
நடந்து முடிந்த தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவுகள் வியப்பைத் தரவில்லை என்றாலும் அதிர்வுகளை அளித்திருக்கின்றன என்பதை மறைக்க வேண்டியதில்லை. அத்துடன், மக்கள் விருப்புக்கு மாறான இன்றைய தேர்தல் முறையின் போதாமையும் வெளிப்பட்டுள்ளது.
இடதுநிலைக் கட்சிகளான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியன இணைந்து இந்த இடைத்தேர்தலில் களம் கண்டன. தாராபுரத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் தோழர் ப. லட்சுமணன் 1157 வாக்குகளைப் பெற, மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் தோழியர் பி. சுகந்திக்கு 1986 வாக்குகள் கிடைத்துள்ளன.
மக்கள் ஏற்புக்கு எதிரான தேர்தல் முறை
வெற்றி கண்ட ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் தாராபுரத்தில் 37.02%, மதுராந்தகத்தில் 39.96% மட்டுமே பெற முடிந்திருக்கிறது. தோல்விகளைத் தழுவிய தி.மு.க.வும் அ.இ.அ.தி.மு.க.வும் முறையே தாராபுரத்தில் 31.78%, 25.08% என்றும், மதுராந்தகத்தில் 29.15%, 25.61% என்றும் வாக்குகளைப் பெற்றுள்ளன. துல்லியமாக, தாராபுரத்தில் 62.98%, மதுராந்தகத்தில் 60.04% மக்கள் த.வெ.க. வேட்பாளர்களைப் புறக்கணித்துள்ளனர் அல்லது மறுத்துள்ளனர்.
இந்திய ஒன்றியத் தேர்தல் முறை எதிர்ப்பு வாக்குகளைக் கொண்டு முடிவெடுக்காமல், முதலிடத்தில் வருபவருக்கு வெற்றி மாலையைச் சூட்டுகிறது. இதனால் த.வெ.க. வேட்பாளர்களை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்றோ, ஆளும் சிறுபான்மை விசய் ஆட்சியை ஒப்புக்கொண்டார்கள் என்றோ கருத இடமில்லை.
இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சியினர் வெற்றி பெறுவது கடந்த பல்லாண்டுகளாகப் பெரிதும் உறுதிப்பட்டுவிட்டது.
ஆட்சியை வைத்து அத்து மீறிய விசய்
மகளிருக்குக் கட்டணமில்லா பேருந்துப் பயணம், அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்குத் தாய்மாமன் சீராகத் தங்க மோதிரம் போன்ற திட்டங்கள் முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தாலும், இரண்டு தொகுதிகளை உள்ளடக்கிய திருப்பூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டுமே நடைமுறைக்கு வராதென்ற தடையுடன், தேர்தல் நடக்கும்போது விழாவெடுக்கப்பட்டன. மாநிலத்திலுள்ள 234இல், 232 தொகுதிகள் பயன்பெறும்போது, இடைத்தேர்தல் நடக்கும் இரண்டு தொகுதிகளில் அவற்றின் தாக்கம் இருக்கும் என்பதைத் தேர்தல் ஆணையம் கணக்கில் கொள்ளவில்லை.
முதல்வர் விசய் மாலையிட்ட எம்.ஜி.ஆர். சிலையில் இரண்டு விரல்களைக் காட்டுவது இரட்டை இலையைக் குறிக்கும் எனத் துணியில் மறைக்கப்பட்டது. அது போன்று, இடைத்தேர்தல் நடைபெறும் இரண்டு தொகுதிகளில் இந்த நலத் திட்டங்கள் தொடர்பான விவரங்கள் சென்றடையக்கூடாது என்ற தடை நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் உள்ளிட்ட ஊடகங்களுக்கு இருக்க வில்லை. இடைத்தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் புதிய நலத்திட்டங்கள் எதையும் தொடங்கக்கூடாது என்றல்லவா தடை இருந்திருக்கவேண்டும்.
பொதுவாகத் தேர்தல் பரப்புரை நிறைவடையும் நாளில் காலையிலிருந்து மாலை வரை காலம் பிரிக்கப்பட்டுப் போட்டியிடும் கட்சிகளுக்குப் பரப்புரையை நிறைவு செய்யும் வாய்ப்பு வழங்கப்படும். முதல்வர் பரப்புரை செய்ததால், தாராபுரத்தில் பிற கட்சிகளின் பரப்புரை முழுமையாகத் தடை செய்யப்பட்டது. தாராபுரத்தில், பரப்புரையின் கடைசி நாளில் பேரணி நடத்த தடை விதிக்கப்பட்டது.
