கட்டுரைகள்

வெப்பம் தணியவில்லை!

இரா.முத்தரசன்

தமிழ்நாடு சட்டப் பேரவைக்கான தேர்தல் மிக வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. மே 4இல் தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் உள்ளிட்டவைகளின் முடிவுகளை அறிந்துகொள்ள நாடே ஆவலாக உள்ளது.

மே மாதம் தேர்தல் முடிவு எனில் ஏப்ரலில் பிரச்சாரம் – வாக்கு சேகரிப்பு பணிகள். தொடக்கம் முதலே தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குரியதானது மிகவும் கவலைக்குரியது.

தேர்தலில் வெற்றி தோல்வி என்பது ஒரு புறம் இருப்பினும் – ஜனநாயகம் என்பது முக்கியமானதல்லவா?

ஜனநாயகத்தின்மீது கொடூரத் தாக்குதலை நடத்திவிட்டு – தேர்தல் நடைபெற்றது என்று பேசிப் பயனில்லை. ஒன்றியத்தில் அமைந்துள்ள ஆட்சி –ஜனநாயக முறையில் ஆட்சிக்கு வந்துள்ளோம் என்பதனை நினைவில்கூட கொண்டதாகத் தெரியவில்லை.

மாறாக, ஆர்.எஸ்.எஸ். பல குட்டிகளைப் போட்டுள்ளது. குட்டிகள் ஆளுக்கு ஒரு பக்கமாக சென்று தங்களால் ஆன அனைத்து வகை கலவரங்களையும் செய்த வண்ணம் உள்ளனர். அத்தகைய அடாவடித்தனமான அமைப்புகளை போன்று, ஆட்சியையும் ஆர்.எஸ்.எஸ். கிளை போலவே கருதி மோடி அரசு செயல்பட்டு வருகின்றது.

தனக்கு கிடைத்த ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு ஒரு சிறந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டராக பிரதமர் மோடி செயல்பட்டு வருகின்றார். ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கைகளை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார் என்று ஆர்.எஸ்.எஸ்.சின் நிர்வாகி ஒருவர் மோடிக்கு பாராட்டுப் பத்திரம் வாசித்து உள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஜனநாயகத்தின் மீது வெறுப்பு கொண்ட இயக்கம் என்பது அரசியல் அறிந்தோர் நன்கறிவர். அதன் வழிகாட்டுதலுடன் தமிழக சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க ஓராண்டு காலத்துக்கு முன்பே திட்டமிடப்பட்டு பணிகளை தொடங்கினர். உச்சப் பொறுப்பில் உள்ள அமித்ஷா ஓர் அரசியல் தலைவராக அல்ல, அடியாள் போன்று செயல்பட்டார்.

தி.மு.க.வை ஒழிக்க வேண்டும், அதன் ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதே பாஜகவின் ஒற்றை இலக்கு! இலக்கை அடைய தன்னால் மட்டும் இயலாது என்பது பாஜகவிற்கு நன்கு தெரியும். தான் பலமான கட்சி அல்ல என்றாலும், ஒன்றியத்தில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பலம், பணபலம் இவைகளைக் கொண்டு ஓர் அணியை உருவாக்க திட்டமிட்டது.

பாஜகவின் சூழ்ச்சி அரசியல் வெற்றி பெற, அதிமுக தலைவர்களை பல பிரிவுகளாக, டெல்லிக்கு வரவழைத்து, எடப்பாடி பழனிசாமியை அச்சுறுத்தி அடிபணிய வைத்தார்கள்.

தொடர்ந்து பாஜக அதிமுக தேர்தலில் கூட்டாக போட்டியிடும், என்டிஏ ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடியை அருகில் அமர வைத்துக்கொண்டு அமித்ஷா அளித்த பேட்டியை எடப்பாடியால் மறுக்க முடியாது மௌனசாமியாக வேண்டிய நிர்பந்தம்!

இவ்வாறாக பலவீனமானவர்கள் ஒவ்வொருவரையும் அரட்டி, உருட்டி ஓர் அணி என்று உருவாக்கப்பட்டது. ஆனாலும் பாஜக எதிர்பார்த்தது போன்று ஓர் பலமுள்ள அணியை உருவாக்க முடியவில்லை

தன் தோல்விகளை மறைத்து, வேறு வகையில் கணக்கு தீர்க்க எடுத்த முயற்சிதான், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு-தேர்தல் ஆணையத்தை தங்கள் விருப்பம் போல் செயல்படுத்தினர். தேர்தல் ஆணையத்திடமிருந்து திடீர் உத்தரவுகள் பறந்தன. தலைமைச் செயலாளர் அதிரடி மாற்றம், காவல்துறை அதிகாரிகள் மாற்றம் தொடர்ந்தன. இதன் மூலமாகவும் திமுக கூட்டணிக்கு அச்சத்தை, அச்சுறுத்தலை ஏற்படுத்த முயன்று தோற்றனர்.

அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்ற அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக செயல்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர்களை, குறிப்பாக திமுக அமைச்சர்களை குறிவைத்து சோதனைகளை மேற்கொண்டு பலவீனப்படுத்த முயன்றார்கள். அவர்களின் முயற்சி, அவர்கள் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை.

