கட்டுரைகள்

யாரை யாரோடு ஒப்பிடுகிறாய்?! தினமலருக்கு பதில்

டி.எம்.மூர்த்தி

அரசியல் சாசனத்தை அப்பால் வைத்து விட்டு, மனுவாதத் தீர்ப்பு எழுதும் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களைப் பதவி விலக்கம் செய்ய வலியுறுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 120 பேர் கையெழுத்திட்டுக் கோரியதை கிண்டலடித்து, மேல் சாதி விஷம் கக்கி, தினமலர் ஒரு கட்டுரை வெளியிட்டு இருக்கிறது.

அதில், உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய கிருஷ்ணய்யர், கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அமைச்சரவையில் அமைச்சராக பணிபுரிந்தவர்.

அண்மையில் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், இந்திய குடியரசு கட்சியில் பணிபுரிந்தவர்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளான ஆர். சந்துரு, அரி பரந்தாமன் ஆகியோர் கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தில் ஊறியவர்கள்.

அப்படி இருக்கும்போது ஆன்மீகவாதியான சுவாமிநாதன், நீதிபதியாக செயலாற்றுவது தவறு என்று எப்படிச் சொல்லலாம் என்று தினமலர் பொரிந்து தள்ளுகிறது.

நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண ஐயர் அவர்களைப் பற்றி, நாம் விளக்க இடம் தராமல், தினமலரே அவரது மதிப்புமிக்க பணியைப் பாராட்டியிருக்கிறது

“கம்யூனிச சித்தாந்தத்தில் ஊறியவர் என்று சொல்லப்பட்ட கிருஷ்ணய்யர், ஒரு நீதிபதியால் சமூகத்தில் எப்படிப்பட்ட மாற்றங்களை உண்டாக்க முடியும் என்று நிரூபித்து காட்டினார். இன்று வரை சட்ட மாணவர்களின் கனவு நாயகன் அவர்” என்கிறது தினமலர்.

நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் இந்திய நீதித்துறை வரலாற்றில் ஒரு சகாப்தம். சட்டத்தை வெறும் காகித வடிவில் பார்க்காமல், அதை சாமானிய மக்களுக்கான சமூக மாற்றக் கருவியாக மாற்றியவர்ர.

பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே நீதிமன்றத்தை அணுக முடியும் என்ற நிலையை மாற்றி, சமூகத்தின் மீது அக்கறையுள்ள எவரும் பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதிமன்றத்தை அணுகலாம் என்ற புரட்சிகரமான மாற்றத்தை நீதிபதி பி.என். பகவதியுடன் இணைந்து ‘பொதுநல வழக்கு’ முறைமையை உருவாக்கியவர்.

சிறைக்கைதிகளுக்கும் அடிப்படை மனித உரிமைகள் உண்டு என்பதை உறுதிப்படுத்தியவர். கைவிலங்கு போடுவது மனிதத் தன்மையற்றது, சிறை என்பது சித்திரவதைக்கூடமாக இருக்கக்கூடாது, மறுவாழ்வு மையமாக இருக்க வேண்டும் என்றும் பல தீர்ப்புகளை வழங்கியவர்.

​மரண தண்டனையை கடுமையாக எதிர்த்தவர் கிருஷ்ணய்யர். “அரிதினும் அரிதான” வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோட்பாட்டை வலுப்படுத்தியவர்.

​சட்டம் என்பது மேல்தட்டு மக்களுக்கானது மட்டுமல்ல, அது விளிம்புநிலை மக்களுக்கும், ஏழைகளுக்கும், தொழிலாளர்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதற்காக இலவச சட்ட உதவி திட்டங்களை முன்னெடுத்தவர்.

இந்திரா காந்தி தேர்தல் வழக்கு, மேனகா காந்தி வழக்கு உள்ளிட்டவற்றில், அதிகாரங்களுக்கு அடிபணியாமல் அரசியல் சாசனத்தை இறுகப்பற்றி நின்ற மேன்மையான மனிதர் வி.ஆர்.கிருஷ்ணய்யர்.

ஜி.ஆர்.சுவாமிநாதனையும், கிருஷ்ணய்யரையும் சமமாகப் பார்க்க முடியுமா?

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற நாளில், நான் ஓய்வு பெற்ற பின்பு எந்த அரசு பதவியையும் வகிக்க மாட்டேன் என்று பகிரங்கமாக அறிவித்தார் பி ஆர் கவாய்.

போலி என்கவுண்டர் வழக்கில், குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த அமித் ஷாவை, அந்தப் பட்டியலில் இருந்து விடுவித்த உச்சநீதிமன்ற நீதிபதி, ஓய்வு பெற்றதும் கேரளா ஆளுநராக்கப்பட்டார்.

