கட்டுரைகள்

மாண்புகளை மதிக்காத நீதியர் சுவாமிநாதன் நீக்கப்படவேண்டும்

மே.து.ரா.

நாடு விடுதலை அடைந்த பின்னர் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்றத் தீர்ப்புகள் பல எதிர்பாராத முடிவுகளை வழங்கியுள்ளன.

அரசுக்குச் சார்பாகவும் எதிராகவும், மக்களுக்கு நலனாகவும் மாறாகவும், அரசமைப்புச் சட்ட எல்லைகளுக்குப் புறம்பாகவும் முரணாகவும் அத்தகைய தீர்ப்புகள் அமைந்திருக்கின்றன.

நீதியர்கள் வழங்கிய தீர்ப்புகள் அல்லது அவர்களது நீதிமன்றச் செயல்பாடுகள் தொடர்பாக இன்றுவரை பணி நீக்க முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்பட்டதில்லை.

இதுவரை எந்த நீதியரும் பணிநீக்கம் செய்யப்பட்டதில்லை என்றாலும், ஊழல், ஒழுக்கம் தொடர்பான குற்றச்சாட்டுகளே பெரிதும் முன்னிறுத்தப்பட்டன.

ஆனால், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களது தனிப்பட்ட மற்றும் நீதிமன்றச் செயல்பாடுகள் பணி நீக்கம் என்ற அளவுக்குக் கொண்டு சென்றுள்ளன.

நீதியரை இழிவுபடுத்துவது என்றும் நீதிமன்றத்துக்கு எதிரான செயல் என்றும், பிடிக்காத தீர்ப்புக்காகப் பணி நீக்க முயற்சி என்றும் பா.ச.க.வினரும் சனாதனிகளும் தங்களது பரப்புரைகளைத் தொடங்கிவிட்டனர்.

மனித மாண்பு உள்ளிட்ட மதிக்கத்தக்க எத்தகைய பண்புகளையும் இதுவரை கடைப்பிடிக்காத இந்த சனாதன நீதியர், நீதிமன்ற மதிப்பிழிவு என்ற மிரட்டலைத் தொடர்ந்து கையிலெடுத்துக் கொள்வதையும் காணலாம்.

நீதிமன்ற மரபுகள்

நீதிமன்றங்களில் அடிப்படையாகச் சில ஒழுங்குமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று இருந்தால், உயர்நீதிமன்ற நீதியர்கள் அதற்குத் தயக்கமின்றிக் கட்டுப்படுவர்.

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நீதியர்களின் அமர்வு வழங்கிய உயர் நீதிமன்றத் தீர்ப்பு என்றால், தனி நீதியர் அதனைத் தடையில்லாமல் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்றத் தீர்ப்புகளைக் கீழமை நீதிமன்றங்கள் வழிகாட்டுதலாகக் கொள்ளவேண்டும்.

உருவாக்கப்பட்ட சிக்கல்

திருப்பரங்குன்றத்தில் ஏதோவொரு வகையில் சிக்கலை உருவாக்கிக் கலவரம் ஏற்படுத்தித் தங்களது செல்வாக்கினைப் பெருக்கிக் கொள்ளவேண்டும் என்று பா.ச.க.வினர் தொடர்ந்து திட்டமிட்டுவந்தனர். இதனை அவர்கள் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதியராக உள்ள சுவாமிநாதன் வழியாகச் செயல்படுத்த முனைந்துள்ளனர்.

திருப்பரங்குன்ற மலையில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோவிலில்தான் கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாகக் கார்த்திகைத் திங்களில் சுடரேற்றும் வழக்கம் நீடித்து வருகிறது. இதற்கு மாறாக, தர்கா அருகில் சுடரேற்றும் தூண் என்றும் நில அளவைக் கல் என்றும் கூறப்படுகின்ற இடத்தில் சுடரேற்றவேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தனியர் ஒருவரால் சில நாள்களுக்கு முன் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. தூண் உள்ள இடத்தைத் தனிப்பட்டவராகச் சென்று பார்த்த நீதியர் சுவாமிநாதன் அங்கே சுடரேற்றலாம் என்று ஆணையிட்டார். இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகக் கூறிக் காவலர்கள் மறுப்புத் தெரிவித்துவிட்டனர்.

