
அண்மையில் நடைபெற்ற மாணவர் பேரவைத் தேர்தல்கள் சிலவற்றில் ராட்ரிய சுய சேவா சங்கின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிசித் சில வெற்றிகளைப் பெற்றிருக்கிறது. இதை எடுத்துக்கொண்டு மாணவர் குழுமமே தங்கள் பக்கம் சாய்ந்திருப்பதாகப் பாரதிய சனதா கட்சியினர் பரப்புரை செய்துவருகின்றனர்.
பா.ச.க.வினர் போன்றே இந்த வெற்றிகளை முதலாளித்துவ ஏடுகள் முதலிடம் தந்து வரவேற்கின்றன.
ஒன்றிய அமைச்சர் அமித்சா, பிற அமைச்சர்கள், தில்லி முதல்வர் உள்ளிட்ட பலரும் தங்களது சனாதனக் கொள்கைகளுக்கான வெற்றி என்ற வகையில் இவற்றை முன்னெடுத்து வருகின்றனர்.
எப்படிக் கிடைத்தது வெற்றி?
தில்லியில் உள்ள சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இடதுசா£¤ மாணவர்கள் இரு பெரும் பிரிவுகளாகத் தனித்து நின்று போட்டியிட்டனர். இதனை வாக்குகள் பிரிந்தபோதும் தலைவர், துணைத் தலைவர், பொதுச்செயலாளர் ஆகிய மூன்று பொறுப்புகளையும் இடதுசா£¤யினரே வென்றுள்ளனர். இணைச் செயலாளராக வெறும் 85 வாக்குகள் வேறுபாட்டில் பா.ச.க. வென்றுள்ளது.
கவுகாத்திப் பல்கலைக்கழகத்தில் வாக்குகளின் பிரிவால் ஒரு சில இடங்களையே பா.ச.க. பெற்றுள்ளது. முதுநிலை மற்றும் ஆய்வு மாணவர்களுக்கான தேர்தல் என்ற போதிலும், அய்ந்தாண்டுப் பட்டப் படிப்பு மாணவர்க்கும் விதிகளுக்கு மாறாக வாக்குரிமை தந்துதான் வெல்ல முடிந்தது.
பாட்னா பல்கலைக்கழகத்தில் தலைவர் பொறுப்பு மட்டுமே பா.ச.க.வுக்குக் கிடைத்தது. துணைத் தலைவர், பொதுச் செயலாளர் ஆகியன கட்சி சார்பில்லாதோரிடம் சென்றுவிட்டன. இணைச் செயலாளர், பொருளாளர் பொறுப்புகளில் காங்கிரசின் மாணவர் அமைப்பு வெற்றி கண்டுள்ளது.
பஞ்சாப் பல்கலைக்கழகத்தில், மாணவர் பேரவை என்று கூறப்பட்டாலும், பஞ்சாப், அரியானா மாநில மாணவர் அனைவரும் வாக்களிக்கவில்லை. ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சண்டிகர் நகரில் உள்ள மாணவர்கள் மட்டுமே வாக்குரிமை பெற்றிருந்தனர். பல்கலைக்கழகம் தொடங்கிய 50 ஆண்டுகளில் ஒரு முறைகூட வெற்றி பெறாத நிலையிலிருந்த பா.ச.க. தற்போது தலைவர் பொறுப்பை மட்டும் வென்றுள்ளது. மூன்று இடங்களில் உள்ளூர் அமைப்புகள் வாகை சூடியுள்ளன. உள்ளூர் அமைப்புகள், காங்கிரசு, ஆம் ஆத்மி ஆகியன தனித்தனியே நின்றதால் வாக்குகள் பிரிந்து பா.ச.க. தலைவர் பொறுப்பில் வென்றுள்ளது.
அய்தராபாத் நடுவண் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆறு இடங்களிலும் பா.ச.க. வெற்றி கண்டுள்ளது எதிர்பார்க்காதது.
விதிகளை மீறிய பா.ச.க.
தில்லிப் பல்கலைக்கழகத்தில் 40% வாக்குப்பதிவுதான் நடந்துள்ளது. இதில் தலைவர், செயலாளர், துணைச் செயலாளர் ஆகியவற்றை பா.ச.க. வென்றாலும், துணைத் தலைவராகக் காங்கிரசு மாணவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆளும் கட்சி என்ற முறையில் பா.ச.க. பெரும் தொகை செலவிட்டதாகவும் விலை உயர்ந்த மகிழுந்துகளைப் பயன்படுத்தியதாகவும் தில்லி உயர் நீதிமன்றமே கண்டித்திருக்கிறது. கடந்த ஆண்டு உயர்நீதிமன்றம் வகுத்துத் தந்த விதிமுறைகள் யாவும் மீறப்பட்டுள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. மெட்ரோ பயணக் கட்டணத்தில் தள்ளுபடி என்பது போன்ற கவரும் முழக்கங்களும் முன்வைக்கப்பட்டன.
