
தொகுதி மறு வரையறை மசோதா நிறைவேற்றப்படாமல் தடுக்கப்பட்டதால் பெண்களுக்கு எதிர்க்கட்சிகள் துரோகம் துரோகம் இழைத்து விட்டதாக பேசுகிறார்கள் நரேந்திர மோடியும் அமித்ஷாவும் பேசுகிறார்கள்.
நாட்டின் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அவமானத்தை மறக்கவும் முடியாது மன்னிக்கவும் முடியாது என்று சொல்கிறார் பியூஷ் கோயல்.
- பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா 16ஆம் தேதி தான் மக்களவையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதா?
இல்லை.தொகுதி மறுவரையறை செய்வதற்கான மசோதா தான் தாக்கல் செய்யப்பட்டது.
- பெண்கள் இட ஒதுக்கீடு சம்பந்தமான சட்டம் நிறைவேற்றப்பட வேண்டாமா?
அது ஏற்கனவே 2023 செப்டம்பர் மாதத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒரு மனதாக நிறைவேறிவிட்டது.
- அப்படியானால் அது அமலாக்கப்பட்டு விட்டதா?
இல்லை. ஏனென்றால் அந்தச் சட்டத்தில் புதியதாக மக்கள் தொகை கணக்கீடு (சென்சஸ்) எடுத்து தொகுதி மறு வரையறை செய்ததற்கு பின்பாகத்தான் அந்தச் சட்டம் அமலாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது
- இப்போது பேசுகிறார்களே, சென்சஸ் எடுத்து முடிந்து விட்டதா?
இல்லை. இப்போதுதான் சென்சஸ் எடுக்க துவங்கியிருக்கிறார்கள். இது முடிய ஓராண்டுக்கு மேல் ஆகும்
- அப்படியானால் இப்போது ஏன் அதைப் பேசுகிறார்கள்?
புதிய சென்சஸ் வரை காத்திருக்க வேண்டாம். 2011 ஆம் ஆண்டு எடுத்த சென்சஸின் அடிப்படையிலேயே இட ஒதுக்கீட்டை கொண்டு வரலாம் என்கிறார்கள்.
- அதை எதிர்க்கட்சிகள் ஏன் எதிர்க்க வேண்டும்?
எதிர்க்கவில்லை. இப்போது 543 தொகுதிகள் உள்ளன. அதில் மூன்றில் ஒரு பங்கு என்றால், 131 தொகுதிகளை பெண்களுக்கு என ஒதுக்கி விடலாம். தமிழ்நாடு சட்டப்பேரவைக்கும் 234 தொகுதிகளில், 78 தொகுதிகள் பெண்கள் தொகுதிகளாகிவிடும்.
- அதை மோடி அரசு செய்யவில்லையா?
செய்யவில்லை. மாறாக பழைய சென்சஸ்ஸின் அடிப்படையில் 543 தொகுதிகளாக இருப்பதை 850 தொகுதிகளாக உயர்த்த வேண்டும் என்று தான் மசோதாவில் கூறப்படுகிறது.
- எதன் அடிப்படையில் தொகுதிகளை அதிகப்படுத்துவார்கள்?
1976 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் இப்போதைய தொகுதிகள் உள்ளன. 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது உள்ள மக்கள் தொகை அடிப்படையில் விகிதாச்சாரப்படி தொகுதிகளை அதிகப்படுத்துவார்கள்.
- அவ்வாறு செய்தால் என்ன ஆகும்?
குடும்ப கட்டுப்பாடு செய்து மக்கள் தொகையைக் குறைக்குமாறு ஒன்றிய அரசு வலியுறுத்தியது. அதனை ஏற்று கடந்த 50 ஆண்டுகளாக தென்மாநிலங்கள், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி விட்டன. ஆனால் வட மாநிலங்களில் மக்கள் தொகை கட்டுப்பாடு இல்லாமல் பெருகி இருக்கிறது.
- இதனால் யாருக்கு இழப்பு?
மக்கள் தொகைக்கு ஏற்ப நாடாளுமன்ற தொகுதிகள் என்றால், பிறப்பு விகிதத்தைக் குறைத்துவிட்ட தென்மாநிலங்களுக்கு இப்போதுள்ள இடங்கள் குறைந்துவிடும். அதே நேரத்தில் வட மாநிலங்களுக்கு தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்.
- குடும்பக் கட்டுப்பாடு செய்து மக்கள் தொகையை கட்டுப்படுத்திதற்காக தென் மாநிலங்களுக்குத் தண்டனையா?