இது தொடர்பான நீதிமன்ற மதிப்பிழிவு வழக்கை எடுத்துக்கொண்ட நீதியர் சுவாமிநாதன், நீதிமன்றக் காவலுக்கு மட்டும் உள்ள நடுவண் தொழில் காப்புப் படையினரின் துணையுடன் வழக்குத் தொடுத்த தனியர் சிலருடன் சென்று சுடரேற்ற ஆணையிட்டார். மலைப்பகுதியில் 144 தடையாணை இருந்ததால், மீண்டும் சுடரேற்றக் காவலர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

இதன் தொடர்ச்சியாக இரு நீதியர்கள் கொண்ட அமர்வு, தனி நீதியர் ஆணையை நிறுத்தி வைக்க மறுத்துவிட்டது. தற்போது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மீண்டும் நீதிமன்ற மதிப்பிழிவு என்ற வழக்கைக் கையில் எடுத்துக்கொண்டு தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் பல ஆணைகளை நீதியர் சுவாமிநாதன் பிறப்பித்து வருகிறார்

சட்டங்களை மதிக்காத நீதியர் சுவாமிநாதன்

இங்கு சில அடிப்படை அய்யங்களும் வினாக்களும் எழுகின்றன.

1. உச்சிப் பிள்ளையார் கோயிலில்தான் சுடரேற்றவேண்டும் என்ற மதுரை அமர்வில் இருந்த இரு நீதியர்கள் 2014, 2017ஆம் ஆண்டுகளில் பிறப்பித்த ஆணைகளைத் தனி நீதியர் ஏன் மதிக்கவில்லை? தனது தீர்ப்புரையில் இரு நீதியர் தீர்ப்புக் குறித்த விளக்கங்களும் தரவில்லை.

2. தர்கா அருகில் உள்ளது சுடரேற்றும் தூண் அல்லது அளவைக் கல் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதற்கு முன்னர் உச்சிப் பிள்ளையார் கோயிலில் மட்டுமே சுடரேற்றவேண்டும் என இரு நீதியர்கள் முடிவு கண்டு, அது மேல்முறையீடு ஏதுமின்றி இறுதி செய்யப்பட்ட பின்னர், அது தனி நீதியரைக் கட்டுப்படுத்தும். ஆனால், அதனை மதிக்காமல் நீதியர் சுவாமிநாதன் புறக்கணிக்க முடியுமா?

3. சட்டம் ஒழுங்கு மாநில அரசின் பொறுப்பில் இருக்கும்போது, நீதிமன்ற வளாகத்துக்குள் நடுவண் தொழில் காப்புப் படையினைக் காவலுக்கு அழைக்கலாமா என்று எதிர்ப்புகள் தொடக்கத்திலிருந்து தொடர்ந்துகொண்டிருக்கின்றன. அய்யங்களும் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே, மாநில அரசின் ஒப்புதலின்றி, நடுவண் தொழில் காப்புப் படையினரைப் பயன்படுத்தும் உரிமையினை நீதியர் சுவாமிநாதனுக்கு யார் தந்தது?

4. சட்டம், ஒழுங்கு, பொது அமைதி எனப் பல சூழல்களையும் கருத்தில் கொண்டு 144 தடையாணை நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதில் பெரும்பாலும் நீதிமன்றங்கள் தலையிடுவதில்லை. இந்த நிலையில், மாநில அரசு அல்லது காவல் துறையினரின் கருத்துக்களைக் கேட்காமல் 144 தடையாணையைத் தனி நீதியர் சுவாமிநாதன் நிறுத்தி வைத்தது உள்நோக்கத்தைக் காட்டுவதாகத் தெரியவில்லையா?

நீதியருக்குத் தகுதியும் உரிமையும் இல்லை

5. இந்த நீதியர் சட்டம் தெரிந்தவராக இருக்கலாம். ஆனால், தனித்துச் சென்று தூண் அல்லது கல் என இருப்பதைப் பார்வையிட்டு முடிவெடுக்கும் தகுதி கொண்டவராக அவர் இல்லை. பழமை, பண்பாடு, வரலாறு, தொல்லியல், மரபு, நில அளவை நிலை, நடைமுறை, நம்பிக்கை எனப் பல வகைப்பட்ட கூறுகளைக் கூர்ந்து நோக்கி விளக்கம் பெற்றிருக்கவேண்டும். தக்கோரது அறிவுரைகளைக் கேட்டிருக்கவேண்டும். வேறு எந்தச் சட்ட நடைமுறைகளையும் பொருட்படுத்தாமல் தனி நீதியர் தானாக முடிவு காணும் தகுதியினையோ உரிமையினையோ பெற்றிருக்கவில்லை.