வாக்குகள் பிரிந்ததால் கண்ட வெற்றி
ராட்ரிய சுய சேவக் சங் அல்லது பா.ச.க.வின் இந்த வெற்றிகள் அனைத்தையும் மதிப்பிடும்போது ஒன்று தெளிவாகிறது. பா.ச.க. பெற்ற அனைத்து வெற்றிகளும், எதிரணியினர் வாக்குகள் பிளவுண்டதால் பெற்றவையாகும். ஒத்த நிலை கொண்ட வேட்பாளர்கள் ஒன்றிணைந்திருந்தால் ஓரிடத்தைக்கூடப் பா.ச.க.வால் பிடித்திருக்க முடியாது என்பதுதான் உண்மை நிலை.
இங்கு குறிப்பிட்டுள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்தும் பெருநகரங்களை ஒட்டி அமைந்தவை என்பதையும் மறந்துவிடக்கூடாது.
அத்துடன், கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்ற மாணவர் பேரவைத் தேர்தல்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இடதுசா£¤யினர், காங்கிரசார், பா.ச.க.வினர் போன்றோர் மாறிமாறி வெற்றி பெற்று வந்திருப்பதையும் காணமுடிகிறது. ஒரு குறிப்பிட்ட கருத்துடையோர் மட்டுமே எப்போதும் வெற்றி பெறவில்லை.
இளைய தலைமுறையினர் அனைவரும் குறிப்பிட்ட கட்சி அல்லது கொள்கை சார்ந்து மட்டும் இருப்பதாக இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டவில்லை.
தலைவர், துணைத் தலைவர், பொதுச் செயலாளர், இணைப் பொதுச் செயலாளர், பொருளாளர் என்பன போன்ற நடுவப் பொறுப்புகளுக்கு ஒவ்வொரு கட்சி அல்லது அமைப்பும் தனித்தனி அணியாகவே போட்டியிடுகிறது. இந்த நிலையில், அணியினர் அனைவரும் (அய்தராபாத் தவிர்த்து) முழுமையாக வெற்றி கண்டதாக இருக்கவில்லை. பா.ச.க. அணி சில இடங்களைப் பெற்றிருப்பது போலவே, காங்கிரசு, இடதுசா£¤யினர், உள்ளூர் அமைப்பினர் ஆகியோரும் அணிகளைக் கடந்து வெற்றி பெற்றிருக்கின்றனர்.
இதிலிருந்து, அரசியல் கட்சி என்ற அடிப்படையில் மட்டுமே மாணவர்கள் வாக்களிக்கவில்லை என்பது தெளிவாகிறது. எனவே, பா.ச.க. பக்கம் மாணவர்கள் சாய்ந்துவிடவில்லை. அத்துடன், பா.ச.க. எதிர்ப்பு உணர்வுகளே மாணவர்களிடம் மேலோங்கியுள்ளன.
சனாதனத்தினை ஒருசில இடைக்கால வெற்றிகளால் மட்டும் பா.ச.க.வினால் காப்பாற்றிவிட முடியாது.
மாணவர் நலன் முன்னிற்கவில்லை
மேலும். இடதுநிலையினர் தவிர, பா.ச.க. அல்லது காங்கிரசு வேட்பாளர்கள் மாணவர்களுடைய சிக்கல்களையோ எதிர்கால நலன்களுக்கான திட்டங்களையோ முன்வைத்துப் பரப்புரை செய்யவில்லை. குறிப்பாக, வேலை வாய்ப்புகள், அவற்றுக்கான அடிப்படைகளை ஏற்படுத்தும் திட்டங்கள் போன்றவை முன்னிலைப்படுத்தப்படவில்லை.
மாணவர்களைச் சமய, இன அடிப்படையில் பிளவுபடுத்தித் தமது செல்வாக்கினை நிலைநிறுத்திக்கொள்ளவே பா.ச.க. முயல்கிறது.
