தமிழகம்

பெண்களின் திருமண வயதை சட்ட ரீதியாக உயர்த்துவது ஆணாதிக்கத்தையே வலுப்படுத்தும் – டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்

பெண்களின் திருமண வயதை சட்ட ரீதியாக உயர்த்துவது ஆணாதிக்கத்தையே வலுப்படுத்தும் என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று (டிசம்பர் 21 , 2021 ) அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள செய்தி பின்வருமாறு:

பெண்களின் திருமண வயதை சட்ட ரீதியாக உயர்த்துவது ஆணாதிக்கத்தையே வலுப்படுத்தும்.

பெண்களின் சுய நிர்ணய உரிமைகளை பறிக்கும்.

இம்முயற்சியை கைவிட வேண்டும்.

பெண்களின் கல்வி ,வேலை வாய்ப்பு மற்றும் சமூகப் பொருளாதார பாதுகாப்பை உறுதிப் படுத்துவதின் மூலம் பெண்களின் திருமண வயது உயர்வதை உறுதி செய்ய வேண்டும்.

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மத்திய அரசுக்கு வேண்டு கோள்.

சென்ற விடுதலை நாள் நிகழ்ச்சியில் சொற்பொழிவாற்றிய பிரதமர் மோடி, “ மத்திய அரசு, நமது சகோதரிகள் மற்றும் மகள்களின் உடல் நலம் குறித்து தொடர்ச்சியாக அக்கறை செலுத்துகிறது. அவர்களை சத்துணவு குறைபாட்டிலிருந்து காப்பற்ற அவர்கள் சரியான வயதில் திருமணம் செய்வது அவசியம்’’ என்று கூறினார்.

“இந்த முயற்சி பெண் குழந்தைகள் மற்றும் இளம் பெண்களின் அதிகாரத்தை வலுப்படுத்தும்.அவர்கள் கல்வி பெறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். பேறுகாலத் தாய்மார்களின் இறப்பு விகிதத்தையும், பச்சிளங் குழந்தைகளின் இறப்பு விகிதத்தையும் குறைத்திட உதவும்’’ என மத்திய அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் பெண்களின் திருமண வயதை 18 லிருந்து 21 ஆக உயர்த்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதை இப்பிரச்சனை குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரை அடிப்படையில் செய்வதாக மத்திய அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.

# பெண்கள் திருமணம் செய்து கொள்ளும் வயது உயர வேண்டுமா என்றால் நிச்சயம் உயர வேண்டும்.

பெண்கள் திருமண செய்து கொள்ளும் வயது உயர்வது, பல்வேறு வகையிலும் பெண்களுக்கு நன்மை பயக்கும்.

ஆனால் சட்டத்தின் மூலம் திருமண வயதை உயர்த்தக்கூடாது.

சட்ட ரீதியாக பெண்களின் திருமண வயதை மேலும் உயர்த்துவது பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கும்.

பெண்கள் மீதான ஆணாதிக்கத்தை வலுப்படுத்தும். தங்களது எதிர்காலத்தை தீர்மானித்துக் கொள்வதற்கான , வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான, பெண்களின் சுய நிர்ணய உரிமையை பறித்து விடும்.

# ஊட்டச்சத்தை உறுதி செய்தல், பேறுகாலத் தாய்மார்களின் இறப்புவிகிதத்தை குறைத்தல், பச்சிளங் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைத்தல், அவர்களின் கல்வி வாய்ப்பை அதிகரித்தல் ,பெண்களின் அதிகாரத்தை வலுப்படுத்தல், என்ற போர்வையில், பெண்களின் உரிமைகளுக்கு எதிராக, மத்திய அரசு பெண்களின் திருமண வயதை சட்டம் மூலம் உயர்த்துவது கண்டனத்திற்குரியது.

மருத்துவ ரீதியான காரணிகளை முன்வைத்து மதவாத – சாதிய சக்திகள், தங்களின் ஆணாதிக்க பண்பாட்டு மற்றும் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள பெண்களின் திருமண வயதை பயன்படுத்த முயல்கின்றன. இது ஏற்புடையதல்ல.

பிரதமர் மற்றும் மத்திய அரசு முன் வைக்கும் வாதங்கள் உண்மைக்கு மாறானவை.

பெண்களின் திருமண வயதை உயர்த்துவதற்காக மத்திய அரசு கூறும் எந்த காரணங்களையும், பிரச்சனைகளையும், அவர்களின் திருமண வயதை சட்ட ரீதியாக உயர்த்துவதால் சரி செய்ய இயலாது.

