
தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்தத்தினை (2025) திரும்பப் பெறுவதாக உயர் கல்வி அமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கக்கூடியதுதான்.
தனியார் பல்கலைக்கழகத்துக்கு வேண்டிய நிலப்பரப்பு 100 ஏக்கர் என்பதிலிருந்து, மாநகராட்சிப் பகுதிகளில் 25 ஏக்கர், நகராட்சி/ பேரூராட்சிகளில் 35 ஏக்கர், பிற இடங்களில் 50 ஏக்கர் என்று குறைத்திருப்பது மட்டும் எதிர்ப்புகளுக்கு உள்ளாகவில்லை.
மாறாக, மாநில அரசு, பல்கலைக்கழக நிதிநல்கை ஆணையம், சான்றோர், மாணவர் போன்றோரிடம் பெற்ற பணத்தில் உருவான கட்டமைப்புகளைக் காட்டி, அரசு உதவி பெறும் கல்லூரிகள் தனியார் பல்கலைக்கழகங்களாகத் தங்களைத் தரம் உயர்த்திக் கொள்வதுதான் பெரிதும் தாக்குதல்களுக்கு அடிப்படையாக அமைந்தது. ஏறக்குறைய பொது நிறுவனம் போன்றவை தனியாருக்குத் தனித்த உரிமையாகத் தாரை வார்க்கத் திருத்தச் சட்டம் வழி வகுத்திருந்தது.
அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவர் மற்றும் ஆசிரியர், பணியாளர் போன்றோரது நிலை தற்போது உள்ளவாறு தொடர்ந்து நீடிக்கவேண்டும் என்றாலும், இவையெல்லாம் சில காலத்துக்குள் மாறிவிடும்.
மூன்று ஆண்டுகளுக்குள் கல்வியினை முடித்து மாணவர் சென்றுவிடுவர். ஆசிரியர், பணியாளர் போன்றோர் அனைவரும் அடுத்த 10 அல்லது 15 ஆண்டுகளில் ஓய்வு பெறும் வாய்ப்புகள் மிகுதி. ஒரு சிலர் மேலும் சில ஆண்டுகள் நீடித்திருக்கலாம்.
ஆனால் புதிய மாணவர், ஆசிரியர், பணியாளர் என அனைவரும் தனியார் பல்கலைக்கழகத் தேர்வு முறையிலேயே தேர்ந்தெடுக்கப்படுவர்.
தற்போது நடைமுறையில் இருக்கும் மாணவர் கல்விக் கட்டணம், ஆசிரியர், பணியாளர் ஊதியம் என எதிலும் அரசின் அறிவுறுத்தல்கள் இருக்காது. அப்படி இருந்தாலும், அவற்றையெல்லாம் ஏற்றாகவேண்டும் என்ற விதிமுறைகள் திருத்தச் சட்டத்தில் மட்டுமல்லாது, தனியார் பல்கலைக்கழகச் சட்டத்திலேயே (2019) இடம்பெறவில்லை என்பதை மறந்துவிடக்கூடாது.
தற்போது அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 90% இடங்கள் மதிப்பெண் அடிப்படையில், இட ஒதுக்கீட்டு வரையறைகளுக்கு உட்பட்டு நிரப்பப்படுகின்றன. அதனை 65% எனப் புதிய திருத்தச் சட்டம் குறைத்திருக்கிறது. சிறுபான்மை நிறுவனங்களுக்கு இது 50% ஆகும். ஆனால் 65% அல்லது 50% இடங்கள் அரசுக்குத் தரப்பட்டு, இட ஒதுக்கீட்டு முறையில் சேர்க்கப்பட்டாலும், மாணவர்கள் அரசு அறிவிக்கும் கல்விக் கட்டணத்தை மட்டுமே செலுத்தலாம் எனத் திருத்தச் சட்டம் குறிப்பிட்டுக் கூறவில்லை.
