கட்டுரைகள்

இனம், மொழிகளை முன்னெடுக்கும் பா.ச.க.

மே.து.ரா.

இயற்கை வேளாண்மை மாநாட்டில் கலந்துகொள்ளக் கோவை மாநகருக்கு வந்திருந்த ஒன்றியத் தலைமை அமைச்சர் மோடியை எதிர்த்து விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்திப் போராட்டம் நடத்தியுள்ளனர்.

பீகாரிலிருந்து வந்துள்ள உழைக்கும் மக்களைத் தமிழ்நாடு துன்புறுத்துவதாகப் பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் குற்றம் சாட்டிய மோடியை எதிர்த்துத் தமிழகமே திரண்டெழுந்திருக்க வேண்டும்.

பீகாரில் தமிழர்களைத் தரம் தாழ்த்திப் பேசிய மோடி, தமிழகம் வரும்போது அப்படிப் பேசமுடியுமா எனத் தமிழ்நாடு முதல்வர் உள்ளிட்ட பலர் அறைகூவல் விடுத்திருந்தனர்.

ஆனால், பீகார் உழைக்கும் மக்கள் மிகுதியாகப் பணிபுரியும் கொங்கு மாவட்டங்களில் ஒன்றான கோவைக்கு வந்திருந்த மோடி இது பற்றி வாய் திறக்கவில்லை.

வேளாண் மக்களைக் காக்கவில்லை

பத்து ஏக்கருக்கும் குறைவாக உள்ள சிறு வேளாண் மக்களுக்கு ஆண்டுதோறும் ரூபாய் ஆறாயிரம் மூன்று முறைகளாகப் பிரித்து ஒன்றிய அரசால் வழங்கப்பட்டுவருகிறது. இதில் 21ஆவது கெடுவான ரூ. 18,000 கோடியை விடுவித்துள்ளதாகக் கோவையில் மோடி அறிவித்துள்ளார். இதுவரை நான்கு லட்சம் கோடி ரூபாய் வேளாண் மக்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பெருமைகொள்ளப்படுகிறது.

ஆட்சிக்கு வந்தால் வேளாண் மக்களின் வருவாய் இரட்டிப்பாகும் என்றும், உற்பத்திச் செலவைவிடக் கூடுதலாக 50% சேர்த்து விலை தரப்படும் என்றும் சூளுரைத்த மோடி, கடந்த பத்து ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை.

கட்டுப்படியாகும் விலை கிடைக்காமல் வேளாண் குடி மக்கள் இழப்புகளையே எதிர்நோக்கியுள்ளனர். குறைந்த விலையில் உரம் போன்ற இடுபொருள்கள், கட்டுபடியாகும் விலை, பயிர்க் காப்பு என்பன போன்ற அடிப்படைகளைச் செய்து தராமல், ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாய் என்பது வெறும் ஏமாற்றுதான்.

வேளாண் மக்களுக்கு எதிரான சட்டங்களுக்கு எதிராகப் போராடிய மக்களைத் துன்புறுத்தி அடக்குமுறைகளை ஏவிய மோடியின் பா.ச.க. அரசு ஆறாயிரம் ரூபாயில் அனைத்தையும் மறைத்துவிட முயல்கிறது.

தலைநகர் புதுதில்லியில் ஆடையில்லா அவலம் உள்ளிட்ட பல முனைப் போராட்டங்களைப் பல நாள்கள் நடத்தியும், தமிழக வேளாண் தலைவர்களை அழைத்துப் பேசவும் மறுத்தது மோடியின் பா.ச.க. அரசுதான். ஆனால், இப்போது கோவையில் நடந்த இயற்கை வேளாண்மை மாநாட்டுக்கு மோடியை அழைத்துவந்து சிறப்புச் செய்திருப்பது புதுதில்லி வேளாண் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கிய தமிழக அனைத்து உழவர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் என்பது வியப்புதான்.

