கட்டுரைகள்

தமிழர் தொன்மையை மறுக்கும் பா.ச.க.வின் முருகன் மாநாடு

மே.து.ரா.

முயற்சிகள் பலவற்றை முன்னெடுத்து முடக்கம் கண்ட பாரதிய சனதாக் கட்சி இப்போது தமிழ்க் கடவுள் முருகனை முன்னிறுத்தி முன்னேற்றம் காணத் துடிக்கிறது.
முருக பக்தர்கள் மாநாடு என்ற பெயரோடு மதுரையில் சூன் 22ஆம் நாள் இந்து முன்னணியுடன் இணைந்து பா.ச.க. மக்களைத் திரட்டிக் காட்ட முடியும் என நம்புகிறது. முருகனின் ஆறுபடை வீடுகளைப் போன்று கோயில்களை அமைத்து, அங்கு வழிபாடுகளை நடத்தவும் விபூதி போன்றவற்றை வழங்கவும் ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.

பக்தி, நம்பிக்கை, வழிபாடு என்ற நிலைகளுக்கு அப்பால் முருகன் தொடர்பான சொற்பொழிவுகள் நடத்தப்படலாம். ஆனால், கருத்தரங்கம், ஆய்வரங்கம் ஆகியவற்றை எதிர்நோக்கிக் கட்டுரைகள் அல்லது ஆய்வுகள் பெறப்பட்ட விவரங்களும் இதுவரை வெளியாகவில்லை.

செல்வ வளத்தால் மக்களை வண்டிகளில் அழைத்துவந்து காட்டி, ‘இந்துக்களாகிய தமிழர்கள்’ தங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்று வெளியுலகை நம்பவைக்க முடியும் எனப் பா.ச.க. நினைக்கிறது.

முருக வழிபாட்டை ஏற்காதோர்

முருக வழிபாட்டோடு எத்தகைய தொடர்புமில்லாத, இன்னும் சொல்லப்போனால் முருக வழிபாட்டில் இதுவரை ஈடுபடாத உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திரத் துணை முதல்வர் பவன் கல்யாண் போன்றோர் இந்த மாநாட்டுக்கு அழைக்கப்பட்டிருப்பது, இது கடவுள் நம்பிக்கை தொடர்பான கூடுதல் அல்ல என்பதை உறுதிப்படுத்திவிடுகிறது.
முருக வழிபாட்டை ஏற்காத ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்சா அண்மையில் மதுரையில் பேசியபோது, இந்த இந்து மாநாட்டினைப் பெரும் வெற்றி பெறச் செய்யவேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.

சனாதனத்தைப் போற்றும் யோகியும், அதனைக் காக்க வலிந்து நிற்கும் பவன் கல்யாண் போன்றோரும், சனாதனியாகவே வலம் வரும் அமித்சாவும் இந்த முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிறுத்துகிறார்கள் என்பதே பொருத்தமாகத் தெரியவில்லை.

தோல்வி கண்ட முந்தைய முயற்சிகள்

தமிழ்நாட்டு அரசியலில் முருகனை முன்னெடுத்து மக்களைத் திரட்டிவிடலாம் என்ற எண்ணத்தில் வீரத்தமிழர் முன்னணி என்ற துணை அமைப்பை 2015ஆம் ஆண்டிலேயே சீமான் தொடங்கிவிட்டார். தமிழ்த் தேசியம் பேசும் சீமான், 2016ஆம் ஆண்டிலிருந்து வேல் வழிபாடாகத் தைப்பூச நாளில் விழாக்களை நடத்தி வந்தாலும், முருக வழிபாட்டாளர்களின் ஈர்ப்பினை அவரால் பெற இயலவில்லை. கடவுள் நம்பிக்கையினை அரசியலாக்குவதைத் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

சனாதனக் கருத்துக்களையும் உள்ளடக்கியிருக்கின்ற முருகனைப் பாடும் கந்த சச்டிக் கவசத்தினைக் கருப்பர் கூட்டம் என்ற யுடியூப் வலைதளம் இழிவுபடுத்திவிட்டதாக 2020இல் பா.ச.க. கூக்குரல் எழுப்பியபோதுதான், அவர்களுக்கு முருகன் நினைவே வந்தது எனலாம். அதற்கு முன் அவர்கள் அயோத்தி ராமனைத்தான் பிடித்துக்கொண்டிருந்தார்கள்.

