கட்டுரைகள்

மரணமடைந்தது வேளாண் சட்டங்கள்

சி.மகேந்திரன்

இந்த அறிவிப்பை, மிகவும் சுலபமாக அவரால் அறிவிக்க முடிந்தது. கண்மூடி கண் திறப்பதற்குள், அவர் கையில் உள்ள ஊடக அதிகாரத்தால் காற்றை ஊடுருவி தன் அறிவிப்பை பல கோடி மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முடிந்திருக்கிறது, அவர் நாட்டின் பிரதமர். மிகுந்த செல்வாக்கைக் கொண்டவர். சட்டத்தையும் விரைவாக நிறைவேற்றவும் முடிந்தது. இப்பொழுது அவசரம் அவசரமாக திரும்ப பெறுவும் அவரால் முடிந்திருக்கிறது. ஒற்றை மனிதரிடம் குவிந்துள்ள அதிகாரம். சட்டங்கள் மூன்றையும், வருகின்ற குளிர்கால நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் திரும்ப பெறப் போவதாக அறிவித்து விட்டார் நரேந்திர மோடி.
ஆனால் இந்த அறிவிப்பை அவர் உதட்டிலிருந்து வரவழைக்க இந்திய விவசாயிகள் கொடுத்த விலை, விலைமதிப்பற்றது. இன்று அவருடைய கட்சி அவரது வெற்றி என்று இனிப்பு வழங்கிக் கொண்டிருக்கிறது. இனிப்பை யாருக்காக? எதற்காக? வழங்கி கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு நிமிடம் யோசித்து பார்த்திருப்பார்களா?
சென்ற ஜனவரி மாதத்தின் அந்த கொடிய குளிர் என் ஞாபகத்திற்கு வருகிறது. போராட்டக்கார்கள் அங்கு குடியேறி இரண்டு மாதங்கள் நிறைவடையாத சூழல். நான் பார்த்த சிங்கு எல்லையின் முள் கம்பிகள் அனைத்தும் மனக் கண்ணுக்குள் தெரிகின்றன. மனித நடமாட்டங்கள் முழுமையாகக் கண்காணிக்கப்படும் ஒரு பிரதேசத்தின் கான்கிரிட் கட்டைகளால் வரிசையாக அமைக்கப்பட்ட மூன்று அடுக்கு தடைகள் தெரிகின்றன. மிக உயரத்தில் தற்காலிகமாக உருவாக்கப்பட்ட அந்த கண்காணிப்பு கோபுரங்கள் தெரிகின்றன.
குவிக்கப்பட்ட ராணுவ வாகனங்கள். வித்தியாச உருவம் கொண்ட வாட்டர் கேனன் வாகனங்கள். இயந்திரத் துப்பாக்கிகள் சூழ அச்சத்தை வெளிப்படுத்திக் கொண்டிருப்பதை அங்குப் பார்க்கிறேன். அதற்கு முன் நான் நம் நாட்டின் எந்த எல்லைப் புறத்தையும் பார்த்ததில்லை. அதை ஒரு போர்க்களமாகவும் மோடி அரசு போர் தொடுக்க தயாரிப்பு செய்த கொண்டிருப்பதாக மனம் எண்ணிக் கொள்கிறது. யார் மீது போர் தொடுக்கப் போகிறார்கள்?
இன்று சுலபமாக அறிவிப்பை வெளியிட்ட பிரதமரும் அதற்காக இனிப்பை வழங்கிக் கொண்டிருக்கும் கட்சியின் தொண்டர்களும் இதை எல்லாம் மக்கள் மறந்துவிடுவார்கள் என்று நினைக்கிறார்கள்.
இப்பொழுதெல்லாம், எந்தப் போராட்டம் நடந்தாலும் வாட்டர் கேனன் வாகனம் முன் வரிசைக்கு வந்து, குறி பார்த்து நிற்கிறது. பனிப்பொழிவு பனிக்கட்டிகளாய் தரையில் விழும் அந்தக் காலத்தில் இந்த வாட்டர் கேனன் மூலம் தண்ணீர் பீச்சி அடித்தில் நடுநடுங்கி நின்ற கொடுமையை ஒருவர் சொன்னபோது இது என்ன நாடா? அல்லது ஹிட்லரின் சித்திரவதை முகாமா? என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. மரணத்தை நோக்கி நகர வைத்த அந்தக் குளிரின் கொடுமையை அவரால் எவ்வாறு மறக்க இயலும்?