புதிய தனியார் பல்கலைக்கழகங்கள்
இவற்றுக்கிடையில் தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகச் சட்டத்தின் (2019) அடிப்படையில் தற்போது 8 தனியார் பல்கலைக்கழகங்கள் உருவாகியுள்ளன.
இந்திய அரசமைப்புச் சட்டப்படி, பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மாநிலச் சட்டப்பேரவை அல்லது நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களின் வாயிலாகவே உருவாக முடியும். இந்த முறையைப் புறக்கணித்து, நாடாளுமன்றம் நிறைவேற்றிய பல்கலைக்கழக நிதிநல்கை ஆணையச் சட்டத்தின் ஒரு பிரிவில் இடம்பெற்றுள்ள வரிகளை வைத்துக்கொண்டு, பல்கலைக்கழக நிதிநல்கை ஆணையம் தானாகவே ‘நிகர்நிலைப் பல்கலைக்கழகம்‘ என்ற பெயரில், அதாவது ‘பல்கலைக்கழகம் போன்று’ என்ற நடைமுறையில் நாடு முழுதும் நூற்றுக்கணக்கான நிறுவனங்களை வெறும் அறிவிப்பு வாயிலாக ஏற்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் இத்தகைய நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் 28 உள்ளன. இவை மாநில அரசு, ஒன்றிய அரசு ஆகிய எவற்றுக்கும் கட்டுப்படாமல், எவ்வகையான இட ஒதுக்கீட்டு முறைகளையும் பின்பற்றாமல் தம்விருப்பப்படி மாணவர்களைச் சேர்க்கவும் கொள்ளைக் கட்டணங்களைப் பெறவும் வாய்ப்புகள் பெற்றிருக்கின்றன.
ஒரு துறை சார்ந்து மட்டுமே நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் செயல்படவேண்டும், நிறுவன எல்லைக்கப்பால் படிப்பு நடுவங்களைத் திறக்கக்கூடாது, வேறு துறைகளில் மாணவர்களைச் சேர்க்கக்கூடாது, இணைப்புக் கல்லூரிகளை உருவாக்கக்கூடாது என்பன போன்ற பல கட்டுப்பாடுகள் தொடக்கத்தில் இருந்தன.
நீதிமன்றங்களின் தலையீட்டிலும் பல்கலைக்கழக நிதிநல்கை ஆணையத்தின் ஏற்பிலும், அனைத்துக் கட்டுப்பாடுகளும் தற்போது தளர்ந்துவிட்டன.
எடுத்துக்காட்டாக, தொடக்கத்தில் பொறியியல் கல்லூரி ஒன்று நிகர்நிலைப் பல்கலைக்கழகம் என மாறினால், அது கலை, அறிவியல் மருத்துவம் போன்ற வெவ்வேறு துறைகளைத் தொடங்கி மாணவர்களைச் சேர்க்க முடியாது. ஆனால், இப்போது நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் பலவும் தனியார் நடத்தும் தனிப் பல்கலைக்கழகங்களாகவே செயல்பட்டு வருகின்றன.
பொறியியல் கல்விக்கு ஒப்புதல் பெற்று மருத்துவக் கல்வியையும் தொடங்கி நடத்துகின்றன. கட்டணக் கொள்ளை என்பது கல்வி வணிகம் என்ற நிலைக்குத் தாழ்ந்துவிட்டது.
கல்வித் தரம் ஆய்வு, கண்டுபிடிப்புகள் போன்றவற்றை ஊக்குவிக்கவும் பாடத்திட்டங்களை மேம்படுத்திக் கொள்ளவும் இன்றைய நுட்ப வளர்ச்சிகளை எதிர்கொள்ளவும் முன்னேற்ற எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுக்கவும் தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பெருமளவிலான கல்வி நிறுவனங்கள் வேண்டப்படுகின்றன என்பது உண்மைதான்.
