டெல்லி காவல்துறை தாக்குதலைக் கண்டித்து இடதுசாரிக் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

ஒன்றிய பிஜேபி அரசின் கைப்பாவையாக செயல்படும் தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமாரை பதவி நீக்க வலியுறுத்தி, போராடும் மாணவர், இளைஞர் அமைப்புகளின் தலைவர்களையும், இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்களையும், அராஜகமான முறையில் கைது செய்யும் டெல்லி காவல்துறையை கண்டித்து, இடதுசாரிக் கட்சிகளின் சார்பாக, மாவட்டத் தலைநகரங்களில், 10.10.2026 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.பி.மணிகண்டன் கண்டன உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.கணேசன் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மண்டலச் செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். சிபிஐ திருப்பூர் புறநகர் மாவட்டத் துணைச் செயலாளர் பி.நதியா, திருப்பூர் மாநகர் மாவட்டத் துணைச் செயலாளர் ஆர்.வடிவேல், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.பவித்ராதேவி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இடதுசாரி கட்சிகளின் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கோவை: கோவை காந்திபுரம் கிராஸ் கட் ரோடு சந்திப்பில், கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் துணைச் செயலாளர் ஜே.ஜேம்ஸ் ஆகியோர் தலைமை தாங்கினார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் சாந்தி சந்திரன், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் வி.ஆர்.பாண்டியன், அஷ்ரப் அலி, கிழக்கு மண்டலச் செயலாளர் எஸ்.சண்முகம், சையது இப்ராஹிம், ஏ.பி.மணிபாரதி, சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஏ.ராதிகா, சிஐடியூ மாவட்டப் பொதுச் செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாமக்கல்: இடதுசாரி கட்சிகளின் சார்பில், நாமக்கல் பூங்கா சாலையில், சிபிஎம் முன்னாள் மாவட்டச் செயலாளர் ஏ.ரங்கசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிபிஐ மாவட்டச் செயலாளர் க.அன்புமணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.வி.சிவகுமார், மாவட்டச் செயலாளர் என்.செல்வராஜ், ராசிபுரம் நகரச் செயலாளர் எஸ்.மணிமாறன், சிபிஐ எம்.எல் மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
திருச்சி மாநகர்: இடதுசாரி கட்சிகள் சார்பில், திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகில், நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாநகர் மாவட்டச் செயலாளர் கோவி. வெற்றிச்செல்வம், சிபிஐ மாநகர் மாவட்டச் செயலாளர் சிவா, சிபிஐ-எம்.எல் மாவட்டச் செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் கலந்துகொண்டு மோடி உருவபொம்மையை எரித்து கைதாயினர்.
திருச்சி புறநகர்: மணப்பாறை கோவில்பட்டி சாலையில் உள்ள காமராஜர் சிலை அருகில், சிபிஐ நகரத் துணைச் செயலாளர் த.திருநாவுக்கரசு, சிபிஎம் வட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிபிஐ வடக்கு ஒன்றியத் துணைச் செயலாளர் சித்திரை பெருமாள், மருங்காபுரி ஒன்றியத் துணைச் செயலாளர் கோவிந்தராஜ், தெற்கு ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன், ஏஐடியுசி மாவட்டத் தலைவர் தீரன்மணி, புறநகர் மாவட்டப் பொருளாளர் ஜனசக்தி உசேன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
தேனி: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆண்டிபட்டி ஒன்றியக்குழு சார்பில், 12.10.2026 அன்று ஆண்டிபட்டியில், சிபிஐ ஒன்றியச் செயலாளர் பா.பிச்சைமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகரச் செயலாளர் க.முனிஸ்வரன் முன்னிலை வகித்தார். ஒன்றியத் துணைச் செயலாளர் பி.முருகன், ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர்கள் டி.பெருசு, வி.வேலுச்சாமி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே.பரமேஸ்வரன் நிறைவு செய்து உரையாற்றினார்.