
ஜீவா தம்மை ஒரு நாத்திகராகவே பிரகடனப்படுத்திக் கொண்டார். அதனை அவர் மிகத் தெளிவாகப் பின்வருமாறு கூறினார்.
“நான் ஒரு நாஸ்திகன். ஏனெனில் நான் மனிதர்களை நேசிக்கிறேன். விண்ணுலகோர் சுவர்க்கத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. மனித சக்தியால் பிறந்த இம்மண்ணையே சுவர்க்கமாக்க முடியுமென்று திடமாக நம்புகிறேன். அதில் பூரண நம்பிக்கையோடு உழைப்பவன் நான்.”
இப்படிக் கூறியதோடு மட்டுமின்றி 1933 டிசம்பரில் சிங்காரவேலரோடு இணைந்து சென்னையில் நாத்திகர் மாநாடு ஒன்றினை ஜீவா நடத்தினார். இதே ஆண்டில் நடைபெற்ற ஜமீன்தாரல்லாதார் மாநாட்டில் ஜீவா, ‘’ஜனநாயக் அரசை ஏற்படுத்தும் நோக்கத்தோடு நடக்கும் தேச விடுதலை இயக்கம் ஜமீன்தார்களை முன்னணிக்குக் கொண்டுவர வழி வகுத்தது. இப்போது ஜமீன்தார்களைப் பின்னுக்குத் தள்ளி, எளியோரையும் தொழிலாளி வர்க்கத்தையும் முன்னணிக்குக் கொண்டுவரத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்த வேண்டியது சுயமரியாதை இயக்கத் தின் கடமையாகிறது” என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
1934இல் புரட்சிப் பத்திரிகையில் காந்தியடிகளைக் கண்டனம் செய்து ஜீவா எழுதினார். அதில் ஜீவா காந்தியடிகளை நிராகரிப்பதற்குரிய காரணங்களாகக் கீழ்க்காணும் கருத்துக்களைக் குறிப்பிட்டிருந்தார்.
1. காந்திஜி வர்ணாசிரம தர்மத்தை ஒப்புக் கொண்டார்.
2. காந்திஜி பகுத்தறிவை நம்பவில்லை
3. சோஷலிச சமூகமல்லாத இராம ராஜ்ஜியத்தை காந்திஜி பிரச்சாரம் செய்தார்
4. காந்திஜி ஓர் ஆன்மிகவாதி, அவர் ஒரு பழமைவாதி.
5. காந்திஜி முதலாளித்துவத்தை அழிக்க விரும்பவில்லை. தொழிலாளர்க்கும் முதலாளிக்கும் சமரசம் ஏற்படுவதையே விரும்பினார்
6. எந்திரத் தொழிலின் யுகத்தில் வாழும் காந்திஜி, குடிசை கைத்தொழிலுக்கு முதன்மை அளித்தார்
7. தீண்டாமை ஒழிப்பு, சுய தேவை பூர்த்தி ஆகிய காந்திஜியின் கருத்துகள் சாரமற்றவை.
காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தனித் தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு கம்யூனிஸ்ட்டாக அவர் படிப்படியாக வளர்ந்தார். சிங்காரவேலரின் ஈரோட்டுத் திட்டத்தைச் சுயமரியாதை இயக்கம் ஏற்று நடத்தச் சில சிக்கல்கள் நடைமுறையில் இருந்ததால். தந்தை பெரியார் சீர்திருத்தத்தை மட்டுமே பிரச்சாரம் செய்வது என்றே முடிவுக்கு வரவே, ஜீவா சுயமரியாதை சமதர்ம கட்சியைத் தோற்றுவித்து செயல்படத் தொடங்கினார். கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டவுடன் அதில் சேர்ந்து உழைக்கலானார். இறுதிவரை அவ்வியக்கத்தில் அயராது பணியாற்றினார்.
ஜீவா கலை, இலக்கிய உணர்வுள்ளவர். அவர் பல பத்திரிகைகளில் எழுதினார். பாடல்களைப் புனைந்தார்.
