
ஆகஸ்ட் 6 முதல் 15 வரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்ட நாடுதழுவிய நடைப்பயணப் பரப்புரைக்காக, திருப்பூர் புறநகர் மாவட்டம் காங்கேயம் இடைக்குழு கூடி, திட்டமிட்ட வகையில் ஆகஸ்ட் 9-ம் தேதி சிவன்மலை ஊராட்சி பகுதிகள் முழுவதும் ஒரு நாள் நடைபயண இயக்கத்தை மேற்கொண்டது.
ஆகஸ்ட் 9-ம் தேதி சிக்கிரசம்பாளையம் பகுதியில் நடைபயண இயக்கம் காலை 9.00 மணிக்கு தொடங்கியது. கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் எம்.கண்ணகி நடைபயண இயக்கத்தில் கலந்து கொண்டு ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள், மாநில அரசின் செயல்பாடுகள் குறித்து விரிவாக உரையாற்றினார்.
டாஸ்மாக் கடை எண்: 3889 சுற்றுவட்டாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கி இருக்கிறது. டாஸ்மாக் கடையை இழுத்து மூடு என்ற பிரதானமான கோரிக்கை பெரும் முழக்கமாக முன்வைக்கப்பட்டது.
சிவன்மலை ஊராட்சியில் உள்ள பல்வேறு குடியிருப்பு பகுதிகளுக்கு கடந்த ஆறு ஆண்டுகளாக காங்கேயம் கொடுமுடி காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்படுவதில்லை, முறையாக குடிநீர் வழங்கக் கோரியும், வீட்டுமனைப் பட்டாக்களில் பெயர் குளறுபடி, பெயர் குளறுபடியை சரி செய்யக் கோரியும், நெடுஞ்சாலை துறை சம்பந்தமான கோரிக்கை, வீட்டுமனை பட்டா, வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளைச் சேர்ப்பது, ஊராட்சி சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சரி செய்யக் கோரி நடைபயண இயக்கம் தொடங்கியது.
நடைபயண இயக்கத்தில் 29 பெண் தோழர்கள், 9 ஆண் தோழர்கள் ஒருநாள் முழுவதும் பங்கேற்றனர்.
சிக்கரசம்பாளையம், ஜீவா நகர் கிளை பகுதிகளுக்கு அடுத்து முதல் கிராமமாக மேட்டுப்பாறை பகுதிக்குச் சென்றோம். டாஸ்மாக் கடையால் மிகவும் பாதிக்கப்பட்ட கிராமமாக மேட்டுப்பாறை இருந்தது. குடிநீர் பிரச்சினை இருந்த போதிலும் டாஸ்மாக் கடை எண்: 3889 வேண்டவே வேண்டாம். எப்படியாவது கடையை இழுத்து மூடுங்கள் என பெண்கள் வேதனைகளைக் கொட்டி தீர்த்தார்கள்.
சடைய பாளையம் கிராமத்திற்கு நடைபயண இயக்கம் சென்றபோது, “டாஸ்மாக் கடையால் பலபேர் முண்டச்சி (விதவை) ஆகி விட்டோம். கெட்ட வார்த்தைகளை காதால் கேட்க முடியவில்லை. சகஜமாக அடிதடிகள் நடைபெறுகின்றன. தட்டுமுட்டுச் சாமான்களை எல்லாம் குடித்துவிட்டு வந்து உடைக்கிறார்கள். புண்ணியமாக போகட்டும் பிராந்தி கடையை எப்படியாவது மூடுங்கள்” என புலம்பித் தீர்த்தார்கள்.