இதனையடுத்து, வட தமிழகத்திலுள்ள திருத்தணியில் தொடங்கி, தென்பகுதியில் உள்ள திருச்செந்தூர் வரை வேல் பயணம் மேற்கொள்ள அப்போதைய பா.ச.க. மாநிலத் தலைவர் முருகன் முயன்றார். முருக வழிபாட்டாளர்கள் எவரும் இதனைக் கண்டுகொள்ளவில்லை. பா.ச.க.வும் இதனால் பயனடையவில்லை.

அடுத்து, அண்மையில் திருப்பரங்குன்றத்தை முசுலிம் மக்களிடமிருந்து மீட்பதாகப் பா.ச.க.வினர் நடத்திய போராட்டம் உள்ளூர் மக்களையும் முருக வழிபாட்டாளர்களையும் கவரவில்லை. வெளியூரிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்களை அழைத்துவந்து காட்டியிருந்தாலும், வேண்டிய தாக்கத்தை அது தரவில்லை.

தமிழக மக்கள் இதுவரை பெரிதும் அறியாத ‘சிக்கந்தர் மலை’ என்ற பெயர் திருப்பரங்குன்றத்துக்குத் தரப்பட்டிருப்பதாகப் பரப்புரை செய்து பார்த்தார்கள். இந்துக்களின் மலை பறிபோய்விட்டதாகப் புலம்பினார்கள். அப்படியொரு பெயரையே கேள்விப்பட்டிராத தமிழக மக்கள் பா.ச.க.வினரின் கூற்றுக்களை நம்பவுமில்லை, ஏற்றுக்கொள்ளவுமில்லை.

தமிழ்நாட்டில் முருகனை வழிபடுவோர் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை.

இந்த நிலையில்தான், தற்போது முருக பக்தர்கள் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. முருக வழிபாட்டாளர்கள் நடத்தும் மாநாடு என்று கூறிக்கொண்டாலும், இந்து முன்னணி, பா.ச.க. போன்றோரின் பங்கெடுப்புடன், இந்து சமயம் என்ற பெயரில் மக்களைக் கவர்வதற்கான ஏற்பாடுதான் இது என்பதை எவரும் மறைத்துப் பேசவில்லை. அவர்களுடைய நோக்கமெல்லாம் முருகன், இந்து ஆகிய பெயர்கள் வைத்துக்கொண்டு, தமிழின மக்களைப் பிளவுபடுத்தி, வாக்கு வங்கியாக மாற்றவேண்டும் என்பதன்றி வேறில்லை.

நம்பிக்கை வேறு அரசியல் வேறு

உள்ளூர் கோயில்களில் குடமுழுக்கு என்றால் பல்லாயிரத்தில் மக்கள் கூடுவதும், பெரும் கோயில்கள் என்றால் லட்சக் கணக்கில் மக்கள் திரள்வதும் இயல்பாகவே தமிழ்நாட்டில் இருந்துவருவதுதான். உண்மையான நம்பிக்கையின் அடிப்படையில் தாமாகச் சேரும் கூட்டங்கள் அவை என்பதை மறுக்க முடியாது. தங்களது வழிபாட்டிடங்களில் நடைபெறும் திருவிழாக்களில், சுற்றுப்புற மக்கள் பெருமளவில் கலந்துகொள்கிறார்கள். வழிபாடு மட்டுமல்லாமல், விழா நிகழ்வுகளிலும் கொண்டாட்டங்களிலும் இல்லத்தினரோடு சுற்றத்தினரும் கூடி மகிழ்வது ஒரு வழமையாகவே நெடுங்காலமாக உள்ளது.

இத்தகைய வழிபாட்டுவழி விழாக்களை அரசியலாக்கும் நடைமுறை தமிழ்நாட்டில் முழுமையாக இல்லை என்றே கூறமுடியும்.

வள நிலப் பகுதிகளில் சைவர், வைணவர் என்ற குறியீடுகள் நிலவினாலும், சாதியப் பின்னணியே வரலாற்றளவில் நிலைகொண்டிருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.

சனாதனத்தை ஏற்காத தமிழர்

பண்டைத் தமிழ்ப் பாடல்களில் பரவலாகக் குறிக்கப்படும் வேலன், குறிஞ்சித் தலைவனாக மட்டுமல்லாமல், தமிழர்களது தனித்த வழிபடும் கடவுளாகவும் கருதப்பட்டிருப்பதைக் காணலாம். அறுபடை வீடுகள் அமைந்திருக்கின்ற நிலப்பகுதிகளே இவற்றுக்குச் சான்றாக உள்ளன.

