
நரேந்திர மோடி ஆட்சியில் உள்கட்டமைப்புத் திட்டங்களின் தரம் வெகுவாக குறைந்து வருகிறது, பாலங்கள் இடிந்து விழுவது, சாலைகள் சேதமடைவது, கட்டடங்கள் விரிசல் காண்பது என்பதெல்லாம் பாஜக மோடி ஆட்சியின் முகவரியாக மாறிவிட்டது.
சாலைத் திட்டங்களில் ஊழல்!
புதுப்பிக்கப்பட்ட மற்றும் புதிதாகத் திறக்கப்பட்ட டெல்லி – டேராடூன் விரைவுச்சாலை போன்ற தேசிய நெடுஞ்சாலைகளில் சில மாதங்களிலேயே பெரிய குழிகள் ஏற்பட்டு சேதமடைந்தன.
நாட்டின் வளங்களை அமெரிக்க ஏகாதிபத்தியமும் உள்நாட்டு கார்ப்பரேட்களும் சுரண்டி கொள்ளையடிக்க உருவாக்கப்பட்ட திட்டங்களே பாரத்மாலா, சாகர்மாலா, உதான் போன்ற பெரும் உள்கட்டமைப்பு திட்டங்களாகும். அந்த பாரத் மாலா திட்டத்தின் படி உள்கட்டமைப்புகளை உருவாக்குவதிலும்கூட கொள்ளையடித்துள்ளது மோடி அரசு.
பொருளாதார விவகாரங்களுக்கான நிலைக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கி.மீ தொலைவுக்கான செலவு ரூ.15.37 கோடி என்பதை விட இரண்டு மடங்குக்கு அதிகமாக, ரூ.32.17 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
26,316 கி.மீ நீளமுள்ள நெடுஞ்சாலை அமைக்க, முன் அனுபவமில்லாத அதானியின் போலி நிறுவனங்களுக்கு டெண்டர் வழங்குவதற்காக ரூ.8,46,588 கோடியை அனுமதித்துள்ளது மோடி அரசு.
அதிலும் குறிப்பாக டெல்லியிலிருந்து ஹரியானாவின் குருகிராம் வரையிலான துவாரகா தேசிய விரைவுச் சாலைத் திட்டத்தில் மட்டும் 1 கி.மீ சாலை அமைக்க 250கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாக கூறி ஒரு பொய் கணக்கை காண்பித்துள்ளது. திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள 18கோடி ரூபாய் என்பதே மிகை மதிப்பீடுதான் அவ்வாறிருக்கையில் அதைவிட 14 மடங்கு செலவு செய்திருக்கிறது மோடி அரசு.
மும்பையில், புதிதாகக் கட்டப்பட்ட ஒரு நெடுஞ்சாலை, நான்கு வழிச்சாலையிலிருந்து இரண்டு வழிச்சாலையாக அபாயகரமாக இணைகிறது; போபாலில் உள்ள மற்றொரு நெடுஞ்சாலை, ஒரு கடுமையான செங்கோணத் திருப்பத்தை எடுத்து, அபாயகரமான அதிவேகச் சந்திப்பை உருவாக்குகிறது.
இவை இரண்டுமே வெளிப்படையான வடிவமைப்பு குறைபாட்டின் நேரடி சாட்சிகள் ஆகும்.
பாலங்கள் இடிந்து விழுதல்
ராணிக்கெட் எனும் மலை நகரத்திற்குச் செல்லும் வழியில், ஒரு பழைய எஃகுப் பாலத்துடன் கூடிய ஆற்றைக் கடக்கும் இடம் உள்ளது. அதன் ஓரத்தில் உள்ள ஒரு அஸ்திவாரத்தில், அப்போதைய பொறியாளரின் பெயரையும், 1927-இல் அது உருவாக்கப்பட்ட லிவர்பூலில் உள்ள வார்ப்பகத்தின் முகவரியையும் காட்டுகிறது. ஒரு நூற்றாண்டுக்குப் பிறகும், மெக்கானோவைப் போன்ற அந்த நேர்த்தியான கட்டுமானம், கனரகப் போக்குவரத்தைத் தாங்கி, இன்றும் சிறப்பாகச் செயல்படுகிறது.
