கட்டுரைகள்

நீதியர் எண்ணிக்கையல்ல, மாறும் எண்ணங்களே வழக்குகளை விரைவில் முடிக்கும்

மே.து.ரா.

உச்ச நீதிமன்ற நீதியர்களின் எண்ணிக்கையினை 34 என்ற அளவிலிருந்து 38 என உயர்த்துவதற்கான சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு இந்த எண்ணிக்கை உயர்வு வாய்ப்பாக அமையும் எனச் சொல்லப்படுகிறது.

ஆனால், உச்ச நீதிமன்றத்தில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையும் வளர்ந்துகொண்டே போகிறது.

இந்த நீதியர் எண்ணிக்கை உயர்வு மட்டுமே தேங்கியுள்ள வழக்குகளை விரைவில் தீர்ப்பதற்குத் துணையாகும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்.

தேங்கிக் கிடக்கும் வழக்குகள்

உச்ச நீதிமன்றத்தில், 26 வழக்குகள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. 558 வழக்குகள் 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தீர்வினைக் காணவில்லை. 10,000க்கும் மேற்பட்ட வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாகக் காத்துக் கிடக்கின்றன.

ஒன்றியத்திலுள்ள 25 உயர் நீதிமன்றங்களில் 80,000க்கும் மேற்பட்ட வழக்குகள் 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தேங்கியுள்ளன.

கிடப்பில் உள்ள வழக்குகள் என்று கூட்டாக எடுத்துக்கொண்டால், உச்ச நீதிமன்றத்தில் 93,000 வழக்குகளும், உயர் நீதிமன்றங்களில் 60 லட்சம் வழக்குகளும், மாவட்ட மற்றும் பிற கீழமை நீதிமன்றங்களில் 4.65 கோடி வழக்குகளும் தீர்ப்புகளை எதிர்நோக்கியுள்ளன.

தமிழ்நாட்டில் முடியா வழக்குகள்

தமிழ்நாடு என்று எடுத்துக்கொண்டால், மதுரை அமர்வு உள்ளிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் தேங்கியுள்ள 5.67 லட்சம் வழக்குகளில் 3100 வழக்குகள், 30 ஆண்டுகளுக்கும் மேலாக முடிக்கப்படாமல் உள்ளன. மாவட்ட மற்றும் பிற கீழமை நீதிமன்றங்களில் 11.5 லட்சம் வழக்குகள் முடங்கிக் கிடக்கின்றன

உச்ச நீதிமன்றத்தில் முழு எண்ணிக்கை யில் நீதியர்கள் அமர்த்தப்பட்டிருந்தாலும், உயர் நீதிமன்றங்களில் உள்ள 1,122 நீதியர் பணியிடங்களில் 341 இடங்களில் நீதியர்கள் இல்லை. மாவட்ட மற்றும் பிற கீழமை நீதிமன்றங்களிலுள்ள 30,868 பணியிடங்களில் 7,311 நீதியர்கள் இல்லாமல் உள்ளன. இவை யாவும், ‘தேசிய நீதித்துறைத் தரவு இணையம்’ எடுத்துரைக்கும் விவரங்கள்.

அரசமைப்புக்கு மாறான நீதியர் தேர்வு

உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதியர் தேர்வில், உச்ச நீதிமன்றத்தின் மூத்தோர் தேர்வுக் குழு முடிவெடுப்பதில் காலம் தாழ்கிறது என்ற குற்றச்சாட்டு ஒரு புறமும், உயர்நீதிமன்றத்திலிருந்து பரிந்துரைகள் காலத்தில் வருவதில்லை என்ற குறை மறுபுறமும் கூறப்பட்டாலும், இந்தத் தேர்வு முறையே அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாகவும், நேர்மைக்கு மாறாகவும், சமூக நீதியைக் கடைப்பிடிக்காமலும், ஒரு குறிப்பிட்ட இனத்துக்குச் சார்பாகவும் இருப்பதாக எழும் அய்யங்களில் உண்மைகள் இல்லாமலில்லை.

