இந்தியா

வங்கிகள் தனியார்மயத்திற்கு எதிரான வங்கித்துறையினரின் ஒன்றுபட்ட போராட்டம் – ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஆதரவு !

வங்கிகளைத் தனியார்மயமாக்காதே ! வங்கி அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் ஒன்றுபட்ட போராட்டத்திற்கு ஆதரவு ! – மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் இதர தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு

வங்கிகள் தனியார்மயத்தை எதிர்த்து நடைபெறவுள்ள வங்கி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் இதர தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நேற்று (18.07.2022) விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு:
 
அரசாங்கத்தின் பொருளாதார தாராளமயம் மற்றும் தனியார்மய கொள்கைகளின் அடிப்படையில், பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கிட ஒன்றிய அரசாங்கம் தொடர்ந்து முயன்று வருகிறது. அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட பல்வேறு குழுக்கள், அரசாங்கத்தின் நிலைப்பாட்டையே எதிரொலிப்பதுடன், வங்கிகளைத் தனியார்மயமாக்க வேண்டும் என்று தொடர்ந்து பரிந்துரைத்து வருகின்றன. நிதி ஆயோக் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா மற்றும் பொருளியல் ஆராய்ச்சித் துறையைச் சார்ந்த பூனம் குப்தா ஆகியோர் அண்மையில் சமர்ப்பித்துள்ள அறிக்கையிலும் கூட, அனைத்து பொதுத்துறை வங்கிகளையும் தனியார்மயமாக்கிட வேண்டும் என்றே பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் எண்ணற்ற தனியார் வங்கிகள் திவாலாகிப் போனதால், பொதுமக்கள் தங்களின் சேமிப்பு பணத்தை இழந்தனர். இது போன்ற கசப்பான அனுபவத்தின் அடிப்படையில் சீர் தூக்கிப் பார்க்கும் போது, இந்தியா போன்ற ஒரு வளரும் நாட்டில், பொதுமக்களின் பெரும் சேமிப்பு நிதியைக் கையாளும் வங்கிகள் பொதுத்துறை வங்கிகளாக இருக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்வது முக்கியமானதாகும். இன்றைய நிலவரப்படி, பொதுமக்களின் பணம் 165 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளில் வைப்புநிதியாக உள்ளது. பொதுமக்கள் பணத்திற்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். அதற்குத்தான் பிரதான முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.  

மேலும், பொருளாதார மேம்பாட்டிற்காக, மிக முக்கியமான துறைகளில் பொதுமக்களின் சேமிப்பு பணம் முதலீடு செய்யப்பட வேண்டும். பொதுத்துறை வங்கிகள் மட்டுமே விவசாயம், கல்வி, சுகாதாரம், வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு பெருக்கம், பெண்களை அதிகாரப்படுத்துவது, சிறு குறு மற்றும் குடிசைத் தொழில்களுக்கு கடனுதவி, ஏற்றுமதி இன்னபிற நடவடிக்கைகளுக்கு கடன் வழங்கி வருகின்றன. ஆனால் தனியார் வங்கிகளோ, தேசத்தின் சமூகத் தேவைகளைப் பொருட்படுத்தாமல், லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு, கடன் வழங்குவதில் ஆர்வம் காட்டுகின்றன.

மேலும், கடந்த ஐந்து தசாப்தங்களாகவே, நெடுந்தொலைவில் இருக்கும் ஊரகப் பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கும் வங்கிச் சேவைகள் சென்றடைந்திட, பொதுத்துறை வங்கிகள் ஊரகப் பகுதிகளில் பெரும் எண்ணிக்கையில் வங்கிக் கிளைகளைத் திறந்துள்ளன. ஊரகப் பகுதிகளில் லாபம் ஈட்ட முடியாது என்பதால் , அத்தகைய பகுதிகளில் தனியார் வங்கிகள் கிளைகளைத் திறப்பதில்லை.

வங்கிகளிடம் இருந்து பெருந்தொகையைக் கடனாகப் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள், கடன் தொகையைத் திரும்பிச் செலுத்துவதில்லை. இதன் காரணமாகவே, வங்கிகள் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகின்றன. பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்குவதற்கான நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை. வங்கிகளைத் தனியார்மயமாக்க வேண்டும் என்பது அர்த்தமற்றது ஆகும்.

எனவே தான், நமது பொருளாதார மேம்பாட்டின் உந்துசக்தியாகத் திகழும் பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்குவதை முற்றாக எதிர்க்கிறோம். UFBU எனும் ஒற்றைப் பதாகையின் கீழ் வங்கித்துறை சங்கங்கள் அனைத்தும் ஒற்றுமையுடன் அணிதிரண்டு வங்கிகளைத் தனியார்மயமாக்குவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை எதிர்த்து தொடர்ந்து போராட்டக் களம் காண்பது குறிப்பிடத்தக்கதாகும். தொழிற்சங்கங்கள் கடுமையாக எதிர்த்து வரும் இரயில்வே, இராணுவம், நிலக்கரி மற்றும் இதர பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை வங்கித்துறையினரின் போராட்டங்கள் அம்பலப்படுத்துகின்றன. UFBU போராட்டத்திற்கு நமது முழு ஆதரவையும் தெரிவிக்கிறோம்.

ஜூலை 21 அன்று நாடாளுமன்றத்தின் முன் நடைபெற இருக்கும் அவர்களின் தர்ணா போராட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள்!

இவ்வாறு ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button