கட்டுரைகள்வரலாறு

ஆவணம் அறிவோம் 10: நாட்குறிப்புகள்

ஆ.சிவசுப்பிரமணியன்

தனிமனிதர்கள், அன்றாடம் தாம் பெற்ற அனுபவங்களை எழுத்தில் பதிவிடுவதே நாட்குறிப்பாகும். அரசு, தனியார், நிறுவனங்களிலும் சமய அமைப்புகளிலும், பணிபுரிவோரில் சிலர் தம் பணிசார்ந்த நாட்குறிப்புகளை எழுதுவது அவர்களின் கடமைகளில் ஒன்றாக அமைகிறது. இவற்றுள் சில வருங்காலத் தலைமுறையினருக்கான ஆவணமாகப் பயன்தருவதும் உண்டு.

பணி சாரா நாட்குறிப்பு அதை எழுதுவோரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் பதிவாகவும் கமுக்கமான செய்திகளை உள்ளடக்கியதாகவும் அமையும் தன்மையது. இதனால் பிறரது நாட்குறிப்பேட்டைப் படிப்பது பண்பாடற்ற செயலாகக் கருதப்படுகிறது. இதன் அடிப்படையில் தம் வாழ்நாளில் நாட்குறிப்பு எழுதிவந்த ஒருவர் இறந்துபோனால் அவரது நாட்குறிப்புகளை வாசிக்காமல் அப்படியே நெருப்பிட்டு அழித்து விடுவதும் உண்டு. நல்ல நண்பரின் அடையாளமாக இச்செயலைக் குறிப்பிடுவர்.

பொதுப்பணியில் ஈடுபட்டோர், உயர் அரசுப் பதவி வகித்தோர், சிலரின் நாட்குறிப்பேடுகள் அடுத்து வருவோருக்கு வழிகாட்டும் தன்மை கொண்டதாகவோ, அனுபவங்களின் திரட்சியாகவோ அமைந்து அடுத்த தலைமுறையினருக்கு வரலாற்று ஆவணமாக விளங்குவதும் உண்டு. இத்தகைய நாட்குறிப்புகளை எழுதியோர் சிலர் தாம் உயிரோடு இருக்கும் போதே தம் மறைவிற்குப் பின் ஆவணக் காப்பகங்களுக்கு இவற்றை வழங்க ஒழுங்கு செய்துவிடுவார்கள்.

இலண்டனில் உள்ள பிரிட்டீஷ் மியூசியம் நூலகத்தில் இந்தியாவில் அவர்கள் ஆட்சிபுரிந்தபோது பணியாற்றிய ஆங்கில உயர் அதிகாரிகளின் நாட்குறிப்புகள் உள்ளதாகவும் அவை நம்மவர்களால் சொல்லிக்கொள்ளும் அளவுக்குப் பயன்படுத்தப்படவில்லை என்றும் பேராசிரியர் ஒருவர் தனிப்பட்ட உரையாடலின் போது வருந்தினார்.

தமிழக வரலாற்று வரைவும் நாட்குறிப்புகளும்

தமிழ் நூல்கள் வகைமையில் நாட்குறிப்பு குறித்த பதிவு எதுவும் இதுவரை காணக்கிடைக்கவில்லை. காலனிய ஆட்சியின் போதுதான் இது அறிமுகமாகியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. நாட்குறிப்பு என்றதும் நம்மில் பலருக்கும் நினைவுக்கு வருவது ஆனந்தரங்கப் பிள்ளை எழுதிய நாட்குறிப்புத் தொகுதிகள்தான். “ஆனந்தரங்கப் பிள்ளை சொஸ்தலிகித நாட்குறிப்புத் தொகுதி” என்ற பெயரில் இவை வெளிவந்துள்ளன.இவரது தம்பியும் தம்பி மகனும் நாட்குறிப்பு எழுதியுள்ளனர். இது அவர்களது பெயரிலேயே “முத்து விஜய திருவேங்கிடம் பிள்ளை நாட்குறிப்பு (1794-&1796), ரங்கப்ப திருவேங்கிடம்பிள்ளை நாட்குறிப்பு (இரண்டு தொகுதிகள்) என்ற தலைப்பில், முறையே 1999, 2000 ஆண்டுகளில் பேராசிரியர் ஜெயசீல ஸ்டீபன் பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.