தன்னாட்சிக் கல்லூரி, தன்நிதிக் கல்லூரி, நிகர்நிலைப் பல்கலைக்கழகம், தனியார் பல்கலைக்கழகம் என எதுவாக இருந்தாலும், இவை ஏற்படுத்தப்படுவதற்குத் திரும்பத் திரும்பக் கூறப்படும் காரணிகள் எவையும் நடைமுறைக்கு வந்ததாகத் தெரியவில்லை. கல்வியின் தரம் உயர்ந்து பயனும் பெறவில்லை.
இந்த நிலையில், மேலும் பல தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்குவதன் நோக்கம் புரியவில்லை.
வணிகமாகும் கல்வி
தற்போது தன்நிதிக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் பெருமளவில் இருக்கின்றன.
ஒன்றிய அரசு நிறுவனங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் நீங்கலாக, மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் போன்ற அனைத்துப் படிப்புகளுக்குமான கல்விக் கட்டணத்தை ஓய்வு பெற்ற நீதியர் தலைமையிலான குழு அமைத்துத் தமிழ்நாடு அரசு முடிவு செய்கிறது.
தரத்திலும் தகுதியிலும் சிறப்புப் பெற்றிருப்பதாக ஏதோவொரு வகையில் பெயர் பெற்ற கல்லூரிகள், அரசுக் கட்டணத்துக்கும் மேலாகப் பல லட்சங்கள் அல்லது கோடிகளைக் கொள்ளைப் பணமாகப் பெறுவது நடைமுறையில் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
மருத்துவக் கல்லூரியாக இருந்தால் நுழைவுத் தேர்வு (நீட்) மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு கலந்துரையாடல் போன்ற முறைகளில் மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை இருந்தாலும், இவற்றையெல்லாம் எப்படி எதிர்கொண்டு கொள்ளையடிக்க முடியும் என்பது தனியார் நிறுவனங்களுக்குக் கைவந்த கலையாகும்.
இத்தகைய சூழல்களில், தனியார் பல்கலைக்கழகச் சட்டம் நடைமுறையில் இருப்பதால், வாய்ப்புள்ள பல தன்நிதிக் கல்லூரிகள் தங்களைத் தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றிக்கொள்ளும் நிலை ஏற்படுவதைத் தடுக்க முடியாது.
தன்நிதிப் பொறியியல் கல்லூரி ஒன்று தனியார் பல்கலைக்கழகமாக மாறிவிட்டால், அவை மருத்துவம், கலை, அறிவியல் உள்ளிட்ட பிற படிப்புகளையும் தொடங்குவது எளிதாகிவிடும்.
அரசு உதவி பெறும் கல்லூரிகள் தனியார் பல்கலைக்கழகங்களாகத் தரம் உயர்வது தற்போதைக்குத் தடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால், தன்நிதிக் கல்லூரிகள் நூற்றுக்கணக்கில் தனியார் பல்கலைக்கழகங்களாகப் பெயர் மாற்றம் பெறுவதைத் தடுக்க இயலாது.
அரசு உதவி பெறும் கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகள் பலவும் தன்நிதிக் கல்லூரிகளைத் தனியே நடத்திவருகின்றன என்பதையும் கண்டுகொள்ளாமல் இருந்துவிடக்கூடாது.
எளியோருக்கு ஏற்ற கல்விக் கட்டணம்
இன்றைய நிலையில் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற வகையிலான உயர்கல்வி வாய்ப்புகள் இருக்கின்றனவா என்றுதான் பார்க்கவேண்டும்.
அந்த வகையில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெருமளவில் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வகைப் படிப்புகளுக்கும் போதுமான எண்ணிக்கையில் இடங்கள் உள்ளன என்று எடுத்துக்கொள்ளமுடியும். பற்றாக்குறை வந்தாலும், உடனடியாக இடங்களை மிகுவிப்பது எளிதுதான்.