ஆனால், பீகார், குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் புதிதாகக் கட்டப்பட்ட பல பாலங்கள் திறக்கப்பட்ட சில காலத்திற்குள்ளேயே இடிந்து விழுந்தன
பீகாரில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 26 நவீன கான்கிரீட் பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன. இவற்றில், சில கட்டுமானத்தின் போதும், ஒன்று திறப்பு விழாவின் போதும் இடிந்து விழுந்தன. வட பீகாரில் உள்ள 4.7 கி.மீ நீளமுள்ள விக்ரம்ஷ்-இலா சேது பாலம் சமீபத்தில் கூட இடிந்து விழுந்தது, கடந்த மே மாத தொடக்கத்தில், அதன் ஒரு பெரிய பகுதி முழுவதுமாக உடைந்து, கங்கையில் விழுந்தது, இதனால் மோடியின் பெரும் பாவங்கள் போகுமோ. இந்தப் பாலம் 800 கோடி ரூபாய்க்கும் அதிகமான பொதுச் செலவில் கட்டப்பட்டது. அதன் பழுதுபார்ப்பு மற்றும் புனரமைப்புக்கு இப்போது மேலும் பல கோடிகள் செலவாகும்.
இதைத் தொடர்ந்து, இமாச்சலப் பிரதேசத்தின் காங்ரா மாவட்டத்திலும், பின்னர் உத்தரப் பிரதேசத்தின் பண்டா மாவட்டத்திலும் கட்டுமானத்தில் இருந்த பாலங்கள் இடிந்து விழுந்தன.
டேராடூனில், 16 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு பாலத்தின் அணுகுசாலை, அது திறக்கப்பட்ட 17 நாட்களிலேயே இடிந்து விழுந்தது.
பத்து வருட கட்டுமானப் பணிக்குப் பிறகு, எய்ம்ஸ் தர்பங்கா திறக்கப்பட்டது, ஆனால் நுழைவாயில் மட்டுமே கட்டப்பட்டிருப்பதால், மாணவர்களால் வளாகத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும், பொதுப் பணிகள் கட்டமைப்பு ரீதியாக உறுதியாக இருக்கும் இடங்களில்கூட, அவை பெரும்பாலும் கட்டடக்கலை ரீதியாக சரி இல்லாதவையாகவே இருக்கின்றன.
பொறுப்பற்ற பொதுப்பணிகள்
இந்தியாவில் பெரிய பொதுப் பணிகளை வழங்கும் செயல்முறையை கேள்விக்குட்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. கையூட்டுக்காகக் கூடுதலாகப் பணம் பிடித்தம் செய்யப்படும் மலிவான ஒப்பந்தப்புள்ளிகள், இடிந்து விழும் பாலங்கள், தரமற்ற வீடுகள் மற்றும் ஒரே மாதிரியான எந்தவித புதுமையும் இல்லாத கட்டடங்கள் மட்டுமே உருவாக்கப்பட்டு வருகின்றன.
தரத்தை உயர்த்திடுக!
எதற்கு எடுத்தாலும் உலகத்தரம் என்று மூச்சுக்கு 300 தரம் பேசுகிறோம் ஆனால் பல நாடுகளில் அந்தந்த நாட்டின் மரபு வழியில் நின்று மிகச்சிறந்த வடிவமைப்புகளை மேற்கொண்டு வருகின்றன.
மிகவும் சிறிய இமயமலை நாடான பூட்டான், கெலெபு விமான நிலையம், அதன் தொலைநோக்குப் பார்வையை உணர்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. திறந்தவெளி நடைபாதைகளும் ஒரு வன முற்றமும், இயற்கையோடு இயைந்த மரத்தாலான வைர வடிவத் தொகுப்புக் கட்டமைப்புகளில் இணைந்துள்ளன. இது பாரம்பரிய பூட்டானியத் தன்மையும் அதே சமயம் முற்றிலும் சமகாலத் தன்மையும் கொண்ட ஒரு கட்டடக்கலையாகும்.
சமீபத்தில், எகிப்து, கெய்ரோவில் திறக்கப்பட்ட பிரம்மாண்ட அருங்காட்சியகம் மற்றும் அதற்கு முன்னதாக, அலெக்சாண்டிரியாவின் பெரிய நூலகம். நார்வே மற்றும் அயர்லாந்து நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்ட இந்த இரண்டு கட்டமைப்புகளும், கலாச்சார ரீதியாக மிகவும் செழுமையானதாக, தனித்துவமான எகிப்தியத் தன்மையுடன் படைக்கப்பட்டுள்ளன.
வறுமை, நகர நிர்வாகச் சீர்கேடு மற்றும் அரசியல் அக்கறையின்மை ஆகியவற்றில் மூழ்கியுள்ள ஒரு நாட்டில் இவை அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில்நுட்ப மாயாஜாலங்களை நிகழ்த்தும் சீனா!
சீனாவின் பொது உள்கட்டமைப்பு மாதிரியானது, வளரும் நாடுகளுக்கு ஒரு பாடமாக உள்ளது, இது மேற்கத்திய, புதுமைகள் மற்றும் தொழில்நுட்பத்தை தாண்டி சிறப்பானதாக உள்ளது.