பாபர் மசூதியை இடித்தது தவறு, அந்த இடத்தில் ராமர் கோவிலில் இருந்ததற்கான சான்றுகள் எதுவும் இல்லை, ஆகவே எடுத்தவர்களுக்கு அந்த இடம் சொந்தம் என்ற வினோதத் தீர்ப்பு எழுதிய நீதிபதி, ஓய்வு பெற்றதும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக்கப்பட்டார்.

ஓய்வு பெற்றதும் நேஷனல் கிரீன் ட்ரிப்யூனல் தலைவராக நியமிக்கப்பட்ட நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல், தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி அருண்குமார் மிஸ்ரா என இந்த பட்டியல் நீள்கிறது.

ஓய்வு பெற்ற பின்பு எந்த அரசு பதவியும் வகிக்க மாட்டேன் என்று தலைமை நீதிபதி பி ஆர் கவாய் கூறியதற்கு, நான் நீதிபதியாக இருக்கும்போது ஒன்றிய ஆளுங்கட்சியின் உத்தரவுகளுக்கு அடிபணிந்து தீர்ப்பு எழுத மாட்டேன் என்று தான் பொருள்.

அதனால் தான் அவர் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி இருக்கையில் அமர்ந்திருக்கும் போதே, செருப்பை விட்டெறிந்தார் ஒரு சனாதன வக்கீல். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது இக்கொடுமை இழைக்கப்பட்டிருக்குமானால், இந்துத்துவவாதிகள் எப்படி ரவுண்டு கட்டி அடித்திருப்பார்கள்!!

ஆனால் பி.ஆர்.கவாய், அதை லட்சியமே செய்யாது வழக்கு விசாரணையை நடத்திக் கொண்டிருந்தார். அவர் மீது செருப்பை எறிந்தவன் மீது ஒரு வழக்கு கூட போடாமல் வெளியே விட்டது பிஜேபி அரசின் காவல்துறை!!

அந்த பி.ஆர்.கவாயையா, ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு சமமாக பார்க்க முடியும்?

இளம் வயதில் மார்க்சிய, இடதுசாரி சிந்தனையுடன் தொழிற்சங்க வழக்கறிஞராக செயல்பட்டு நீதிபதியானவர் கே.சந்துரு. போலீஸ் வன்முறை, தவறான கைது, என்கவுண்டர், சாதிய ஒடுக்குமுறை வழக்குகளில் தைரியமான தீர்ப்புகளை வழங்கியவர். அதிகாரத்துக்கு எதிராகக் கேள்வி எழுப்பியவர். மனித உரிமை, சமூக நீதி, ஜனநாயக மதிப்புகள் மீது உறுதியான நிலை எடுத்தவர். அவரது தீர்ப்புகளில் இடதுசாரி மனிதநேய நோக்கு தெளிவாகத் தெரியும்.

நீதிபதிகள் ஓய்வு பெற்றதும், அவர்களை கௌரவிக்கும் விதமாக அலுவலக காரிலேயே வீடு வரை கொண்டு சென்று விடுவது வழக்கம். ஆனால், நீதிபதி சந்துரு தனது பதவிக்காலம் முடிந்த அதே நிமிடமே, தனக்கு வழங்கப்பட்ட அலுவலக காரையும், ஓட்டுநரையும், தனக்கு வழங்கப்பட்ட லேப்டாப், கைபேசி மற்றும் இதர அரசு உடைமைகளையும் உடனடியாகத் திருப்பித் தந்தார். எந்த ஆடம்பரமும் இன்றி, ஒரு சாதாரண மனிதராக மின்சார ரயிலில் ஏறி தனது வீட்டுக்குச் சென்றார்.

அவரையா, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுடன் ஒப்பிட முடியும்?

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களின் அரசியல் பின்னணி தெளிவானது.

அரசு வழக்கறிஞராகப் பணியாற்றி, பின்னர் நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்தவர்.

அண்மைத் தீர்ப்புகளில், வரலாறு, சமூக அறிவியல், அரசியல் கருத்துகளை வெளியிடுகிறார்.

சில தீர்ப்புகள் பெரும்பான்மை வாதத்துக்கு இடமளிக்கின்றன. சில தீர்ப்புகளில் தனிப்பட்ட கருத்துகள் சட்ட எல்லையை மீறுகின்றன.

கிருஷ்ணய்யர், கவாய், சந்துரு ஆகிய நீதிபதிகளை போல சமூக ஒடுக்குமுறைகளை சட்ட விரோதமானவையாக, மனித உரிமைக்கு எதிரானவையாக ஜி.ஆர். சுவாமிநாதன் பார்க்கவில்லை. மாறாக அதனை ஒரு பாரம்பரிய ஒழுங்கமைப்பாக பார்ப்பதோடு, அதற்கு சட்ட அங்கீகாரமும் வழங்கி விடுகிறார்.