இதை எதார்த்த நிலைமைகள் உறுதி செய்துள்ளன.

பெண்களின் சட்ட ரீதியான திருமண வயது 1978 ல் 16 லிருந்து 18 ஆக உயர்த்தப்பட்டது.

இது நடைமுறைப்படுத்தப்பட்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.

இருப்பினும் ஏன் இன்று வரை 18 வயதுக்கு கீழுள்ள பெண் குழந்தைகளின் திருமணங்களை முற்றிலும் நிறுத்த முடியவில்லை?

இன்றும் 23 விழுக்காடு திருமணங்கள் 18 வயதுக்கு கீழுள்ள பெண் குழந்தைகளின் திருமணங்களகவே உள்ளன என, 2019-20 ஆண்டின் ,தேசிய குடும்ப நல ஆய்வறிக்கை – 5 , தெரிவிக்கிறது.

தற்போது நடைமுறையில் இருக்கின்ற இச்சட்டத்தால் ஏன் இந்த குழந்தை திருமணங்களை தடுக்க முடியவில்லை? என்ற கேள்வி எழுகிறது.

இதற்கு பெரும்பாலும், குடும்ப வறுமை, கிராமப்புற பின்தங்கிய நிலைமை, கல்வி – வேலை வாய்ப்பு கிட்டாமை, சமூகப் பொருளாதார பாதுகாப்பு இன்மையே காரணங்களாகும்.

# அதேசமயம், பெண்கள் அனைவரும் காத்திருந்து 18 வயது முடிந்த அடுத்த நாளே காதல் திருமணம் செய்வதில்லை.அதே போல் பெற்றோர்கள் அனைவரும் காத்திருந்து 18 வயது முடிந்த அடுத்த நாளே தங்கள் மகள்களுக்கு திருமணம் செய்வதில்லை.

பொதுவான சமூகப் பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் காரணமாகவும், கடந்த 40 ஆண்களில் ஏற்பட்ட கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வசதிகளாலும், இந்தியப் பெண்களின் சராசரி திருமண வயது படிப்படியாக உயர்ந்து , தற்போது 22.1 ஆக உள்ளது.

இது 1961 ல் வெறும் 15.7 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

எனவே, தற்போது பெண்களின் சராசரி திருமண வயது 22.1 ஆக உயர்ந்திருக்கும் நிலையில், எதற்காக சட்டம் போட்டு பெண்களின் திருமண வயதை 21 வயதாக உயர்த்த வேண்டும்?

பெண்களின் திருமண வயதை உயர்த்துவதால் அவர்களின் ஊட்டசத்து குறைபாட்டை, வளர்ச்சி குறைபாட்டை சரி செய்திட முடியும் என முன் வைக்கும் வாதமும் தவறானது.

# பெண்களுக்கு குழந்தைப் பருவம் முதல் ஊட்டச்சத்து மிக்க ,சரிவிகித உணவு போதிய அளவில் கிடைக்காததே அவர்களின் வளர்ச்சி குறைவுக்கு ( stunting ) முக்கியக் காரணம். உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யாமல் திருமண வயதை உயர்த்துவதின் மூலம் இதை சரி செய்திட இயலாது.

18 வயதுக்கும் குறைவான பெண்கள் மட்டுமல்ல, குழந்தைகளும், அனைத்துவயது பெண்களுமே ஊட்டசத்து குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.வறுமையும், உணவு பாதுகாப்பின்மையுமே இதற்குக் காரணம்.

உதாரணத்திற்கு, 59 மாதங்களுக்கு குறைவான வயதுடையை குழந்தைகளில் 67 விழுக்காட்டினர் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனைத்து வயது பெண்குழந்தைகள் மற்றும் மகளிரில் 50 விழுக்காட்டினருக்கு மேல் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஐந்து வயதுக்கும் குறைவாக உள்ள குழந்தைகளில் ஏற்படும் இறப்புகளில் மூன்றில் இரண்டு பகுதி ஊட்டச்சத்து குறைபாட்டால் (under nutrition ) தொடர்பான பிரச்சனைகளால் ஏற்படுகிறது.

35 விழுக்காடு வளர்ச்சிக் குறைபாடும் அதாவது வயதுக்கு ஏற்ற உயரம் வளராமை ( Stunting) ) நீண்ட கால ஊட்டச்சத்து குறைபாட்டால் ( Chronic Undernutrition ) ஏற்படுகிறது.