இராமபட்டிணம் கிராமத்திற்குச் சென்றோம். “எங்கள் ஊருக்கு பேருந்து வசதியே இல்லை. மூன்று கிலோ மீட்டர் நடந்து சென்று பேருந்து ஏற வேண்டியுள்ளது. இதனால் திருமண வயதில் இருக்கும் ஆண்களுக்கு பெண் தர மறுக்கிறார்கள்” என்று புலம்பிய தாய்மார்கள். சுமார் 10க்கு 10 அளவுள்ள சுடுகாடு மட்டுமே உள்ளது. எங்களுக்கு சுடுகாடு ஏற்பாடு செய்து கொடுங்க என்று கேட்டார் முதியவர் ஒருவர். மழை நீர் வடிகால் இல்லை. இந்த பிரச்சனைகள் எல்லாம் நீண்ட காலங்களாக உள்ளன. மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவருக்கு ஆதார் அட்டை எடுக்க கைரேகை விழவில்லை, அதனால் உதவித்தொகை நிறுத்தி விட்டார்கள். எப்படியாவது ஆதார் அட்டை வாங்கி கொடுங்கள் என அவரின் தந்தை கோரிக்கை வைத்தார்.
மதியம் 2.00 மணி உணவு இடைவேளை கட்சி தோழர்களே அரிசி, எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்ட அத்யாவசிய பொருட்கள், பாக்கு மட்டை தட்டுகள், சமையல் கேஸ் என தங்களுக்குள் பங்கிட்டு குறிப்பிட்ட சில தோழர்களை பொறுப்பாக்கி காய் பிரியாணி செய்து மதிய உணவிற்கு காலையிலேயே வீட்டிலே தயார் செய்து பிரச்சார வண்டியில் எடுத்து வந்திருந்தார்கள். மதியம் இரண்டு முப்பது மணிக்குள் அனைவரும் உணவருந்திய உடன் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் நடைபயணக் குழு அடுத்த கிராமத்திற்கு புறப்பட்டது.
சிவன்மலை கிராமத்திற்குச் சென்றோம். அங்கு கணவனை இழந்த பெண் ஒருவர் தனது கணவரின் அண்ணன் தனது கணவரின் பூர்வீக சொத்தில் இருந்து வருகிற வருவாயையும், சொத்தையும் எங்கள் குடும்பத்திற்கு தர மறுக்கிறார். உங்கள் கட்சியின் சார்பில் உதவி செய்யுங்கள் என கேட்டுக்கொண்டார். அப்பகுதியில் சில குடியிருப்புகளை பூஜ்ஜியம் மதிப்பு என்ற வகையில் வகை மாற்றம் செய்து விட்டதாகவும், இதனால் கடன் பெறவோ, பத்திரப்பதிவு செய்யவோ இயலவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி தலையிட்டு தீர்வு காண வேண்டும் என தெரிவித்தார்கள்.
குறுக்கத்தி கிராமத்திற்குச் சென்றோம். சாக்கடை வசதி இல்லை, குடிநீர் பொதுக்குழாயில் மட்டும் தான் வருகிறது, வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க ஏற்பாடு செய்து கொடுங்கள் என கேட்டுக் கொண்டார்கள்.
மாலை 05.00 மணிக்கு தேநீர் சாப்பிட பேக்கரிக்கு சென்ற போதும் தோழர்கள் அங்கிருந்தவர்களுக்கு துண்டறிக்கைகளை வழங்கி கொண்டிருந்த போது ஒரு இளைஞர், “எங்கள் ஊர் ராசாப்பாளையம் எங்கள் பட்டாவை எல்லாம் பூஜ்ஜியம் மதிப்பு என்று மாற்றி விட்டார்கள். இதற்கான காரணம் என்ன என்று அதிகாரிகளிடம் கேட்டால் சொல்ல மறுக்கிறார்கள். எங்கள் பிரச்சினையை எப்படியாவது சரி செய்து கொடுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.
