காலந்தோறும் கம்யூனிஸ்ட்டுகள் – நூல் ஒரு பார்வை (பகுதி -1)
க.திருநாவுக்கரசு, திராவிட இயக்க ஆய்வாளர்

கடந்த ஜூலை 20 ஆம் தேதி சென்னைகாமராசர் அரங்கில் கவிஞர் ஜீவபாரதி எழுதிய ‘காலம் தோறும் கம்யூனிஸ்டுகள்’ எனும் நூல்–இரண்டு பாகங்கள் வெளி யிடப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஓய்வு எடுத்து வந்ததால் அந்நூல்களை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார். முதல்வரால் விழாவுக்கு வர இயலவில்லை. ஆனால் முதல்வர் ஓர் அருமையான இலட்சிய வாழ்த்துச் செய்தியை அனுப்பி யிருந்தார்.
அதில் ஓரிடத்தில்இந்திய சமூக அமைப்பைப் பொருத்தவரை அதிகார விடுதலை மட்டும் போதாது, வர்க்க விடுதலையும் சமூக விடுதலையும் இணைந்ததாக இருந்தால்தான் அது முழுமையானதாக இருக்கும் என்று அன்றைய பொதுவுடைமைத் தலைவர்களின் கருத்தும் சமூக இயக்க வழிவந்த திராவிட இயக்க முன்னோடிகளின் சிந்தனையும் எத்தனை தீர்க்கமானது என்பதை இன்றுவரை அனுபவ ரீதியாக உணர்ந்து வருகிறோம். அதனால்தான் பொதுவுடைமை இயக்கமும் திராவிட இயக்கமும் இந்த இருபெரும் விடுதலைக்காக இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக இன்றுவரை இயங்கி வருவதையும் நாம் அறிவோம்”என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
முதல்வரின் இந்தப் பாராட்டு மிக ஆழமானது. வர்க்கமா? சமூக விடுதலையா? இந்த வினாவின் இரண்டும் இணைந்த செயல்பாட்டு விடையில்தான் அரசியல் புரட்சி மறைந்து உள்ளது என்று நாம் கூறுகின்றோம்.
பொதுவுடைமை இயக்கம் நூற்றாண்டை கண்ட இயக்கம். அதன் வேரினில் இரத்தத்தைச் சிந்தியவர்கள், தமது இன்னுயிரை அளித்தவர்கள், தூக்குக் கயிற்றை முத்தமிட்டவர்கள், கொலை செய்யப்பட்டவர்கள், உழைப்பை தமது வாழ்க்கை முழுவதும் நல்கியவர்கள், ஏகாதிபத்திய பிரபுத்துவத்திற்கு எதிராக களத்தில் நின்று தம்மை இழந்தவர்கள். எந்த நிலையிலும் கொள்கைப்போர் நடத்தியவர்கள். இயக்கத்திற்கு உடைமையை வழங்கியவர்கள், உடைமைப்பித்து இல்லாதவர்கள், இயக்கக் கல்வியை வழங்கியவர்கள் என பெரும் பட்டியல் பொதுவுடைமை இயக்கத்திற்கு என்று உண்டு. அப்பெருமக்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை–ஒரு நூறு பேருக்கானதை கவிஞர் ஜீவபாரதி தொகுத்து எழுதி நூலாக்கி இருக்கிறார். அதுதான் ‘காலம் தோறும் கம்யூனிஸ்டுகள்’ எனும் நூல்.
அந்த நூறு பேருக்கான வீரர்களின் பட்டியலில் வீராங்கனைகளும் பத்து பேர் ஒளிர்கிறார்கள். அவர்களின் போராட்டக் களம் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான, நிலவுடை மைக்கு எதிரான மக்களுக்கான போராட்டமாக இருந்து இருக்கிறது. தனியுடைமைக் கொடுமைகள் தீர போர்க்களத்தில் நின்ற அவர்கள் இந்நூலின் வழியாக நம்மைப் பார்த்து மீண்டும் குரலெழுப்புகிறார்கள். பொன்னுலகைக் காண அணியமாகுங்கள் என்கிறார்கள். புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் பாடலை இப்படி முழங்குகிறார்கள்.
‘‘உலகம் உண்ண உண்! உடுத்த உடுப்பாய்!
புகல்வேன்; ‘உடைமை மக்களுக்கு பொது’
புவியை நடத்துப் பொதுவில் நடத்து!
