கட்டுரைகள்

வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை (ஒடுக்குமுறை) சட்ட மசோதா-2026 இந்துத்துவா மேலாதிக்கத்திற்கான கடைக்கால்

சே.ஹெலன்ரூபி

“நாட்டு மக்களையும் நாட்டின் இறையாண்மையும் பேணிக் காப்பதற்காகவே சட்டங்கள் என்ற நிலை மாறி, நாட்டு மக்களை அடக்கி ஒடுக்குவதற்கான ஆயுதமாக இந்த பாசிசப் பாஜக அரசால் சட்டங்கள் மாற்றப்பட்டு வருகின்றன.

இந்த வரிசையில் வந்திருப்பது, வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்ட மசோதா (Foreign Contribution (Regulation) Act – FCRA)

இந்தச் சட்டத்தின் தொடக்கம் என்பது 1976 இல் அவசர நிலை காலகட்டத்தின் போது கொண்டுவரப்பட்டது இதன் நோக்கமாக வெளிநாட்டு சக்திகள் இந்திய அரசியல் மற்றும் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை தடுப்பதற்காக என்ற நிலையில் முன்வைக்கப்பட்டது.

அதன் பின் 2010-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) அரசால் எஃப்சிஆர்ஏ 1976 சட்டத்தில் பல ஓட்டைகள் இருப்பதாக கருதி அச்சட்டத்தை ரத்து செய்துவிட்டு எப்சிஆர்ஏ 2010 என்ற புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது.

இதன் முக்கிய நோக்கமாக தொண்டு நிறுவனங்கள் பதிவு என்பது நிரந்தரமானது என்பதை மாற்றி ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையும் நிறுவனங்கள் தங்கள் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் என்பதை முன்னிறுத்தியது. அதுபோக, தேசிய நலன்களுக்கு எதிராக செயல்படும் அமைப்புகளின் உரிமத்தை ரத்து செய்யும் அதிகாரத்தை ஒன்றிய அரசுக்கு இந்தச் சட்டம் வழங்கியது.

அடுத்ததாக 2020 ஆம் ஆண்டு பாஜக அரசால் எஃப்சிஆர்ஏ வின் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

அது தொண்டு நிறுவனங்களின் குரல்வளையை நெருக்கியது. அதன்படி, வெளிநாட்டு நிதியில் இயங்கும் நிறுவனங்கள் தங்கள் நிர்வாக செலவுகளுக்காக 20 சதவீதத்தை மட்டும் வெளிநாட்டு நிதியை பயன்படுத்த முடியும் என்பதாகும். இதற்கு முன்பு இது 50 சதவீதமாக இருந்தது. இது ஒட்டு மொத்த தொண்டு நிறுவனங்களின் நிர்வாகத்தையும் தரமற்றதாக தகுதி இழப்பு செய்வதாக அமைகிறது. கல்வி, மருத்துவம் உள்ளிட்ட மக்கள் சேவை நிறுவனங்கள் முழுக்க முழுக்க வெளிநாட்டு நிதிகளை சார்ந்து இயங்குகின்றன. இது நேரடியாக ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மக்களை அவர்களின் வாழ்வியலை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. அதுபோக அனைத்து வெளிநாட்டு நிதிகளும் டெல்லியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது. இதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன.

அடுத்ததாக நாடாளுமன்றத்தில் தற்போது முன்மொழியப்பட்டுள்ள எஃப்சிஆர்ஏ 2026 திருத்த மசோதா, வரலாற்றிலேயே மிகக் கடுமையான சட்டமாகும். இதுநாள் வரையில் வெளிநாட்டு நிதியில் மட்டுமல்ல; தொண்டு நிறுவனங்களின் சொந்த உழைப்பால் உள்நாட்டு நிதியால் திரட்டப்பட்ட, உருவாக்கப்பட்ட அனைத்து சொத்துக்களையும் அரசு கையகப்படுத்தும் கொடூரமான நிலையில் முன்மொழியப்பட்டுள்ளது. வரலாற்று ரீதியில் பார்த்தோமேயானால் இச்சட்டம் ஆரம்பத்தில் அரசியல் பாதுகாப்பு என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டு பின், நிதி வெளிப்படைத்தன்மை என்பதாகி அதன்பின், தற்போது நிர்வாகக் கட்டுப்பாடு என்ற பெயரில் தொண்டு நிறுவனங்களின் உட்கட்டமைப்பை தகர்க்கும் வேலையில் கவனம் செலுத்துகிறது.

ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜூஜூ கூறுகையில், “தமிழ்நாட்டைப் போன்ற மாநிலங்களில் சில தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்திச் சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகப் புகார்கள் வருவதாகவும் (தகவலின் அடிப்படையில்), அத்தகைய அமைப்புகளின் உள்கட்டமைப்பை முடக்கவே இந்தச் சொத்து கையகப்படுத்தும் விதிமுறை அவசியம்” என்கிறார். இதிலிருந்து பாஜகவின் இந்த கொடூர புத்தியை உணர்ந்து கொள்ள முடியும்.

இப்படி, எஃப்சிஆர்ஏ 2026 திருத்தச் சட்ட மசோதாவில் புதிதாக இணைக்கப்பட்ட பிரிவு 16A-ஐ நோக்குகையில், ஒரு தொண்டு நிறுவனத்தின் எஃப்சிஆர்ஏ-வின் உரிமம் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது காலாவதியான பிறகு புதுப்பிக்கப்படாவிட்டாலோ, அந்த அமைப்பு வெளிநாட்டு நிதியைக் கொண்டு வாங்கிய அனைத்துச் சொத்துக்களும் உடனடியாக ஒன்றிய அரசின் வசமாகும். இந்தச் சொத்துக்களைப் பராமரிக்கவும் கட்டுப்படுத்தவும் ஒன்றிய அரசு ஒரு (Designated Authority) அதிகாரியை நியமிக்கும்.