நல்லிபாளையம் கிராமத்திற்குச் சென்றோம். “35 நபர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கியிருக்கிறார்கள். ஆனால் இதுவரை இடத்தை அளந்து கொடுக்கவில்லை. குடிநீர் பிரச்சனையும் கடுமையாக இருக்கிறது. தண்ணீர் விலை கொடுத்து வாங்க முடியவில்லை” என்றனர். பெண் ஒருவர், தான் முதலில் உடுமலைப்பேட்டையில் இருந்ததாகவும், அப்போது உஜ்வாலா திட்டத்தில் சமையல் எரிவாயு இணைப்பு பெற்றதையும், தற்போது குடிபெயர்ந்து இங்கு வந்து விட்டதாகவும், தற்போது வசிக்கும் இடத்திற்கு பெயர் மாற்றம் செய்ய முடியவில்லை, குடும்ப அட்டையையும் மாற்ற முடியவில்லை. எனக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
படியூர் கிராமத்தில் இரவு 7:30 மணிக்கு பிரச்சார இயக்கம் நிறைவு பெற்றது. “படியூர் ஊராட்சி ஜெயம் நகர் பகுதியில் அரசு எங்களுக்கு பட்டா வழங்கியுள்ளது. ஆனால், எந்த வித அடிப்படை வசதியும் இங்கு இல்லை. சுற்றியும் இருள் நிறைந்த காட்டுப் பகுதி, குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி என எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை. எங்களின் பிரச்சினைகளை தீர்த்துத் தாருங்கள்” என பொதுமக்கள் முறையிட்டனர்.
நடைபயண இயக்கம் சென்ற இடங்களில் எல்லாம் பெண்கள், “எங்களுக்கு ‘விபி-ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் வேலை கிடைக்கவில்லை, கருவிழி பதிவாகவில்லை, எனவே வேலை இல்லை எனக்கூறி திருப்பி அனுப்புகிறார்கள். செய்த வேலைக்கும் சம்பளம் தரவில்லை” என புலம்பி தீர்த்தார்கள்.
அடுத்தபடியாக சென்ற இடங்களில் எல்லாம் பெருவாரியான குடும்பத் தலைவிகள், “எங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவும், இலவச வீடும் பெற்றுக் கொடுங்கள்” என்று கோரிக்கை வைத்தனர்.
நடைபயண இயக்கத்தில் பங்கு பெற்ற தோழர்கள், சடங்குப் பூர்வமாக துண்டறிக்கையை பொதுமக்களிடம் வழங்காமல், ஒவ்வொரு கிராமத்திலும் மக்களோடு மக்களாக இணைந்து கலந்துரையாடினார்கள்.
தங்கள் கிளைகளில் உள்ள பிரச்சினைகளை மட்டுமின்றி, மற்ற கிராம மக்களின் அடிப்படைத் தேவைகள், பிரச்சனைகள் குறித்தும் விரிவாகக் கேட்டறிந்தார்கள்.
அதுமட்டுமல்ல, பொதுமக்களிடம் நடைபயண இயக்கத்திற்குத் தேவையான நிதியையும் திரட்டினர். குறிப்பாகப் பெண் தோழர்களின் பங்களிப்பு அளப்பரியது. நடைபயண இயக்கத்தில் கலந்து கொண்ட தோழர் அய்யாவுவிற்கு நடைபயண இயக்கத்திற்கு மூன்று தினங்களுக்கு முன்பு சிறு விபத்து ஏற்பட்டு காலில் கட்டுப்போட்டு, கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தி இருந்தார். ஆனாலும், கையில் செங்கொடியுடன் காலை முதல் மாலை வரை காலில் இருக்கும் வலியையும் பொறுத்துக் கொண்டு நடைபயண இயக்கத்தில் முழுமையாகக் கலந்து கொண்டார்.
கிராமங்களில் உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்தாலும், பல்வேறு அரசியல் கட்சிகள் இருந்தாலும், மக்களின் தேவைகளை, கோரிக்கைகளைக் கேட்டு அறிந்து நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பதில்லை. மக்களை வாக்கு வங்கிகளாகவும், கூட்டம் சேர்க்கவும் பயன்படுத்துவது, மக்களை அறியாமையிலேயே வைத்திருப்பது போன்ற நடவடிக்கைகள் கிராமப்புற மக்களிடம் பேசும்போது வெளிப்பட்டது.
ஆகஸ்ட் 9 நடைபயண இயக்கத்தில் பொதுமக்கள் தெரிவித்த அனைத்து கோரிக்கைகளையும் ஒவ்வொன்றாக கையில் எடுத்து உரிய தீர்வு ஏற்படுகிற வரை போராடுவதன் மூலமாக அமைப்பு நிலையை மேம்படுத்த முடியும் என்ற அடிப்படையில் ஆகஸ்டு 9 -ம் தேதி நடைபயண இயக்கம் வழிகாட்டி இருக்கிறது.