

2019 ஆகஸ்ட் மாதத்தில், காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்புத்தகுதி வழங்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370 ஆவது விதி அகற்றப்பட்டது.
காஷ்மீர் இரண்டு பகுதிகளாக உடைக்கப்பட்டது. அதன் மாநிலத் தகுதி பறிக்கப்பட்டு, யூனியன் பிரதேசமாக்கப்பட்டது. பல வாரங்களுக்கு இணையதள சேவை நிறுத்தப்பட்டது. மக்கள் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டன. ஒவ்வொரு தெருவிலும் ஆயுதமேந்திய ராணுவ வீரர் நிறுத்தப்பட்டார்.
“நாங்கள் தலையைத் தொட்டுவிட்டோம். அடுத்து கால்களைக் கவனிக்கப் போகிறோம்” என்று ஒரு பாஜக தலைவர் சொன்னார்.
அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் தலை காஷ்மீர் என்றால், கால் தமிழ்நாடு தானே!
ஆனால் காலைத் தொடும் முன்பாக, இந்தியாவின் பிற மாநிலங்களில் தனது சித்து விளையாட்டுகளை பிஜேபி சோதித்துப் பார்த்திருக்கிறது.
இந்திய அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட சரத் பவாரிடமிருந்து அவரது தேசியவாத காங்கிரஸ் கட்சியைப் பறித்துக் கட்சியை அஜித் பவாருக்குச் சொந்தமாக்கியது.
ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த சிவசேனா கட்சியை உத்தவ் தாக்கரேயிடம் இருந்து பறித்து ஷிண்டேயிடம் தாரை வார்த்தது.
‘இந்தியா’ கூட்டணியைத் துவக்கி வைத்த நிதீஷ் குமாரை, தட்ட வேண்டிய இடத்தில் தட்டி தன்னோடு இணைத்துக் கொண்டது.
சந்திரபாபு நாயுடுக்கு காராக்கிரகத்தின் வாசலைக் காண்பித்து அச்சுறுத்தி, கூட்டணி சேர்த்து வெற்றி கண்டது.
தமிழ்நாட்டில் மெல்ல மெல்ல காய் நகர்த்தி, அதிமுக என்னும் கட்சியை அரித்துக் கொண்டிருக்கிறது.
ஜெயலலிதா உள்ளிட்டோர் மீது ஆண்டாண்டு காலமாய் நிலுவையில் இருந்த வழக்கு, அவரது மறைவுக்குப் பின், சசிகலா பெயர் முதல்வருக்காக முன்மொழியப்பட்ட உடனேயே, அவரைச் சிறைக்கு அனுப்பும் தீர்ப்பு எழுதப்பட்டது.
‘நீ எல்லாம் ஆண்மகன்தானா’ என்று முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை, ஆடிட்டர் குருமூர்த்தி மிரட்டித் தவம் செய்ய ஜெயலலிதா சமாதிக்கு அனுப்பி வைத்தார். பிறகு காணாமல் போயிருந்த கவர்னர் திடீரென சென்னையில் பிரசன்னமாகி ஓபிஎஸ்ஸையும் ஈபிஎஸ்ஸையும் அழைத்துப் பதவி ஏற்பு விழாவில் அவர்களது கைகளைப் பிடித்து இணைத்து வைத்தார்.
அதன் பிறகும், பிஜேபியோடு உறவே வேண்டாம் என்று வெட்டி விட்டுச் சென்ற இபிஎஸ், தன் கால் அருகில் வைக்கப்பட்ட கண்ணி வெடிகளால் சேதப்பட்டு, தானாகவே டெல்லி தேடிப் போய் மீண்டும் கூட்டணியை உறுதி செய்தார்.
தமிழ்நாட்டில் அதிமுக பிஜேபி கூட்டணி ஆட்சிதான் என்று அவரையும் வைத்துக் கொண்டு அமித்ஷா பேசினார். அப்போதைக்கு வாய் மூடி இருந்துவிட்டு, பிறகு அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும் என்கிறார் எடப்பாடி.
கூட்டணி வைத்த கட்சிக்குக் குழி தோண்டி கீழிறக்கி விட்டு, அதன் இடத்தில் தான் படர்ந்து பரவுவதே பல மாநிலங்களில் பிஜேபி கையாண்ட துரோகத் தந்திரம். கூட்டணி ஆட்சி கிடையாது என்று பேச்சுக்குக் கூடச் சொல்லக் கூடாது என்கிற கட்டத்திற்கு எடப்பாடியை நகர்த்த, மகாராஷ்டிரா, பீஹார் உத்திகளை தமிழ்நாட்டிலும் பிஜேபி மிகத் தீவிரமாகச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
ஒரு கட்சித் தலைமை இன்னொரு கட்சித் தலைமையோடு பேசிக் கூட்டணி ஏற்படுத்துவது என்பது வழக்கம். ஆனால் பிஜேபி, அதிமுகவில் உள்ள வெவ்வேறு தலைவர்களோடு தனித்தனியாகப் பேசி, தனது விருப்பத்திற்கு ஏற்ப அவர்களை இயங்க வைக்கிறது. இதற்காக அவர்கள் ஒவ்வொருவர் தலையையும் வழக்கு வலைக்குள்ளாகச் சிக்க வைத்திருக்கிறது. மடியில் கனம் உள்ளவர்கள், வழியில் பயப்படுகிறார்கள்.
இது ஒரு தனிப்பட்ட கட்சியின் விவகாரம் மட்டுமே என்றால், அதற்குள் நுழைந்து கருத்துகளைச் சொல்ல வேறொருவருக்கு உரிமை இல்லை.
ஆனால் இது தமிழ்நாட்டின் எதிர்காலம் குறித்தது. இங்கு ஆன்மீகம் உண்டு; ஆனால் அது அறிவியலைப் புறம் தள்ளியது இல்லை. கொலைவாளினை எடுக்கும் அளவுக்கு மதவெறுப்பு பரவியதில்லை. ‘பிச்சை புகினும் கற்கை நன்று’ என்று கல்வியை வாழ்வின் மேன்மையைக் கொண்டாடுகிற சமூகம் இது.
அதற்காக இங்கு எல்லாம் நன்றாக இருக்கிறது என்று வாதாட முடியாது. ஆனால் ‘பழையது அகன்று புதியது நுழைய’ இடைவிடாது எடுக்கப்படும் முயற்சியில் ஓட்டை விழுந்து, முன்னேற்றங்களை இழந்து, காலத்துக்கு ஒவ்வாத கயமைகள் உள் நுழைந்து விடக்கூடாது.
காஷ்மீரின் கதி தமிழகத்திற்கு ஏற்படாமல் தடுக்க, பிஜேபியின் தகிடுதத்தங்களைப் பகுத்தறிந்து எதிர்த்து முறியடிக்க வேண்டிய கடமை தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற முற்போக்கு ஜனநாயக இடதுசாரி சக்திகளுக்கு இருக்கிறது.