அதுதான் பிரச்சனையே! அது மட்டும் அல்ல. இந்தியாவின் மக்கள் தொகையில், தமிழ்நாட்டின் மக்கள் தொகை ஏறக்குறைய 5 சதவீதம் மட்டுமே! ஆனால் நாட்டின் மொத்த உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும், ஒன்றிய அரசுக்கு வரி செலுத்துவதிலும் தமிழ்நாட்டின் பங்கு 10சதவீதத்துக்கும் அதிகம். வெறும் மக்கள் தொகையை மட்டுமே கணக்கில் கொண்டு தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் குறைப்பது பொருத்தமற்றது.
- வேறு பிரச்சனைகள் உள்ளனவா?
இந்தியா என்பது, மாநிலங்களின் ஒன்றியம் (யூனியன் ஆப் ஸ்டேட்ஸ்) என்றுதான் அரசியல் சாசனம் கூறுகிறது. அனைத்து சட்டங்களை நிறைவேற்றுவதும் அமலாவதைக் கண்காணிப்பதும் இந்திய நாடாளுமன்றம் தான். அதில் மாநிலங்களுக்கு உரிய பங்கு இருக்க வேண்டும். வெறும் மக்கள் தொகையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டால், தென் மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறைந்துவிடும்.
- இதற்கு தீர்வு என்ன?
இதற்கான சரியான தீர்வை கண்டறிய முடியாததால் தான் மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு தொகுதிகள் பிரிப்பதை, 1976ல் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 25 ஆண்டுகள் தள்ளி வைத்தார். 2001ல் வாஜ்பாயி பிரதமராக வந்தார். அப்போதும் பிரச்சனைக்கு தீர்வு என்ன என்று தெரியாததால் மேலும் 25 ஆண்டு காலம் தள்ளி வைத்தார். அதுவும் முடிந்து இப்போது 2026 வந்துவிட்டது.
இப்போதும், மக்களின் பிரதிநிதித்துவத்தை நிர்ணயிக்கப் போகும் மசோதாவைப் பற்றி முன்னதாகவே எதிர்க்கட்சிகளுடன் அமர்ந்து பேசி, ஐயங்களைத் தீர்த்து, எங்க மாநிலத்திற்கும் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறையாமல், பொதுக்கருத்து எட்டப்பட்டிருந்தால் தீர்வு ஏற்பட்டிருக்கும்.
- பிஜேபி கொண்டு வந்த மசோதாவில் என்ன தீர்வு சொல்லப்பட்டுள்ளது?
தொகுதி மறுவரையறை ஆணையம் (டீ-லிமிட்டேஷன் கமிஷன்) ஒன்று அமைக்கப்படும். அதன் பரிந்துரைப்படி தொகுதி மறுவரையறை செய்யப்படும் என்கிறது அந்த மசோதா.
- அது சரியானதுதானா?
இந்த ஆணையத்தில் யார் உறுப்பினர்கள் என்று மசோதாவில் சொல்லப்படவில்லை. ஆனால் இதன் தலைவராக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்வர் இருப்பார். பிரதமர், உள்துறை அமைச்சர் இருவரும் சேர்ந்து நியமித்தவர் அவர். பிஜேபி தேர்தல் நடைமுறை விதிகளுக்கு மாறாக என்ன செய்தாலும் கண்டுகொள்ளாதவர் அவர்.
அடுத்து, இந்த ஆணையம் எவற்றையெல்லாம் ஆய்வு செய்யும் என்ற “ரெஃபரன்ஸ்” தரப்படவில்லை.
- மறுவரையறை செய்யப்பட்டால் தொகுதிகள் எண்ணிக்கை எந்த அளவுக்கு மாறும்?
பாஜக பிடிப்புள்ள வட இந்திய மாநிலங்களான பீகார்(40) உத்தரப்பிரதேசம்(80) மத்திய பிரதேசம்(29) ராஜஸ்தான்(25) ஆகியவற்றில் மொத்தம் 174 தொகுதிகள் உள்ளன. இந்த எண்ணிக்கை 324 ஆக உயரும்.
அதே நேரத்தில் தென் மாநில நாடாளுமன்றத் தொகுதிகள் தமிழ்நாடு(39) கேரளா(20) கர்நாடகா(28) ஆந்திரா(25) தெலுங்கானா(17) புதுச்சேரி(1) ஆக மொத்தம் 130 தொகுதிகள் இருப்பது, 165 ஆக உயரும்.
அதாவது இப்போது மேற்சொன்ன நான்கு வட மாநிலங்களுக்கும், தென்மாநிலங்களுக்கும் கிட்டத்தட்ட சம எண்ணிக்கையில் உள்ள தொகுதிகள், மறுவரையறைக்கு பிறகு தென் மாநிலங்களுக்கு சரிபாதியாகக் குறைந்து விடும்.