பிராமணர்கள் சாப்பிட்டு எழுந்த பின்பு, அந்த எச்சில் இலைகள் மீது, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் படுத்துப் புரண்டால் அவர்களுக்கு நல்லது நடக்கும் என்ற மூட நம்பிக்கைச் செயல் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கி தீர்ப்பு எழுத ஜி.ஆர்.சுவாமிநாதனால் மட்டுமே முடியும்!

திருப்பரங்குன்றம் வழக்கில், மலையுச்சி மீது இருப்பது தீபத்தூண்தானா என்றறிய, யாரையும் அழைக்காமல் தானே நேரடியாக சென்று பார்த்துவிட்டு முடிவு செய்தவர். அவரே தொல்லியல் ஆய்வாளர், அவரே நில அளவையாளர், அவரே சங்கத்தமிழ் ஆய்வறிஞர் என்பது மட்டுமின்றி, மனுதாரரே சொல்லாத பல விஷயங்களை எடுத்துரைத்து மனுதாரரின் வழக்கறிஞராகவும் இருந்து அளிக்கப்பட்ட தீர்ப்பு அது.

நாளை கார்த்திகை தீபம் என்றால் இன்று தீர்ப்பு எழுதி, தீபம் ஏற்றப்படும் நேரம் வரும் முன்பே நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் எடுத்து, தீபம் ஏற்றும் நேரம் ஆறு மணி என்றால் ஆறு மணி ஐந்து நிமிடத்தில் வழக்கை எடுத்து தீர்ப்பு எழுதிய அதிவேக நீதிபதி.

ஓய்வு பெற்ற பின்பு, அரி பரந்தாமன், சந்துரு போன்ற முன்னாள் நீதிபதிகள் எப்போதும் துணிச்சலாக மக்கள் பிரச்சனைகளில் தமது கருத்தை உரக்கக் கூறி வருகின்றனர். நீதிபதியாக இருந்த போது எந்த மனித நேயம் அவர்களை வழிநடத்தியதோ, அதே மனிதநேயம் தான் இப்போதும் அவர்களை வழி நடத்துகிறது.

‘ஓய்வுபெற்ற பின் உண்மை முகத்தை வெளிக்காட்டும் இந்த கனவான்கள் வாசித்த தீர்ப்புகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் மனுவுடன் அணிவகுத்து வந்தால், நீதிமன்றங்களில் என்ன நிலை ஏற்படும்?

அரசியல் சாசன பாதுகாப்பு கொண்ட நீதிபதி பதவியில் இருந்து மரியாதை, செல்வாக்கு, பாதுகாப்பு வசதிகளை அனுபவித்த பின், ஓய்வுக் காலத்தை ஒதுங்கியிருந்து கழிப்பது தான். அந்த பதவிக்கும். அதை வழங்கிய சமூகத்திற்கும் ஆற்றக்கூடிய நன்றிக் கடன் என்பது இவர்களுக்கு உறைக்காது” என்று, தினமலர் அவர்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறது.

முதலில் சொல்லப்பட்ட ரஞ்சன் கோகாய், சந்திர சூட் உள்ளிட்ட முன்னாள் நீதிபதிகள் குழுமத்திற்கு இந்த அறிவுரையை தினமலர் வழங்குமா?

அந்த நீதிபதிகள், அரசியல் சாசனத்திற்குள் எளிய மக்களின் வாழ்க்கையை மனித உரிமையை தேடி எடுத்தார்கள். எல்லோரும் சமம் என்ற அரசியல் சாசனத்தின் ஆணிவேரை பறித்தெடுத்து, அது நான்குவர்ணப் பாகுபாட்டைக் கொண்ட மனுவாதத்தை நுழைக்க, சட்ட விதிகளை தன் விருப்பத்துக்கேற்ப வளைத்துக் கொண்டிருப்பவர் இந்த நீதிபதி.

“எவர் மீதும் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் கடைசி புகலிடம் கடவுள். அந்த சுவாமியையே நம்பாதவர்கள், சுவாமிநாதனை சந்தேகிப்பதில் வியப்பேதும் கிடையாது. காலிடப்பாக்கள் காற்றில் உருண்டு கொண்டுதான் இருக்கும்” என்று முடிக்கிறது தினமலர்.

எதன் மீதும் நம்பிக்கை இல்லாதவன் கடவுளைத் தேடுகிறான். மனிதன் மீது நம்பிக்கை உள்ளவன் உண்மையை தேடுகிறான்.

எது காலி டப்பா என்பதை, காலம் முடிவு செய்யும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button