ஒருவரை எனக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்கள். நடுத்தர விவசாயக் குடும்பம் கடும் குளிரில் தாங்கிக் கொள்ள முடியாமல் தந்தை இறந்த போனதைப் பற்றி சொல்லுகிறார். இப்பொழுது தான் அவரது தந்தையின் மரண சடங்கை முடித்துவிட்டு சொந்தக் கிராமத்திலிருந்து வருகிறேன் என்று அவர் கூறும் போதே அவருடைய கண்களிலிருந்து கண்ணீர் கன்னத்தில் வழிந்தோடுகிறது. அவரால் எப்படி மோடி எத்தகைய அன்பு கொள்வதைப் போல பேசினாலும் அவர் மீது நட்பு பாராட்ட முடியும்.
போராட்டக் களதில், கால் இழந்த ஒருவரை சந்திக்கிறேன். அவர் போராட்டக் களத்திற்கு முதலில் கூட்டத்தோடு வந்து சேர்ந்தவர். நாள் கணக்கில் டிராக்டர் பயணம். பலத் தடைகளை உருவாக்கப் பார்க்கிறார்கள். கடைசியில் ராணுவத்தின் உயர் பொறியியல் துறையை வரவழைத்து பெரும் பள்ளம் மோடி வெட்டி வைக்கிறார். அதில் அவர் தன் காலை இழந்த விடுகிறார். அவரால் எவ்வாறு மோடியை மன்னிக்க முடியும்.
போராட்டம் எனக்குள் தோற்றுவித்த புதிய நம்பிக்கைகளை என்னால் மறக்க முடியவதில்லை. அதில் போராட்டத்திற்கும் பண்பாட்டுக்கும் உள்ளத் தொடர்பு அடிப்படையானது. ஒவ்வொரு கிராமும் தங்கள் பண்பாட்டை அப்படியே சுமந்த டிராக்டர்களில் குடியேறியதாகத் தெரிகிறது. பொங்கல் பண்டிகையை ஒத்த லோடி பண்டிகையை அங்குப் பார்த்தேன். மாலை நேரத்தில் தீ மூட்டி அதை சுற்றி சுற்றி வந்து ஆண்களும் பெண்களும் நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள். லோடி என்பது பஞ்சாபிய மக்கள் சூரியனை மையமாகக் கொண்டு வழிபாடு நடத்தும் திருவிழா. அறுவடை திருநாள்.
சிங்கு எல்லையில் லோடி விழா விவசாயிகளின் கோரிக்கையும் மோடியின் எதிர்ப்பையும் தன்னோடு இணைத்துக் கொண்டு விட்டது. டிராக்டர்களில் லோடியையும் போராட்டத்தையும் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். இது போராட்டக் களமா? விழா கொண்டாட்டமா? என்ற சந்தேகம் எனக்கு வந்து விட்டது. இது தான் போராட்டம் நீண்ட நாட்கள் உயிர் வாழ்வதற்கான உயிர்ப்பைத் தந்து கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்கிறேன். இப்பொழுது அது உண்மை என்பது நிரூபணமாகிவிட்டது.
இன்றும் மோடியின் அறிவிப்பை விவசாயிகள் நம்பவில்லை. போராட்டக் களத்தில் ஓராண்டு காலமாக தங்கி இருக்கும் விக்கி மகேஷ்வரியை கேட்டேன். அவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் அவரும் அவரது மாணவக் குழுவினரும் இன்னமும் அப்படியே சிங்கு எல்லையில் தங்கியிருக்கிறார்கள். அவரது குதூகலத்திற்கு அளவே இல்லை. போராட்ட களம் பாடல்களாலும், நடனங்களாலும் மகிழ்ச்சியின் உச்சத்தில் கூறினார். எப்பொழுது பஞ்சாப் திரும்பப் போகிறீர்கள் என்றேன். இப்பொழுது இல்லை என்று உறுதியோடு சொன்னார். பின்னர் சொன்ன பதில் என்னை மேலும் யோசிக்க வைத்தது. நாடாளுமன்றத்தில் சட்டம் ரத்து செய்பட்டது என்று அறிவிப்பு வெளி வந்த பின்னர் தான் தாங்கள் அங்கிருந்து செல்ல போவாதாக அவர்கள் அறிவித்து விட்டார்கள். என்றார்.