வானைப் போல் மக்களைத் தாவும்
வெள்ளை அன்பால் இதனைக்
குள்ள மனிதர்க்கும் கூறடா தோழனே!”
இவ்வாறு முழங்கும் ‘காலம் தோறும் கம்யூனிஸ்டுகள்’ எனும் நூல் நம் பார்வைக்கு வந்தது. வழுவழுப்பான தாள். உயர்ந்த அச்சு; படிப்பதற்கு எளிதான வகைப்பாடு. சிறந்த கட்டட அமைப்பு, இரண்டு பாகங்கள்–524 பக்கங்கள் விலை ரூ.2000/. நூலின் ஏடுகளைப் புரட்டினால் களங்களைக் கண்ட வீரர்கள் எம்மை நோக்கிப் பேசுகிறார்கள். எம்மை பின் நோக்கி இழுக்கிறார்கள். எல்லாம் முடிந்த போது முன்னே போங்கள்– ‘வேலை இருக்கிறது, நிரம்ப!’ என்கிறார்கள் அறிஞர் அண்ணாவைப்போல!
நூலின் பதிப்புரையே வேலோடு நிற்கிறது; ஏனெனில் புத்தகத்தை வெளியிடுபவர்கள் என்.சி.பி.எச்.நிறுவனம். அடுத்து இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசனின் அணிந்துரை நூலினுள்ளே செல்வதற்கு முன் ‘நீள்நெறி’யை சுருக்கமான வரலாறாகக் காட்டி அதன் திசையைச் சுட்டுகிறது. கட்சி அரசியலுக்கு ஏற்ற – அணிந்துரை. படிக்கப் போகிறவரை ‘எல்லாம் சொல்லி’ அனுப்பி வைக்கிற உத்தி. திசைமானி பாணி. நாம் அவரைப் பாராட்டாமல் இருக்க முடியாது. ஏனெனில் அமைதியாய் அறிவாயுதத்தை வழங்குகிறார். அரசியல் கல்வியைப் போதிக்கிறார். இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் தொடக்க நாளினை ஆய்வு செய்து வெளிப்படுத்தி உள்ளார். அணிந்துரைக்குள் வரலாற்றைச் சொல்லி இருக்கிறார். உண்மையில் நூலுக்குரிய அணி செய்கிற தொடக்கம்.
நூலினுள்ளே நுழையப் போகிறோம். இப்பட்டியலில் உள்ளவர்களுள் எல்லோரையும் பற்றி நாம் அறிய வாய்ப்பில்லை. எந்த ஒரு இயக்கத்திலும் வெளியில் தெரியாத வேர்கள்தான் எண்ணிகையில் அதிகமாக இருப்பார்கள். அவற்றினுள்ளும் ஒரு சிலரைத்தான் தெரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்புக்கிட்டும். அவர்களை மட்டுமே பதிந்து மற்றவர்க்கு காட்ட முடியும். அப்படித்தான் ஜீவபாரதியும் நமக்குக் காட்டுகிறார்.
ஆனால் நாம் இதற்கு முன்பாகவே பொதுவுடைமைச் சிந்தனையாளர்களான ம.சிங்காரவேலர், அமீர்ஹைதர் கான், ப.ஜீவானந்தம், ஏ.எஸ்.கே., ஏ.கே. கோபாலன், இ.எம்.சங்கரன் நம்பூதிரிபாட், ஞானையா, மணலி கந்தசாமி, என்.கே. கிருஷ்ணன், வி.பி.சிந்தன், கோவை கண்ணா குட்டி, ஜெயகாந்தன், பி.சுந்தரையா, தா.பாண்டியன், தொ.மு.சி.ரகு நாதன் முதலான கம்யூனிஸ்டு தலைவர் களைப் பற்றிய வரலாறுகளை எந்தெந்த வடிவத்தில் அவை வெளியிடப்பட்டனவோ அதன் படியே நாம் படித்து இருக்கின்றோம். அவை நம் நினைவில் நிழலாடிக் கொண்டிருக்கின்றன. சிந்தனையைத் தெளிவாக்கிக் கொள்ள உதவி இருக்கின்றன. என்.சி.பி.எச். வெளியிட்ட எரிகுண்டு தியாகி களைப் பற்றிய புத்தகங்களையும் நாம் படித்து இருக்கின்றோம். எந்த அரசியல் இயக்கமானலும் அதில் ஈடுபாடு கொள்கிறவர்கள் தம்மைப் பற்றிய பதிவுகளைச் செய்வதில்லை. அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. இன்னும் சொல்லப் போனால் அத்தகையவர்களுக்கு அப்படிப்பட்ட நினைப்பும் இருப்பதில்லை.
