ShortNoticeகட்டுரைகள்தமிழகம்

வாக்குப்பதிவு விழுக்காடு அதிகரிப்பு சொல்வது என்ன? அமைதி அலையால் யாருக்கு வெற்றி?

வ.மணிமாறன்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் இல்லாத அளவுக்கு 85.10 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருப்பது எதை உணர்த்துகிறது? யாருக்கு வெற்றி? என்பது குறித்த ஓர் ஆய்வு.
தேர்தல் திருவிழா ஏப்ரல் 23ஆம் தேதி நிறைவடைந்தது. கடந்த இரண்டு மாதங்களாக இந்த ஜனநாயகத் திருவிழாவில் அனைத்துத் தரப்பு மக்களும் ஆர்வமுடன் பங்கெடுத்தனர். சமூக வலைத்தளங்களிலும், தேநீர்க் கடைகளிலும் அரசியல் விவாதங்கள் அனல் பறந்தது. அரசியலா? அது நமக்கு எதுக்கு? என்று ஒதுங்கிய இளந்தலைமுறையும் ஊக்கமுடன் ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்றது.

எந்த வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடத்தத் தேவையில்லை எனத் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் அளவுக்கு, தமிழ்நாட்டில் உள்ள 75,064 வாக்குச்சாவடிகளிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு எந்திரங்கள் (EVM) மற்றும் விவிபேட் (VVPAT) எந்திரங்கள் மிகவும் பாதுகாப்பான அறைகளில் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பாதுகாக்கும் பணிகளில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்புமிக்க இந்த அறைகளை வேட்பாளர்களின் பிரநிதிகளும் கண்காணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவை அனைத்தும் வழக்கமாக நடப்பவைதான்.

ஆனால், இந்தத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு 85.10 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. இது தேர்தல் மீது மக்கள் கொண்டிருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது. தேர்தல் நாளில் இளைஞர்களின் பங்களிப்பு அதிகமாக இருந்தது. மக்கள் மாற்றத்துக்கு தயாராகிவிட்டார்கள். ஆளுங்கட்சி மீதான அதிருப்தி அலை வீசுகிறது. இப்படிப் பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன.

உண்மையில் வாக்குப்பதிவு விழுக்காடு அதிகரித்தது ஏன்? இதற்கு ஒவ்வொருவரும் தங்களின் விருப்பத்துகக்கேற்ப விளக்கம் அளிக்கின்றனர். அதற்கான வாதங்களையும் முன்வைக்கின்றனர். அவை குறித்துப் பார்க்கலாம்.

கடந்த 2001ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் தேர்தல்களில் பதிவான வாக்குகளை விழுக்காடு அடிப்படையில் ஒப்பிட்டால், இதுவரை இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு விழுக்காடு அதிகரித்துள்ளது. 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 72.73 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. தற்போது, 2026ஆம் ஆண்டு 85.10 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. அதாவது 12.37 விழுக்காடு வாக்குகள் அதிகமாகும். இதுவரை இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது.

இதனை மொத்த வாக்குகளுடன் ஒப்பிடலாம். 2021ஆம் ஆண்டு 4.57 கோடி (4 கோடியே 57 லட்சத்து 81 ஆயிரத்து 044) வாக்குகள் பதிவாகியுள்ளன. 2026 ஆம் ஆண்டு 4.87 கோடி (4 கோடியே 87 லட்சத்து 99 ஆயிரத்து 140) வாக்குகள் பதிவாகியுள்ளன. அதாவது, 30 லட்சத்து 38 ஆயிரத்து 509 வாக்குகள் கூடுதலாகப் பதிவாகியுள்ளன. ஆனால் 2006, 2011, 2016 ஆம் ஆண்டுகளில் கூடுதலாகப் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டால், 30.38 லட்சம் குறிப்பிடும் அளவுக்கு அதிகரிக்கவில்லை. (அட்டவணை – 1 பார்க்க)

பிறகு எப்படி வாக்குப்பதிவு விழுக்காடு அதிகரித்தது? ஒன்றிய பாஜக அரசின் ஆசீர்வாதத்துடன், தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (S.I.R) காரணமாகும். இந்த சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளால் வாக்காளர் பட்டியலில் இருந்த 72 லட்சம் பேரை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது.

