அறிக்கைகள்தமிழகம்

நான்குநேரியில் சாதி வெறி – இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்

மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கை

நான்குநேரியில் தொடரும் சாதி வெறி – இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு..

நான்குநேரி காவல் நிலையம் அருகில் உள்ள பெருந்தெருவில் பிளஸ் டூ பயிலும் பள்ளி மாணவர் சின்னதுரை சாதி வெறியர்களால் வீடு புகுந்து வெட்டப்பட்டுள்ள சம்பவம் சட்டத்தின் ஆட்சிக்கு சவாலாக அமைந்துள்ளது. தமிழகத்தை நடுங்க வைக்கும் இக்கொடூர சம்பவத்தை நேரில் பார்த்த அவரது சின்னதுரையின் உறவினர் கிருஷ்ணன் அதிர்ச்சியால் மரணமடைந்துள்ளார்.

வள்ளியூர் அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் பயின்று வரும் சின்னதுரை நல்ல அறிவும், திறனும் பெற்றிருக்கும் மாணவர். இவரது நற்பண்புகளையும், பழக்க வழக்கங்களையும் ஆசிரியர் பாராட்டிப் பேசியதை, அவருடன் படிக்கும் சக மாணவர்களில் சிலர் சகித்துக் கொள்ள முடியாத அளவில் சாதிவெறி நிலவி வருகிறது.

மாணவர்களின் அறிவுக் கண்களை குருடாக்கி, அரிவாள் தூக்கி, வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்யும் சாதி வெறியை இப்பகுதியில் உள்ள சமய மடம் ஒன்று ஊக்கப்படுத்தி வளர்த்து வருவதாகவும், வேலை வாய்ப்பு இல்லாத நிலையில் கூலிக் கொலைகாரர்கள், அடியாட்கள், ரவுடிகள் என கிராமங்களில் குற்றவாளிகள் நிறைந்து கிடப்பதாகவும் கூறப்படும் புகார்களை தமிழ்நாடு அரசு தனிக்கவனம் செலுத்தி விசாரிக்க வேண்டும்.
சாதிவெறியைத் தூண்டும் செயலில் ஈடுபடுவோர் மீது இரக்கம் காட்டாது, இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

அரிவாளால் வெட்டுப்பட்ட சின்னதுரை, நெல்லை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சின்னதுரையை கொலைகாரர்களிடம் இருந்து காப்பாற்றச் சென்ற அவரது சகோதரி வெட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். அவரது கல்விச் செலவை அரசு ஏற்கும் என கூறியிருப்பது ஆறுதல் அளிக்கும் எனினும் அவரது குடும்பத்துக்கு அரசு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இக் குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு சட்டத்திலிருந்து தப்பிவிடாமல் கடுமையாகத் தண்டிக்கும் வகையில் வழக்கை அரசு விழிப்புடன் நடத்த வேண்டும்.

சின்னதுரை பயின்று வரும் பள்ளியில் சாதிய தீண்டாமை எழுதப்படாத விதியாக நிலவுகிறது. இதற்கு எதிராக கருத்துச் சொல்பவர்கள் ஆசிரியர்கள் என்றாலும் அச்சுறுத்தி விரட்டப்படுகின்றனர். இதனால் பள்ளியில் பயிலும் மாணவர் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இங்கு சமூகநீதி கொள்கை உறுதி கொண்ட பள்ளி ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும்.

இப்பகுதியில் நீண்டகாலமாக நிலவி வரும் வேலையின்மை, சாதி வெறி வளர்க்கும் சமூக விரோத கும்பலுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. இப்பகுதியில் வேலைவாய்ப்புகளை உருவாக்க கலைஞர் ஆட்சியில் அமைக்கப்பட்ட இரண்டாயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தொழில்களை தொடங்கவும், தொழில்நுட்பப் பூங்கா அமைக்கவும் அரசு போர்க் கால வேகத்துடன் செயல்பட வேண்டும். இங்கு முதலீடு செய்து தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு மேலும் கூடுதல் சலுகைகள் அறிவிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது என மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button