6. சட்டம் தொடர்பான சிக்கல்கள் எழும்போது, உச்ச நீதிமன்றம் தனக்குதவச் சட்ட வல்லுநர் (amicus curiae) ஒருவரை அமர்த்திக்கொள்ளும் நடைமுறை நீதியர் சுவாமிநாதனுக்குத் தெரியாதா?

7. எங்கு சுடரேற்றவேண்டும், யார் ஏற்றவேண்டும் என்பவற்றுக்கான நடைமுறை மரபுகள் உள்ளன. இவற்றுக்கு மாறாக, வழக்குத் தொடர்ந்த தனியர் ஒருவரைச் சுடரேற்றலாம் என நீதியர் எப்படிக் கூறமுடியும்? அறநிலையத் துறையினருக்கு அப்பால், வேறு மாற்றுக்களும் உள்ளனவா என்று பார்த்து ஏன் அவர்களது கருத்துக்களையும் கேட்கவில்லை?

8. எங்கு சுடரேற்றவேண்டும் என்பதை இந்த ஆண்டே முடிவு செய்தாகவேண்டும் என்ற நிலை இருக்கவில்லை. வடகலை – தென்கலை போன்று நூறாண்டுகளுக்கும் மேலாக முடிவு காணாத பல நம்பிக்கைகள் உள்ளன. அப்படியிருக்க, தனது ஆணை வழியாகவே அனைத்தையும் இப்போதே உடனடியாக முடித்துக்கொள்ளவேண்டும் என்ற விரைவு நீதியர் சுவாமிநாதனுக்கு ஏன் தோன்றியது?

9. குறிப்பிட்ட சுடர்த் தூண் அல்லது அளவைக் கல் என எதுவாக இருந்தாலும், சுடரேற்றவேண்டும் என்றால் கோயில் அறங்காவலர் குழு அல்லது அரசுக்குத்தான் நீதிமன்றம் ஆணை தரமுடியும். வழக்காளரை நேரிடையாகச் சுடரேற்றச் சொல்ல நீதியருக்கு உரிமையில்லை.

10. மலை மேல் சுடரேற்றுவதன் நோக்கமே பரந்த பகுதிகளில் உள்ள மக்களுக்குத் தெரியவேண்டும் என்பதுதான். அதற்கு அடிப்படையாக, பெருமளவில் நெய், அதற்கான அண்டா, திரி போன்றவை இருக்கவேண்டும். வழக்காடியவர் இந்த ஏற்பாடுகளுடன் இருந்ததாக நீதிமன்றத்தில் கூறவில்லை. அப்படியிருக்க, வெறும் அடையாளத்துக்காக மட்டும் சுடரை ஏற்றுவதற்கு நீதியர் ஒப்புக்கொண்டதன் நோக்கம் புலப்படவில்லை.

11. மேல்முறையீட்டுக்கான வாய்ப்புகள் இருக்கும்போது தன்னோடு யாவும் முடிந்துவிட்டது என்ற தோற்றத்தை நீதியர் சுவாமிநாதன் ஏற்படுத்தி வருகிறார். குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்குத் தூக்குத் தண்டனை தரப்பட்டால்கூட, மேல்முறையீட்டினை மனதில் கொண்டு தண்டனை நிறுத்தி வைக்கப்படுகிறது. இது குற்ற வழக்கு மட்டுமல்லாது உரிமையியல் வழக்குகளுக்கும் பொருந்தும்.

12. கோயில் தொடர்பான நடைமுறைகளில் 1947 விடுதலையின்போது இருந்த நிலைமைகளே நீடிக்கவேண்டும் என்று 1971இல் நாடாளுமன்றம் சட்டம் இயற்றியது. இதனை 2021இல் உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்திவிட்டது.

13. வழக்குத் தொடுத்தவரின் வழக்கறிஞர் தங்களிடம் சுடரேற்றுவது தொடர்பான சான்றுகள் இல்லை என்றும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே வேண்டுவதாகவும் கூறியுள்ளார். இதற்குக் கோயில் அர்ச்சகர்கள் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வழக்குத் தொகுத்தவர்தான் தனது நிலைக்கான சான்றுகளை வழங்கவேண்டும் என்ற நடைமுறையினைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

14. அரசமைப்புச் சட்டத்துக்கும் மேலாகத் தனது நம்பிக்கைகளை மதிக்கும் & காக்கும் ஒருவர் நீதியராகத் தொடர்ந்து செயல்படக்கூடாது.