பரிபாடல், திருமுருகாற்றுப்படை ஆகியவற்றிலும் வேலன் வழிபாடு சிறப்பிக்கப்படுகிறது. திருப்பரங்குன்றத்திற்குச் செல்வோர் தங்களது வழிபாட்டு முறைகளையே பின்பற்றினர். அவை பார்ப்பன வழிபாட்டு முறைகளாக இருக்கவில்லை.

கோவலன், கண்ணகியோடு கவுந்தியடிகள் மதுரையை நோக்கிச் செல்லும் வழியில், மாடலமறையோன் என்னும் பார்ப்பனன், தான் சார்ந்த வழிபாட்டு முறைகளைப் பரிந்துரைத்தபோது, ‘உன் வழியில் நீ போ, எங்கள் வழியில் நாங்கள் செல்கிறோம்‘ என்று கவுந்தியடிகள் மறுத்துரைக்கிறார்.

இந்தப் பின்புலத்தை மறந்துவிடக்கூடாது. இதன் தொடர்ச்சியைத் தமிழக வரலாறு முழுமையும் காணலாம்.

நிலவுடைமையாளர்களின் மேன்மையில் எழுந்த பக்தி இயக்கக் காலத்தில், சிவனும் திருமாலும் போற்றப்பட்ட சூழ்நிலையில், முருகனது சிறப்பு அல்லது பெருமை பெரிதும் பாடப்படவில்லை. சிவனது மகனாக மட்டுமே சில இடங்களில் முருகனைப் பற்றிய குறிப்புகள் வருகின்றன. அப்போது முருகனைப் பற்றிய தனித்த இலக்கியங்களும் தோன்றவில்லை.

இந்த நிலையிலும், சோழர் காலத்தில் கோயில்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, தவறு செய்த பார்ப்பனர்களைத் தண்டிக்கச் சோழ மன்னர்கள் தயங்கவில்லை.
எளியோர் வழிபடும் முருகன்

நிலவுடைமை அமைப்பின் வழிபாட்டு முறைமைகளாகச் சைவமும் வைணவமும் மேலெழுந்தபோது, முருகன் மற்றும் குலக் கடவுளர்கள் தொடர்ந்து பெரும்பான்மையாக இருந்த எளிய மக்களின் வழிபாட்டில் இருந்துவந்திருப்பதைக் காணமுடிகிறது.

தங்களைக் கீழ்ப்படியவைத்த உடைமையாளரின் மேலாண்மையை ஏற்றுக்கொள்ளாத போக்குகள், முருகன் மற்றும் குலக் கடவுளரை வழிபட்டோர் மனதில் நீடித்திருந்தன.
நிறுவன வயப்பட்ட கடவுள் நம்பிக்கைகளுக்கும் போக்குகளுக்கும் எதிரான குரல்கள் தமிழ்நாட்டில் பன்னெடுங்காலமாக வழிமுறையாகத் தொடர்ந்தன என்பதில் அய்யமில்லை. சித்தர்களது பாடல்களில் இத்தகைய குரல்கள் வெளிப்படையாகவே இடம்பெற்றுள்ளன.

வைதீக மரபுகளுடன் முருகன் இணைக்கப்பட்டு, கந்தன், சுப்பிரமணியன் என்பன போன்ற பெயர்களைப் பெற்றிருந்தாலும், எளிய மக்களின் வழிபாட்டு முறைமைகளான காவடி எடுத்தல், நடந்து சென்று முருகனை வழிபடுதல் ஆகிய வேற்று வடிவங்கள் தொடர்ந்துகொண்டிருந்தன.

தமிழ்நாட்டில், நிலவுடைமையாளர்களின் ஏற்பாடுகளில், ஊரகப் பகுதிகளில்கூடப் பரந்த அளவில் சிவ, வைணவக் கோயில்கள் எழுந்துள்ளன. முருகனை வழிபடும் கடவுளாகக் கொண்டிருந்த எளிய மக்களிடம் அத்தகைய பெரிய கோயில்களை அமைக்கும் வளம் இருக்கவில்லை.