மனித குல வரலாறு என்பதே மனிதர்களின் நிலை நிறுத்தல் ஆகும். அதைப்பற்றிய விவரங்கள் ஜீவபாரதி போன்றவர்கள் செய்ய முனைவார்கள். அதன் விளைவே ‘காலம் தோறும் கம்யூனிஸ்டுகள்’ எனும் நூல். வரலாற்றில் இது ஒரு துளி. நல்ல அறிமுகம். ஜீவபாரதி நூலினுள் புகுமுன் பகுதியில் இந்நூல் தோன்றியதற்கான செய்தியைச் சொல்லி இருக்கிறார். கடினசித்தம் இல்லாமல் எந்தச் செயலும் மாபெரும்வெற்றியைப் பெறுவதில்லை. அந்த வெற்றியை இந்நூல் உறுதியாக உழைக்கும் மக்களிடயே உருவாக்கும்.
நூலினுள்ளே முதல் பாகத்தில் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் தொடங்கி இரண்டாம் பாகத்தில் மதுரை மண வாளன், மாரி போன்றவர்களோடு முடிவடை கிறது. ஒவ்வொரு தோழர்கள் பற்றிய வரலராற்றுக் குறிப்புகளோடு – அவர்கள் யார், எப்படி இருப்பார்கள் என்கிற விதத்தில் வண்ண ஓவியங்கள் இடம் பெற்று இருக்கின்றன. புகழ் பெற்ற, நாடறிந்த தோழர்களைவிட இவ்வோவியங்கள் மற்ற தோழர்களை வெளிப்படுத்திக் காட்ட பெரிதும் உதவிகரமாக இருக்கும். துணையாகச் செயல்பட்டவர்களையும் நூறு பேருக்கு மேலாக ஓவியமாகப் பார்க்கின்றோம்.
இந்நூலினுள்ளே இடம் பெற்று இருக்கிற வீராங்கனைகள் பார்வதி கிருஷ்ணன், மணலூர் மணியம்மை, கே.பி.ஜானகி, சிகப்பி, மீனா கிருஷ்ணசாமி, சரஸ்வதி சுப்பையா, பாப்பா உமாநாத், கல்யாணி குமாரமங்கலம், ஜனகம் இஸ்மாயில், சிவகாமசுந்தரி ஆகியோர் ஆவர். ‘மூத்த மகளிர் ஆதல் தகுதி’ எனச் சங்க இலக்கியம் பேசுவதற்கொப்ப இவர்களை நாம் கருதலாம். அவர்களின் தியாகங்களைப் போற்றலாம். பெண்கள் என்றால் பின்புத்தி உடையவர்கள் என்றும் ‘சூத்திர’த் தன்மை உடையவர்கள் என்றும் இவர்களின் நட வடிக்கைகளைப் பார்த்தால் சொல்ல முடியுமா? அந்தக் கற்பனைகள் சுக்கு நூறாக உடைந்து போகும். இதர மகளிரை வீராங்களை களாக்க இவர்களின் வாழ்க்கை ஒரு முன்மாதிரியாகத் திகழும் என்பதை இவர் களின் வரலாற்றுக் குறிப்புகளைப் படிப்பவர்கள் அறிந்து செயல்பட முனைவர்.
சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர் பற்றிய கட்டுரை முதலில் இடம் பெற்று இருக்கிறது. அவர்தான் தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்டு. அப்படி முதலில் இடம் பெற்றிருப்பது சாலப் பொருத்தப்பாடு உடையதாகும். சிந்தனைச் சிற்பி என்பது ம.சிங்காரவேலர் மறைவுற்றதையொட்டி 24.02.1946 திராவிட நாடு வார ஏட்டில் அறிஞர் அண்ணா, அவருக்கு மகுடம் சூட்டி எழுதியதாகும். இக் கட்டுரையில் 1932க்குப் பிறகு சிங்காரவேலர் குடிஅரசில் எழுதியது போன்ற ஒரு கருத்து மயக்கம் உள்ளது. பெரியார் – சிங்காரவேலர் சந்திப்பு 1931 இல் நடந்தது. இது முதலே அவரது கட்டுரைகள் குடிஅரசில் இடம் பெறத் தொடங்கின. சிங்காரவேலர் 1935 வரை தொடர்ந்து குடிஅரசில் எழுதினார்.