சீனாவில் உள்ள சில புதிய விமான நிலையங்கள், பயணிகளின் மன அழுத்தத்தைக் குறைத்து பயண நேரத்தைக் குறைத்தும் வருகிறது. பயணிகளை நேரடியாக அவர்களின் போர்டிங் கேட்களில் இறக்கிவிடவும், மையப்படுத்தப்பட்ட முனையங்களில் தேவையற்ற நேரத்தைக் குறைக்கவும் திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.
ஆனால் இந்தியாவில் புதிய விமான நிலைய வடிவமைப்புகளில் போதிய புதுமைகள் இல்லை, பயணிகள் டாக்சி நிறுத்தும் இடங்களுக்கு நீண்ட தூரம் நடக்க வேண்டியுள்ளது, மேலும் பல நகரங்களில் பொதுப் போக்குவரத்துடன் ஒருங்கிணைப்பதும் பலவீனமாக உள்ளது. இதற்கு மாறாக, சீனா அதிக எண்ணிக்கையிலான மக்களை விரைவாகவும் வசதியாகவும் பயணிக்கச் செய்வதற்கான திறமையான புதிய வழிகளைக் கண்டறிந்துள்ளது.
ஏன்? சிங்கப்பூர் விமான நிலையம் மலேசியமான நிலையம்,வியட்நாமின் விமான நிலையங்கள், தாய்லாந்தின் பாங்காக் விமான நிலையங்கள் போன்றவை மிகத் தரம் வாய்ந்ததாக வடிவமைக்கப்படுகின்றன. பெரும் எண்ணிக்கையிலான பயணிகளை கையாளுவதற்கான திறன் உள்ள வகையில் அவற்றை வடிவமைத்திருக்கிறார்கள்.
விழும் விமான நிலையங்கள்!
இந்தியாவில் புதிதாக அமைக்கப்படும் விமான நிலைய கூறைகள் விரிசல் காண்கின்றன, விழுந்து நொறுங்குகின்றன, மழைக் காலங்களில் தண்ணீர் ஒழுகுகின்றன.
டெல்லி மற்றும் ஜபல்பூர் போன்ற விமான நிலையங்களின் மேற்கூரைகள் மழை மற்றும் வெள்ளத்தால் பலத்த சேதமடைந்தன.
கேரளாவின் 5 விமான நிலையங்களை அந்த மாநில அரசு கேட்டும் விடாப்பிடியாக அதானி நிறுவனத்திற்கு வழங்கியது. இந்த டெண்டரிலும் பெரும் ஊழல்.
ஜிஎம்.ஆர் நிறுவனம் ஒரு பயணிக்கு ரூ.63 என்று புள்ளிகள் வழங்கிய நிலையில் ரூ.168 என உயர்த்தி ஒரு பயணிக்கு புள்ளிகள் வழங்கிய அதானி நிறுவனத்திற்கு டெண்டரை வழங்கியது அடாத செயலாகும்.
தங்க முட்டையிடும் சுங்கச்சாவடிகள்
குறிப்பிட்ட 5 சுங்கச்சாவடிகள் மட்டும் மாதிரி ஆய்வு நடத்தியதிலிருந்து மட்டும் 154 கோடி ரூபாய் அளவிற்கு வாகன ஓட்டிகளிடமிருந்து அதிகமாக வசூலிக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது. மறுபுறம் சலுகை ஒப்பந்தங்களினால் வருவாய் பகிர்வுக்கான ஒதுக்கீடு இல்லாததால், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.133.36 கோடி வருவாயை இழந்துள்ளது. இந்த தணிக்கை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டால் மோடி அரசின் பல லட்சம் கோடி ரூபாய் ஊழல் அம்பலமாகும்.
நிதி மூலதனம் தனது ஆதிக்கம் நிலை பெற, சேவையையும், முதலாளித்துவ ஊழலையும், பாசிசத்தையும் ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்க முடியாது.
நிதிமூலதன ஆதிக்கமும், முதலாளித்துவ ஊழல்களும் நெருக்கடி களை அதிகரிக்கின்றன. இந்த நெருக்கடியே பாசிசத்திற்கு வழி வகுக்கிறது. எனவே ஊழல் மற்றும் பாசிசத்தின் ஊற்றுக் கண்ணாய் விளங்கும் நிதிமூலதன ஆதிக்கத்தை ஒழிக்காமல் மோடி அரசின் ஊழல்களையோ, பாசிசத்தையோ தனித்து ஒழிக்க முடியாது. எனவே, இளைய பாரதமே எழுக! மாற்றத்திற்கான பாடல் ஒன்று எழுதுக!