புதுச்சேரியில் பிரஞ்சு ஆட்சி

நிலவியபோது வீராநாயக்கர் என்பவர் காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார். அவர் எழுதிய நாட்குறிப்பு 1778-1792 ஆவது காலத்தையது. ஓர.சே.மா. கோபாலகிருஷ்ணன் இந்நாட்குறிப்பை 1992 இல் பதிப்பித்து வெளியிட்டுள்ளார். இவை அனைத்துக்கும் உள்ள ஓர் ஒற்றுமைக்கூறு இவை அக்கால அரசியல் நிலைமைகளை மட்டுமின்றிப் பல்வேறு சமூக நிகழ்வுகளையும் பதிவு செயதுள்ளன என்பதாகும்

முதல் முறையாக ஆனந்தரங்கர் நாட்குறிப்பின் தமிழ்வடிவம் வெளியானபோது அம்மூலநூல் பதிப்புக்கு வ.வே.சு. ஐயர் எழுதிய முன்னுரையில் “சித்திரகுப்தனைப் போல் ஒன்றுவிடாது குறித்து வைத்துள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார். இக்காரணம் பற்றியே பேராசிரியர் ஜெயசீல ஸ்டீபன் (1999)இந்நாட்குறிப்புகளை “செய்தி இதழ்களின் முன்னோடிகள்”என்று குறிப்பிட்டுள்ளார்.

கிறித்தவத்தின் இரு முக்கியப் பிரிவுகளான கத்தோலிக்கமும், சீர்திருத்தக் கிறித்தவமும் தமிழ்நாட்டில் பரவியபோது தொடக்கத்தில் ஐரோப்பியக் குருக்களே சமயப்பரப்புதலில் ஈடுபட்டனர்.

இவர்களில் சிலரும் நாட்குறிப்பு எழுதியுள்ளனர். இதுகுறித்துப் பின்னர் விரிவாகப் பார்க்கலாம். மேற்கூறிய நாட்குறிப்புகள் அனைத்தையும் சிறு கட்டுரை ஒன்றில் அறிமுகம் செய்வது இயலாது என்பதால் ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்பை மட்டும் எடுத்துக்காட்டாகக் காண்போம். அதன் முதற்படியாக அவரைக் குறித்த சிறு அறிமுகத்தைச் செய்து கொள்வோம்.

ஆனந்தரங்கர் (1709-1761)

ஆனந்தரங்கரது பூர்வீகம் ஆந்திரமாகும். இவரது தந்தை திருவேங்கிடம் தொடக்கத்தில் சென்னையில் வாழ்ந்ததால் இவர் சென்னை பெரம்பூரில் பிறந்தார். இவரது தந்தை சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு இடம் பெயர்ந்து அங்கு நிலவிய பிரெஞ்ச் அரசில் பணியில் சேர்ந்தார். தந்தையின் இடப்பெயர்வும் அவரது அரசுப்பணியும் ஆனந்தரங்கரின் வளர்ச்சிக்குத் துணையாயின. பிரஞ்சு ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளைக் கற்றறிந்தார்.

பாக்கு வாணிபத்திலும், சாராய உற்பத்தியிலும் ஈடுபட்டதுடன் ஆனந்தபுரவி என்ற பாய்மரக்கப்பலின் உரிமையாளராகவும் இருந்துள்ளார். இவையெல்லாம் அவரது பொருளாதார நிலையை மேன்மேலும் வளரச் செய்தன. சிறு மாளிகை போன்று அவர்கட்டிய பிரமாண்டமான வீடு புதுச்சேரியில் இன்றும் காட்சியளிக்கிறது. ஆனால் இருபத்தைந்து ஆண்டுகளாக (1736-1761)அவர் எழுதிவந்த பன்னிரண்டு தொகுதிகளைக் கொண்ட நாட்குறிப்புகள்தான் இன்றளவும் வரலாற்றில் அவரது பெயரை நிலைத்திருக்கச் செய்துள்ளன. தமிழில் எழுதப்பட்ட இந்நாட்குறிப்பு பிரெஞ்சு மொழியிலும் ஆங்கிலத்திலும் முழுமையாக மொழி பெயர்க்கப்பட்டு நூல் வடிவம் பெற்றுள்ளன.