நூலாசிரியர் ஒவ்வொருவரைப் பற்றியும் கட்டுரையின் தொடக்கத்தில் அறிமுகம் செய்கிற போது இந்திய சமூகத்தில் அவர் களின் இடத்தைச் சொல்கிறார். கட்டுரைகளில் ஆங்காங்கே எம்.என்.ராய் வருகிறார். எஸ்.ஏ.டாங்கேயும் அவர் எழுதிய நூல் களின் தலைப்பும் சொல்லப்படுகின்றன. பி.இராமூர்த்தியைப் பற்றி குறிப்பிடும் போது சென்னை மாகாண கம்யூனிஸ்டுக் கட்சி அதிகாரப் பூர்வமாக 1936 இல் தொடங்கப்பட்டதைத் தெரிந்து கொள்கின்றோம். அதன் முதன் செயலாளராக சி.எஸ்.சுப்பிரமணியம் செயல்பட்டதை ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
அமீர் ஹைதர்கான் பற்றிய செய்தி அநேக கட்டுரைகளில் விரவி இருக்கின்றன. சில கட்டுரைகளில் வி.கே. நரசிம்மன் வருகிறார். இவரை நாம் அறிவோம். தேர்ந்த ஆங்கிலப் புலமையுள்ள இவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் டெல்லி பதிப்புக்கு தலைமை ஆசிரியராக இருந்தார். ‘ஹிந்து’ கஸ்தூரி அய்யங்காரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர். அவரது கடைசி காலம் சத்ய சாயிபாபா அலுவலகத்தில் கழிந்தது. போராட்டக் களத்தில் இப்படியும் சில காட்சிப் பிழைகள் வரும்.
ஏ.எஸ்.கே.(கிருஷ்ணசாமி)யைப் பற்றிய கட்டுரை அவரை நாம் சந்தித்ததை நினைவுப்படுத்தியது. பெரியார் மறைவுக்குப் பிறகு, ‘பகுத்தறிவின் சிகரம் பெரியார்’ என்றொரு நூலை ஏ.எஸ்.கே. எழுதியிருந்தார். பெரியார் திடலில் மணியம்மையார் அதனை வெளியிட்டார். அந்நூலில் கடைசியாக முடிக்கிறபோது பெரியாரை ஆதி சங்கரர், இராமாநுஜர், சைதன்யர் ஆகியவர்களோடு ஒப்பிட்டு முடித்து இருப்பார். அந்தக் கருத்தை விளக்குமாறு கேட்க நேரில் சென்று இருந்தோம். விளக்கிச் சொன்னார். அவரின் அறிவின் திட்பத்தை உணர்ந்தேன்.
கட்டுரைகளில் இடம் பெற்று இருக்கிற வீரவணக்கத்திற்குரிய தோழர்கள் அனுபவித்த சிறை தண்டனைகள் ஆண்டு கணக்கில் 10,12,16,17 ஆண்டுகள் என்று உள்ளதை ஜீவபாரதி மறக்காமல் பதிவு செய்து இருக்கிறார். அவர்களின் பொது வாழ்க்கைக்கும் தியாகத்திற்கும் எல்லையே இல்லாமல் இருந்து இருக்கிறது. இப்போது இதனைப் படிக்கிற இளைய தலைமுறையினர் இந்த நிகழ்வு மெய்யானதுதானா என்று நினைக்கக் கூடிய வகையில் வினா எழுப்புவர். அப்படிப்பட்ட தியாகங்களைச் செய்தவர்கள் இந் நூலினுள்ளே பேசப்பட்டு இருக்கிறார்கள்.
நாகை முருகேசன், பெரியார் திடலுக்கு வருபவர், பெரியார் நூலக வாசகர் வட்ட நிகழ்வில் கலந்து கொள்ளுபவர், அவர் கையெழுத்திட்டுப் போட்டு புத்தகம் ஒன்றினை வழங்கினார்– எமக்கு! சிறுபிரசுரங்களை அச்சிட்டு அதற்குரிய காசை வாங்கிக் கொண்டு வழங்குவார். அந்தப் பணத்தை ஒரு கைக்குட்டையில் முடிபோட்டு வைத்திருப்பார். அதை வைத்து மீண்டும் வெளியீடுகளைக் கொண்டு வருவார். அவரைப் பற்றியும் இந்நூல் பேசுகிறது.