மோடியின் திடீர் அறிவிப்புக்கு காரணம் என்னவென்று யோசித்தேன். டெல்லியை சுற்றியுள்ள சாலைகள் அனைத்தும் ஓராண்டாக நடைபெறும் முற்றுகை கார்பரேட் நிறுவனங்களுக்குப் பெரும் நெருக்டியை தந்து விட்டது. சாலைகளில் இல்லாமல் வான் வெளியில் இவர்கள் தங்கள் வியாபார நடமாட்டங்களை நடத்த முடியாது. அவர்களின் நிர்பந்தம் மோடியின் முடிவுக்கு முக்கிய காரணம். அடுத்த உத்திரபிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் தேர்தல். இப்பொழுது நடந்து முடிந்த இடைத் தேர்தல்களில் பாரதிய ஜனதா தோல்வியை சந்திதுள்ளது. இவை தான் சட்டம் திரும்ப பெற்றுக் கொண்டதற்கான காரணமாகும்.
மீண்டும் வெட்டவெளியில் ஏழடி நீளம், நான்கடி அகலத்தில் அமைக்கப்பட்டுள்ள அந்த டெண்டு ஞாபகத்திற்கு வருகிறது. அந்தஅதிகாலை மணி நான்கு. குளிர் மூன்று டிகிரிக்கு கீழே சென்று கொண்டிருக்கிறது. அந்த நேரத்திலேயே போராட்டத்திற்கான விடை எனக்கு கிடைத்து விட்டது. அத பற்றி திரும்பவும் யோசிக்கிறேன்.
டெண்டுக்கு அருகில் நெருப்பு மூட்டி, சிலர் அமர்ந்திருக்கிறார்கள். குளிர் தாங்கமுடியாமல் டெண்டை விட்டு வெளியே வந்து அங்கு செல்கிறேன். நடக்க முடியாதவாறு உடல் நடுக்கம். கதகதப்பான வெப்பம் நோக்கி செல்கிறேன்.
ஆங்கிலமும் இந்தியுமாக தட்டுத்தடுமாறி அவர்களிடம் பேசத் தொடங்குகிறேன். பேச்சு எங்கெங்கோ சென்று ஒரு இடத்திற்கு வந்து சேருகிறது. முடிவில் ஒரு கேள்வியை முன் வைக்கிறேன். இது என் மனதில் சில நாட்களாக புகைந்து கொண்டிருந்த கேள்வி தான். “சில மாதங்களாக நடைபெறுகிறது போராட்டம். இதன் முடிவு தான் என்ன? விவசாயிகளின் போராட்டம் வெற்றிப் பெறாவிட்டால் என்ன செய்வீர்கள்” என்பது தான் கேள்வி.
கேள்வியை மிக சர்வ சாதாரணமாக நான் கேட்டுவிட்டேன். ஆனால் அதற்கு எனக்கு கிடைத்தப் பதில் என்னை நிலைகுலைய வைத்துவிட்டது. நான் இவ்வாறான பதிலை எதிர்பார்க்கவில்லை. செய் அல்லது செத்தமடி என்பது எங்கள் லட்சியம் என்றார்கள்.
ஆனால் இந்த போராட்ட வீர்கள் சாகவில்லை. மக்கள் போராட்டங்களால் மக்கள் விரோத வேளாண் சட்டங்கள் தான் மூச்சு திணறி மரணப் படுகைக்கு சென்றுவிட்டது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தில் அதன் உயிர் பிரிந்துவிடும் என்பதை மோடியே அறிவித்து விட்டார். வாழ்க விவாசாயிகளின் போராட்டம்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button