ஆனந்தரங்கர் நாட்குறிப்பு

ஆனந்தரங்கர் வாழ்ந்த பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி கோட்டைகட்டி சென்னையில் வலுவாகக் காலூன்றி இருந்தது. புதுச்சேரியில் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி நிலை பெற்றிருந்தது. இரு காலனியவாதிகளும் தம் ஆதிக்கத்தை விரிவுபடுத்திக் கொள்ளும் நோக்கில் வாணிபத்துடன் நின்றுவிடாமல் படைபலத்துடன் மோதிக் கொண்டிருந்தனர். இரண்டு நாடுகளின் தரப்பிலும் ஆளுநர் என்ற பதவியில் இருந்தவர்கள் வாணிபத்தில் மட்டுமின்றித் தம் அரசியல் ஆதிக்கத்தை நிலை நாட்டுவதிலும், இதன் பொருட்டு போர் நடத்துவதிலும் ஈடுபட்டு வந்தனர்.

இச்சூழலில் வாணிபத்தில் அழுத்தமாகக் காலூன்றி வெற்றிபெற்றிருந்த ஆனந்தரங்கர் புதுச்சேரி பிரெஞ்சு கிழக்கிந்தியக் கம்பெனியில் துபாஷி (மொழி பெயர்ப்பாளர்)ஆகப் பணிபுரிந்து பின்னர் அப்போதைய ஆளுநரான டூப்ளே (துய்ப்ளெக்சு) என்பவரின் துபாஷிகளில் ஒருவராகியதுடன் தலைமைத் துபாஷியுமானார். இப்பதவியின் காரணமாக ஆளுநருடன் அவருக்கு நெருக்கம் ஏற்பட்டது. அன்றாடம் நிகழும் கடிதப் போக்குவரத்தையும், ஆளுநருக்கு வரும் செய்திகளையும், ஆளுநர் இடும் உத்தரவுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ளும் வாய்ப்பு இப்பதவியால் அவருக்குக் கிட்டியது. இவை பல தரத்தவை. இவற்றை எல்லாம் ஆளுநரின் பார்வைக்குக் கொண்டு செல்வதும் இது தொடர்பாக அவர் இடும் கட்டளைகளை உரியவர்களுக்கு அனுப்புவதும் அவரது பணியின் ஒரு பகுதியானது. இவை தவிர உள்ளூர் நிகழ்வுகளை வாய்மொழிச் செய்தியாக உடனுக்குடன் அறிந்துகொள்ளவும் செய்தார். தேவை எனின் இவற்றை ஆளுநரின் பார்வைக்குக் கொண்டு செல்வதும் இவரது கடமையானது. இத்தகைய பொறுப்பான பதவி வகித்த இவருக்கு நாள்தோறும் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் இருந்தது.

இந்நாட்குறிப்பு அவரது தலைமைத் துபாஷிப் பணி சார்ந்த ஒன்றல்ல. அவரது ஆர்வம் அல்லது விருப்பத்தின் அடிப்படையில் அவரே மேற்கொண்ட செயலாகும். தம் உடல்நலம் குன்றும் போது தாம் கூறக் கூற ஒருவர் எழுதும் படிச் செய்துள்ளார். எழுதுவதற்கான செய்திகள் எவையும் இல்லாத நாட்களில் அவர் எழுதாமலும் இருந்துள்ளார். இவற்றை எல்லாம் அவர் தமிழிலேயே எழுதி உள்ளதுடன் நாட்குறிப்பு எழுதுவதை அன்றாடக் கடமைகளில் ஒன்றாகவே கொண்டிருந்தார்.

அக்காலத்தைய பேச்சுமொழி கலந்த நடையிலேயே அவர் எழுதியுள்ளார். படை எடுப்புகள், வாணிபச் செயல்பாடுகள், வலங்கை -இடங்கை சாதிகளிடையே ஏற்படும் முரண்பாடு, சமயம் சார்ந்த நிகழ்வுகள், பிரெஞ்சியர் குறிப்பாகப் படைவீரர்கள் சிலரின் முறையற்ற செயல்கள், (தமிழர்களை ஏமாற்றி அடிமைகளாக்கி வெளிநாட்டினருக்கு விற்பனை செய்தமை, கால்நடைகளைத் திருடி உணவாக்கியமை) குற்றச் செயல்களுக்கான தண்டனைகள், வாணிபக் கப்பல்களின் வருகை, புயற்காற்றும் பெருமழையும் புதுச்சேரியில் ஏற்படுத்திய பாதிப்பு, கிறித்தவ சமயப் பரப்பாளர்கள் ஒரு சிலரின் குறுகிய செயல்பாடுகள், மக்களின் எதிர்க்குரல்கள் என்பனவற்றை நாட்குறிப்பின் உள்ளடக்கம் குறித்த ஒரு சில எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம். இடையிடையே அவரது எதிர்மறையான சமூகப் பார்வையும் வெளிப்படுகிறது. பறையர்களை புதுச்சேரியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று அவர் எழுதியுள்ளது ஒரு சான்றாகும்.

