தமிழகம்

மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலைத் தடுக்க ஒன்றிய அரசு தலையிட வேண்டும் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலைத் தடுக்க ஒன்றிய அரசு தலையிட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:

இராமேஸ்வரம் பகுதியில் இருந்து இரண்டாயிரம் மீனவர்கள் 534 விசைப் படகுகளில் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இவர்கள் தமிழ்நாடு அரசின் மீன்வளத்துறை அதிகாரியிடம் உரிய அனுமதி பெற்று, அடையாள அட்டையுடன் கடலுக்குள் சென்றுள்ளனர். இவர்களில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 15 மீனவர்களைக் கடந்த சனிக்கிழமை காலையில் இலங்கை கடற்படை கைது செய்து, அவர்களது இரண்டு விசைப்படகுகளைப் பறிமுதல் செய்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் – தலைமன்னார் முகாமில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இதனால் தங்கச்சி மடம் உள்ளிட்ட இராமேஸ்வரம் பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவுப் பொருட்களும், மருந்துகளும் அனுப்பி வைத்து சகோதர உறவுவை வலுப்படுத்தி வருகிறோம். இந்தச் சூழலில் இலங்கை கடற்படை கட்டுபாடில்லாமல், சர்வதேச சட்ட விதிமுறைகளை மதிக்காமல் தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்வது, சுட்டுக் கொல்வது, அவர்களது உடைமைகளை சேதப்படுத்துவது என்ற இரக்கமற்ற தாக்குதல் நடத்தி வருவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதல் குறித்து பாஜக ஒன்றிய அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து, மீனவர்களை விடுவிக்கவும், அவர்களது உடைமைகள் இழப்புக்கு இழப்பீடு வழங்கவும், இலங்கை அரசுடன் பேசி தீர்வு காண வேண்டும். தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடி தொழில் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button