான தமிழக மக்களுக்குத் தாரைத்தாரையாக கண்ணீர் வடியும்!

எந்த ஒரு மாநிலமும் இவ்வளவு பெரும் தொகை கொடுத்து கொள்முதல் செய்யாத நிலையில், த.வெ.க. அரசு சிறிதும் தயக்கமின்றி, கூச்சமின்றி ரூ.35க்கு கொள்முதல் செய்வதுதான் முதன்மை மாநிலமா?

அன்றாட உபயோகிக்கும் அரிசி உள்ளிட்ட பண்டங்கள் காய்கறி விலைகள் நாள்தோறும் போட்டி போட்டு உயர்கின்றது. உணவுத்துறை அமைச்சரோ விலை உயரவில்லை ‘நார்மலாக’த்தான் உள்ளது என்கிறார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் விலைகள் உயர்ந்துள்ளன என்று தினத்தந்தி நாளிதழ் உட்பட பல ஏடுகள் தலையங்கம் எழுதியுள்ளன. இவை அரசின் கவனத்திற்கு வரவில்லையா?

அரிசியை எடுத்துக் கொள்வோம், அதன் விலை உயர்வு எவ்வாறு உள்ளது என்பதனை கவனத்தில் கொள்வோம்-

1. புழுங்கல் பொன்னி அரிசி 1400 இல் இருந்து ரூபாய் 1900க்கு உயர்ந்துள்ளது.
2. ஆர்.என்.ஆர். பொன்னி அரிசி ரூபாய் 1100 லிருந்து ரூபாய் 1700 என உயர்ந்துள்ளது.
3. சோனா மசூரி பச்சரிசி ரூபாய் 1400 இல் இருந்து ரூபாய் 2000 ஆக உயர்ந்துள்ளது.
4. ஸ்டீம் அரிசி ரூபாய் 1100லிருந்து ரூபாய் 1800 ஆக உயர்ந்துள்ளது.
5. மேற்கண்டவை 60 கிலோ மூட்டையாகும்.
6. 30 கிலோ கொண்ட மூட்டை பாசுமதி அரிசி ரூபாய் 1400 லிருந்து ரூபாய் 3800 ஆக உயர்ந்துள்ளது.
7. சிவாஜி அரிசி 25 கிலோ கொண்ட மூட்டை ரூபாய் 1850 இல் இருந்து ரூபாய் 2,400 என உயர்ந்துள்ளது.
8. சன்னரக அரிசி 26 கிலோ கொண்ட மூட்டை ரூ.1600 லிருந்து ரூ. 2,200 ஆக உயர்ந்துள்ளது.
9. மோட்டா ரக அரிசி 26 கிலோ கொண்ட மூட்டை ரூ. 1,200 லிருந்து ரூ. 1,800 ஆக உயர்ந்துள்ளது.
10. துவரம் பருப்பு கிலோ ரூ. 120 லிருந்து ரூபாய் 150 என உயர்ந்துள்ளது.
11. கடலைப்பருப்பு கிலோ ரூபாய் 100லிருந்து ரூபாய் 150 வரை உயர்ந்துள்ளது.
12. கருப்பு கொண்டைக்கடலை கிலோ ரூபாய் 75 லிருந்து ரூபாய் 100 வரை உயர்ந்துள்ளது.
13. வெள்ளை கொண்டைக்கடலை கிலோ ரூபாய் 85 லிருந்து ரூபாய் 120 வரை உயர்ந்துள்ளது.
14. அச்சு வெல்லம் ரூபாய் 60 லிருந்து ரூபாய் 65 வரை உயர்ந்துள்ளது.
15. சர்க்கரை கிலோ ரூபாய் 47 லிருந்து ரூபாய் 90 ஆக உயர்ந்துள்ளது.

இவ்விலைகள் மொத்த விற்பனை நிலையங்களில் உள்ள விலை விபரங்கள் ஆகும். இவையே சில்லறை விற்பனையில் 15% முதல் 20% வரை கூடுதல் விலையில் விற்கப்படுகின்றது.

விலைகளே உயரவில்லை எல்லாம் நார்மல் என்று கூறிய உணவுத்துறை அமைச்சர் தற்போது ஒரு புது விளக்கத்தை கூறியுள்ளார்.

சில அரசியல் கட்சிக்காரர்கள் ரைஸ்மில் வைத்திருக்கிறார்கள்; அவர்கள் பதுக்கி வைத்துள்ளார்கள், அதனால் தான் என்று தெரிவித்துள்ளார்.

பதுக்கலை வெளிக்கொணர நடவடிக்கை எடுக்க அரசிடம் ஒரு தனித் துறையே இருக்கின்றதே அது என்ன செய்து கொண்டிருக்கின்றதாம்? என மக்கள் கேட்க மாட்டார்களா?

  • மின் கொள்முதலில் அதிக விலை கொடுத்து வாங்கும் முதன்மையான மாநிலம் தமிழ்நாடு!
  • விலைவாசி உயர்வு மற்ற மாநிலங்களை காட்டிலும் மிக உயர்ந்த நிற்கின்ற மாநிலம் தமிழ்நாடு!
  • முதன்மை மாநிலமாக விளங்கிவரும், முன்னோடி மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாடு வாழ்க!

பண்டிகைக் காலம் என்றால் – தொடர் விடுமுறை என்றால் – ஆம்னி பேருந்துகள் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்படுகிறது. அரசு கட்டணத்தை விட 10 மடங்கு 12 மடங்கு கூடுதல் கட்டணம் பொதுமக்களிடமிருந்து பகிரங்கமாக கொள்ளையடிக்கப்படுகின்றது.

  • அறிவிக்கப்படாத மின்வெட்டு
  • அறிவிக்கப்படாத மின் கட்டண உயர்வு
  • கட்டுப்படுத்த முடியாத விலை உயர்வு
  • கட்டுக்கடங்காத ஆம்னி பேருந்து கட்டணம் உயர்வு

இவற்றின் காரணமாக ஏழை நடுத்தர மக்களின் அன்றாட வாழ்க்கை அல்லோலப்படுகின்றது.
ஒவ்வொரு நாளும் அரசாணை பிறப்பித்தல் – அடுத்த சில நாட்களில் திரும்பப் பெறுதல் – இவை ஒன்று மட்டுமே அரசு மேற்கொண்டால் மக்களின் துன்பத்தை, துயரத்தை போக்குவார் யார்?

யாருமில்லை – எல்லாம் விதிப்படி நடக்கும் கிருஷ்ண உபதேசம் கூறினால் – பின் ஏன் நீ என்ற கேள்வியை மக்கள் எழுப்பிடத்தானே செய்வார்கள்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button