கட்டுரைகள்

ஆவணம் அறிவோம் 3: எதிர்க்குரலான இடப்பெயர்ச்சி 1

ஆ.சிவசுப்பிரமணியன்

இடம்பெயர்தல் புலம்பெயர்தல், வலசை வாங்குதல் என்ற சொற்கள் ஒரு சமூகக் குழுமம் தாம் வாழும் இடத்தில் இருந்து வெளியேறி வேறு ஓர் பகுதியில் குடியேறுவதைக் குறிப்பதாகும். இவ்வாறு வெளியேறியவர்கள் வேறு ஓர் ஊரில் தங்கி தம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வர். ‘இது ஓரளவு நிரந்தமான நகர்தல்’ என்று குறிப்பிட்டுவிட்டு ‘இது ஓர் அரசியல் எல்லையைக் கடந்து ஒரு புதிய பண்புக் குழுவுக்கோ அல்லது வாழும் பகுதிக்கோ செல்வதாக இருக்கும்’ என்று சமூகவியல் அகராதி குறிப்பிடும்.

இக்கட்டுரை மன்னர் ஆட்சிக்காலத் தமிழ்நாட்டில் நடந்த இடப்பெயர்ச்சிகளை அறிமுகம் செய்கிறது.

இடப்பெயர்ச்சி மேற்கொண்டோர்:

படையெடுப்பு, கலகம், கடும் பஞ்சம், இயற்கைச் சீற்றங்கள் என்பன மக்களின் இடப்பெயர்ச்சிக்கான பொதுவன காரணங்களாக அமைந்தன. இவை தவிர அதிக
வரிவிதிப்பு, சமூக ஒடுக்குமுறைகள் என்பனவும் இடப்பெயர்ச்சிக்குக் காரணமாக அமைந்தன. அன்றைய தமிழ்ச் சமூக அமைப்பில் உழவர்கள், நெசவாளர்கள், பஞ்சகருமர்கள் (கொல்லர், தச்சர், கல்தச்சர், பொற்கொல்லர், கன்னார்) என்போர் மேற்கொண்ட இடப்பெயர்ச்சி குறித்த செய்திகள் தமிழ்க் கல்வெட்டுக்கள் சிலவற்றில் இடம் பெற்றுள்ளன. இவர்கள், தாம் உற்பத்தி செய்யும் பொருள்வடிவிலோ, பணவடிவிலோ, வரி செலுத்தி வந்தவர்களாவர்.

உற்பத்திப் பொருள்களை, அளப்பன நிறுப்பன- மடிப்பன- உரைப்பன என்று வகைப்படுத்தியள்ளதை ஜடாவர்மன் வீரபாண்டியனின் நான்காவது ஆட்சியாண்டுக் கல்வெட்டு (கி.பி.1263) குறிப்பிடுகிறது. மடிப்பன என்பது நெய்யப்பட்ட துணிகளைக் குறிப்பதாகும். இவ்வகைப்படுத்தலானது வரிவிதிப்பிற்குத் துணைபுரிந்துள்ளது. வண்ணார், நாவிதர் போன்ற சேவைக்குடிகளும் வரிவிதிப்புக்கு ஆளாயினர். கால்நடைகளுக்கும் கூட வரிவிதிக்கப்பட்டது.

உழவர்கள் பெரும்பாலும் தமக்கு உரிமையான நிலத்திற்கு அதன் பரப்பளவிற்கேற்ப வரிசெலுத்தினர். இது கடமை எனப்பட்டது. சொந்த நிலமின்றிக் குத்தகை விவசாயியாகவோ, ஊதியத்திற்கு வேளாண்வேலைகளைச் செய்தோ வாழ்ந்தவர்கள் உழுது பயிரிடும் குடி என்ற பொருளில் உழுகுடி, உழுகுடிமக்கள் என்றழைக்கப்பட்டனர். நில உரிமையில்லாத இவர்களும் கூட ‘குடிமை’என்ற பெயரில் வரி செலுத்தி வந்தனர். உழுகுடிகள் பெரும்பாலும் தானிய வடிவிலேயே வரி செலுத்திவந்துள்ளனர். சான்றாகக் கல்வெட்டுக்களில் இடம் பெறும் நெல்லாயம் என்ற சொல் நெல்வடிவில் செலுத்திய வரியைக் குறிப்பதாகும். (ஆயம் – வரி)நெசவாளர்கள் தறிஇறை என்ற பெயரில் ஒரு தறிக்கு இவ்வளவு என்று பணமாக மட்டுமின்றி ஆடையாகவும் செலுத்தி உள்ளனர். பணமாக வரி செலுத்துபவர்கள் காசாயக்குடிகள் (காசை ஆயமாகச் செலுத்துபவர்கள்) என்றழைக்கப்பட்டுள்ளனர். மொத்தத்தில், நில உரிமையாளர்கள், கைவினைஞர்கள், கால்நடைகள், வளர்ப்போர், சேவைக்குடிகள் எனப் பலரும் வரிவிதிப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

வரிவிதிப்பின் பாதிப்பு :

சில நேரங்களில் வரி உயர்வை மன்னர்கள் நடைமுறைப்படுத்தினார்கள். இயற்கைச் சீற்றத்தினாலோ, வேறு காரணங்களாலோ விளைச்சல் குன்றினாலும் வரிநீக்கம் அல்லது வரிக்குறைப்பு என்பன செய்யாது வழக்கம் போல்வரி வாங்கினர். வரி வாங்குதலில் கடுமையும் காட்டினர். இடைக் காலச் சோழர்காலக் கல்வெட்டுக்களில் இடம்பெறும் ஒரு தொடர் ‘குடாத அளவில் வெண்கலம் எடுத்து மண்கலம் உடைத்து எடுத்துக்கொள்ளக் கடவர் ஆகவும்’என்பதாகும்.இத்தொடர் வரியைப் பெறுவதில் பின்பற்றிய கடுமையான வழிமுறையை வெளிப்படுத்துகிறது.