17 விழுக்காடு குழந்தைகள் தீவிரமான ஊட்ட மற்றும் நுண்மச் சத்து குறைபாட்டால் ( wasting ) உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாமல் பாதிக்கப்படுகின்றனர்.

9.3 லட்சம் குழந்தைகள் தீவிரமான ஊட்ட மற்றும் நுண்மச் சத்து குறைபாட்டால் (Acute severe malnutrition) பாதிக்கப்பட்டுள்ளனர்.

# எனவே, அனைத்து வயது பெண்களும்,குழந்தைகளும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் , உணவு பாதுகாப்பை சிறு வயது முதல் உத்தரவாதப்படுத்தாமல், திருமண வயதை உயர்த்துவதால் இப்பிரச்சனையை எவ்வாறு தீர்க்க முடியும்?

# பெண்களின் திருமண வயதை உயர்த்துவதால், சட்டத்திற்கு புறம்பான கருக்கலைப்புகளும், பாதுகாப்பற்ற கருக்கலைப்புகளும், அதனால் ஏற்படும் பேறுகாலத்தாய்மார்களின் உயிரிழப்புகளும் அதிகரிக்கும்.

ஏற்கனவே, கருக்கலைப்பில் 56 % பாதுகாப்பற்ற கருக்கலைப்பாக உள்ளது. பாதுகாப்பற்ற கருக்கலைப்பால்ஒரு நாளைக்கு 10 முதல் 13 பெண்கள் இறக்கின்றனர்.

பேறுகாலத் தாய்மார்கள் இறப்பு விகிதத்தில் 8 முதல் 20 விழுக்காடு கருக்கலைப்பு , இரத்தசோகை, இரத்தப்போக்கால் ஏற்படுகிறது.

இந்நிலையில் இவ்வாறு, திருமண வயதை உயர்த்துவது பேறுகால தாய்மார்களின் இறப்பு விகிதத்தை எவ்வாறு குறைக்கும்?

அது சட்டத்திற்கு புறம்பான கருக்கலைப்பு மற்றும் பாதுகாப்பற்ற கருக்கலைப்புகளை அதிகரிக்கவே செய்யும். எனவே , திருமண வயதை உயர்த்துவதால், பேறுகால தாய்மார்களின் இறப்புவிகிதம் குறையும் என்ற மத்திய அரசின் வாதம் தவறானது.

# கல்வி தனியார்மயமானதும்,வணிகமயமானதும் ,பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுவதும்,மத்திய மாநில அரசுகள், அரசு வேலைவாய்ப்பை அதிகரிக்காததும், காலிப்பணியிடங்களை நிரப்பாததும் பெண்களின் கல்வி வேலை வாய்ப்பை பாதிக்கிறது.திருமண வயதை உயரத்துவதின் மூலம் இப்பிரச்சனையை எவ்வாறு சரிசெய்ய முடியும்?

# எனவே, பெண்களுக்கு ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை இலவச கல்விவழங்கல்,விடுதி வசதி ,கழிப்பறை வசதி,கல்வி,வேலை வாய்ப்புகளில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கல் ,தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு வழங்குதல், சம வேலைக்கு சம ஊதியம் வழங்குதல் ,தொழில் பயிற்சி மற்றும் மானியம், வங்கிக்கடன் ,பள்ளி,கல்லூரி மற்றும் வாழ்விடத்தில் பாதுகாப்பான சூழல் கிடைக்கச் செய்தல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

பெண்களுக்கு அறிவியல் மற்றும் சுகாதாரக் கல்வி, பாலியல் கல்வி, இலவச மற்றும் பதுகாப்பான கருத்தடை மற்றும் கருக்கலைப்பு வசதிகள்,மருத்துவ வசதிகள் வழங்கப்பட வேண்டும்.

ஒரு பெண் ,தான் விரும்பும் போது, விரும்பும் எண்ணிக்கையில்,விரும்பும் இடைவெளிவிட்டு குழந்தைப் பெறும் உரிமையை பெற வேண்டும்.

பெண்களுக்கு இனப்பெருக்க உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு வழங்கப்பட வேண்டும்.

பெண்களுக்கு குழந்தை பருவம் முதல் புரதம்,கொழுப்பு,கார்போஹைட்ரேட்டு ,வைட்டமின் ,நுண்மச் சத்துகள் அடங்கிய சரிவிகித உணவை இலவசமாக, அங்கன் வாடிகள், சமுதாய சமையல் கூடங்கள், பள்ளி,கல்லூரிகளில் வழங்கிட வேண்டும்.