ஆனால், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்துவரும் ஏழை எளிய மாணவர்களின் பெற்றோரது வருவாய்க்கு ஏற்ற வகையிலான குறைந்த கட்டணங்கள் கொண்ட உயர் கல்வி நிறுவனங்கள் உள்ளனவா என்பதைத்தான் நோக்க வேண்டும்.
இன்றைய நுட்ப வளர்ச்சியையும் தொழில் முன்னேற்றத்தையும் சார்ந்த உயர் கல்வி நிறுவனங்கள் தொடருவதை எவரும் மறுக்கவில்லை, இதற்குத் தடையும் இல்லை.
ஆயினும், இத்தகைய ஆய்வுகளுக்கு முன்னோட்டமாக அமைவது அடிப்படைக் கல்விதான் என்பதையும் புறக்கணித்துவிடக்கூடாது.
அடுத்த கட்ட வளர்ச்சிக்கு ஏற்ற வகையிலான தகுதியினைக்கொண்ட மாணவர்களும் உருவாகவேண்டும்.
கல்வி நிறுவனமா வணிக நிறுவனமா?
தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகச் சட்டம் இதனை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாகத் தெரியவில்லை. அடிப்படையில் ஒரு தனியார் தொழில் அல்லது வணிக நிறுவனத்தைத் தோற்றுவிப்பது போலவே தனியார் பல்கலைக்கழகச் சட்ட விதிகள் இருக்கின்றன.
அரசின் கட்டுப்பாடு அல்லது வழிகாட்டுதல் என எதற்கும் வாய்ப்புகள் இப்போதைய சட்டத்தில் இல்லை.
- பல்கலைக்கழக வேந்தர், நிறுவன உரிமையாளர்களால் பணியமர்த்தப்படுவார்.
- துணைவேந்தர், உரிமையாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேந்தரால் பணியமர்த்தப்படுவார்.
- பல்கலைக்கழக் மேலாண்மைக் குழு உரிமையாளர்களால் தேர்ந்தெடுக்கப்படும். இதில் தமிழ்நாட்டின் அரசு சார்பில் எவரும் இருக்கமாட்டார்கள்.
- செயலாண்மைக் குழுவில் பத்து உறுப்பினர்கள். இதில் மாநில அரசின் உயர் கல்விச் செயலாளரும் கல்லூரிக் கல்வி இயக்குநரும் இடம்பெற்றிருப்பர். அதாவது, எட்டு உறுப்பினர்கள் உரிமையாளர் சார்ந்தோர். அரசு உறுப்பினர்கள் பெயரளவுக்கு மட்டும்தான். வேறு உரிமைகள் கிடையாது.
- ஏதாவது தவறுகள் நடந்தால், தமிழ்நாடு அரசு ஆய்வு செய்யலாம். அவ்வளவுதான்.
- மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு இல்லை.
- கல்விக் கட்டண வரையறை இல்லை.
- பல்கலைக்கழகம் விரும்பியவாறு எங்கு வேண்டுமானாலும் கிளைகளை அமைத்துக்கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் உள்ள அரசின் மேலாண்மைக் கட்டுப்பாடுகள் இல்லாமலேயே தனியார் பல்கலைக்கழகங்கள் உருவாக வழி திறந்துவிடப்பட்டிருக்கிறது.
விடுதலைக்கு முன்னர் உருவான அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக மாநில ஆளுநர் இருந்தார் என்பதை இங்கு நினைவில் கொள்ளவேண்டும்.
தனியார் கொள்ளைக்கு வாயிலைத் திறந்துவிடும் தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகச் சட்டம் முழுமையாகத் திரும்பப் பெறவேண்டும். அல்லது மாநில முதல்வர் வேந்தராக இருக்கும் வகையில் வேறு பல கூறுகளையும் உள்ளடக்கி முழுமையாகத் திருத்தப்பட வேண்டும்.