ஆனால், கீழமை நீதிமன்றங்களின் நீதியர் தேர்வில் குழப்பங்களும் குற்றச்சாட்டுகளும் எழுந்துகொண்டுதான் இருக்கின்றன. நீதியர் அல்லாத பிற பணியாளர்களும் வேண்டிய அளவுக்குப் பணியமர்த்தப்படவில்லை.

இவை மட்டுமே வழக்குகளை முடிக்கக் காலத்தைக் கடத்துகின்றன என்று கூறுவதில் முழு உண்மையில்லை.

சட்டத்தில் பட்டம் பெற்றவுடன், நுழைவுத் தேர்வினை எழுதி எத்தகைய பட்டறிவும் இல்லாமல்கீழமை நீதியர்களைத் தேர்வு செய்வதால், சட்ட நுட்பங்களைப் புரிந்து முடிவுகள் காண்பதில் முட்டுக்கட்டைகள் எழுகின்றன.

மாறாத நடைமுறைகள்

நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கிக் கிடப்பதற்கு வேறு அடிப்படைகள் என்ன என்ற வினாக்கள் எழலாம்.

நூறாண்டுகளுக்கு முன்னர் ஏற்படுத்திக்கொண்டிருந்த நடைமுறைகள், செயல்முறைகள், வழிமுறைகள் போன்றவற்றைக் காலத்துக்கும் நுட்ப வளர்ச்சிக்கும் ஏற்ற வகையில் ஒரு சிறிதும் மாற்றிக்கொள்ளாமல் தொடர்ந்து பிடித்துக்கொண்டிருப்பதே இன்றைய நீதிமன்ற இழுத்தடிப்புகளுக்கான அடிப்படைகள் என்பதை இந்த நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதியர்கள் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.

ஆவணங்கள் பதிவு, சாட்சியர்களிடம் வினா, வாதிடுதல் ஆகிய அனைத்து முறைமைகளும் நூற்றாண்டுகளைக் கடந்தும் நீடிக்கின்றன. உரிமை வழக்குகளுக்குப் பெரிதும் வேண்டாத வினாக்களில் காலம் வீணாக்கப்படுகிறது.

மேலும், வழக்குகளை நடத்துவோர் நினைத்தபடி காலத்தைக் கடத்த இன்றைய பழமையான வழக்கு முறைமைகள் வாய்ப்புகளைத் தருகின்றன என்பதும் மிகையல்ல.

வழக்காடுவோர் அல்லது எதிர்வழக்காடுவோர் நீதிமன்றங்களில் ஒப்படைக்கின்ற சான்றாவணங்களை நேரில்தான் தரவேண்டும் என்னும் நூறாண்டு கடந்த நடைமுறை இன்னும் நீடிப்பதற்கு எத்தகைய வேண்டலும் தற்போதில்லை. ஆவணங்களின் உண்மைத் தன்மைகளை உறுதி செய்ய அன்றைய நடைமுறை ஏற்றதாக இருந்திருக்கலாம். ஆனால், இன்றைய நுட்ப வளர்ச்சியில் ஆவணங்களின் உண்மைத் தன்மைகளை உறுதி செய்ய இணையம் பெருந்துணையாக அமைந்துள்ளது. மேலும், ஒரு தரப்பினர் தரும் ஆவணங்களை மற்ற தரப்பினர் உறுதி செய்யும் வாய்ப்புகளும் மிகுந்துள்ளன. இந்த நிலையில் சான்றிட்ட ஆவணங்களைத் தடையின்றி நீதிமன்றங்கள் பெற்றுக்கொள்ளலாம். அவற்றில் ஏதாவது தவறு, திருத்தம், பிழை போன்றன இருப்பின் வழக்காடும் மற்றையோர் சுட்டிக்காட்ட முடியும்.

ஒரு வழக்கில் இரு தரப்பினரும் பத்து அல்லது இருபது சான்றாவணங்களை ஒப்படைக்க வேண்டியிருந்தால், அதற்காகச் சில நாள்களே வீணாகின்றன.

வழக்கில் பெயருள்ள ஒருவர் இடையில் இறந்துவிட்டால், அவரது வழியினரைச் சேர்க்கும் நடைமுறையில் மட்டுமே ஏறக்குறைய ஓராண்டு கழிந்துவிடுகிறது.

