Uncategorizedகட்டுரைகள்

உச்சநீதிமன்ற தீர்ப்பும், உலா வரும் கேள்விகளும்

டி.எம்.மூர்த்தி

தவெக தலைவரும், தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமுமான விஜய், கரூரில் நடத்திய சாலை வழிக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு, அவரைக் காண்பதற்காக வந்த 41 பேர் இறந்த துயரம் நிகழ்ந்த நாள் 27.9.2025.

தமிழ் நாடு அரசு இதுபற்றி நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்ததும் அதே நாளில்தான்.

இதுகுறித்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நேர்மையான காவல்துறை அதிகாரி என அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்ட நாள் 3.10.2025.

இதனை எதிர்த்தும், மத்தியப் புலனாய்வுத் துறையின் (சிபிஐ) விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் மீது இடைக்கால உத்தரவு ஒன்றை உச்ச நீதிமன்றம் பிறப்பித்த நாள் 8.10.2025.

அது இடைக்கால உத்தரவுதான் என்றாலும், விசாரணையை சிபிஐக்கு மாற்றியது உள்ளிட்டு காத்திரமான பல விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது.

மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும், விசாரணையின் மூலம் உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் நோக்கம் பாராட்டத்தக்கது. ஆனால் அந்தத் தீர்ப்பில் வெளியிட்டுள்ள கருத்துக்கள், பல எதிர் கேள்விகளை மக்களின் மனங்களில் உலா வரச் செய்துள்ளன.

சிபிஐ விசாரணை உத்தரவுக்கான உச்சநீதிமன்றத்தின் முக்கியக் கருத்துகள் வருமாறு :

  • இந்தச் சம்பவம் “நாட்டின் மனச்சாட்சியே அதிர்ந்தது” என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது. இத்தகைய கடுமையான சம்பவத்தில் குடிமக்களுக்கு நியாயமான மற்றும் சார்பற்ற விசாரணை கிடைப்பது அவர்களின் உயிர், சுதந்திர உரிமைகளின் ஒரு பகுதியாகும் எனவும் தீர்ப்பளித்தது.
  • கரூர் நகரக் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர்-ஐ, சிபிஐக்கு மாற்றுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அரசியல் பரிமாணங்களும் ஊடகச் செய்திகள் காரணமாகவும், விசாரணை மீதான பொதுமக்கள் நம்பிக்கையை மீட்டெடுக்க சிபிஐ போன்ற மத்திய, சார்பற்ற அமைப்பு மட்டுமே நியாயமான தீர்வாக இருக்கும் என விளக்கம் கூறப்பட்டுள்ளது.

சிபிஐ என்பது சார்பற்ற அமைப்பு என்றால், மாநிலக் காவல்துறை சார்புள்ள அமைப்பு என்று உச்சநீதிமன்றம் கருதுகிறதா?

“சிபிஐ என்பது பிஜேபி, ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் கையாட்கள்” என விஜய் முன்பு பேசியதைக் கூட வெற்று அரசியல் என ஒதுக்கிவிட்டாலும், ஒன்றிய அரசின் கூட்டில் அடைக்கப்பட்ட கிளி (Caged Parrot) என்று முன்பு உச்சநீதிமன்றத்தால் விமர்சிக்கப்பட்ட சிபிஐ, இப்போது திடீரென “சார்பற்ற” தானது எப்படி?

  • விசாரணையில் வெளிப்படைத்தன்மையையும் நம்பகத்தன்மையும் உறுதி செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்டோகி தலைமையில் மூன்று உறுப்பினர் மேற்பார்வை குழு அமைக்கப்பட்டது.

கர்ப்பிணியான பில்கிஸ் பானுவைக் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்து, மூன்று வயதுக் குழந்தையின் கால்களைப் பிடித்துத் தலையைத் தரையில் அடித்துச் சிதறடித்துக் கொன்ற 11 கொடூரர்களை விடுதலை செய்த, நீதிபதி அஜய் ரஸ்டோகி நம்பகத்தன்மை மிக்கவரா?

  • சிபிஐ விசாரணையைக் கண்காணித்து அறிக்கைகளைப் பெற, தமிழ்நாட்டில் பணிபுரிந்த, ஆனால் தமிழரல்லாத இரண்டு மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவ்வாறெனில் தமிழர்கள் எல்லாம் யோக்கியமற்றவர்களா?

 

ஐபிஎஸ் அதிகாரிகள், அவர்களது சொந்த மாநில ஆளும் கட்சிக்கு அடிமைகளாக இருக்கிறார்களா?

  • மதராஸ் உயர் நீதிமன்றத்தின் இரண்டு அமர்வுகள் முரண்பட்ட தீர்ப்புகள் அளித்தன; சென்னை அமர்வு தானாகவே வழக்கை எடுத்தது தவறு” என்கிறது உச்ச நீதிமன்றம் .