வரி செலுத்தாதவன் வீட்டிலுள்ள மதிப்புமிக்க உலோகப் பாத்திரங்களைக் கைப்பற்றுவதுடன் அவன் வீட்டிலுள்ள மதிப்பற்ற மண் பாத்திரங்களையும் அவன் பயன்படுத்த முடியாதபடி உடைக்கும் செயலை மேற்கொண்டதை இத்தொடரின் வழி அறியமுடிகிறது. வரிகட்டாதார் நிலம் பறிமுதல் செய்யப்பட்டு விற்கப்பட்டது.

வரி வாங்க வருவோர்:

வரிவாங்க வரும் அதிகாரிகளும் ஊழியர்களும் கடுமையான முறையில் நடந்து கொண்டனர். நில உடைமையாளர்கள் செலுத்த வேண்டிய வரியையும் கடனையும்,
அவர்களது நிலங்களைக் குத்தகைக்குப் பயிரிடும் உழுகுடிகளிடம் வற்புறுத்தி வாங்கியுள்ளனர். வற்புறுத்தல் என்பதில் வரி செலுத்தாதோரிடம் கடுஞ்சொற்களைப் பயன்படுத்தல் என்பதும் இடம் பெற்றிருந்தது. சிறையில் அடைத்தலும் நிகழ்ந்துள்ளது. அதேநேரத்தில் இத்தகைய கடுமையான வழிமுறையை வேளாளர், பிராமணர் என்ற சமூகப் பிரிவினரிடம் நடைமுறைப்படுத்தக் கூடாது என்ற விதிமுறையும் இருந்துள்ளது.
இதை ‘கடமை கட்டி (நில வரிக்கு) வெள்ளாளர் அகங்களில் புக்கு ஒடுக்காதொழியவம் சிறைப்பிடித்தல் இவர்கள் அகங்களில் (வீடுகளில்) ஒடுக்குதல் செய்யக் கடவதல்லதாகவும்’ என்ற கல்வெட்டுத் தொடரால் அறிய முடிகிறது. (தெ.இ.க.6 :50) இவ்விரு பிரிவினருடனும் முரண்படுபவர்களை கிராமத்துரோகிகள், நாட்டுத்துரோகிகள் என்று மற்றொரு கல்வெட்டு (மேலது: 58) அடையாளப் படுத்துகிறது.

மேலும் அரசு ஊழியர்கள் பலரும் வந்து தாம் விரும்பியவாறே வரி வாங்கியமையும் நிகழ்ந்துள்ளதை ‘பலரும் கைவந்தபடி தண்டிக்கொள்வதாலே…வெள்ளாமை செய்து குடியிருக்கப் போகுதில்லை என்று நாட்டார் (ஊரார்)சொல்லுகையாலும்’ என்ற மூன்றாம் ராஜராஜ சோழனின் கி.பி 1239 ஆம் ஆண்டுக் கல்வெட்டுத் தொடரால் அறிய முடிகிறது(தெ.இ.க 6: 50, 58). தண்டிவர்மன் என்பவன் பொன் வழங்குமாறு குடிமக்களைக் கட்டாயப்படுத்தி உள்ளான். அப்போது’ பொன்னிடமாட்டாத குடிபலவும் நிற்கமாட்டாது போனமையில்’ என்று கி.பி 847வது ஆண்டுக் கல்வெட்டொன்று குறிப்பிடுகிறது. (மேலது : 344) இவ்வாறு மன்னனும் அவனது அதிகாரிகளும் மேற்கொள்ளும் கொடிய வழிமுறைகளை எதிர்கொள்ள முடியாத நிலையில் உழுகுடிகளும் சிறு நில உரிமையாளர்களும் தப்பித்துக் கொள்ளும் வழிமுறையாக வேறு ஆட்சிப் பகுதிக்கு இடப்பெயர்ச்சியை மேற்கொண்டுள்ளனர்.

உழு குடிகள் இடப்பெயர்ச்சியின் விளைவுகள்:

உழுகுடிகள் இடப்பெயர்ச்சியை மேற்கொண்டு வேறு பகுதிகளுச் சென்றபோது, இதுவரை வேளாண்மை மேற்கொள்ளப்படாத, நிலங்கள் இவர்களுக்குத் தரப்பட்டதை ‘மேடுந் திடரும் கஈடும் களரிலும் திருத்திப் பயிர் செய்து கொள்ளலாம்’ என்ற தொடரால் அறிய முடிகிறது. இதனால் வேளாண்மை நிகழும் நிலப்பரப்பு விரிவடைந்ததுடன் நிலவரியும் அரசுக்குக் கிடைத்தது. சில போழ்து புதிதாகக் குடியேறியவர்களுக்குச் சில ஆண்டுகள் வரிவிலக்கும் கிடைத்தது. அதேநேரத்தில் தனிமனித இடப்பெயர்ச்சிகள் கண்டுகொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.

(தொடர்ச்சி கைவினைஞர்களின் இடப்பெயர்ச்சி)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button