இந்த வெற்றிகளுக்கு அப்பால் இடதுசா£¤யினர் நடத்துகின்ற மாணவர் மற்றும் மக்கள் நலன்களுக்கான போராட்டங்கள் – இயக்கங்கள் போன்றவற்றிலிருந்து மாணவர்கள் ஒதுங்கியும் நிற்கவில்லை.
உள்ளாட்சி, சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்களின் நோக்கங்கள் மாறுவது போன்று, மாணவர் பேரவைத் தேர்தல்களின் நோக்கங்களும் போக்குகளும் அவ்வப்போதைய சூழல்களுக்கேற்பத் தனித்திருக்கின்றன.
கம்யூனிஸ்டுகளின் வெற்றி
மாணவர்களிடம் தி.மு.க. பெரும் செல்வாக்குக் கொண்டிருந்த காலத்தில், காரைக்குடி அழகப்பாக் கல்லூரி மாணவர் பேரவைத் தலைவராக இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியைச் சார்ந்த தா.பாண்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்து, அவரது இளவல் தா.பொன்னிவளவனும் வென்றிருக்கிறார்.
இவற்றால் மட்டுமே மாணவர் அனைவரும் கம்யூனிஸ்டுக் கட்சியைச் சார்ந்தோராக மாறிவிட்டனர் என்று எவரும் கருதிவிடவில்லை.
தி.மு.க. மாணவர்கள் தொடர்ந்து பேரவைத் தேர்தல்களில் வென்று அண்ணா, கலைஞர், நாவலர், பேராசிரியர் போன்ற பெரும் தலைவர்களைக் கல்லூரிக்கு அழைத்துப் பேச வைப்பது தொடர்ந்து 1950, 1960களில் நடைமுறையாக இருந்தது.
இருந்தபோதிலும் 1967 வரை ஆட்சியைப் பிடிக்க அவர்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.
1967இல் தி.மு.க. வெற்றிக்கு இந்தி எதிர்ப்பு உணர்வுகளும் மாணவர்களின் பங்களிப்புகளும் அடிப்படையாக இருந்தபோதிலும், இவை மட்டுமே தி.மு.க.வின் வெற்றியை உறுதி செய்துவிடவில்லை.
தந்தை பெரியார் முன்னெடுத்துப் பண்படுத்தி வைத்திருந்த சமூக நீதிக் கருத்துக்களின் தாக்கங்களை வெளிப்படுத்தி அறுவடை செய்வதில் தி.மு.க. வெற்றி பெற்றது.
1957இல் 15 இடங்கள், 1962இல் 50 இடங்கள் எனப் படிப்படியாக முன்னேற்றம் கண்டுதான் 1967இல் தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது.
1967இல் தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் நடந்த பல்வேறு கல்லூரிப் பேரவைத் தேர்தல்களில் காங்கிரசுக் கட்சி வெற்றிக் கனிகளைப் பறித்தது.
தி.மு.க.வின் கோட்டையாக விளங்கி, பல தலைவர்களை உருவாக்கிய அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1967, 1968ஆம் ஆண்டுகளில் பேரவைத் தலைவர், விடுதித் தலைவர் போன்ற பொறுப்புகளைக் காங்கிரசார் கைப்பற்றினர்.
இருப்பினும், 1971 சட்டப்பேரவைத் தேர்தல்களில் காமராசரின் காங்கிரசு படுதோல்வியைத்தான் கண்டது.
1970இல் நெல்லை இந்துக் கல்லூரி மாணவர் தலைவராக இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியைச் சார்ந்த தோழர் இரா. தங்கமலை வெற்றி பெற்று, கம்யூனிஸ்டுத் தலைவர்களைப் பேசுவதற்கு அழைத்தார்.
மாணவர் நலனுக்கான கம்யூனிஸ்டுப் போராட்டங்கள்
1968இல் தி.மு.க., காங்கிரசுக் கட்சிகளின் எதிர்ப்புகளையும் மீறி, மாணவர் நலனுக்காக 18 நாள் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தினை இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சித் தோழர்கள் வெற்றியுடன் முன்னின்று நடத்தினர். தோழர்கள் மே.து.ரா., போத்திரெட்டி ஆகியோருக்குத் துணையாகத் திரு சுப்பிரமணிய கவிராயர் என்ற காங்கிரசைச் சார்ந்த பேரவைத் தலைவரே கட்சியை உதறிவிட்டு ஒத்துழைப்புத் தந்தார்.
