தலையங்கம்

மோடியின் 25 ஆண்டுகள் சாதனையல்ல; வேதனை

ஜனசக்தி தலையங்கம்

மோடி ஆட்சிக்கு வந்து 25ஆண்டுகள் ஆகிவிட்டதாகக் கொண்டாடினார்கள். குஜராத்தில் 2001 அக்டோபர் 7 முதலமைச்சரான மோடி, 2014இல் இந்திய பிரதமர் ஆனார். இந்த நீண்ட அதிகார பயணத்தில் அவர் சாதித்ததுதான் என்ன?

2014 நாடாளுமன்றத் தேர்தலில், முதலமைச்சராக அவர் குஜராத்தை வளர்ச்சியின் உச்சிக்கு கொண்டு சென்று விட்டதாகத்தான் பெரும் விளம்பரம் செய்யப்பட்டது. தொழில் முதலீடுகள், துறைமுகங்கள், உள்கட்டமைப்பு ஆகியவற்றில் குஜராத் முன்னேறி விட்டதாகச் சொன்னார்கள்.

ஆனால் சமூகப் பிரச்சினைகள் தீர்ந்தனவா? ஊட்டச்சத்துக் குறைபாடு, ரத்தசோகை, கிராமப்புற சுகாதாரப் பற்றாக்குறை, பழங்குடியினர் பகுதிகளின் அடிப்படை வசதிக் குறைபாடுகள் என்றும் தொடர்கின்றன.

கோரத் தாண்டவமாடிய, கோத்ரா மதவெறிக் கொடுமையில் அரசுக் கணக்கின்படி 1,044 பேர் கொல்லப்பட்டனர்; அவர்களில் 790 பேர் முஸ்லிம்கள். வீடுகள், கடைகள் அழிக்கப்பட்டன;

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளில் ஆர்.எஸ்.எஸ்.

குண்டர்கள் ஈடுபட்டனர். இவ்வாறு வன்முறை நடத்தப்படுவதை அனுமதிக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூட்டத்தில் மோடி பேசியதாக செய்திகள் வந்தன.

வீட்டுக்கு ரூ15 லட்சம், ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு என்று என்னென்னவோ வாக்குறுதிகள் கொடுத்து மோடி பிரதமரானார். ஆனால் சொன்னதைச் செய்யவில்லை. சொல்லவே இல்லை என்று மறுத்தனர்.

2016ல் திடீரென அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு சிறு, குறு தொழில்களை மரணக் குழியில் தள்ளியது. வணிகர்களையும், தொழிலாளர்களையும் கடுமையாகப் பாதித்தது.

2017ல் வந்த ஆராயப்படாத ஜிஎஸ்டி-யின் சிக்கல்கள், மீதமிருந்த சிறு தொழில்களையும் மொத்தமாக அழித்தன. வேலைவாய்ப்புகளை இழந்து பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தெருவில் தள்ளப்பட்டனர்.

2020ல் கொரோனா பெருந்தொற்று. எந்த கால அவகாசமும் தராமல் திடீரென பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை, வருமானம், போக்குவரத்து இன்றி தவித்தனர். சாதாரண மக்கள் போதிய மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்தனர். பலர் மாய்ந்தனர்.

அதே ஆண்டில், இந்திய விவசாயிகளையும், இந்திய மக்களையும் கடுமையாக பாதிக்கும் மூன்று வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாகப் போராடினர். இறுதியில் அரசு அவற்றைத் திரும்பப் பெற்றாலும், அந்த சட்டம் இயற்றப்பட்டதன் நோக்கத்தை நடைமுறையில் நிறைவேற்றிக் கொண்டே இருக்கிறது.

குடியுரிமைத் திருத்தச் சட்டம், ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம், மத அடையாள அரசியல், வெறுப்புப் பேச்சுகள் ஆகியவை மதச்சார்பின்மை மற்றும் சிறுபான்மையினர் பாதுகாப்பைக் கேள்விக்குறியாகிவிட்டது

மாநில அரசுகளிடமிருந்து அதிகாரத்தை பறித்து, அரசியல் சாசனத்துக்கு விரோதமாக அத்தனை அதிகாரங்களையும் ஒன்றியத்தில் குவிக்கும் வேலை நடந்து கொண்டே இருக்கிறது.

பல்வேறு மொழி, பண்பாடு கொண்ட இந்திய நாட்டை, ஒற்றைத் தன்மை கொண்டதாக மாற்ற பல முழக்கங்கள் வைக்கப்படுகின்றன.

நாடாளுமன்ற விவாதம், கூட்டாட்சித் தத்துவம், ஊடகச் சுதந்திரம், தேர்தல் ஆணையம், நீதிமன்றம், புலனாய்வு அமைப்புகள், போன்ற சுயேச்சையான அமைப்புகளின் செயல்பாடுகள், ஆட்சியாளர்களின் கண்ணசைவுக்குக் கட்டுப்படும் நிலை ஏற்படுத்தப்பட்டது.

அம்பானி அதானி ஆகிய இரண்டு குஜராத்திகளுக்கும் மக்களின் வரிப்பணத்தில் இருந்து ஒன்றிய அரசு ஏற்கனவே உருவாக்கி வைத்திருந்த நூற்றுக்கணக்கான பொதுத்துறை நிறுவனங்கள் கிட்டத்தட்ட இலவசமாகவே தரப்பட்டன.

பட்டியலினத்தவர், பழங்குடியினர், பெண்கள், சிறுபான்மையினரின் சம உரிமை கடந்த காலக் கதையாகிறது.

துறைமுகங்கள், விமான நிலையங்கள், விமானங்கள், சாலைகள், ரயில்கள், மின்சார உற்பத்தி, நிலக்கரிச் சுரங்கங்கள், தொலைபேசி, தகவல் தொடர்பு என எல்லாவற்றிலும் பொதுத்துறை நிறுவனங்கள் அழிக்கப்பட்டு அதானி, அம்பானி சொத்துக்கள் ஆக்கப்பட்டு விட்டன.

மோடி ஆட்சிக்கு வந்த இந்த 12 ஆண்டுகளில், அம்பானியின் சொத்து 423%ம், அதானியின் சொத்து 1998%ம் உயர்ந்துள்ளன.

நிரந்தர தொழிலாளர் முறைமை, கோரிக்கைகள், தொழிற்சங்க உரிமைகள் எல்லாவற்றையும் பறித்து, அமைப்பு சார்ந்த மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர்கள் வாழ்க்கையில் மோடி அரசு மண் அள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறது.

நாட்டின் வளர்ச்சி என்பது ஒரு சிலரின் செல்வப் பெருக்கமல்ல; பெரும்பான்மை மக்களின் வாழ்க்கைத் தர உயர்வே.

பெரு முதலாளிகளுக்கும், அந்நிய நாடுகளுக்கும் சேவை புரிந்து, மக்களின் வாழ்க்கைத் தரத்தை அதல பாதாளத்தில் தள்ளியவரைக் கொண்டாட என்ன இருக்கிறது?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button