பா.ச.க.வின் இன்னொரு நிகழ்வு

மோடியுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, பா.ச.க.வின் ஒன்றிய இணையமைச்சர் முருகன், பா.ச.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் போன்றோர் கலந்துகொண்டபோதிலும், தமிழ்நாட்டிலுள்ள அமைச்சர்கள் எவரும் அழைக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

அதாவது, வேல் ஊர்வலம், முருக பக்தர் மாநாடு போன்று, மக்களைத் திக்குத் திருப்பிக் கவரும் நோக்கில் மற்றொரு பா.ச.க. நிகழ்வு அரங்கேறியது என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

அயோத்தி ராமர் கோயில் அமைந்துள்ள தொகுதியில் பா.ச.க.வால் வெல்ல முடியவில்லை. சமாசவாடிக் கட்சியின் வேட்பாளர் வெற்றி வாகை சூடினார்.

இதனால், பீகாரில் ராமரைக் கைவிட்டு, சீதை பிறந்த இடமாகக் கருதப்படும் சீதாமர்கி மாவட்டத்திலுள்ள பினவ்ராதாம் என்ற இடத்தில், ரூ. 882 கோடி செலவில் 67 ஏக்கர் பரப்பளவில் சீதா கோயில் கட்டுவதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சா கடந்த ஆகத்து 8இல் அடிக்கல் நாட்டியுள்ளார்.

பீகார் தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர் நடத்தப்பட்ட இந்த நிகழ்வினை எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டுக் காட்டியும் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை.

ராமரும் சீதையும் உதவமாட்டார்கள்

சீதையும் சிக்கலைத் தீர்க்கப்போவதில்லை என்பதை அறிந்த பா.ச.க. தன்தொழில் முனைவோர் எனக் கூறி 75 லட்சம் மகளிருக்கு ரூ. 10,000 வழங்கியுள்ளது.

மகளிர் உள்ளிட்ட அடித்தட்டு மக்களின் கல்விக்கும் வேலை வாய்ப்புகளுக்குமான கட்டமைப்புகளை உருவாக்காமல், தேர்தல் காலத்தில் பத்தாயிரம் ரூபாய் வழங்கியிருப்பது தேர்தலுக்கான ‘ஊக்கத்தொகை’ என்பது வெளிப்படையானதாகும். இதற்கும் தேர்தல் ஆணையம் கண்களை மூடிக்கொண்டது.

வேறு திட்டங்களுக்கு உலக வங்கி வழங்கிய தொகை இதற்குப் பயன்படுத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு இப்போது எழுந்துள்ளது.

சமூக நீதி இல்லை

சமூகநீதி என்ற அளவில் இதனைப் பார்க்க முடியவில்லை. தமிழ்நாட்டில் மகளிர் உதவித் தொகையாக ரூ. 1000 வழங்கப்பட்டாலும், எளிய மக்களுக்கான நலத் திட்டங்கள் வெவ்வேறு வகைகளில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

கல்வி வாய்ப்புகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மகளிர்க்கு மட்டுமல்லாது, மாணவர்களுக்கும் திங்கள்தோறும் ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இவை அனைத்துக்கும் மேலாக, கட்டணமில்லாப் பேருந்து, விலையில்லா அரிசி மற்றும் குறைந்த விலைக் குடிமைப் பொருள்கள் போன்றன பேருதவியாக அமைகின்றன.

கட்டமைப்பு வாய்ப்புகளை உருவாக்கித் தராமல், வேலைவாய்ப்புகளைத் தேடித் தமிழ்நாடு உள்ளிட்ட வேறு மாநிலங்களுக்குக் குடிபெயர்ந்து செல்வதைத் தடுக்காமல், தேர்தல் காலத்தில் ஒரு முறை மட்டும் உதவியாக வழங்கப்படுவது தேர்தல் நோக்கம் கொண்டது என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம்.

வாய்ச் சொல் அரசியல்

அம்பேத்கர் பெயரை மட்டும் உயர்த்திப் பிடித்துக்கொண்டு, அடித்தட்டு மக்களின் மேம்பாட்டினை முற்றிலுமாகப் பா.ச.க. புறக்கணிக்கிறது.

பண்டைய மொழி தமிழ், வள்ளுவரின் பெருமை என்பன போன்ற புகழுரைகளுக்குப் பின், இந்தியை முன்னிறுத்தி, சமக்கிருதத்தைத் திணிப்பதும் நடக்கிறது.