சில எடுத்துக்காட்டுகள்

முராரிராவ் (1699-1779) என்ற மராட்டியப் படைத்தலைவன் தன் படையுடன், வந்து இன்றையத் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டப் பகுதிகளில் மேற்கொண்ட கொடூரச் செயல்களைப் பதிவு செய்துள்ளார். திருவண்ணாமலை, செஞ்சி, சேத்துப்பட்டு, கடலூர், பரங்கிப் பேட்டை, சிதம்பரம் ஆகிய ஊர்களில், தானியங்கள், கால்நடைகள் ஆகியனவற்றைக் கவர்ந்து சென்றதுடன் பெண்களையும் கடத்திச் சென்றுள்ளான். இவன் வருகையை அறியும் மக்கள் “வலசை போனார்கள்” (இடம் பெயர்ந்து சென்றார்கள்) என்று அவன் நடத்திய கொள்ளைகளையும் பெண்கள் மீதான வன்முறையையும் ஆனந்தரங்கர் தன் நாட்குறிப்பில் எழுதியுள்ளார்.

நான்கு தொகுதிகளைக் கொண்ட “பஞ்ச் ஆஃப் தாட்ஸ் “(தமிழில் ஞான கங்கை) என்ற தம் நூலில் மராத்தியப் படைகளின் அறவழிப் படையெடுப்புக் குறித்து குரு கோல்வால்கர் தரும் சித்திரத்துக்கு மாறுபாடான சித்திரமாக ஆனந்தரங்கரின் பதிவு உள்ளது.

18 ஆம் நூற்றாண்டுப் புதுச்சேரியில் உள்ள கத்தோலிக்கத் தேவாலயம் ஒன்றில் தீண்டாமையை நிலைநிறுத்தும் வகையில் பிரிவினைச் சுவர் இருந்துள்ளது. காரைக்கால் நகரில் இருந்து புதுச்சேரி வந்த பாதிரியார் ஒருவர் பிரிவினைச் சுவரை எதிர்க்கும்படி தீண்டாமைக்கு ஆட்பட்ட கத்தோலிக்கர்களைத் தூண்டினார். அவர்களும் அதற்கு உடன்பட்டு 16.10.1745 இல் மூத்த குருவிடம் சென்று

“நாங்கள் உண்மையிலேயே உங்கள் சிஷ்யர்கள் என்றால் எங்கள் அனைவரையும் ஒன்றுபோல் நடத்தவேண்டும். தேவனானவர் அவரை வழிபடுபவர்களிடம் வேறுபாடு காட்டுவதில்லை. ஆனால் ஜாதி கிறிஸ்தவர்கள் வேலியின் மூலம் எங்களை வேறுபடுத்தியுள்ளனர். நீங்களும் அதற்கு உடன்பட்டுள்ளீர்கள். இது, ஓரவஞ்சனையான செயலென்பதை உங்களிடம் விண்ணப்பித்து இப்பிரச்சினையை உங்களிடமே விட்டு விடுகிறோம்.”

என்று விண்ணப்பம் செய்தனர். இதில் உள்ள நியாயத்தை உணர்ந்த மூத்த குருவும் உடனடியாகச் சுவரை இடிக்கும்படி உத்தரவிட்டார். தம்மிடம் முறையிட வந்தவர்களை நோக்கி “நீங்கள் எல்லோரும் எனது பிள்ளைகள், ஏனையோருடன் கலந்து நீங்களும் பூசையில் பங்கு கொள்ளுங்கள்” என்று கூறி அவர்களை ஆசிர்வதித்து அனுப்பினார். அன்று மாலை வழிபாட்டில் அனைவரும் ஒன்றாகக் கலந்து வழிபட்டனர்.மறுநாள் (17.10.1745) ஞாயிறு பூசையின்போது பறையர்களை மற்றவர்களிடம் இருந்து பிரிக்கும் வகையில் நாற்காலிகள் வேலியாகப் போடப்பட்டிருந்தன.

அரசியல், வாணிபம், போர்கள் என்பனவற்றுடன் மட்டுமின்றி இத்தகைய சமூகம் சார்ந்த செய்திகளும் ஆனந்தரங்கர் நாட்குறிப்பில் இடம் பெற்றுள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button