நாடகங்கள் அமைப்போர்க்கும், திரைப்படத் துறையினர்க்கும் கூட அவர் ஆலோசனைகள் வழங்கினார். கலையை அவர் சுவைத்தார்; வாழ்க்கையோடு பிணைத்துப் பார்த்தார். அதனால் தான் அவர்.
‘வாழ்வும் கலையும் எதிர் துருவங்கள் அல்ல. வாழ்க்கைக்குக் கொழுகொம்பு கலை. இதில் படரும் கொடி வளமார் வாழ்க்கை, வாழ்க்கை இல்லையேல் வளமிகு கலையுமில்லை’ என்றார்.
ஜீவாவினுடைய கருத்துகள் பல நூல்களாக வெளிவந்துள்ளன. ஜீவாவின் பாடல்கள், சோஷலிஸ்ட் தத்துவங்கள், பாரதியைப் பற்றி ஜீவா. பாரதி வழி, இலக்கியச் சுவை, மதமும் மனித வாழ்வும், சங்க இலக்கியத்தில் சமுதாயக் காட்சிகள், இலக்கியத்தில் சோஷலிஸ்ட் யதார்த்த வாதம், மொழியைப் பற்றி முதலிய நூல்கள் அவரது கருத்தை இன்றும் பேசக் காணலாம். இவரது வாழ்க்கை வரலாற்றை விரிவான முறையில் ‘பொன்னீலன்’ எழுதியிருக்கிறார். இந்நூல் வெளிவருவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே கே. பாலதண்டாயுதம் ஜீவாவைப் பற்றி எழுதிய நூல் வெளிவந்துள்ளது. இளைஞர்கள் இவற்றையெல்லாம் படித்தால் ஜீவாவின் முழு வடிவத்தை அறிந்து கொள்ளலாம்.
ஜீவா பல்கலைச் செல்வர். அவர் பிறந்த நாஞ்சில் மண்ணிலிருந்து பல அறிஞர்களும், கலையுலகப் பெருமக்களும் தோன்றியுள்ளனர். ஆனால். மேடைப் பேச்சால் இதுவரை மக்களைக் கவர்ந்தவர்கள் என்ற வரிசையில், செய்குதம்பிப் பாவலர், ஜீவானந்தம் ஆகியோரே ஆவர். தற்போது அந்த வரிசையின் தொடர்ச்சியாகப் புகழ் பெற்று விளங்கி வருபவர் நாஞ்சில் கி.மனோகரன் அவர்கள் ஆவார்.
ஜீவா எளிமையாய் வாழ்ந்து, உயர்ந்த மனிதனாய் மரணமடைந்த, உயரிய எண்ணங்கள் மலரும் சோலையாகத் திகழ்ந்தவர். காந்தியடிகள் அவர் நடத்தி வந்த ஆசிரமத்திற்கு வருகை தந்து ‘உனக்கு என்ன சொத்து இருக்கிறது’ என்று வினவியபோது, ‘இந்தியாதான் என் சொத்து’ என்று தயங்காமல் விடையளித்தவர். அதற்குக் காந்தியடிகள் சிரித்துக் கொண்டே ‘நீங்கள்தான் இந்தியாவின் சொத்து’ என்றார். ஜீவாவின் உலகளாவிய இந்தப் போக்கைப் பாராட்டாதவர் யாராவது இருக்க முடியுமா?
ஜீவா – கண்ணம்மா இணையினர்க்குக் குமுதா என்கிற மகள் பிறந்தார். இவர் எத்திராஜ் என்பவரை மணந்து ஆசிரியராகப் பணி புரிகிறார். ஜீவா- பத்மாவதி இணையினருக்கு உஷாதேவி, உமாதேவி ஆகிய பெண் மக்கள் இருவரும். ஜீவா மணிக்குமார் என்ற மகனும் உள்ளனர். இவர்களெல்லோரும் பொறுப்பான பணிகளில் உள்ளனர். ஜீவாவுக்குப் பேர குழந்தைகளும் அவரது பெயரை முழங்கும்படியாக உள்ளனர்.