தமிழ்நாட்டிலுள்ள ஒன்றிய அரசின் பள்ளிகளில் தமிழாசிரியர்களை அமர்த்தாமல் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது. தமிழுக்கான பொருள் உதவியும் மறுக்கப்படுகிறது.

வட மாநிலங்களில் 20 லட்சத்துக்கும் குறைவாக உள்ள ஆக்ரா, போபால் போன்ற நகரங்களுக்கு ‘மெட்ரோ’ எனப்படும் நகரப் போக்குவரத்துத் திட்டங்களுக்கு ஒப்புதல் தந்துள்ளது பா.ச.க. அரசு. ஆனால், கோவைக்கும் மதுரைக்கும் 2011 மக்கள்தொகையினைக் காட்டி ‘மெட்ரோ’ மறுக்கப்படுகிறது.

இருந்தாலும், இயற்கை வேளாண்மையின் பெருமையைத் தமிழகம் தாங்கியுள்ளது என மோடி ‘மெட்ரோ’ திட்டம் மறுக்கப்பட்ட கோவை நகரிலேயே புகழாரம் சூட்டுகிறார்.

தொழிலாளர் நலன், மாணவர், இளைஞர் மேம்பாடு, தொழில் முனைப்புகள், அறிவியல், நுட்ப வளர்ச்சிகள் என எதை எடுத்துக்கொண்டாலும், அடிப்படைகளை உருவாக்கித் தராமல், வெற்று முழக்கங்களை முன்வைத்து மக்களை ஏமாற்றிவிட முடியும் என பா.ச.க. நம்புகிறது.

இந்துத்துவ முக மூடி பயனளிக்கவில்லை

அகவை வந்தோர் வாக்குரிமை என்ற முறை 1952 தேர்தல்களில் நடைமுறைக்கு வந்த பின்னர், சனாதன முகமூடி மட்டுமே பயன் தராது என்பதை அறிந்து இந்துத்துவ முகத்தைக் காட்டுவதில் தொடங்கிய முயற்சிகள் இவை. இந்துக்களாகவே ஏற்றுக்கொள்ளப்படாமல் இருந்த பார்ப்பனர் அல்லாத பகுதியினரை, இந்துக்கள் என்று அழைத்துத் தங்கள் மறைவுத் திட்டங்களை நிறைவேற்றிவந்தனர்.

ராட்ரிய சுய சேவா சங்கம், சனசங்கம், பா.ச.க ஆகிய அனைத்து அமைப்புகளும் இது வரை இந்துத்துவ முகமூடியில் காலத்தைத் தள்ளிக்கொண்டிருந்தன. சனாதனிகளுக்கு அப்பாலுள்ள வாக்குகளை வாரிக்குவிப்பதில் பல மாநிலங்களில் வெற்றியும் கண்டன. இதற்குள், சிறுபான்மையினர் எதிர்ப்பு என்பதும் சேர்ந்துகொண்டது.

ஆனால், பெரும்பான்மையாக உள்ள இந்துக்கள் என்று கருதப்படுவோருக்கு எத்தகைய வாழ்நிலை முன்னேற்றத்தையும் ஏற்படுத்தாமல் ஏமாற்றிக்கொண்டிருப்பதால், அவர்களது உண்மை உருவம் வெளிப்பட்டுவிட்டது.

தேர்தல் ஆணையம் உள்ளிட்ட ஒன்றிய அரசின் அனைத்து அமைப்புகளையும் தனக்குக் குற்றேவல் செய்யும் கருவிகளாக மாற்றிக்கொண்டது பா.ச.க. வின் அடுத்த கட்ட முயற்சியாக அமைந்தது.

தங்களது அனைத்துச் செயல்பாடுகளிலும் வெற்றி கண்டாலும், மக்கள் எதிர்ப்பினை எதிர்கொள்வதில் தடைகள் ஏற்பட்டன.

இதனால்தான், பிரித்தாளும் முறையில் புதிய வடிவத்தைக் கையில் எடுத்துள்ளது பா.ச.க.