அச்சத்தில் விசய்
ஒரு வேட்பாளர் எப்படித் தெருத்தெருவாகச் சென்று பரப்புரை செய்வாரோ, அதே போன்று விசய் சந்துகளிலிருந்து சாலை வரை நடந்து வாக்குத் திரட்டச் சில நாள்களைச் செலவழித்தார். இதுவரை எந்த முதலமைச்சரும் செய்யாதது இது. தோல்வி அச்சம் அவரைத் தொற்றிக் கொண்டிருந்தது. தலையைக் காட்டினால் போதும் என்ற நிலை மாறித் தடுமாற்றத்தில் தத்தளித்தார்.
வாக்குக்கு பணம் தராமல் வரலாறு படைத்தோம் எனக் கூசாமல் பொய்யுரைத்த த.வெ.க., இடைத்தேர்தலில் வாக்குக்கு 5000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்தது காணொளிக் காட்சிகளாகவும் பரவின. இல்லப் பயன்படு பொருள்களும் வழங்கப்பட்டன. தாராபுரம் வேட்பாளர் 35 கோடிகளுக்கு மேல் கொட்டிக் கொடுத்தது அவரது வாயாலேயே காணொளியில் வெளிப்பட்டது.
இவற்றையெல்லாம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் மு. வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் பெ. சண்முகம் போன்றோர் தேர்தலின்போதே விரிவாக விளக்கியிருந்தனர்.
மாற்றம் கொண்டு வருவதாக வாக்குறுதி தந்த விசய் கட்சியினர், ஆட்சி அமைப்புகள் அனைத்தையும் பயன்படுத்தித் தனி வழி காட்டினர். லட்சம் வாக்குகளுக்கு மேலான வேறுபாட்டில் வெற்றி பெறுவோம் என அமைச்சர்கள் ஆரூடம் கூறினர். ஆனால், வெற்றிக்கனியை எளிதில் எட்ட இயலவில்லை.
இடைத்தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சிக்கு அதிர்வையும் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. ஆகிய தற்போதைய எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கையும் கொடுத்திருக்கின்றன என்றுதான் சொல்லவேண்டியுள்ளது.
சிறுபான்மை ஆட்சியின் தவறுகள்
சிறுபான்மை ஆட்சி அமைக்கத் துணை நின்றபோது, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மிகத் தெளிவாகத் தமது நிலையினைக் கூறியிருந்தன. ஏற்கக்கூடிய நல்ல திட்டங்களுக்குத் துணை நிற்பதும், ஏற்க இயலாத மக்கள் நலனுக்கு எதிரான செயல்பாடுகளுக்கு மறுப்புத் தெரிவிப்பதும் இதன் அடிப்படையாகும்.
ஆட்சி அமைக்கத் துணையானதால், இந்த ஆட்சியின் தவறுகளையும் பிழைகளையும் தட்டிக் கேட்கக்கூடாது என்று எதிர்பார்ப்பது முறையன்று. வாக்குறுதிப்படி வேளாண் கடன் தள்ளுபடி மறுப்பு, தனியார் பல்கலைக்கழகச் சட்டம், செவிலியர்க்கு நிலையான பணி மறுப்பு போன்ற விசய் ஆட்சியின் பல்வேறு செயல்பாடுகள் இடதுநிலையினரால் ஏற்கத்தக்கதாக இல்லை.
இவை மட்டுமல்லாது, மருத்துவ நுழைவுத் தேர்வினை எதிர்த்த மாணவர்களது போராட்டங்களில் காவலர் அடக்குமுறையுடன், தாக்குதல்களும் நடந்தன. வேளாண் மக்களின் அமைதியான போராட்டத்தினைத் தடுத்து நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பெண்கள் காப்பு, குழந்தைகள் மீதான வன்முறை, பாலியல் குற்றச்சாட்டுகள், தாழ்த்தப்பட்டோர் புறக்கணிப்பு போன்ற பல செயல்முறைகள் மக்கள் நலனுக்கு எதிராகவே சென்றுவிட்டன. இவற்றைக் குறுங்காட்சிப் பரப்புரைகளால் மூடி மறைப்பதும் நீடிக்கிறது.
இடைத்தேர்தல்களில் தனித்து நிற்பது புதிதன்று
இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவது கம்யூனிஸ்ட் கட்சிக்குப் புதிதல்ல. போட்டியிடும் பிற வேட்பாளர்களை ஏற்கவியலாதபோது, தனித்து போட்டியிடும் நிலைக்கு கட்சி உள்ளாகிறது.
1967இல் சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுதந்திராக் கட்சி உறுப்பினர் மறைந்ததால், 1969இல் இடைத்தேர்தல் நடந்தது. அப்போது காங்கிரசுக் கட்சியும் சுதந்திராக் கட்சியும் போட்டியிட்டன. இரண்டு வேட்பாளர்களையும் ஏற்க முடியாமல், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனி வேட்பாளரைச் சாத்தூரில் நிறுத்தியது.