இழுத்தடிக்க வாய்ப்புகள்

உப்புச்சப்பில்லாத ஒரு விண்ணப்பத்தினை அளித்து, அதைக் கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தால், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை

செல்லும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. இதனால், பல ஆண்டுகள் வழக்கு முடங்குகிறது.

இதற்கான தகுந்த எடுத்துக்காட்டு செயலலிதா ஊழல் வழக்காகும். பல்லாண்டுகள் அப்படியே நீடிக்க முடியும் என்பதற்கான வழிமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்பட்டன. அடுத்து, கூட்டல் கணக்கில் ஏற்பட்ட பிழையினால் விடுதலை என்ற கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை மாற்ற உச்ச நீதிமன்றம் வரை செல்லவேண்டியிருந்தது. பொறுப்பினை இழந்திருந்த செயலலிதா இடைப்பட்ட காலத்தில் மீண்டும் முதல்வரானார். உச்ச நீதிமன்றம் குற்றவாளி எனத் தீர்ப்பளித்த பின்னரும் தேர்தலில் நின்று வென்று, இறக்கும் வரை முதல்வராகத் தொடர்ந்தார். அவர் இறந்த பின்னர்தான் முழுத் தீர்ப்பினை வழங்கவேண்டுமென உச்ச நீதிமன்றம் காத்துக்கொண்டிருந்தது.

தில்லி முதலமைச்சர் கேச்ரிவால், பிணையின்றிப் பல திங்கள்கள் சிறையிருந்த பின்னரே குற்றவாளி இல்லையெனத் தீர்ப்புக் கிடைத்தது.

போராளிகள் பலர் பிணையின்றிப் பல்லாண்டுகள் கொட்டடிக்குள் கிடக்கின்றனர்.

அரசியல் நிலைமைகளுக்கேற்பச் செயல்பட நீதியர்களுக்கும் வாய்ப்புக் கிடைத்துவிடுகிறது

பின்பற்றப்படாத நீதியர் அறிவுரை

ஒரு கொலை வழக்கில் தூக்கு வழங்கப்பட்ட குற்றவாளிக்குப் பதினான்கு அகவையில்தான் என்பதை எடுத்துக்கூறவும், ஏற்கச்செய்யவும் இருபத்தைந்தாண்டுகள் கழிந்துவிட்டதையும், இதில் உச்ச நீதிமன்றமும் தவறியதையும், உச்ச நீதிமன்ற நீதியர் எம்.எம். சுந்தரேசு அண்மையில் சுட்டிக்காட்டி அவரை விடுவித்துள்ளார்.

நீதியர் எம்.எம். சுந்தரேசு தெளிவான கண்ணோட்டத்துடன், நீதிமன்றங்களின் செயல்பாடுகளையும் நடைமுறைகளையும் போக்குகளையும் ஆய்வுக்குட்படுத்தி, ஆழமான மீள்பார்வைக்கு அடிப்படை அமைத்திருக்கிறார் என்றாலும் அடுத்த கட்ட நகர்வுகள் ஏதும் நிகழவில்லை.

உரிமை வழக்குத் தொடுத்தவர் தீர்வு வேண்டுமென விழையும்போது, தீர்வைத் தள்ளிப்போடுவதை எதிர் நிலையினர் எதிர்பார்க்கின்றனர். வழக்கை எப்படியெல்லாம் ஒத்திவைக்க முடியுமோ அதற்கான வழிமுறைகளைக் கண்டுபிடித்துவிடுகின்றனர்.

வாழ்நாளில் பயன் தராத வழக்குகள்

நிலம், இல்லம், உடைமையில் மகளிர் பங்கு போன்ற உரிமை வழக்குகளில் வழக்குத் தொடுத்தவர் வாழ்நாள் முழுதும் பயனடையா நிலையும் உருவாகிறது. மணவிலக்கு போன்ற வேறு பல வழக்குகளுக்கும் இது பொருந்தும்.

குற்றச் செயல்களில், பிணையில் இருப்போர் வழக்கு நீடிக்கும் வரை தாங்கள் சிறைக்கூடம் செல்லவேண்டியதில்லை என்பதால், வழக்கை முடிக்க விரும்புவதில்லை.

இவை அனைத்துக்கும் இன்றைய நீதிமன்ற நடைமுறைகள் துணை போகின்றன என்றுதான் கூற வேண்டும்.

