
ஜூன் 12 அன்று ஜெனீவாவில் நடைபெற்ற ஐஎல்ஓவின் பன்னாட்டுத் தொழிலாளர் மாநாட்டில் (International Labour Conference), “பிளாட்ஃபார்ம் பொருளாதாரத்தில் கண்ணியமான வேலை” (Decent Work in the Platform Economy) என்ற சர்வதேச இணக்க விதி எண் 193 ஏற்றுக்கொள்ளப்பட்டது.
செயலி (App) வழியாக பொதுமக்களின் பணித்தலைப் (ஆர்டர்களை) பெற்று, உணவு, நுகர்பொருட்கள் வீட்டுக்குக் கொண்டு சென்று தருபவர்கள், ஆட்டோ அல்லது கார் வாடகைக்கு ஓட்டுபவர்கள் போன்ற பணிகளைச் செய்பவர்களை, பிளாட்ஃபார்ம் தொழிலாளர் அல்லது ‘கிக்’ தொழிலாளர் என்று அழைக்கப்படுகின்றனர்.
இவர்களுக்கு உத்தரவு, சம்பளம், தகவல் எல்லாம் செயலிகள் வழியேதான் வருகின்றன. நிர்வாகத்தின் மனிதர்களைப் பார்ப்பதே அரிது. ஊதியம் வேலை நேரம் எல்லாமே செயலித் தகவல்கள்தான். பயன்படுத்தும் வாகனம், பராமரிப்புச் செலவு, பெட்ரோல் எல்லாவற்றையும் அவர்களே பார்த்துக்கொள்ள வேண்டும்.
இவர்களுக்கும் சட்டம் உருவாக்குவதற்கான இணக்க விதி எண் 193 ஐ.எல்.ஓ. மாநாட்டில் வந்தது. இதற்குக் கிடைத்த ஆதரவு மிகப்பெரியது. சீனா, பிரேசில், ஜெர்மனி, பிரான்ஸ், தென்னாப்பிரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் அரசுகள் உள்ளிட்டு 406 வாக்குகள் ஆதரவாக விழுந்தன. 8 வாக்குகள் மட்டுமே எதிராவை. வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தவை 36 நாடுகள். அந்த 36ல் இந்தியாவும் ஒன்று.
இந்தியாவிலிருந்து சென்ற தொழிலாளர், முதலாளிகள் பிரதிநிதிகள் இணக்க விதிக்கு ஆதரவாக வாக்களித்தாலும், இணக்க விதியை ஏற்று, அதன்படி இந்தியாவில் அதற்கான சட்டத்தை உருவாக்க வேண்டிய அரசின் பிரதிநிதி வாக்குச் செலுத்தவில்லை.
வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இருப்பது வெறுமனே நடுநிலை வகிப்பதல்ல. இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் கோடிக்கணக்கான கிக் தொழிலாளர்கள் போராடியதால் உருவாக்கப்பட்ட, பல நாட்டு அரசுகளுக்கும் வழிகாட்டுகிற இந்த இணக்க விதியிருந்து விலகி நிற்கும் அரசியல் முடிவே அது.
இந்தியாவில் இந்த செயலிகளை நடத்தும் (ஸெப்டோ, ஸொமேட்டோ, ஸ்விக்கி, உபேர், ஓலா, ராப்பிடோ உள்ளிட்ட ) நிறுவனங்கள், தம்மிடம் வேலை செய்பவர்களைத், தமது தொழிலாளர்கள் இல்லை என்றும், அவர்கள் “சுயேச்சை கூட்டாளர்கள்” (பார்ட்னர்) என்று கூறுகின்றன.
என்னவாக இருந்தாலும், பிளாட்ஃபார்ம் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும், சட்டப்படி அல்லது பேச்சுவார்த்தை மூலம் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம், காலத்துக்கு ஏற்ற ஊதிய வழங்கல், தொழில்சார் பாதுகாப்பும் சுகாதாரமும், ஒப்பிடத்தக்க பிற தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் அளவுக்கு குறையாத சமூகப் பாதுகாப்பும் இவர்களுக்கும் வழங்க வேண்டும் என்பதே அந்த இணக்க விதி.
முக்கியமான புதுமை என்னவென்றால், இதுவரை எந்த சர்வதேச தரநிலையும் தொடாத “அல்காரிதம் நிர்வாகம்” (Algorithmic Management) என்ற துறையையும் இது ஒழுங்குபடுத்துகிறது. எந்தத் தொழிலாளருக்கு வேலை ஒதுக்குவது, ஊதியத்தை நிர்ணயிப்பது, செயல்திறனை கண்காணிப்பது, எந்த விளக்கமும் இல்லாமல் கணக்கை (Account) முடக்குவது போன்ற அனைத்தையும் மறைமுகமாக கட்டுப்படுத்தும் மென்பொருள் அமைப்புகள், இனி சட்டத்தின் வரம்புகளுக்கு உட்பட்டுத்தான் இயங்க முடியும். இனியும் தானியங்கி இயந்திரங்களின் கைகளில் நிர்வாகத்தை ஒப்படைக்காமல், செயல்முறையில் மனித தலையீட்டை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், இந்த இணக்க விதியின் 9-ஆவது பிரிவு, கிக் பொருளாதாரத்தின் அடிப்படைப் பொய்யை அம்பலப்படுத்துகிறது. இந்தப் பணிகளைச் செய்பவர்களை அடையாளமற்றவர்களாக ஒதுக்கிவைக்காமல், அவர் உண்மையில் எந்த வகையான வேலையைச் செய்கிறார் என்பதையே அடிப்படையாகக் கொண்டு அரசுகள் தொழிலாளர்களை வகைப்படுத்த வேண்டும் என்று அது வலியுறுத்துகிறது.
