
தேர்தல் என்பது வாக்குப்பதிவு மட்டுமல்ல. அது ஜனநாயகத்தின் உயிர் நாடி.
அதிகாரத்தை கைப்பற்றியே தீர வேண்டும் என்ற பேராசை உந்துதலில், தேர்தலின் போது போட்டியிடும் அரசியல் கட்சிகள் பணபலத்தையும், ஆள்பலத்தையும் பயன்படுத்தலாம்.
போட்டியிடும் கட்சிகள், வேட்பாளர்கள் இடையே ஒரு சமத் தன்மையை உருவாக்க முடியாவிட்டால், தேர்தல் என்பது பொருள் இழந்து போய்விடும்; மக்களின் மெய்யான விருப்பம் நிறைவேறாமல் தடுக்கப்படும்.
எனவேதான் தேர்தலை நடத்துகிற இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பெரும் அதிகாரத்தை அரசியலமைப்புச் சட்டத்தின் 324 வது பிரிவு வழங்கியிருக்கிறது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 13 சிசி பிரிவு, தேர்தல் பணியில் உள்ள அதிகாரிகளை மாற்றுவதற்கும் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் தருகிறது.
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர் அல்லது பணியாளர்கள், பாரபட்சமாக நடந்து கொண்டாலோ, அவ்வாறு சந்தேகம் எழுவதற்கு தக்க ஆதாரம் இருந்தாலோ, அவர்களை பணியிட மாற்றம் செய்யலாம்.
தமிழ்நாட்டில் தலைமைச் செயலாளர் திரு. முருகானந்தம் அவர்களை, தேர்தல் ஆணையம் பணி மாற்றம் செய்திருக்கிறது. காவல்துறைத் தலைவரையும் மாற்றி விட்டது. மேலும் பல நிர்வாகத்துறை, காவல்துறை அதிகாரிகள் மாற்றப்பட்டு இருக்கிறார்கள்.
தலைமை செயலாளராக இருந்த திரு முருகானந்தம், தமிழ்நாட்டில் திமுக ஆட்சி செய்யும் போதும், அதிமுக ஆட்சி செய்த காலத்திலும், நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட உயர் பொறுப்புகளில், தொடர்ந்து பணியாற்றி வந்தார். இது ஒன்றே அவரது சார்பு நிலையற்ற திறமையான பணியை உறுதிப்படுத்தும்.
இதுவரை அவர் ஒரு அரசியல் கட்சி சார்ந்த நிலை எடுத்ததாகவோ அல்லது பாரபட்சம் காட்டியதாகவோ யாரும் குற்றம் சாட்டியது இல்லை. இப்போது அவரை மாற்றுவதற்கான அவசியம் தேர்தல் ஆணையத்துக்கு எங்கிருந்து வந்தது?
நடுநிலையாக, பாரபட்சமற்றுச் செயல்படுவதே, இன்றைய தேர்தல் ஆணையத்தின் நோக்கங்களுக்குத் தடையாக இருக்கிறதோ?
பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவரும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் சேர்ந்து இந்தியத் தேர்தல் தலைமை ஆணையரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதற்கு எதிராக, இந்திய பிரதமரும் அவரால் நியமிக்கப்படும் மற்றொரு அமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவரும் சேர்ந்து தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மோடி அரசு சட்டம் கொண்டு வந்ததன் உள்நோக்கம் என்ன என்பது ஒவ்வொரு முறையும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் என்ன கருத்து சொன்னாலும் அதை ஒதுக்கி வைத்து விட்டு, பாரதிய ஜனதா தேர்ந்தெடுப்பவரை தேர்தல் ஆணையராக நியமிக்கும் அதிகாரம் வந்த பிறகு, தேர்தல் ஆணையம் திசைமாறிச் சென்று கொண்டிருக்கிறது.
மக்களை மதத்தால் பிளவுபடுத்துகிற, பாஜகவின் ஒற்றைப் பரிமாண அரசியலை நேரடியாக எதிர்க்கும் கட்சிகளில் ஒன்றான மமதா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ், மேற்குவங்க மாநிலத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது.
அங்கு தேர்தல் ஆணையம் 483 நிர்வாக அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளை மாற்றி இருக்கிறது.
மேற்குவங்கத் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், கல்கத்தா மாநகர காவல் ஆணையாளர், ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் பணி மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில், தனது அதிகாரத்தின் மூலம் தலைமைச் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை மாற்றும் தேர்தல் ஆணையம், பாஜக ஆளும் மாநிலங்களில் மாவட்ட அளவில் மிகச் சில மாற்றங்களைச் செய்வதோடு நிறுத்திக் கொள்கிறது.
பணபலம், ஆள் பலம், அதிகார பலம் ஆகியவை தேர்தலில் செல்வாக்கு செலுத்தக் கூடாது என்பதற்காக தேர்தல் ஆணையத்துக்கு முழுக் கட்டுப்பாட்டையும் கொடுத்தால், தேர்தல் ஆணையமே பாரபட்சமாக நடக்கிறது. வேலியே பயிரை மேய்ந்ததால், விளைச்சல் எங்கு வரும்?
டி.என்.சேஷன் – எதிர் – இந்திய ஒன்றியம் என்னும் வழக்கில், தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அந்த அதிகாரம் எந்த கட்டுப்பாடுகளும் அற்றது அல்ல என்று உச்ச நீதிமன்றம் தெளிவாகத் தீர்ப்பளித்தது.
பாஜக – ஆர்எஸ்எஸ் ஆட்சியில், ஒன்றிய மாநில அரசுகள், ஒன்றுக்கொன்று ஒத்துழைக்கும் கூட்டாட்சி முறைமை என்பது படிப்படியாக அகற்றப்பட்டு, ‘வலுக்கட்டாயக் கூட்டாட்சி’ என்ற புதிய முறை புகுத்தப்பட்டு வருகிறது.
தேர்தல் ஆணையம், அதிகார துஷ்பிரயோகங்களை அடுக்கடுக்காகச் செய்கிறது. கட்டுப்பாடற்ற அதிகாரம் கொண்ட எந்த ஒரு அமைப்பும், ஜனநாயகத்தைப் பாதுகாக்காது; மாறாக ஒழித்துக் கட்டும்.