ஜீவா தம் நினைவு தெரிந்த நாள் முதலாய் நாட்டிற்கு உழைத்து 18.1.1963இல் இயற்கை எய்தினார்.
‘புரட்சி’ என்ற சொல்லைத் தமிழகத்தில் ஒரு சிலர் என்ன பொருளில் ஆளுகின்றனர் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளாமலேயே அதனைப் பயன்படுத்துகின்றனர். புரட்சி என்றால் என்ன என்பது குறித்து ஜீவா ஒரு பாடல் எழுதியிருக்கிறார். அதனைக் கீழே தருகிறோம்.
புரட்சி என்பது புதுமைக் கூத்து
புரட்சி என்பது புத்துயிர் வெள்ளம்
புரட்சி என்பது புதிரைத் தீர்த்தல்
புரட்சி என்பது போரிற் பெரிது
புரட்சி என்பது புதுமைக் கீதம்
புரட்சி என்பது புத்துயிர் முரசு
புரட்சி என்பது பொறுமைக் குறுதி
புரட்சி என்பது போம்பணிக் கறுதி
புரட்சி என்பது பூகம்ப வேகம்
புரட்சி என்பது பூரண மாற்றம்
புரட்சி என்பது புரட்டின் வைரி
புரட்சி என்பது புவித்தாய் நகைப்பு!
ஜீவா அவர்கள் இயற்கையெய்திய போது அறிஞர் அண்ணா அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘தோழர் ப.ஜீவானந்தம் அவர்கள் தன்னலமற்ற தொண்டாற்றி – பொது வாழ்வுத் துறையினருக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கி வந்தார். பொதுமக்களின் போற்றுதலைப் பெற்றுத் திகழ்ந்து வந்தார். அவருடைய சண்டமாருதப் பேச்சினால் தமிழ் மக்கள் பெற்ற கருத்துக் கருவூலமும் உணர்ச்சிப் பெருக்கும் அளவிடற்கரியனவாகும்.
சுயமரியாதை இயக்கக் கருத்துகளைப் பரப்பியவர்களிலே முன் வரிசையில் சிறப்பிடம் பெற்றவராகப் பணியாற்றிய தோழர் ஜீவானந்தம் அவர்கள், தொடர்ந்து முற்போக்குக் கருத்துகளை மக்களிடம் செலுத்தி அவர்தம் வாழ்க்கை செம்மையுறப் பாடுபட்டு வந்தார்.
பொதுவுடைமை இயக்கத்திற்கு அவர் ஆற்றிய அரும்பணியின் காரணமாக மக்கள் பெற்ற தெளிவும், ஆதிக்கக்காரர்கள் கொண்ட மருட்சியும் கொஞ்சம் இல்லை. ஓயாமல் தமது சக்தி முழுவதையும் பொதுத் தொண்டுக்கே அளித்த பெருவீரராக அவர் விளங்கி வந்தார்.
எதிர்ப்புகளைக் கண்டு துளியும் அஞ்சும் போக்கு அவரை அணுக அஞ்சும். கொள்கையிலே அவருக்கு இருந்த அழுத்தமான நம்பிக்கையும், அதனை எடுத்து விளக்குவதிலே அவர் பெற்றிருந்த திறமையும் எவரும் கண்டு வியக்கத் தக்கனவாக இருந்தன.
எந்தப் பொதுநலத் தொண்டரையும் கலங்க வைக்கக் கூடிய எத்தனையோ வகையான கொடுமைமிகு அடக்கு முறைகளை அவர் கண்டவர். அவற்றைத் தாங்கிக் கொண்டவர், வென்றவர்.