15. பார்ப்பனர் அல்லாத ஒருவர், தன்னைக் கோயில் வழிபாட்டினை நடத்திவைக்க, அதாவது அர்ச்சனை செய்ய ஒப்புதல் தரவேண்டும் என நீதிமன்றத்தை நாடுகிறார் என வைத்துக்கொள்வோம். அப்போது, அடுத்த நாளே பார்ப்பனர் அல்லாதவர் கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்யலாம் என நீதியர் ஒருவர் ஆணையிட்டால், சனாதனிகள் அதை ஏற்றுக்கொள்வார்களா? நீதிமன்றத் தீர்ப்பு இது எனப் பின்பற்றுவார்களா?

அரசமைப்புச் சட்டம் ஏற்கும் நீதியர் நீக்கம்

நீதியர் சுவாமிநாதனைப் பணி நீக்கம் செய்ய அரசமைப்புச் சட்டம் கூறியுள்ளவாறு நூற்றுக்கும் மேற்பட்ட மக்களவை உறுப்பினர்கள் ஒப்பமிட்டு அவை தலைவரிடம் தந்துள்ளனர். இது ஏதோ குற்றச் செயல் போல பா.ச.க.வினரால் பரப்பப்பட்டு வருகிறது.

நீதியர் ஒருவருக்குத் தீர்ப்புக் கூற அரசமைப்புச் சட்டம் எப்படி உரிமை தந்திருக்கிறதோ அதேபோன்று, அந்த அரசமைப்புச் சட்டம் தகுதியற்ற நீதியர் ஒருவரைப் பணி நீக்கம் செய்யும் உரிமையையும் நாடாளுமன்றத்துக்கு வழங்கியுள்ளது.

குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆகியோருக்குக் காலக் கெடு தந்து உச்ச நீதிமன்ற நீதியர்கள் பர்த்திவாலா, மகாதேவன் அமர்வு வழங்கிய தீர்ப்பு இன்றும் நடைமுறையில் உள்ளது. இருப்பினும், குடியரசுத் தலைவரும் மாநில ஆளுநர்களும் இதனைப் பின்பற்றுவதில்லை.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு ஏன் ஒன்றிய அரசைச் சார்ந்தோர் கட்டுப்படவில்லை என வினா எழுப்பாத பா.ச.க.வினர், நீதியர் சுவாமிநாதன் தீர்ப்புக்கு மட்டும் அடிபணியவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

மாறாக, குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்திடம் விளக்கங்கள் வேண்டி வினாக்களை எழுப்பினார். இது அரசமைப்புச் சட்டம் தந்த உரிமை. இதைப் போன்று, நீதியர் சுவாமிநாதனைப் பணி நீக்கும் முயற்சியும் அரசமைப்புச் சட்டம் நாடாளுமன்றத்திற்குத் தந்திருக்கின்ற சிறப்புரிமையாகும்.

மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருந்தால்தான் தகுதி நீக்கத்தை நிறைவேற்றமுடியும் என அரசமைப்புச் சட்டம் கூறலாம். ஆனால், நீதியர் தகுதி நீக்க முன்னெடுப்புக்கு 100 மக்களவை உறுப்பினர் அல்லது 50 மாநிலங்களவை உறுப்பினர் ஒப்புதல் இருந்தால் போதுமானது. இந்த முன்னெடுப்புக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வேண்டியதில்லை.

இன்றைய பா.ச.க.வின் ஒன்றிய மோடி அரசு, மக்களவை மற்றும் மாநிலச் சட்டப் பேரவைகளுக்கு ஒரே காலத்தில் தேர்தல் என்பது உள்ளிட்ட பல அரசமைப்புச் சட்டத் திருத்தங்களை அறிமுகப்படுத்த முயன்று, நிறைவேற்ற முடியாமல் கிடப்பில் போட்டுவைத்திருக்கிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

தன்னை சனாதனியாக அறிவித்துப் பெருமை கொள்ளும் நீதியர் சுவாமிநாதன் உயர் நீதிமன்றத்தில் நீதியராக இருக்கத் தகுதியில்லாதவர். ஏனெனில், அவரது தீர்ப்புகள் பெரிதும் சார்புடையனவாகவே உள்ளன.

அரசமைப்புச் சட்ட முறைமைகளை மதிக்காத நீதியர் சுவாமிநாதன் தானாக விலகவேண்டும் அல்லது விலக்கப்பட வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button