- ஒவ்வொரு மாநிலத்திற்கும் 50% உறுப்பினர்கள் அதிகப்படுத்தப்படும் என்று பேசப்படுகிறதே?
ஆனால், அவ்வாறு இந்த மசோதாவில் எதுவும் சொல்லப்படவில்லை.
- அதைச் சேர்ப்பதற்கு தயார் என்று உள்துறை அமைச்சர் சொன்னதன் மீது நம்பிக்கை இல்லையா?
இல்லை. அதனால் தான் நாடாளுமன்றத்தில் அகிலேஷ் யாதவ், ஒரு பெண்ணை பிரதமராக ஆக்குவோம் என்று பாஜக வாக்குறுதி அளித்தாலும் கூட அதை நம்ப முடியாது என்று சொன்னார்.
தொகுதி மறுவரையறை ஆணையம், மக்கள் தொகை விகிதாச்சாரத்தின்படி தான் தொகுதிகளைக் கட்டமைக்கப் போகிறது. தலா 50% தொகுதிகள் உயர்த்தப்படும் என்றால், மக்கள் தொகை கணக்கீட்டுடன் ஏன் அதை இணைக்க வேண்டும்? அதற்கு எதற்காக ஓர் ஆணையம்?
தனது விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள பாஜக எந்த வாக்குறுதியை வேண்டுமானாலும் கொடுக்கும். பின்னர் அதைக் கடந்து போய்விடும். கடந்த 11 ஆண்டுகால ஆட்சியில் பாஜக நடந்து கொண்ட முறை அதை நிரூபிக்கிறது..
- எந்தவகையில் பாஜக தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியது?
ஸ்விஸ் வங்கிலிருந்து கருப்பு பணத்தை கைப்பற்றுவோம் என்றார் மோடி. ஆனால் அந்தப் பணம் கூடிக் கொண்டே போகிறதே தவிர, ஒற்றை ரூபாய் கூட கைப்பற்றப்படவில்லை.
ஆளுக்கு 15 லட்சம் ரூபாய் தருவோம் என்றார் மோடி. ஆனால் அப்படிச் சொல்லவே இல்லை என்று மறுத்தார்கள். அவர் பேசியதன் காணொளிக் காட்சியைக் காண்பித்த பிறகு, அப்போதைய பாஜக தலைவர் நிதின் கட்கரி, அது ஒரு ‘ஜும்லா’, -அதாவது சும்மா சொன்னோம்- என்றார்.
விவசாயிகள் செலவழிப்பதைப் போல உற்பத்தி பொருட்களுக்கு இரண்டு மடங்கு விலை நிர்ணயிப்போம் என்றார்கள். ஆனால், அதை செய்யாததோடு மட்டுமல்ல, விவசாயிகளுக்கு மாநில அரசுகளும் ஊக்கத் தொகை கூட கொடுக்க கூடாது என்று ஆணையிடுகிறது ஒன்றிய அரசு.
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவோம் என்றார் மோடி. ஆனால் வேலை இழப்புகள் தான் ஏற்பட்டன. பக்கோடா போடுவது கூட ஒரு வேலை தானே, என்று அலட்சியமாக பதில் அளித்தார் மோடி.
பெட்ரோல், டீசல், சமையல் வாயு விலையை குறைப்போம் என்றார் மோடி. ஆனால் இரண்டு மடங்குக்கும் அதிகமாக விலை ஏறியதுதான் உண்மை.
குறைந்த அரசு, அதிக அதிகாரம் (Less Government, More Governance) என்றார் மோடி. ஆனால், மாநில அரசுகளை ஒதுக்கி விட்டு, அதிகாரங்கள் அனைத்தையும் ஒன்றிய அரசிடம் குவித்து கொண்டே இருக்கிறார்கள்.
சொன்னதை நிறைவேற்ற மறுத்த ஏராளமான அனுபவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
- எல்லா மாநிலங்களுக்கும் 50% தொகுதியை அதிகரிப்பது என்றால் அது ஏற்புடையதா?
ஒரு வாதத்துக்காக அது உண்மை என்றே வைத்துக் கொண்டாலும் கூட, மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் தமிழ்நாட்டில் இப்போது இருக்கிற 39 தொகுதிகள் என்பது 7.18% ஆகும். 50 சதவீத தொகுதிகள் அதிகரிக்கப்பட்டாலும் 59 தொகுதிகள் வரும். 850 தொகுதிகள் கொண்டதாக புதிய நாடாளுமன்றம் உருவாக்கப்படும் போது, அதில் தமிழ்நாட்டுக்கான 59 தொகுதிகள் என்பது 6.9%தான்.