2020-–21-ஆம் ஆண்டில் இந்தியாவில் இப்பணியில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை சுமார் 77 லட்சம் என மதிப்பிடப்பட்டது. நித்தி ஆயோக் கணிப்பின்படி, 2029-–30-க்குள் இந்த எண்ணிக்கை 2.35 கோடியாக உயரும். அதாவது, இந்தியாவின் விவசாயம் அல்லாத மொத்த பணியாளர்களில் சுமார் 6.7 சதவீதம் பேர் கிக் தொழிலாளர்களாக இருப்பார்கள்.
இது இனி நகர்ப்புற இளைஞர்கள் கூடுதல் வருமானத்திற்காகச் செய்யும் தற்காலிக வேலை அல்ல. இந்திய நகரங்களின் உணவு விநியோகம், போக்குவரத்து, அன்றாட பொருட்களின் விநியோகச் சங்கிலி ஆகியவற்றை இயக்கும் பிரதான உழைப்பாக மாறிவிட்டது.
நித்தி ஆயோக்கின் தரவுகளின்படி, கிக் தொழிலாளர்களில் 39 சதவீதம் பேர் மாதம் ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை சம்பாதிக்கின்றனர். மேலும் 34 சதவீதம் பேர் ரூ.25,000 முதல் ரூ.40,000 வரை வருமானம் பெறுகின்றனர். ஆனால் இந்த வருமானம் 12 மணி நேரம் வரை நீளும் வேலை, எரிபொருள் செலவை தொழிலாளரே ஏற்றுக்கொள்வது, கூடுதல் நேர ஊதியம் இல்லாதது போன்ற கடுமையான நிபந்தனைகளின் விளைவாகும். ஏனெனில், கூடுதல் நேர ஊதியம் கிடைக்க வேண்டுமெனில், முதலில் தொழிலாளருக்கு ஒரு முதலாளி இருப்பதை சட்டம் அங்கீகரிக்க வேண்டும்.
கிக் தொழிலாளர்களில் 15 சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கே ஏதேனும் சமூகப் பாதுகாப்பு உள்ளது. மீதமுள்ளவர்கள் ஒவ்வொரு நாளும் இந்தியாவின் நெரிசலான சாலைகளில் விபத்துக் காப்பீடு இன்றி, நோய்விடுப்பு ஊதியம் இன்றி, ஓய்வூதிய பாதுகாப்பு இன்றி, எந்த விளக்கமும் தராமல் அவர்களின் வருமானத்தை செயலியின் அல்காரிதம் ஒரே நொடியில் நிறுத்திவிடக்கூடிய சூழ்நிலையில் பணியாற்றுகிறார்கள்.
இந்தியாவுக்கு ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட பன்னாட்டு இணக்கவிதி தேவையில்லை; நமக்கே தனியான சட்ட அமைப்பு உள்ளது என்று அரசு வாதிடலாம்.
2025 நவம்பரில் அமலுக்கு வந்த நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளில் ஒன்றான 2020-ஆம் ஆண்டின் சமூகப் பாதுகாப்புச் சட்டத் தொகுப்பு இந்த ‘கிக்’ தொழிலாளர் பற்றிப் பேசுவது உண்மைதான். செயலி நிறுவனங்கள் தங்களது ஆண்டு வருவாயில் 1 முதல் 2 சதவீதம் வரை, அல்லது தொழிலாளர்களுக்குச் செலுத்தும் தொகையின் 5 சதவீதத்தைத் தாண்டாத அளவு, சமூகப் பாதுகாப்பு நிதிக்குச் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் நடைமுறையில் இது காகிதத்தில் அச்சடிக்கப்பட்டு அலமாரியில் வைக்கப்பட்டுள்ள வாக்குறுதி மட்டுமே. மத்தியச் சட்டமோ, பெரும்பாலான மாநிலச் சட்டங்களோ சமூகப் பாதுகாப்பின் எந்த வகையான பலன்கள் வழங்கப்படும், எவ்வளவு வழங்கப்படும், யாருக்கு தகுதி உண்டு என்பதைக் கூட தெளிவாகக் குறிப்பிடவில்லை. இந்த நிதி எவ்வாறு வசூல் செய்யப்படும் என்றும் கூறவில்லை; முழுமையாக நடைமுறைக்கும் வரவில்லை.
ராஜஸ்தான், தெலங்கானாவில் கிக் தொழிலாளர் நல வாரியங்கள் உள்ளன. தமிழ்நாட்டிலும் நலவாரியத்தில் சேர்க்க அன்றைய மாநில அரசு ஒப்புக்கொண்டது.