மலேசியா போன்று உழைக்கும் தமிழர் குடியேறிய நாடுகளில், முருகன் கோயில்களே பெரிதும் எழுப்பப்பட்டன. உழைக்கும் மக்களது கடவுளாக முருகன் தொடர்ந்ததை இது உறுதிப்படுத்துகின்றது.

சித்தர்களின் தொடர்ச்சியாகவும் வள்ளலாரின் ஊடாகவும் தமிழ்நாட்டில், மூடநம்பிக்கை மறுப்பு, பார்ப்பன எதிர்ப்பு, சனாதன வெறுப்பு ஆகியவற்றை வலியுறுத்தப் பல இயக்கங்கள் தோன்றியுள்ளன.

கடவுள் மறுப்பாக இவை இல்லாமல் இருந்தாலும், நம்பிக்கைகளுக்கு அப்பால் மூடத்தனங்களையும் நிறுவன மேலாண்மையையும் எதிர்ப்பதில் முன்னின்றதைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. ‘கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக வேண்டும்‘ என்ற உறுதி தொடர்ந்துகொண்டிருந்தது.

பெரியாரது முன்னெடுப்புகள்

இவை யாவும், பெரியார் முன்னெடுத்த கடவுள் மறுப்பு, பார்ப்பன எதிர்ப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, தன்மதிப்பு ஏற்பு, மனித இருப்பு என்பன போன்ற சமூக நீதிப் பரப்புரைகளில் உள்ளடங்கி, சமய நிறுவனங்களைவிட மேம்பட்ட புரிதல்களுக்கு இட்டுச்சென்றுவிட்டன. கடவுள் நம்பிக்கைகளுக்கு அப்பால், சமூக நீதியையும் இணைவையும் இணக்கத்தையும் நிலைநாட்டிவிட்டன.

இதனால், சமூக இணக்கத்துக்கு மாறாக அரசியல் செய்வது இங்கு இயலாமல் போய்விட்டது.

அதனால்தான், தெருக்கள்தோறும் விநாயகர் சிலைகளை அமைத்து விழாக்களைக் கொண்டாடியபோது, மக்கள் பார்வையிட வந்தார்களேயன்றி, பா.ச.க.வினர் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. இதுதான் தமிழ்நாடு.

முருக வழிபாட்டாளர்கள் தங்களது பகுதிகளில் ஒன்றிணைந்து, பழனி போன்ற இடங்களுக்கு நடை பயணமாகச் சென்று வழிபடுவது நடைமுறையில் இன்றும் உள்ளது. இவை சமயம் என்ற வகைக்குள் அடைபடவில்லை. சைவமும் வைணவமும்கூடச் சமயங்களாகக் கருதப்பட்டாலும், அவை நிறுவனச் சமயங்களாகத் தமிழ்நாட்டில் உருவாகவில்லை.

முருகனின் தொன்மையை மறுக்கும் பா.ச.க.

கீழடியின் காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டு என்பதைக்கூட ஏற்றுக்கொள்ளாத பா.ச.க.வினர், தமிழ்நாட்டில் இரும்பின் காலம் கி.மு. 3300க்கு முற்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

அக்காலத்தில் எழுந்த பண்டைய தமிழ்ப் பாடல்களில் காட்டப்படும் வேலனாகிய முருகன் என்ற தலைவனின் இருப்பு, ராமன் போன்ற கடவுளர்களுக்கும் முற்பட்டது என்ற உண்மையைத் தமிழ்நாட்டில் உள்ள பா.ச.க.வினர் ஏற்றுக்கொள்ள முன்வருவார்களா என்பது அய்யம்தான்.

தமிழ்க் கடவுளான முருகனின் தொன்மையை ஏற்றுக்கொள்ளாத பா.ச.க.வினர், இன்று முருகனைக் கொண்டாடுகிறார்கள், முருக பக்தர்களின் மாநாட்டினை நடத்துகிறார்கள் என்பது ஏற்கத்தக்கதாகத் தெரியவில்லை.

தமிழ்க் கடவுள் என்று எடுத்துக்கொண்டால், முருகனை இந்து சமயத்துக்குள் அடக்க முடியாது. முருக பக்தர்கள் என்றாலும் அவர்களில் பெரும்பாலானோர் இந்து சமயத்துக்குள் வராத எளிய மக்கள் பகுதியினர். இவர்கள் பா.ச.க.வினர் முன்னிறுத்தும் சனாதன அரசியலுக்கு அப்பாற்பட்டோராவர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button