- பெண்களுக்கு இட ஒதுக்கீடு என்பது இந்த மசோதாவில் எங்கே வருகிறது?
எங்கும் வரவில்லை. உண்மையில் இது பெண்களுக்கான இட ஒதுக்கீடு அல்ல; அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பிஜேபி வெற்றி பெறுவதற்கான அதிகார ஒதுக்கீடு தான் இது.
- அவ்வாறு எப்படிச் சொல்ல முடியும்?
கடந்த தேர்தலில் 400 தொகுதிகளை வெல்வோம் என்றார் மோடி. தனிப்பெரும்பான்மை பெற ஒரு கட்சி, 272 இடங்களைப் பெற வேண்டும். ஆனால் 2019ல் 303 இடங்களில் வெற்றி பெற்ற பிஜேபி, 2024ல் 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, தனிப்பெரும்பன்மையை இழந்தது. அதன் விளைவாக சந்திரபாபு நாயுடு, நித்திஷ் குமார் ஆகியோரின் கட்சிகளோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்து இருக்கிறது. 2029 தேர்தலில், தொகுதிகள் இன்னும் குறைந்து ஆட்சியை இழந்து விடாமல் தடுக்க வேண்டுமானால், பிஜேபிக்கு அதிக செல்வாக்கு உள்ள மாநிலங்களில், அதிக எண்ணிக்கையில் நாடாளுமன்றத் தொகுதிகளை கொண்டு வர வேண்டும் என்பதுதான் இந்த தொகுதி மறு வரையறை மசோதாவின் நோக்கம்.
- 272 இடங்களை பெறுவது மட்டும்தான் இதன் நோக்கமா?
இல்லை, இன்னும் அதிகம். நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களை, அதாவது 362 தொகுதிகளில், வெற்றி பெற்றால் தான், அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வர முடியும். எனவே அத்தனை தொகுதிகளை வெல்ல வேண்டும் என்பதுதான் பாஜகவின் நோக்கம்.
- எதற்காக அரசியல் சாசனத்தை திருத்த வேண்டும் என்று பாஜக விரும்புகிறது?
எல்லோரும் சமம் என்பது தான் இந்திய அரசியல் சாசனத்தின் உயிர் நாடி. ஆனால் அது ஒரு மேற்கத்திய ஏற்பாடு என்றும், இந்தியாவின் அரசியல் சாசனமாக மனுதர்மத்தை கொண்டு வர வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. இதனை வெளிப்படையாகவே பாஜக தலைவர் அனந்த்குமார் ஹெக்டே கூறியிருக்கிறார்.
- பிஜேபியைச் சேர்ந்த யாரோ ஒருவர் சொன்னதையே, பாஜக கட்சியின் நோக்கம் என்று சொல்ல முடியுமா?
மதச்சார்பின்மை, சோசியலிசம் ஆகிய சொற்களை அரசியல் சாசனத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் கூறுகிறது. இது ஒரு ‘போலி மதச்சார்பின்மை’ என்று மோடி பல தடவை பேசியிருக்கிறார். அதேபோல ‘ திருப்திப்படுத்தும் அரசியல்’ (appeasement politics) -அதாவது சிறுபான்மையினருக்கு அதிக இடம் தருவது- என்று மோடியின் அமித்ஷாவும் பலமுறை பேசியிருக்கிறார்கள்.
- இந்த மசோதாவை எதிர்த்தவர்களை விட ஆதரித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தானே அதிகம்? ஏன் அது தோற்றுப் போனது?
மசோதா வாக்கெடுப்பின்போது 528 உறுப்பினர்கள் அவையில் இருந்தார்கள். ஆதரித்து 298 பேரும் எதிர்த்து 230 பேரும் வாக்களித்தார்கள். ஆனால் மூன்றில் ஒரு பங்கு வேண்டும் என்றால், 352 வாக்குகள் பெற வேண்டும். அதில் 54 வாக்குகள் குறைவாகப் பெற்றதால்தான் மசோதா தோற்றுப் போனது.
- எந்த நம்பிக்கையில் இந்த மசோதாவை பிஜேபி தாக்கல் செய்தது?
எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக மசோதாவை எதிர்த்து வாக்களிக்க மாட்டார்கள். அதிலும் வட இந்தியாவில் உள்ள கட்சிகளின் உறுப்பினர்கள், தங்கள் மாநிலத்திற்கு அதிக நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை வருவதால் எதிர்க்க மாட்டார்கள் என்று பிஜேபி கருதி இருக்கும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.