இதற்கு உச்ச நீதிமன்றம் தீர்வுகாண்பது சரியானதே! ஆனால் மாநிலக் காவல்துறையை ஒரு சார்பானது என்று முடிவு செய்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவது எவ்வகையில் தீர்வாகும்?

  • “இந்த வழக்கு மதுரை அமர்வின் அதிகார வரம்புக்குள் வருவதால், பிரதான அமர்வு, விசாரணைக்கு எடுத்தது தவறு” என்பதால் தீர்ப்பை ரத்து செய்கிறது உச்சநீதிமன்றம். இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கும் விளக்கம் கேட்டு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய சட்டங்களை ஒப்புதல் தராமல் ஆளுநர் கிடப்பில் போட்டதைக் கண்டித்து, அந்தச் சட்டங்கள் தாமாகவே நிறைவேறி விட்டதாகத் தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். அதன் மீது குடியரசுத் தலைவர் கேள்விகளை முன்வைத்ததை வாரக்கணக்கில் விவாதித்த உச்ச நீதிமன்றம், இந்த விவாதங்களால், முன்னர் அளித்த தீர்ப்பு மாற்றப்பட்டு விடாது என்று உறுதியாகச் சொன்னது. ஆனால் அந்தத் தீர்ப்புக்கு எதிராக, பல்கலைக்கழகங்களுக்கு ஆசிரியர்கள் துணைவேந்தர்களை தமிழ்நாடு அரசு நியமிக்கக் கூடாது என்று, மதுரை அமர்வின் அதிகார வரையறைக்குள் வரும் பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஒரு பிஜேபி நபர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் அதிகார வரம்பை மீறி ஏற்று உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக உத்தரவிட்டது. அதுவும் உச்ச நீதிமன்றத்தின் முன்பு மேல்முறையீடு செய்யப்பட்டு விசாரணை இன்றி நிலுவையில் கிடக்கிறது. இப்போது அதிகார வரம்பை உடனடியாகக் கேள்விக்குள்ளாக்கும் உச்சநீதிமன்றம், அந்த மனுவில் ஏன் உடனடியாகத் தலையிடவில்லை?

அந்த வழக்கிலும் சென்னை உயர்நீதிமன்றப் பதிவாளருக்கு விளக்கம் கேட்டு உத்தரவு பிறப்பித்து இருக்க வேண்டுமல்லவா?

  • மாநில அதிகாரிகள் பத்திரிகைச் சந்திப்புகளில் தங்களைப் பாதுகாக்கும் வகையில் பேசியதாக உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

அரசு துறைகளில் அதிகாரிகளின் செயல்பாட்டைப் பற்றி சமூக ஊடகங்களின் வழியாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் மற்றும் அவதூறுகளைப் பரப்பும் போது, உண்மையில் என்ன நடந்தது என்பதை அரசு அதிகாரிகள் அதிகாரபூர்வமாக மக்களுக்கு விளக்குவது எந்த வகையில் தவறாகும்?

இது விசாரணையைப் பாதிக்கும் என்றால், சமூகப் பதற்றத்தை உருவாக்கும் பரப்புரைகளை எந்த வகையில் தடுப்பது?

  • “உரிய ஆவணங்கள் அல்லது ஆதாரங்கள் இல்லாமல் உத்தரவுகள் வழங்கப்பட்டன” என்கிறது உச்சநீதிமன்றம்.

அது சரி எனில், எந்த ஆவணங்கள் அல்லது ஆதாரங்களைக் கொண்டு தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மீது அரசு மீதும் நம்பகத்தன்மையில்லை என உச்ச நீதிமன்றம் முடிவுக்கு வந்தது?

  • “தவெக கட்சியும் அதன் தலைவரும் குறித்த கடுமையான குறிப்புகள் அவர்களுக்குப் பதிலளிக்க வாய்ப்பு அளிக்காமல் செய்யப்பட்டன. இது இயற்கை நீதிக் கொள்கையை மீறுகிறது” என்கிறது உச்ச நீதிமன்றம்.

உயர்நீதிமன்றத்தின் மீதும், தமிழ்நாடு காவல்துறையின் மீதும், தமிழர் அல்லாத அதிகாரிகள் மீதும் எந்த வாய்ப்புமளிக்கப்படாமல் உச்ச நீதிமன்றம் அவர்களது நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குவது எவ்வகையில் சரி?

எந்தக் கட்டுப்பாட்டிற்கும் உட்படாத, சுயக் கட்டுபாடும் இல்லாத கூட்டத்தைக் கட்டுப்படுத்த தவறிய தவெக கட்சி மீதும், அந்தக் கட்சியே அறிவித்த நேரத்தில் இருந்து 7 மணி நேரம் கழித்து நிகழ்விடத்துக்கு வந்த அதன் தலைவர் விஜய் மீதும் ஒரு வார்த்தை விமர்சனம் கூட இல்லாமல் தவிர்த்திருப்பது நியாயம் தானா?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button