வசதி மிகக் குறைவான காலத்தில் இப்பெருமக்கள் எத்தகைய சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கிற போது சிந்தை நோகிறது. ஜீவா, சீனிவாச ராவ், புதுவை சுப்பையா, ஜமதக்னி ஆகியோரின் வரலாற்றுக் குறிப்புகள் கிளர்ச்சியூட்டுகின்றன.
‘இந்தியாவின் வறுமையைப் பற்றிய ஆராய்ச்சி’ எனும் நூலின் முன்னுரையில் தினமணி ஆசிரியராக இருந்த ஏ.என்.சிவராமன் எழுதுகிறபோது ஜமதக்னியைப் பற்றி குறிப்பிடுகிறார். 1920 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தின் போது கைதானவர்களில் ஜமதக்னியும் ஒருவர். அப்போது சிங்காரவேலரும் சிறையில் கைதாகி இருந்தார். அங்கேதான் சிங்காரவேலர்மார்க்சிய வகுப்பு எடுக்கிறார் என்பதை ஏ.என்.எஸ்.எழுதுகிறார். அதில் ஜமதக்னி பங்கேற்கிறார். அந்தச் சிந்தனை ஜமதக்னியின் வாழ்க்கையில் தொடருகிறது.
ஜமதக்னி தமிழாக்கிய மூலதனத்தை வெளியிட்டவர் பேரா.நாகநாதன் என்று மட்டும் ஜீவபாரதி எழுதியிருக்கிறார். கலைஞர் மூலதனத்தைப் பதிப்பிக்க அரசின் சார்பாக வழங்கிய ரூபாய் ஐந்து லட்சத்தைப் பற்றி அவர் குறிப்பிட்டு இருக்கலாம். சிறப்பாக இருந்திருக்கும். எம்.ஆர்.வெங்கட்ராமன், சர் சி.வி. இராமனின் உறவு என்பது அவர் பற்றிய கட்டுரையைப் படிக்கும் போதுதான் நாம் அறிந்து கொண்டோம்.
மணலி கந்தசாமியைப் பற்றி எழுதப்பட்டுள்ள கட்டுரையில், அவர் மனைவி நீதிமன்றத்தில் கூறிய வாக்குமூலம் நினைத்துப் பார்க்கவே அதிர்ச்சியை அளிக்கக் கூடியதாய் இருக்கிறது. ஜீவபாரதி குறிப்பிட்டுள்ள நீதிமன்ற வாக்குமூலம் கு.வெ.பழனிதுரை எழுதிய மணலி கந்தசாமி வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் இல்லை. மேலும் இதே போல இ.எம்.எஸ். அமைச்சரவையில் இருந்த கௌரி தாமசை காவல் துறையினர் கேவலப்படுத்தினர்என்று கௌரி அம்மாளே அளித்த பேட்டியைநாம் படித்து இருக்கின்றோம். எப்படிப்பார்த்தாலும் இந்நிகழ்வு எவ்வளவு மோசமானது. அநாகரிகமானது என்பதை இதைப் படிக்கிற ஒவ்வொருவரும் கசிந்துருகி கண்ணீர் மல்கி நிற்பர்.
ஒரு கம்யூனிஸ்டாய் இருப்பவர் சராசரி மனிதரின் உணர்ச்சிகளுக்கு அப்பால் இயங்குபவராக இருப்பார், இருக்க வேண்டும் என்பதை ஒவ்வொருவரின் வாழ்க்கைக் குறிப்பும் நமக்கு உணர்த்துகிறது. மேலும் 1938 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாம் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தமது 16 ஆவது வயதில் சங்கரையா ஈடுபட்டு 6 மாதம் சிறை தண்டனை அனுபவித்தார் எனபதை முதன் முதலாக நாம் தெரிந்து கொண்டோம். சங்கரையாவைத் தொடர்ந்து தா.பாண்டியன் வரையுள்ள வரலாற்றுக் குறிப்புகளோடு காலம் தோறும் கம்யூனிஸ்டுகள் எனும் நூலின் முதல் பாகம் நிறைவடைகிறது.