
உற்பத்தி வளங்களைக் கட்டுப்படுத்தும் உடைமை வர்க்கத்துக்கும், தமது உழைப்பை விற்கும் மக்களுக்கும் இடையே இயல்பான முரண்பாடு உள்ளது.
இந்த முரண்பாடு நேரடி மோதலாக வெளிப்படாமல், அரசியல் அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் போது, தேர்தல் என்ற வடிவத்தை எடுக்கிறது.
கேரளத்தில் 1957ம் ஆண்டு தேர்தலில், உலகத்திலேயே முதல் முறையாக ஆயுதமேந்திய புரட்சி இல்லாமல், வாக்கெடுப்பின் மூலமே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வர முடிந்தது.
இன்றைய சூழலில் தேர்தல் என்பது, சமநிலை வாய்ந்த களம் அல்ல. பணத்தின் ஆதிக்கம், ஊடகங்களின் ஆதிக்கம், நிர்வாக அதிகாரத்தின் பயன்பாடு போன்ற காரணிகள் தேர்தலைப் பாதிக்கின்றன.
ஒரு நாடு அல்லது மாநிலம் எவ்வளவு உற்பத்தி செய்கிறது என்பதுதான் அதன் பொருளாதார நிலையின் அடிப்படையாகிறது.
அம்பானி, அதானி ஆகிய இந்திய முதலாளிகள், உலகப் பெரும் செல்வந்தர்கள் ஆகிவிட்டனர். ஆனால் அந்த உற்பத்திக்கான உழைப்பைச் செலுத்திய தொழிலாளர்கள், விவசாயிகள், உள்ளிட்ட உழைக்கும் மக்களோ, சமூகத்தின் அடித்தட்டில், ஏழைகளாக இருக்கிறார்கள்.
உணவு, உடை, இருப்பிடம், கல்வி, மருத்துவம், ஆகிய அடிப்படைத் தேவைகளே மிகப் பெரும் பிரச்சனைகளாக மாறுகின்றன. இவற்றைப் பெற அவர்களுக்கு சகல உரிமைகளும் தகுதியும் உண்டு.
இந்த சிக்கலை தீர்ப்பதற்கு, சமத்துவமும் சமூக நீதியும் இங்கு நிலைபெற்றாக வேண்டும். அதற்கு ஆதரவாக இருப்பவர் யார்? அதனை மறுப்பவர் யார்? என்று பேசுவது தான் அரசியல். இந்தத் தெளிவு மக்களுக்கு இருந்தால் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் தடுமாற மாட்டார்கள்.
தற்போதைய தேர்தல் சூழலில், “அரசியல்” குறைந்து வெறும் உத்திகளே (ஸ்ட்ராட்டஜி) மேலோங்குகின்றன. எவ்வாறு தேர்தல் பணியாற்ற வேண்டும் என்பதையே மக்களோடு தொடர்பில்லாத ‘தேர்தல் உத்தியாளர்கள்’ நிர்ணயிக்கிறார்கள். அரசியல் விவாதம் ஆழமற்றதாக மாற்றப்படுகிறது.
சிறுபான்மையினரால் நீங்கள் ஆபத்தில் இருக்கிறீர்கள் என்ற பொய் அச்சுறுத்தலை திரும்பத் திரும்பச் சொல்லி மதவெறியினால் பெரும்பான்மையினரின் வாக்குகளை திரட்டுவது,
தேசத்தின் நலன், வளர்ச்சி, நிலைத்தன்மை என்று முதலாளித்துவ நலன்களை மக்களுக்கான பிரச்சினைகளாக முன்வைப்பது,
சாதியின் பேரால் மற்ற சாதிக்காரர்கள் மீது வெறுப்பூட்டி, சாதியை ஒன்று திரட்டி வாக்குகளைப் பெற சாதி வெறியூட்டுவது,
வேற்று மொழிக்காரர்களால் உனக்கு அழிவு ஏற்பட போகிறது என்று அடையாளத்தால் அச்சுறுத்தி இனத்தின் பெயரால் வாக்குகளைத் திரட்டுவது,
திரையரங்கப் பார்வையாளர்களாக மக்களை மாற்றி, ஒரு தனிநபர் மீது பிம்பக்கட்டுமானம் செய்து, எந்த பிரச்சனையையுமே முன் வைக்காமல் இவர் வந்தால் சகல பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்ற மாயையைப் புகுத்தி அதன் மூலம் வாக்குகளை திரட்டுவது
-என, தேர்தல் களம் குப்பைகளால் நிரப்பப்படுகிறது. உண்மை, பொய், அரை உண்மை ஆகியவை கலந்த ஒரு தகவல் வெள்ளம் உருவாக்கப்படுகிறது. இதில் தெளிவு மங்குகிறது; மக்கள் உறுதியான அரசியல் தீர்மானம் எடுக்க முடியாமல் போகிறது.
இந்திய அளவிலேயே தேர்தல் அரசியல், வர்க்க அரசியலை மங்கலாக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.
தொழிலாளர் உரிமைகள் பறிப்பு, ஒழுங்கற்ற வேலை வாய்ப்பு, விவசாய நெருக்கடி, சிறு உற்பத்தியாளர்களின் வீழ்ச்சி, விலைவாசி உயர்வு ஆகியவை அன்றாட வாழ்க்கையை பாதித்துக்கொண்டே இருக்கின்றன. தேர்தல் மேடையில் பேசப்படாவிட்டாலும், அது ஒரு அடிநிலை அரசியல் உண்மை.
இந்த தேர்தல் அர்த்தமற்றது என்று விலகி விடுவதை விட பெரும் தவறு வேறொன்றில்லை.
“மற்றொரு பாதை சாத்தியம்” என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும். ஒரே நாளில் உண்மை வென்று விடாது. தொடர்ந்து பல வடிவங்களில் நம்பிக்கையுடன் சொல்ல வேண்டும். இந்த பரப்புரைகளில் அறிவியல் வளர்ச்சியையும் பயன்படுத்த வேண்டும்.
பெரிய கோட்பாட்டு மொழியை மட்டும் பயன்படுத்தாமல், மக்களின் தினசரி அனுபவத்துடன் இணைந்த எளிய, தெளிவான அரசியல் மொழி மூலம் உண்மையைச் சொல்ல வேண்டும்.
தமிழ்நாடு உண்மையில் வளம் பெற, சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறுவதற்கான 302 அம்ச செயல்திட்டத்தை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு, தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
அதனைப் படித்து புரிந்து, எளிய வகையில் அனைத்து தொகுதிகளிலும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பெருவெற்றி பெறுவதற்கு பணியாற்ற வேண்டும்.