அண்மையில் ராதாகிருட்டிணன்நகர், அச்சிறுபாக்கம் (தற்போதைய மதுராந்தகம்) இடைத்தேர்தல்களில் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது அல்லது கொள்கை நிலையில் எந்த அணி ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்ற நிலை ஏற்படுகிறது. இதனால், கூட்டணி அமைவதற்கேற்பப் போட்டியிடுவது இன்றியமையாததாகிறது. ஆனால், இடைத்தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கானதன்று. ஆளும் கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டவும் திருத்தவும் ஒரு வாய்ப்பாகிறது. இங்கு நடுநிலை என்பது பொருத்தமாக இருக்காது.
இடதுநிலையினர் ஆளும் கட்சியின் தவறுகளுக்குத் துணை என்னும் எண்ணம் ஏற்படாமல் இருக்க இது வேண்டலாகிறது.
தனித்து நிற்பதால் எத்தகைய சிக்கலும் இல்லை. அது கொள்கை முடிவு. அதைத்தான் இந்த இடைத்தேர்தலில் இடதுநிலையினர் பின்பற்றியுள்ளனர்.
குறைந்த வாக்குகள் குறையே
இந்த இடத்தில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் பெற்ற வாக்குகள் குறைவாக இருக்கின்றன என்பது பெரும் கவலைதான்.
ஆளுநர் ஆட்சி அமைக்கவிடக் கூடாது என்பதற்காகவே விசய் ஆட்சியமைக்க துணை நிற்றல்; அதே ஆட்சி தமிழ்நாட்டின் நலன்களுக்கு எதிராக முடிவுகள் எடுத்தால் எதிர்ப்பு என்பது இடதுசாரிகளின் தெளிவான நிலை. ஆனால், துணை நிற்கும் அரசை எதிர்க்கலாமா என எல்லாக்கட்சிகளும் புனைந்துரைத்தன. கம்யூனிஸ்ட் கட்சிகளின் உண்மை நிலை முறையாக மக்களை எட்டவில்லை
ஒரு சிலர் சமூக வலைதளங்களில் வாக்குகளைப் பற்றிக் கவலைப்படு வதில்லை எனப் பதிவிடுவதைக் காணலாம்.
தேர்தலில் நிற்பதே, மக்கள் ஏற்பைப் பெற்று, அடுத்தடுத்த கட்ட நகர்வுகளுக்குச் செல்லத்தான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
உழைக்கும் மக்களுக்காகப் பணியாற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இவ்வளவு குறைந்த வாக்குகளை பெற்றது குறைதான். அரசு ஊழியர்கள், மின்வாரியத் தொழிலாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், கட்டடத் தொழிலாளர்கள், வேளாண் தொழிலாளர்கள் என்பன போன்ற பல அமைப்புகளுக்குக் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலைமையேற்றுள்ளன. இவர்களைச் சேர்ந்தோரும் அவர்களது இல்லத்தினரும் வாக்களித்திருந்தாலும் இன்னும் பல்லாயிரங்கள் கூடுதலான வாக்குகளைப் பெற்றெடுக்க முடியும்.
கோரிக்கைகளுக்குக் கம்யூனிஸ்ட் கட்சிகள், கொள்கைகளுக்கு வேறு கட்சிகள் என்ற நிலை ஏற்பட்டுவிடக் கூடாது. இது மாறவேண்டும்.
முடிவுகள் தரும் படிப்பினை
உழைக்கும் மக்கள் நலன் என்பதோடு நின்றுவிடாமல், அவர்களை அணி திரட்டும் நோக்கத்தை நிறுத்திவிடாமல், அவர்களை அரசியலாக வென்றெடுப்பது எப்படி என்பதை இன்னும் ஆழமாக இந்தத் தேர்தலின் படிப்பினைகளிலிருந்து புரிந்துகொள்வோம்.
சமூக, பொருளிய, பண்பாட்டு மாற்றங்களை நடுவப்படுத்தித் திட்டங்களை மேலும் முனைப்புடன் முன்னெடுப்பதோடு,. அவற்றை நமது நடைமுறைகளோடு இணைத்துக்கொள்ளவேண்டும்.
மக்கள் நலனுக்கான பல திட்டங்கள், கொள்கைகள், முன்னெடுப்புகள் நம்மிடம் இருக்கின்றன. இருப்பினும், மக்கள் உணர்வுகள் உடனடியாக எவற்றை நோக்கியுள்ளன என்பதையறிந்து, அவற்றை முன்னிலைப்படுத்த முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
ஒரு தேர்தல் தோல்வி மட்டுமே நம்மைச் சீர்குலைத்துவிடாது.
புதிய படிப்பினைகளை இந்த இடைத்தேர்தல் முடிவுகள் உருவாக்கிக் கொடுக்கின்றன. பொதுவுடைமை அமைப்புகள் அவற்றைப் பயிலும்; தகவமைத்துக்கொள்ளும்.