2021ஆம் ஆண்டு மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6.29 கோடி ஆகும். 2026ஆம் ஆண்டு மொத்த வாக்காளர்கள் 5.73 கோடி ஆகும். மொத்த எண்ணிக்கை குறையும் பொழுது, பதிவான வாக்குகள் விழுக்காடு அதிகரிக்கும். இப்படித்தான் வாக்குப்பதிவு 85.10 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

இதனைப் பதிவான வாக்குகளுடன் ஒப்பிடுவோம். 2021 ஆம் ஆண்டு 4.57 கோடி வாக்குகள் பதிவாகியுள்ளன. 2026 ஆம் ஆண்டு 4.87 கோடி வாக்குகள் பதிவாகியுள்ளன. அதாவது 30.38 லட்சம் வாக்குகள் கூடுதலாகப் பதிவாகியுள்ளன. தேர்தலுக்குத் தேர்தல் வழக்கமாகக் கூடுதலாகும் அளவுதான் அதிகரித்துள்ளது. இதனை மாற்றத்திற்கான அறிகுறியாக எடுத்துக்கொள்ள முடியாது. இதற்கு தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் தீவிர திருத்தமே (S.I.R) காரணமாகும். இதேபோன்று கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலும் அதிகரித்துள்ளன.

ஆட்சியாளர்களுக்கு எதிரான அலை வீசியதாக எடுத்துக்கொள்ள முடியாதா?

ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் எந்தக் கட்சியின் மீதும் அதிருப்தி ஏற்படுவது இயல்புதான். ஆனால் இந்த அதிருப்தி தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கான அலையாக மாறியிருக்கிறதா என்றால், அவ்வாறு மாறவில்லை. அதற்கான அசைவுகளும் இல்லை. தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர். பணிகளால் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை குறைந்ததால், பதிவான வாக்குகளின் விழுக்காடு அதிகரித்துக் காணப்படுகிறது. அதிருப்தி அலையால் அதிகரித்த வாக்குகள் அல்ல. எந்த அலையும் இன்றி மிக அமைதியாக தேர்தல் நடந்திருக்கிறது. மக்கள் வாக்களித்துள்ளனர்.

பெண்கள் கூடுதலாக வாக்களித்திருப்பதாக கூறப்படுகிறதே, உண்மையா?

சட்டமன்றத் தேர்தலில் மொத்தமாக 85.10 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் பெண்களின் வாக்குப்பதிவு விழுக்காடு ஆண்களை விட அதிகமாக உள்ளது. அதாவது, 85.76 விழுக்காடு பெண்கள் வாக்களித்துள்ளனர். ஆண்களில் 83.57 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளனர். ஆண்களைவிட 2.19 விழுக்காடு (17 லட்சம்) பெண்கள் அதிகமாக வாக்களித்துள்ளனர். தமிழ்நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக ஆண்களைவிட பெண்களின் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது.

ஆளும் திமுக அரசின் மகளிருக்கான திட்டங்கள்.. அதாவது மகளிர் உரிமைத் தொகை, கட்டணமில்லா பேருந்து, தோழி விடுதிகள் போன்ற பல்வேறு திட்டங்கள் பெண்களின் அரசியல் பங்கேற்பை அதிகரித்திருக்கிறது என்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் கூறுகின்றனர். நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் பெண்களில் வாக்களிப்பு அதிகரித்திருக்கிறது என்று த.வெ.க. கட்சியினர் கூறுகின்றனர்.