அவருடைய உடல்நலம் சில ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்டு இளைத்துக் களைத்துப் போனார். என்றாலும் உணர்ச்சி அவரை எப்போதும் செயலாற்றும் வீரராகவே இருக்கச் செய்தது. அந்த உழைப்பு வீண் போகவில்லை. என்றாலும், அந்த ஓயாத உழைப்புதான். அவரது உயிரைக் குடித்தது என்றும் கூறலாம்.
தம்மைப் பற்றிய சிந்தனை துளியும் அற்ற முறையில் தொண்டாற்றிய அந்தத் தூயவரின் மறைவு, நீக்கப்பட முடியாத துயரத்தை நம் அனைவர் உள்ளத்திலும் மூட்டி விட்டிருக்கிறது. அவர் ஆற்றிய அருந்தொண்டின் சிறப்பினையும், பயனையும் எண்ணி எண்ணி நாம் சிறிதளவு ஆறுதல் தேடிக் கொள்ளலாம். என்றாலும் இந்தத் துயரம் நெஞ்சை விட்டு அகலுவது மிகவும் கடினம் ஆகும்.
சமதர்ம கொள்கைக்குப் பணியாற்றிவந்த தோழர் ஜீவானந்தம் அவர்கள் தமிழ் மொழிக்கும் நல்லதோர் தொண்டாற்றி வந்தார்கள். அவர்களின் கொள்கை விளக்கம், வெண்கலக் குரல் ஒலியுடன் தமிழகத்துக்குப் பல ஆண்டுகள் கிடைத்து வந்தது. அவருடைய ‘சம்மட்டி அடிகளைப்’ பெற்றுச் சரிந்த சூதுக் கோட்டைகள் பலப்பல!
அவருடைய ஓயாத உழைப்பினால் மக்கள் மன்றம் பெற்ற உயர்தனிக் கருத்துகள் பலப்பல!
அவர் பேசாத நாள் இல்லை
போகாத ஊர் இல்லை
காணாத எதிர்ப்பு இல்லை
பெறாத சீர்மிகு வெற்றியும் இல்லை!
ஒளிவிடு கணைபோல விளங்கி வந்தார். அந்த ஒளியால் தமிழகம் புதுப்பொலிவு பெற்றது.
ஒளி மறைந்ததால் அவருடைய இல்லமாக அவர் கொண்டிருந்த தமிழகம் இருள் சூழ்ந்த நிலை பெற்றிருக்கிறது என்று குறிப்பிட்டார்.
ஜீவாவைக் குறித்துக் கவிஞர் கண்ணதாசன் இயற்றிய இரங்கற்பா ஜீவாவை அப்படியே படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. அப்பாடலைக் கீழே தந்து வாழ்க ஜீவாவின் புகழ் என வாழ்த்துகின்றோம்.
மேடையில் ஓர் வேங்கை பாயுமே
கைகளை விண்ணோக்கி வீசி வருமே
வீறுகொண் டோர் யானை போரிற் கிளம்புமே
வெஞ்சேனை முறுக்கேறுமே
கோடையின் இடிகொண்டு
கொட்டுமே வார்த்தையில்
கொஞ்சு தமிழ் விளையாடுமே
குன்றங்கொடுத்த தோள் மன்றாட ஆடுமே
கொற்றவன் எழில் தோன்றுமே
நாடென்றும் நாடுமே நாடுவன யாவுமே
நாட்டிற் களிக்க வருமே
நற்கொள்கை ஏற்றுமே நாளெல்லாம்
வீதியில் நடைபோட் டசைந்து வருமே
பாடன்று முன்னமே பல பாடல் ஊறுமே
பகைவர்க்கும் அமுதா குமே
பற்றுவன பற்றுமே பற்றியதை முற்றுமே
பாலாக்கி உண்டு விடுமே
ஆடியும் ஓடியும் அறம் வளர்க்குமே
ஐயகோ ஏழை மனமே
அம்மேனி சாய்ந்ததே அம்மேனி வெந்ததே
அண்ணல் ஜீவானந்தமே!