
அண்மைக் காலமாக, அதிமுக, பாஜக, நாதக, தவெகா இத்தியாதி கட்சிகளின் தலைவர்கள் பேச்சுக்களும், அவர்களால் வளர்த்தெடுக்கப்படும் சமூக ஊடகங்களும், தமிழ்நாட்டை இருள் சூழ்ந்து விட்டதாக ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.
ஒரு மாநிலம் உண்மையில் “இருள் சூழ்ந்ததா?” என்பதை தரவுகளைக் கொண்டே மதிப்பிட முடியும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்:
தமிழ்நாட்டில் மட்டும் அல்ல, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நடக்கின்றன.
தமிழ்நாட்டின் நிலையை மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
ஒன்றிய அரசுக்கு சொந்தமான, தேசிய குற்ற ஆவண காப்பகம் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளை பற்றி மாநில வாரியான பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.
அதன் முன் வரிசையில், உத்தரப்பிரதேசம் (66,381 குற்றங்கள்) மகாராஷ்டிரா (47,101), ராஜஸ்தான் (45,450), மேற்குவங்கம் (34,691), மத்திய பிரதேசம் (32,342) ஆகிய மாநிலங்கள் உள்ளன. தமிழ்நாடு 8,943 குற்றங்களோடு வரிசையின் கடைசியில் உள்ளது.
ஒரு சில கொடூர சம்பவங்களை வைத்து, “மாநிலமே பெண்களுக்கு பாதுகாப்பற்றது” என்று பொதுமைப்படுத்துவது, அரசியல் நோக்கமுள்ள மோசடி.
போதைப் பொருள், ஒரு மாநிலத்தின் பிரச்சனை மட்டுமே அல்ல. அது உலகளாவிய, தேசம் தழுவிய பிரச்சனை. “மாநிலமே போதைப் பொருளுக்கு இரையாகிவிட்டது” என்று சொல்வது, நடவடிக்கை எடுக்கப்படுவதை மறைக்கும் பரப்புரை.
இது பற்றியும் ஒன்றிய அரசின் ‘சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம்’ ஒரு ஆய்வை வெளியிட்டுள்ளது..
கஞ்சா பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, பஞ்சாப் 12.55%, சிக்கிம் 10.94%, டெல்லி 8.12%, உத்தரப்பிரதேசம் 7.36%, அரியானா 6.43%, ஒடிசா 5.24% பேர். தமிழ்நாடு 0.16% பயன்பாட்டுடன் கடைசி பட்டியலில் உள்ளது.
தமிழ்நாட்டில்தான் அதிகம் பேர் மது குடிக்கிறார்கள் என்ற பரப்புரையும் உண்மையல்ல. மது குடிப்பவர்களின் சதவீதம், கோவா 59.1%, அருணாச்சலப் பிரதேசம் 56.6%, தெலுங்கானா 50%, ஜார்க்கண்ட் 40.4%, ஒடிசா 38.4%, சட்டீஸ்கர் 35.9% என்று ஒன்றிய அரசின் புள்ளி விவரங்களே வெளிப்படுத்துகின்றன.
பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக வட இந்திய தொழிலாளர்கள், கொடூரமாக தாக்கப்படுவதாகவும் கொலை செய்யப்படுவதாகவும், பெரும் பிரச்சாரம் இந்தியா முழுமையும் நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மாநிலத்தைச் சார்ந்திராத பிற மாநிலத்தவர் மீது ஓராண்டில் நடத்தப்படும் தாக்குதல்கள், குற்றங்கள் பற்றிய புள்ளி விவரத்தையும் ஒன்றிய அரசின் தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டு இருக்கிறது.
அதன்படி உத்தரப்பிரதேசத்தில் 1200 மகாராஷ்டிராவில் 950 மணிப்பூரில் 800 குஜராத்தில் 700 பீகாரில் 650 மத்திய பிரதேசத்தில் 600 ராஜஸ்தானில் 550 டெல்லியில் 450 பேர் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர். ஆனால் தமிழ்நாட்டிலோ 350 பேர் மீது தாக்குதல் நடந்திருக்கிறது.
அதுவும் கூட அவர்கள் பிற மாநிலத்தவர் என்றல்லாமல் வேறு காரணங்களுக்காகவும் நடந்துள்ளன.
தமிழ்நாடு ஒரு கோடிக்கும் அதிகமான வெளிமாநிலத் தொழிலாளர்கள் வாழும் மாநிலம்.
கட்டிடம், தொழிற்சாலை, சேவைத் துறை, அனைத்திலும் அவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். தமது மாநிலம் அளிக்காத பாதுகாப்பை, வசதிகளை, ஊதியத்தை தமிழ்நாடு தமக்கு அளிப்பதாக அந்தப் பிற மாநில தொழிலாளர்களே வெளிப்படையாகப் பேசுகின்றனர்.
அவற்றை வைத்து, தமிழ்நாடு முழுவதையும் “விரோத மாநிலம்” என காட்டுவது, மொழிப் பிளவு, இனப் பிளவை உருவாக்குவது ஆபத்தான அரசியல். தமிழ்நாடு, வெளிமாநிலத் தொழிலாளர்களின் உழைப்பால் இயங்கும் மாநிலம்.
வெள்ளமென இந்தப் பொய்கள் பரப்பப்படுவதன் நோக்கம், “எல்லாமே மோசம்” என்ற மனநிலையை உருவாக்குவதுதான்.
தமிழ்நாடு இன்னும் முன்னேற வேண்டும் தான். ஆனால் இதைவிட மோசமாக தாம் ஆளும் மாநிலங்களை வைத்திருக்கும் கட்சிகளிடம் ஆட்சியை தந்தால் நிலைமை என்ன ஆகும்?
அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருப்பது உண்மையே. அவற்றை நடத்துபவர்கள் பாஜக, அதிமுக அல்ல. ஒவ்வொரு போராட்டத் தலைமையிலும் கம்யூனிஸ்ட்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
நெல் எது, பதர் எது எனப் பிரித்துப் பார்க்க தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும்.