திமுக மட்டும்தான் மகளிர் “உரிமைத் தொகை” என்று கூறுகின்றது. இந்தத் திட்டத்தை அனைத்துக் கட்சிகளும் அறிவித்துள்ளன. வெவ்வேறு பெயர்களைச் சூட்டியுள்ளன. அனைத்தும் உதவித் தொகையாகவே அறிவித்துள்ளன. உரிமைத் தொகை என்பது பெண்களுக்கு அதிகாரமளித்தல், பெண்களின் உழைப்புக்கு அங்கீகாரம் அளித்தல் என்பதை வெளிப்படுத்துவதாகும். உதவித்தொகையாக அறிவிப்பதில் இப்படி எந்தப் பார்வையும் கிடையாது. இதனால் பெண்கள் அமைதியாக திமுக கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர் என்று வியூக வகுப்பாளர்கள் கூறுகின்றனர். மகளிர் யாருக்கு வாக்களித்துள்ளனர் என்பது மே 4 ஆம் தேதி தெரிந்துவிடும்.

சென்னை மாநகரில் வாக்குப்பதிவு அதிகரித்திருப்பதால், விஜய் கட்சியின் கோட்டையாக மாறிவிடும் என்று கூறுகின்றனரே உண்மையா?

சென்னை மாநகரில் (16 சட்டமன்றத் தொகுதிகள்) அஞ்சல் வாக்குகளுடன் சேர்த்து 24,41,375 வாக்குகள் பதிவாகியுள்ளன. 2021ஆம் ஆண்டு தேர்தலில் 24,16,815 வாக்குகள் பதிவாகியுள்ளன. 24ஆயிரத்து 560 வாக்குகள்தான் கூடுதலாகப் பதிவாகியுள்ளன.

90.56 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் 2021 ஆம் ஆண்டு 1,87,027 வாக்குகள் பதிவாயின. தற்போது 2026 ஆம் ஆண்டு 1,80,533 வாக்குகள் பதிவாகியுள்ளன. 6,494 வாக்குகள் குறைந்துள்ளன.

சென்னையில் அதிக வாக்குகள் (2,03,072) பதிவாகியுள்ள பெரம்பூர் தொகுதியில்கூட 2021ஐவிட கூடுதலாக 2,685 வாக்குகளே பதிவாகியுள்ளன. பெரம்பூருக்கு அடுத்து அதிக வாக்குகள் பதிவான (1,83,207) வேளச்சேரி தொகுதியில், 2021 ஆம் ஆண்டைவிட கூடுதலாக 6,493 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கு அடுத்தபடியாக அதிக வாக்குகள் பதிவான (1,82,382) கொளத்தூர் தொகுதியில் கூடுதலாக 8,994 வாக்குகள் பதிவாகியுள்ளன. (முழு விவரம் அட்டவணை -2ல்)

எனவே சென்னை மாநகரில் ஆளும்கட்சியை அசைத்துப் பார்க்கும் அளவுக்கு புதிதாக எந்த அலையும் வீசவில்லை. 2016 ஆம் ஆண்டு தேர்தலில் பெரம்பூர், அண்ணா நகர், விருகம்பாக்கம், திரு.வி.க.நகர், தியாகராய நகர், திருவொற்றியூர், துறைமுகம் ஆகிய தொகுதிகளில் 5,000 வாக்குகளுக்குள்தான் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் இயல்பான போட்டிதான் நிலவுகின்றது. முழுவீச்சில் மாற்றத்தை ஏற்படுத்தும் அலை எதுவும் இல்லை.

மொத்தத்தில், இந்த சட்டமன்றத் தேர்தல் பல உண்மைகளை வெளிக்கொண்டு வருகின்றது. மிகமிக அமைதியாக நடந்து முடிந்திருக்கும் இந்தத் தேர்தலில் பெண்கள் அதிகமாக வாக்களித்துள்ளனர். இந்த அமைதி அலை ஆளும் திமுகவை கரையேற வைத்துவிடும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button