1969- 1971 ஆண்டுகளில் தி.மு.க., காங்கிரசு ஆகியவற்றின் பங்களிப்பில்லாமல், தமிழ் பயிற்சி மொழிக்கான போராட்டங்களை பல்வேறு கல்லூரிகளில் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (அப்போது தமிழ்நாடு மாணவர் மன்றம்) நடத்தியுள்ளது.
வங்க நாட்டில் மாணவர் எழுச்சியால் தலைமை அமைச்சர் சேக் அசினா பதவி இழக்கும் நிலை ஏற்பட்டது. தற்போது பொறுப்பேற்றுள்ளோர் தேர்தல்களை நடத்தத் தயங்குவதும் சேக் அசினாவின் வாக்குரிமையைப் பறிப்பதும் மக்கள் மனநிலை மாறியிருப்பதைக் காட்டுகின்றன.
இளைஞர் போராட்டத்தினையடுத்து நேபாளத்தில் அரசமைப்புச் சட்டத்தைக் காக்கவேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
ஆனால், 1980களில் அசாம் மாணவர் போராட்டத்தின் விளைவுகளால் அசாம் கண பரிசத் ஆட்சியைக் கைப்பற்றிப் பல்லாண்டுகள் செல்வாக்குடன் திகழ்ந்ததையும் புறக்கணித்துவிடக்கூடாது.
மாணவர்களின் அரசியல் தெளிவு
மாணவர்களுக்கு அரசியல் கூடாது என்று கூறுவோர், மாணவர்களைத் தங்களது அரசியல் நலன்களுக்குப் பயன்படுத்தத் தயங்குவதில்லை.
மாணவர்கள் அரசியலிலிருந்து ஒதுங்கி நின்றாலும், அரசியல் அறிவு, நடப்புகளில் தெளிவு, கொள்கைப் பிடிப்பு போன்றவற்றில் உறுதியான நிலைகளைக் கொண்டிருக்கின்றனர் என்பதை மறுக்க முடியாது.
போட்டித் தேர்வுகளையும் வாய்ப்புகளையும் எதிர்நோக்கியிருக்கின்ற இன்றைய நெருக்கடி நிலைகளில், மாணவர்கள் தங்களுடைய கல்வியில் ஈடுபாடு காட்டுகின்றனர். இருப்பினும், அரசியல் அறிவிலிருந்து அவர்கள் விலகி நிற்கவில்லை என்பதையும் வரலாறு காட்டுகிறது.
மக்கள் திரளில் ஒவ்வொரு பகுதியினருக்கும் ஒரு சில எதிர்பார்ப்புகள் இருப்பதைப் போலவே, மாணவர்களிடமும் சில எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. இவற்றை நிறைவேற்றித் தருவதற்கான களமாக மாணவர் பேரவைத் தேர்தல்கள் அமையவேண்டும்.
உலகின் பல நாடுகளில் நடைபெறும் மாணவர் போராட்டங்களைக் குறைத்து மதிப்பிட முடியாது. வெற்றி கண்டாலும் காணாவிட்டாலும், மாணவர்களின் நலன்களைப் பேணும் எண்ணங்களின் வெளிப்பாடுகள் அவை.
தமிழ்நாட்டில் பேரவைத் தேர்தல்கள்
இந்த இடத்தில் வேறொன்றையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. விடுதலைப் போராட்ட களங்களிலும், பின்னர் இந்தி எதிர்ப்பு, சனாதன எதிர்ப்பு நிலைகளிலும் தமிழக மாணவர்களிடம் தெளிவான ஈடுபாடு இருந்தது.
திராவிட இயக்கத் தலைவர்களில் பலர், மாணவர் இயக்கச் செயல்பாடுகளின் பயன்களாகவே உருவெடுத்தனர் என்பதை மறுக்க முடியாது.
ஆனால், கடந்த பல பத்தாண்டுகளாகத் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மாணவர் பேரவைத் தேர்தல்கள் முறையாக நடத்தப்படவில்லை. தனியார், தன்நிதிக் கல்லூரிகளில் மாணவர் பேரவை என்ற எண்ணங்களே எழ இயலாது.
கல்வி நிலையங்களில் அரசியல் தலைவர்கள் முழங்கிய நிலைகள் மாறி, பட்டிமன்றப் பேச்சாளர்களும் மனித வளக் கைதட்டல் பேச்சாளர்களும் உலா வருகின்றனர்.
இந்த நிலையில், மாணவர் நலன்களுக்கான செயல்பாடுகள் முன்னிலை பெற மாணவர் பேரவைத் தேர்தல்கள் நடப்பதைத் தமிழ்நாடு உறுதிப்படுத்தவேண்டும்.