ஒருபுறம் ஒன்றிய அரசு ஜெனீவாவில் ஒதுங்குகிறது; மறுபுறம் மாநில அரசுகள் சட்டங்களை இயற்றி முன்னேறுகின்றன.
ஜெனீவா மாநாட்டில் இந்தியா வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இருந்தது, தனிப்பட்ட ஒரு நிகழ்வு அல்ல; அது நீண்டகால அரசியல் அணுகுமுறையின் தொடர்ச்சியாகும்.
ஐ.எல்.ஓ. இணக்க விதி எண் 87 (சங்கம் அமைக்கும் சுதந்திரம்) இணக்க விதி எண் 98 (ஒன்றிணைந்து பேச்சுவார்த்தை நடத்தும் கூட்டு பேர உரிமை), இணக்க விதி எண் 190 (பணியிடங்களில் வன்முறை மற்றும் துன்புறுத்தலைத் தடுத்தல்) இந்தியா இன்னும் அங்கீகரிக்கவில்லை.
ஐ.எல்.ஓ- வை நிறுவிய நாடுகளில் ஒன்றாக
இருந்தும், அதே ஐஎஸ்ஓ உருவாக்கிய முக்கியமான தொழிலாளர் உரிமை உத்தரவாதங்களை ஏற்க மறுக்கும் நாடாக இந்தியா திகழ்கிறது.
இது திடீரென எடுக்கப்பட்ட முடிவு அல்ல; கொள்கை ரீதியாக உருவான நிலைப்பாடு. கொள்கையை வார்த்தைகளால் ஆதரிப்பது; ஆனால் அதற்கான சட்டப்பூர்வப் பொறுப்பை ஏற்க மறுப்பது என்பதே அந்த அணுகுமுறை.
இந்திய அரசின் தரப்பு வாதம் ஒன்றுண்டு. தேசியச் சட்டங்கள் முழுமையாக ஒத்துப்போகும் நிலையில்தான் சர்வதேச ஒப்பந்தங்களை இந்தியா அங்கீகரிக்கும் என்பதே அது. தொழிலாளர் துறை மாநிலங்களும் மத்திய அரசும் இணைந்து சட்டமியற்றும் பொதுப் பட்டியல் (Concurrent List) பொருளாக இருப்பதால், கூட்டாட்சி அமைப்பையும் கருத்தில் கொள்ள வேண்டியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இருப்பது கூட்டாட்சியைப் பாதுகாக்கும் செயல் அல்ல. ஏனெனில் மாநில அரசுகள் ஏற்கனவே தங்களது சட்டங்களை இயற்றி முன்னேறிக் கொண்டிருக்கின்றன.
ஒரு நாடு ஐஎல்ஓ இணக்க விதியை அங்கீகரித்து, அதை உள்நாட்டு சட்டமாக மாற்றினால், அந்த நாட்டின் தொழிலாளர்கள் அந்த உரிமையை முதலாளிகள் கொடுக்க மறுத்தால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து பெற முடியும். அந்த வாய்ப்பைத் தொழிலாளர்களிடமிருந்து பறிப்பதற்காகத்தான், வாக்களிக்க மறுத்து ஒன்றிய அரசு ஒதுங்கிக்கொண்டது.
இதன் மூலம் இந்தியாவில் செயல்படும் ஒவ்வொரு செயலி சார்ந்த (டிஜிட்டல் தள) நிறுவன முதலாளிகளுக்கும் “தொழிலாளர்களை இப்போது போலவே, தொடர்ந்து மனிதத் தலையீடே இல்லாமல் தானியங்கி இயந்திரங்கள் மூலமே வேலை வாங்கலாம். இதற்கு யாரிடமும் விளக்கம் அளிக்கத் தேவையில்லை” என்று செய்தி தெரிவிக்கப்படுகிறது.
இந்திய அரசு, தொழிலாளரின் பக்கமா? அல்லது டிஜிட்டல் தள நிறுவனங்களின் முதலாளிகள் பக்கமா? என்ற கேள்விக்கு துல்லியமாக, முதலாளி பக்கம்தான் என்று பதிலளிக்கப்பட்டுள்ளது. இதனை வெட்கமில்லாமல் உலகின் மிகப் பெரிய பன்னாட்டு மேடையில் வெளிப்படுத்தியுள்ளது.
ஆனால், ஒரு தரப்பின் கையில் செயலியும் (App), மறுதரப்பின் கையில் சைக்கிள் அல்லது இருசக்கர வாகனத்தின் கைப்பிடியும் இருக்கும் சூழலில், “நடுநிலை” என்பது நடைமுறையில் அதிகாரம் கொண்ட தரப்புக்கே ஆதரவாக அமைகிறது.
இரண்டரைக் கோடித் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஒன்றிய அரசின் பிரதிநிதி ஒரு கையை உயர்த்தி இருந்தாலே போதும். ஆனால் செயலிகளைக் கையில் வைத்துள்ள கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக, தொழிலாளர்களின் உரிமைகளைக் கை கழுவிவிட்டிருக்கிறது மோடி அரசு.