இந்த நபருக்கு பிரிவு 16A, தொண்டு நிறுவனங்களிடம் உள்ள வெளிநாட்டு நிதி மற்றும் வங்கி இருப்பைக் கைப்பற்றுதல், வெளிநாட்டு நிதியில் வாங்கப்பட்ட நிலம், கட்டடம், வாகனங்கள் மற்றும் அலுவலக உபகரணங்களை நிர்வகித்தல் மற்றும் இந்தச் சொத்துக்களைப் பொது நலனுக்காக வேறு அமைப்புகளிடம் ஒப்படைத்தல் அல்லது ஏலம் விடுதல் என்ற அளவில் உரிமையியல் நீதிமன்ற அதிகார வரம்பையும் கடந்த உச்சபட்ச அதிகாரத்தை வழங்குகிறது.

இதனையும் தாண்டி கலப்பு நிதிக்கான சிக்கல் உருவாகி உள்ளது, தொண்டு நிறுவனத்தின் சொத்து முழுக்க முழுக்க வெளிநாட்டு நிதியில் வாங்கப்பட்டிருக்காது. “உதாரணமாக, ஒரு பள்ளி கட்ட 1 கோடி செலவாகிறது எனில், அதில் 20 லட்சம் வெளிநாட்டு நிதி மற்றும் 80 லட்சம் உள்ளூர் நன்கொடை இருக்கலாம்.” அவ்வாறு இருக்கையில் அந்த அமைப்பின் உரிமம் ரத்து செய்யப்பட்டால், 20 லட்சம் வெளிநாட்டு நிதியில் முதலீடு செய்யப்பட்ட அந்த முழுக் கட்டடத்தையும் அரசு கையகப்படுத்த இந்தச் சட்டம் வழிவகுக்கிறது. இது உள்ளூர் நன்கொடையாளர்களின் பங்களிப்பையும், உரிமையையும் நிராகரிக்கிறது.

இந்த நிலையில் பிரதமர் மோடி கடந்த ஆண்டு சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தில் பேசியதைப் பார்ப்போம், “சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு, ‘ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம்’ (RSS) என்ற அமைப்பு பிறந்தது. கடந்த 100 ஆண்டுகளாக தேசப்பணியில் ஈடுபட்டுள்ள அந்த அமைப்பின் பயணம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது. சேவை, அர்ப்பணிப்பு மற்றும் ஒழுக்கம் ஆகியவை அந்த அமைப்பின் அடையாளம். ஒரு வகையில் சொல்லப்போனால், ஆர்.எஸ்.எஸ் என்பது உலகின் மிகப்பெரிய தொண்டு நிறுவனம் (World’s Largest NGO)” என்று மோடி பேசினார்.

ஆக, மேலே கண்ட பிரிவு 16A-வின்படி நியமிக்கப்பட்ட அதிகாரி, ரத்து செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்களின் அனைத்துச் சொத்துக்களையும் பொதுநலன்களுக்காக ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு தாரை வார்க்கலாம் என்றல்லவா அர்த்தமாகிறது?

“ஊரான் வீட்டு நெய்யே! என் பொண்டாட்டி கையே!” என்ற பழமொழி தான் நினைவிற்கு வருகிறது.

எந்த வகையிலும் சட்டத்திற்கு உட்பட்டு தன்னை பதிவு செய்து கொள்ளாத, அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு செயல்பட்டு கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் என்பது உலகின் மிகப்பெரிய தொண்டு நிறுவனமாம்! ஒடுக்கப்பட்ட மக்கள், ஏழை, எளிய மக்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோருக்கான ஆதரவையும், நல்வாழ்விற்காகவும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனங்கள் சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான, நாட்டின் இறையாண்மைக்கு எதிரான அமைப்புகளாம்!

இவர்களின் எதேச்சதிகாரத்தால், கடந்த 2020 ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தச் சட்டத்திற்கு பின்பு சுமார் 22 ஆயிரம் தொண்டு நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, அதன் சொத்து மதிப்புகள் பல ஆயிரம் கோடி அரசின் (ஆர்.எஸ்.எஸ்) கட்டுப்பாட்டிற்குள் செல்லப் போகின்றன. இதில் கல்விக்கூடங்கள், மருத்துவமனை, ஆதரவற்றோர் விடுதி உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் அடங்கும்.

இந்தச் சொத்துக்களின் மதிப்பு என்பது வெறும் பணமாக மட்டுமல்லாமல், அவை அமைந்துள்ள நிலத்தின் சந்தை மதிப்பு மற்றும் அந்த உள்கட்டமைப்பின் சமூக மதிப்பையும் உள்ளடக்கியது.

இந்தச் செயல்திட்டம் (சட்டம்) பாசிச பாஜக, ஆர்.எஸ்.எஸ்.சின் ‘ஒரே நாடு, ஒரே மதம்’ என்ற கொடூர கொள்கைக்காக இந்திய இறையாண்மையை தகர்த்தெறிந்து, சமூக கட்டமைப்பை பார்ப்பனிய மேலாதிக்கம் மேலெழுப்புவதற்கான கடைக்காலாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button