தமிழகம்

பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது! – டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்

பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், சென்னை ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:

பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசியல் சட்டத்தின் 103 வது அரசியல் சட்ட திருத்தம் செல்லும். அது அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பிற்கு எதிரானதல்ல என இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

இது சமூக நீதிக் கோட்பாட்டிற்கும், அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்புக்கும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளுக்கும் எதிரானது.

பொருளாதார அடிப்படையை மட்டுமே அளவுகோலாக கொண்டு உலகில் எந்த நாட்டிலும் இட ஒதுக்கீடுகள் வழங்கப்படுவதில்லை. பொருளாதாரம் என்பது நிரந்தரமான ஒன்றல்ல என்பதே இதற்கு முக்கியக் காரணம்.

மேலும் , பொருளாதார அடிப்படையை மட்டுமே அளவுகோலாக கொள்ளும் பொழுது ,அதை உயர்சாதிகளில் உள்ள ஏழைகளுக்கு மட்டுமே வழங்குவது என்பதும், அதிலிருந்து பட்டியல் சாதியினர்,பட்டியல் பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு விலக்கு வழங்கி இருப்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானதாகும்.

இதை தலைமை நீதியரசர் யு.யு.லலித் மற்றும் நீதியரசர் ரவீந்திர பட் ஆகியோரும் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, 103 வது அரசியல் சட்டத்திருத்தம் ,அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக்கு எதிரானதல்ல என நீதிபதிகள் குறிப்பிடுவது ஏற்புடையதல்ல.

இட ஒதுக்கீடு கொள்கை மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்.எவ்வளவு காலத்திற்குத்தான் இட ஒதுக்கீட்டை நீட்டிப்பது. இட ஒதுக்கீடுகள் தொடர்ந்து நீட்டிக்கப்படுவது சரியல்ல என்ற கருத்துக்களும் வெளிப்பட்டுள்ளன.

இவை உண்மைக்கு,எதார்த்த நிலைமைகளுக்கு எதிரானது. இந்தியச் சமூகத்தின் 2500 ஆண்டுகால வரலாற்றைச் சரியாகப் புரிந்து கொள்ளாததின் வெளிப்பாடு.

இந்திய சமூகத்தில் 2500 ஆண்டுகளுக்கும் மேலாக, சாதி அடிப்படையில் பரம்பரை பரம்பரையாக ஒரு குறிப்பிட்ட தொழிலையே செய்ய வேண்டும் என்ற குலத்தொழில் முறை நீடித்து வருகிறது. சாதி அடிப்படையிலான, சமத்துவத்திற்கு எதிரான இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் ஒடுக்கப்பட்ட அடித்தட்டு சாதியினர், தொடர்ந்து கடுமையான உடல் உழைப்பு சார்ந்த வேலைகளையும், தூய்மை பணி, மனிதக் கழிவுகளை அகற்றுதல் போன்ற வேலைகளையும் செய்து வந்தனர். தீண்டாமை, சாதிய ஒடுக்குமுறை, பாரபட்சம் போன்ற கொடுமைகளுக்கும் உள்ளாகினர்.

குலத்தொழிலை மீறியோர் கடும் தண்டனைகளுக்கு உள்ளாகினர். மனுதர்மம் போன்றவையும் அதற்காகவே உருவாக்கப்பட்டன. குலத்தொழிலை மீறியதற்காக சம்பூகனின் தலை சீவப்பட்டதை ராமாயணமும், ஏகலைவனின் கட்டைவிரல் வெட்டப்பட்டதை மகாபாரதம் மூலம் அறிகிறோம்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியவில்லை. ஒரு சாதியினருக்கே உரிய குலத்தொழிலாக அது உள்ளது.

இன்றும் சாதி அடிப்படையிலான இது போன்ற வேலைப் பிரிவினைகள் தொடர்கின்றன. சாதிய ஒடுக்குமுறைகள்,கொடுமைகள் தொடர்கின்றன.

2500 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக நீதிக்கு,சமத்துவத்திற்கு எதிரான வேலைப் பிரிவினை இருந்ததை கவனத்தில் கொள்ளாமல், நீண்ட காலமாக புறக்கணிப்புக்கு உள்ளான பல கோடி மக்கள் இன்றளவும் சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பின் தங்கி இருப்பதை கணக்கில் கொள்ளாமல் ,எத்தனைக் காலத்திற்குத்தான் இட ஒதுக்கீடு நீடிப்பது என்ற கேள்வியை எழுப்புவது, மேலாதிக்க உணர்வை வெளிப்படுத்தும் அராஜகப் போக்காகும்.

சமூக நீதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்பது அண்மைக்காலமாக ஏற்பட்ட ஒன்றுதான். கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தான், சமூக நீதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு தொடர்பான கருத்தியலும், கோரிக்கைகளும் எழுந்தன.

இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடே 2006 க்குப் பிறகுதான் மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் கல்வியில் நடைமுறைக்கு வந்தது.

அதுவும் கிரீமிலேயர் நடைமுறைப்படுத்தப்பட்டதனால் முழுமையான பயன் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு கிடைத்திடவில்லை. அந்த 27 விழுக்காடும் படிப்படியாகவே நடைமுறைக்கு வந்தது. அதிலும் முறைகேடுகள் நடைபெறுகின்றன.

அதைப் போலவே மருத்துவக் கல்வியில் இளநிலை முதுநிலை மருத்துவ மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு 2006 முதல் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.ஆனால், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, சட்ட ரீதியான போராட்டத்திற்குப் பிறகு சென்ற ஆண்டு முதல்தான் இவ்வொதுக்கீடு நடைமுறைக்கு வந்துள்ளது.

அதுவும் சரியாக நடைமுறைப் படுத்தப்படவில்லை . திறந்தப் போட்டியில் இடத்தை பிடிக்கக்கூடிய வகையில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஓபிசி பிரிவினருக்கு ,பொதுப்போட்டிக்கான இடங்களில் , இடங்களை வழங்காமல், ஓபிசி இட ஒதுக்கீட்டு இடங்களுக்குள், இடங்களை வழங்கிய முறைகேடும் இந்த ஆண்டு நடைபெற்றுள்ளது.

இடங்களை ஒதுக்கீடு செய்யும் பொழுது , இதரர் (others) மற்றும் அன்ரிசர்வுடு (unreserved) என்ற வார்த்தைகளை வேண்டுமென்றே பயன்படுத்தி, இட ஒதுக்கீட்டில் முறைகேடுகளை செய்வதும் தொடர்கிறது.

சமூக நீதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு தற்பொழுது தான் பல துறைகளில் வழங்கப்பட துவங்கியுள்ள நிலையில்,அதுவும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், ஏதோ
இட ஒதுக்கீடு நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளது போன்ற ஒரு தோற்றத்தை நீதிபதிகள் உருவாக்கி இருப்பது எதார்த்த நிலைக்கு எதிரானது. மிகவும் வருந்தத்தக்கது.

மேலும், இட ஒதுக்கீடுதான் சாதி மற்றும் வர்க்க ஏற்றத்தாழ்வுகளுக்கு, வேறுபாடுகளுக்கு, சமத்துவமின்மைக்கு காரணமாக உள்ளது போலவும், இட ஒதுக்கீட்டை ரத்து செய்தால் சாதி, வர்க்க வேறுபாடுகள் ,ஏற்றத்தாழ்வுகள் மறைந்து சமத்துவம் ஏற்பட வழிபிறக்கும் என்பது போலவும் நீதியரசர் பெலா எம்.திரிவேதி கருத்தை வெளிப்படுத்தியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இது சாதி மற்றும் வர்க்கம் தொடர்பான அவரது தவறான புரிந்து கொள்ளலை வெளிப்படுத்துகிறது.

சமூக நீதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு வருவதற்கு முன்பே, சாதியும் ,சாதிய ஏற்றத்தாழ்வுகளும், வர்க்க வேறுபாடுகளும் இந்தியச் சமூகத்தில் இருந்தன.

ஆண்டு வருமானம் ரூபாய் 8 லட்சம் வரை உள்ள, 5 ஏக்கர் வரை நிலம் உள்ள, 1000 சதுர அடி வீடுள்ள, 900 முதல் 1800 சதுர அடி அளவில் வீட்டுமனை உள்ள உயர்சாதியினர் கூட பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள் என வரையறுத்திருப்பது அபத்தமானது. உயர்சாதியினரில் உள்ள பொருளாதார ரீதியில் பின்தங்கியோரை வரையறுப்பதில் மட்டும் மிகவும் தாராளத்தை ஒன்றிய அரசு காட்டியுள்ளது.

அவசர கதியில், சமூக நீதியை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் ,உயர்சாதியில் உள்ள பொருளாதார ரீதியில் பின்தங்கியோர் எவ்வளவு பேர் என்ற புள்ளிவிவரங்களும் இல்லாமல் ஒன்றிய அரசு 103 வது அரசியல் சட்டத்தைக் கொண்டு வந்தது.

எனவே, சமூக நீதிக் கோட்பாட்டிற்கு எதிரான 103 வது அரசியல் சட்டத் திருத்தம் செல்லும் என்ற இந்தத் தீர்ப்பு மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் .

அதிக நீதி அரசர்கள் கொண்ட ,முழுமையான அரசியல் சட்ட அமர்வு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது.

இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி,பாராமெடிக்கல் கல்வி மற்றும் நலச்சங்கத்தின் அகில இந்தியச் செயலாளர் பி.காளிதாசன்,மாநில துணைத் தலைவர் எஸ்.தனவந்தன், TNMSA வெளிநாட்டுப் பிரிவு செயலாளர் எம்.செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button