மோடியை, அமித்ஷாவை அழைத்து வந்து அவர்களின் அதிரடிப் பிரச்சாரத்தின் மூலம் இந்தியா கூட்டணியை பலவீனப்படுத்த முயன்றும் வெற்றி பெறவில்லை.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் பிளவு வரும் என்று பெரும் கணக்கு போட்டார்கள்- அவர்களின் கனவு பகல் கனவானது.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொகுதிகள் பகிர்விலும், எண்ணிக்கையிலும் மன வருத்தங்கள் இருந்த போதும், ஒன்றுபட்டு களம் கண்டார்கள். கடுமையான வெயில், தாள முடியாத வெப்பம் இருந்த போதும் கூட்டணித் தலைவர்கள் ஒன்றுபட்டு பிரச்சாரங்களை மேற்கொண்டார்கள்.

அவர்களது பிரச்சாரம் – ஒன்றிய அரசின் எதேச்சதிகாரம், மாநில உரிமை பறிப்பு, நிதிப் பகிர்வில் உள்ள ஏற்றத்தாழ்வு, மொழிகளுக்கு வழங்கப்படும் வளர்ச்சி நிதியில் சமஸ்கிருதம்-இந்தி ஆகிய மொழிகளுக்கு முக்கியத்துவம் அளித்து நிதியை வாரி வழங்கியது- தமிழ் மொழி புறக்கணிப்பு-தேசிய கல்விக் கொள்கை திணிப்பு-கல்வி உதவித்தொகை வழங்க ஒன்றிய அரசு மறுத்து வருவது-தேசிய பேரிடர் நிதி வழங்க மறுத்தல்-அரசின் தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்பு-மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு சட்டத்தை சீர்குலைத்து, பெயரை மாற்றியது-கோவை, மதுரை ஆகிய பெருநகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்ட அனுமதி மறுப்பு போன்ற மக்கள் பிரச்சனைகள் முன்வைக்கப்பட்டன.

எதிர்த்தரப்பால் இப்பிரச்சனைகளுக்கு பதில் அளிக்க இயலவில்லை. மாறாக, தனிநபர் தாக்குதலில் தரம் தாழ்ந்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.

முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் மட்டுமின்றி 234 தொகுதிகளிலும் கட்சிகளின் தொண்டர்கள் கரம் கோத்து ஒன்றுபட்டுப் போராடினர்.

சுட்டெரிக்கும் வெயிலைப் பொருட்படுத்தாது கொள்கைதான் முக்கியம் என்று உறுதியாக களம் கண்டனர். அவர்களது ஒன்றுபட்ட செயல்பாடு முற்போக்கு கூட்டணியின் வெற்றியை உறுதிப்படுத்தி உள்ளது.

வெயிலின் வெப்பம் நிரந்தரமல்ல. ஜூன் வரை அதன் ஆட்டம் அதிகமாகத்தான் இருக்கும், அதன்பிறகு மலையேறிவிடும்.

ஆனால், ஒன்றிய அரசின் அநீதி வெப்பமானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நாடு இதேபோல் சென்றால் அதன் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். ஐந்து மாநிலத் தேர்தல் நடப்பது குறித்து சிறிதும் கவலைப்படாமல், நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் என்ற பெயரில் ஏப்ரல் 16ல் நாடாளுமன்ற அவசரக் கூட்டம் என்று கூட்டப்பட்டது.

பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் கூட்டலாம் என்ற எதிர்க்கட்சிகளின் வேண்டுகோளை ஒன்றிய மோடி அரசு நிராகரித்தது.

பரப்புரையில் ஈடுபட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தேர்தல் பணிகளை ஒத்தி வைத்து விட்டு நாடாளுமன்றம் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம்-நெருக்கடி!

மகளிர் இட ஒதுக்கீடு என்ற போர்வையில் புகுந்து கொண்டு நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்தி அதன்மூலம் தன்னை நிரந்தரமாக பலப்படுத்திக் கொள்ள முயன்ற ஆர்.எஸ்.எஸ். பலத்தத் தோல்வியை தழுவியது.

இத்தோல்வியை உறுதிப்படுத்தியதில் தமிழ்நாடு முதலமைச்சரின் முன் முயற்சி பாராட்டுக்குரியது.

இவை மட்டுமல்ல எதிர்வரும் காலத்தில் ஜனநாயகத்திற்கான பல சோதனைகளை நாடு எதிர் கொள்ள வேண்டி உள்ளது.

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’, ‘ஒரே நாடு ஒரே மொழி’, ‘ஒரே நாடு ஒரே கல்வி’ போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொண்டு கடும் போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு ஆட்படுத்த ஆர்.எஸ்.எஸ். சதித்திட்டம் தீட்டி வருகின்றது. ஜனநாயகத்தைக் காப்பதற்கான என்றுமில்லா போராட்டங்களை நாடு எதிர்கொள்ள வேண்டிய தவிர்க்க முடியாத இயக்கங்களுக்கு நாம் ஆயத்தமாக வேண்டும்.

அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள கட்சி மற்றும் வர்க்க வெகுஜன அமைப்புகளை பலப்படுத்த, பன்மடங்கு பலத்த ஆக்கபூர்வமான பணிகளில் அர்ப்பணிப்பு உணர்வுடன் நாம் செயல்பட வேண்டியது நமது அனைவரின் தலையாய கடமையாகும்!

நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, இலட்சிய வேட்கையுடன், இரவு பகல் பாராது, கொடுமையான வெயிலைக் கண்டு அஞ்சி துவளாது, பணியாற்றிய அனைத்து செயல் வீரர்களுக்கும் நமது பாராட்டுகள்! வாழ்த்துக்கள்!!

தொடரட்டும் பணிகள்-தொய்வின்றி தொடரட்டும்!
இலக்கை நோக்கி நம் செம்படையின் பணிகள் பன்மடங்கு பெருகட்டும்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button