நீதிமன்றத்துக்குத் தெரிந்த நிலை

ஒரே நாளில் பல வழக்குகள் நடைபெறுகின்றன. அதேபோன்று, ஒரே வழக்குப் பல நாள்கள் தொடர்கிறது. எனவே, ஒரு வழக்குத் தொடர்பாக எதிர்நிலை வழக்கறிஞர்கள் எடுத்துரைக்கும் விவரங்களை முழுமையாக நினைவில் கொள்ளும் நிலை பெரும்பாலும் நீதியர்களிடம் இருக்க முடிவதில்லை. இதனால்தான், ஒரு சில தீர்ப்புகளைத் தவிர பிற அனைத்தும் முறையாகவும் முழுமையாகவும் தெளிவாகவும் தீர்வாகவும் வெளிப்படுவதில்லை.

‘நீதிமன்றங்களில் நீதி கிடைக்கிறதா என்பது தெரியாது; மாறாக, ஏதோவொரு முடிவு ஏற்படுகிறது.’ இதுதான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. இதை நீதி என்ற பெயரில் நாம் ஏற்றுக்கொள்கிறோம்.

இன்றைய நீதித்துறை என்ற கட்டமைப்பில் விரைந்து நீதி காண முடியாது என்பது உயர்நிலை நீதிமன்றங்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான், உயர் நீதிமன்றத்தின் ஏற்பாட்டிலேயே கீழ்நிலையிலிருந்து மேல்நிலை வரை தீர்வு மன்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவை இரு தரப்பினரையும் அருகருகே அமரச்செய்து, விவரங்களைக் கேட்டறிந்து, அவ்வப்போதோ அல்லது அடுத்தடுத்தோ முடிவுகளைக் காண வழியேற்படுகிறது. எளிதில் இணக்கமான முடிவுகூடக் காணும் வாய்ப்புக் கிடைக்கிறது. அண்மையில் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் தொடர்பான குற்ற வழக்கில், தீர்வு மன்றத்துக்குப் பரிந்துரை செய்து உயர்நீதிமன்றமே ஆணையிட்டது.

தீர்வு தேடும் உள்ளங்களைக் காணவேண்டும்

இத்தகைய குறைதீர்க்கும் மன்றங்களின் நடைமுறைகளை ஏன் கீழமை நீதிமன்றங்களிலிருந்து, உச்ச நீதிமன்றம் வரை பின்பற்றக்கூடாது?

இதில் இருப்பது ஒரேயொரு சிக்கல்தான். கீழ்நிலை அல்லது மேல்நிலை என் எதுவாக இருந்தாலும், தற்போதுள்ள நீதியர்கள் தங்களிடத்திலிருந்து இறங்கி வர விரும்பவில்லை.

அரசியல், பொருளியல், வணிகம், உரிமை போன்ற எத்தகைய பொருளாக இருந்தாலும், இரு தரப்பினரும் அருகருகே அமர்ந்துதான் வேறுபாடுகளைப் பேசித் தீர்வு காண்கின்றனர்.

நீதியர்கள் உயர் மேடையில் அமராமல் இறங்கி வரவேண்டும். உயரத்திலிருந்து இறங்கி வந்தால்தான் உண்மை புரியும். எதிர்பார்ப்பில் வாடும் உள்ளங்கள் தெரியும். இரண்டு தரப்பினரிடமும் கலந்து பேசி சில மணித்துளிகளில் முடிவு காணும் வழக்குகளே பெருமளவில் உள்ளன. எத்தகைய சிக்கலான வழக்காக இருந்தாலும், அரசமைப்புச் சட்டம், அதன்வழி எழுந்த சட்டங்கள், ஆவணங்கள் ஆகிய அடிப்படைகளில் மட்டுமே தீர்வு கண்டாகவேண்டும்.

நீதியர்களின் எண்ணிக்கையில் வழக்கு முடிவுகள் விரைவுபடுவதில்லை. எண்ணங்களில் மட்டுமே அவை தீர்வு காணப்பட வேண்டும்.

அனைத்துப் பொறுப்புகளும் கொண்ட உச்ச நீதிமன்றம்தான் இறங்கி வரவேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button