முன்னர், ஒரிசாவிலும், அடுத்துப் பீகாரிலும் எழுப்பப்பட்ட தமிழருக்கு எதிரான குரல்கள், யாவும் இனம், மொழி வேறுபாடுகளைப் பயன்படுத்தித் தங்கள் செல்வாக்கினை நிலைநிறுத்திக்கொள்வதில் சென்று முடிந்திருக்கின்றன.

ஒவ்வொரு மாநிலத்துக்குச் செல்லும்போதும், அந்த மாநில இன, மொழியினைப் பெருமைப்படுத்துவது தொடர் நிகழ்வாக மாறியுள்ளது. அது தற்போது ஓர் இன மொழி மாநிலத்துக்கு எதிராக மற்றொரு மாநிலத்தை முன்னிறுத்துவதில் முடிந்துள்ளது.

அதாவது, இன, மொழி உரிமைகளை முழுமையாக மறுத்துக்கொண்டே, இன, மொழி வேறுபாட்டை ஆங்காங்கே ஊதிப் பெருக்கிப் பயன்கொள்ளும் திட்டம் இது.

இந்துத் தேசியம், இந்தியத் தேசியம் என்பவற்றின் போதாமையையே பா.ச.க. மற்றும் மோடியின் கூற்றுகள் வெளிப்படுத்துகின்றன.

ஒற்றைப் பண்பாடு உதவவில்லை

ஒரே இனம், ஒரே சமயம், ஒரே மொழி, ஒரே கடவுள், ஒரே பண்பாடு, ஒரே வரலாறு என்று கூவிக்கொண்டிருந்த சனாதனிகளின் முகமூடிகள் இப்போது கிழிகின்றன.

தமிழ்நாட்டில் முருகன், வங்கத்தில் காளி, ஒரிசாவில் செகநாதர், இந்தி மாநிலங்கள் சிலவற்றில் ராமர், பீகாரில் சீதை என அந்தந்த மாநிலக் கடவுளர்களைக் கையில் தூக்கும்போதே சனாதனத்தின் ஒற்றைக் குரல் தோல்வியைத் தழுவிவிட்டது.

இப்போது ஒற்றைத் தேசியம், இந்துத் தேசியம், சனாதனம் என்பனவெல்லாம் வாக்கு வங்கிகளாக மாறாது என்பது தெளிவாகிவிட்டது.

தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாட்டைச் சார்ந்த குடியரசுத் துணைத் தலைவருக்கு வாக்களிக்கவில்லை என்ற குரல் எழும்போதே இந்துத் தேசியத்தின் குரல் ஒடுங்கிவிட்டது.

இப்போது தமிழ்நாட்டில் உள்ள பா.ச.க. தலைவர்கள் தங்களைத் ‘தமிழினத் தலைவர்’ என்று அழைத்துக் கொள்ளவும் தயங்கவில்லை.

இன, மொழி உணர்வுகளைக் கைப்பிடித்துக் கரையேறப் பா.ச.க. இப்போது முற்படுகிறது.

வாக்குகளைப் பெற்ற பின்னர், ஆட்சியைப் பிடித்த பின்னர் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிவிடும் என்பதையும் சனாதனச் சகதியில் அவர்கள் விழுந்து விடுவார்கள் என்பதையும் மக்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

ஒற்றைத் தேசியம் இனியும் பயன்படாது என்பதையே இன, மொழி உணர்வுகளைப் பா.ச.க. கையில் எடுத்திருப்பது நிலைநாட்டுகிறது.

இங்கு இன்னொன்றையும் பார்க்கத் தவறிவிடக்கூடாது.

முதலாளித்துவத்தின் வேறு முகம்

சமூக நீதிக்குள், இன மொழி உரிமைகள் உள்ளடங்கிக் கிடக்கின்றன.

இதைப் போலவே, முதலாளித்துவ முன்னெடுப்புகளுக்குள், சமய வேறுபாடுகளும், இந்துத்துவமும் சனாதனமும் முழுமையாகப் பிணைந்துள்ளன.

அந்தந்த இன மாநிலத் தேசியத்தை முன்னெடுக்கும் முற்போக்காளர்கள் தெளிவுடன் இவற்றைப் புரிந்துகொள்ளவேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button