- மேற்கு வங்கத்திலும் தமிழ்நாட்டிலும் தேர்தல் வாக்கெடுப்பு முடியாத நேரத்தில், மசோதாவை கொண்டு வரும் நோக்கம் என்ன?
தேர்தல் நடப்பதால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வர மாட்டார்கள் என்று கூட நினைத்து இருக்கலாம். மேலும் இந்த மசோதா தோற்றால், பெண்கள் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் என்று பிரச்சாரம் செய்யலாம்.
- அது எடுபடுமா?
தமிழ்நாட்டில் பெரிய விளைவுகளை ஏற்படுத்த முடியாது. ஆனால் மேற்கு வங்காளத்தில், மமதா பேனர்ஜிக்கு எதிராக, பெண்களின் எதிரி என்று வலுவாக பிரச்சாரம் செய்தால், பிஜேபிக்கு ஆதரவாக களத்தை மாற்ற முடியும்.
- எந்தெந்த வட மாநில கட்சிகள் இதனை எதிர்த்தன?
குறிப்பாக அகிலேஷ் யாதவின் ‘சமாஜ்வாதி கட்சி’, தேஜஸ்வி யாதவின் ‘ராஷ்டிரிய ஜனதா தளம்’, கெஜ்ரிவாலின் ‘ஆம் ஆத்மி’ ஆகியவற்றின் உறுப்பினர்கள் முழுமையாக எதிர்த்து வாக்களித்தனர். மமதா பானர்ஜியின் ‘திரிணாமூல் காங்கிரஸ்’ கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர்.
- பெண்களுக்கான இட ஒதுக்கீடு தடுக்கப்பட்டு விட்டதாக பாஜக பரப்புரை செய்வதை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும்?
ஏற்கனவே சட்டமாக்கப்பட்டு விட்ட பெண்கள் இடஒதுக்கீட்டை மறைவாகக் கொண்டு, இந்தியாவின் அரசியல் வரைபடத்தை மாற்ற முயன்ற மோடி ஆட்சிக்கு தீர்மானமான பின்னடைவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பாஜகவும் பிரதமர் மோடியும் தொடர்ந்து பெண்கள் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்த முயன்று வந்துள்ளனர். முதலில் அதை மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறையுடன் இணைத்தனர்; தற்போது அதையே ஒரு மறைவாக பயன்படுத்தி கூட்டாட்சி விரோத நடவடிக்கையை முன்னெடுத்தனர். இது அவர்களின் பெண்கள் எதிர்ப்பு மனப்பான்மையையும், உண்மையான அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய விரும்பாததையும் வெளிப்படுத்துகின்றன. இந்தியப் பெண்கள், பாஜகவின் இந்த ஏமாற்று அரசியலை புரிந்து கொள்ள வேண்டும்.
- மசோதா தோற்றதால் விளைந்துள்ள நன்மைகள் எவை?
- முதலில் இந்தியாவின் கூட்டாட்சி முறைமை பாதுகாக்கப்பட்டுள்ளது.
- இந்திய ஆட்சி அதிகாரத்தில், தென் மாநிலங்களுக்கு எந்த பங்கும் இல்லாமல் ஒதுக்கி வைக்கும் சதி முறியடிக்கப்பட்டுள்ளது.
- மக்கள் தொகை கட்டுப்பாடு என்பது தண்டனைக்குரியது அல்ல என்பது நிரூபிக்கப்பட்டு, மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்கு ஊக்கமளிக்கும் சிந்தனை தொடர்கிறது
- குறிப்பிட்ட சில மாநிலங்கள் மட்டுமே அதிக உறுப்பினர்களை அனுப்ப முடியும், அதன் மூலம் முழு அதிகாரத்தையும் ஒன்றிய அரசிடம் குவிக்க முடியும் என்ற பெரும் தீங்கு தடுக்கப்பட்டுள்ளது.
- அரசியலமைப்பை பலவீனப்படுத்த நாடாளுமன்றத்தை எளிதாக பயன்படுத்த முடியாது என்று, வலதுசாரி பிளவு சக்திகளுக்கு வலுவான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- எல்லாவற்றுக்கும் மேலாக, மதம், சாதிக்கேற்ப நீதியை மாற்றுகிற, சனாதன, வர்ணாசிரம, மனுஸ்மிருதி ஆட்சி செலுத்தும் பேரபாயம் நீங்கி, எல்லோரும் சட்டத்திற்கு முன்பு சமம் என்று முழங்கும் இந்திய அரசியல் சாசனம் காப்பாற்றப்பட்டுள்ளது.