சட்டமன்ற ,நாடாளுமன்றத்தில் 33 % இட ஒதுக்கீடு வழங்கி அரசியல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

# ஒரு பெண் ,தான் விரும்பும் போது, சாதி,மத,இன பேதமின்றி தான் விரும்பும் நபரைத் திருமணம் செய்துகொண்டு அச்சமின்றி ,சமூகப் பொருளாதாரப் பாதுகாப்புடன் வாழக்கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும்.

இது போன்ற நடவடிக்கைகளால்,பெண்களின் சமூகப் பொருளாதார கலாச்சார வாழ்வில் முற்போக்கான மாற்றங்களை செய்வதால், சமூகப் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்வதால், கல்வி வேலை வாய்ப்பை உறுதி செய்வதால் ,இளம் வயதில், அதாவது 19 முதல் 21 வயதுக்குள் திருமணங்கள் செய்து கொள்வதை தவிர்க்கக்கூடிய சூழலை, வாழ்நிலையை உருவாக்க முடியும்.

அத்தகைய தீர்வே, சரியானதாகவும்,சிறந்ததாகவும்,சிக்கல்கள் குறைந்ததாகவும் அமையும்.

தற்போது நம் நாட்டிலும் கூட சட்டரீதியிலான திருமண வயதைத் தாண்டி, சராசரி திருமண வயது அதிகரித்துக்கொண்டே வருவது இதை உறுதி செய்கிறது.

எனவே, மத்திய அரசு பெண்ணின் திருமண வயதை சட்ட ரீதியாக உயர்த்தும் திட்டதை கைவிட வேண்டும்.

** ஒமிக்கிரான் கொரோனா வைரஸ் டெல்டா வகை வைரஸ்ஸை விட 70 மடங்கு வேகத்தில் பரவுகிறது. அதுமட்டுமின்றி தொற்றாளர்களின் எண்ணிக்கை 1.5 முதல் 3 நாட்களில் இரட்டிப்பாகிறது.எனவே மத்திய மாநில அரசுகள் ஒமிக்கிரான் கொரோனா வைரஸ் பரவுவதை தடுத்திட கூடுதல் கவனத்துடன்,அறிவியல் பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த கால அனுபவங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். “ஒமிக்கிரான் கொரோனா வைரஸ் தற்போது 77 க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டறியப்பட்டிருந்தாலும், மேலும் பல நாடுகளில் இது இருப்பதற்கான வாய்ப்புள்ளது’’ என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார். எனவே, ஆபத்து அதிகமுள்ள நாடு,ஆபத்து குறைவான நாடு எனப் பிரித்து வெறும் 12 நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வருபவர்களை மட்டும் பரிசோதிக்கும் நடைமுறை கூடாது.

அனைத்து நாடுகளிலிருந்து வரும் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டதற்கான சான்றிதழும், கொரோனா தொற்று இல்லை என 72 மணி நேரத்துக்குள் பரிசோதனை செய்து உறுதி செய்யப்பட்டதற்கான சான்றிதழும் கட்டாயமாக்கப்பட வேண்டும்.அவர்கள் அனைவருக்கும் விமான நிலையங்களில் மீண்டும் துரித ஆர்.டி.பி.சி ஆர் பரிசோதனை செய்திட வேண்டும். அனைவரையும் வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும்.

# நம் நாட்டில் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைகளை அனைத்து மாநிலங்களிலும் போதுமான எண்ணிக்கையில் செய்வதுடன், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மாதிரிகளில் 5 விழுக்காட்டை கட்டாயம் மரபியல் சரடு வரிசைப்படுத்தல் பரிசோதனைக்கு உட்படுத்திட வேண்டும்.

அதன் மூலம் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் உருவாகிறதா என்பதை விரைவில் கண்டறிய முடியும்.

# குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் பயன்படுத்த அவசர அனுமதி கிடைத்துவிட்டது.ஆயினும், மத்திய அரசு அறிவித்தது போல் அக்டோபர் , நவம்பர் மாதங்களில் , இணை நோயுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை.இது வருத்தமளிக்கிறது. எனவே உடனடியாக அனைத்து குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசியை போட்டிட வேண்டும்.

** கொரோனா இரண்டாம் தடுப்பூசி போட்டு 9 மாதம் முடிந்தவுடன், பூஸ்ட்டர் தவணையை ( மூன்றாம் தவணை) வழங்கிடலாம் என்று ஐ.சி.எம்.ஆர் கூறியுள்ளது. அதன் அறிவுரையை பின்பற்றி முதலில் மருத்துவத்துறை பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு , பூஸ்ட்டர் தவணை கொரோனா தடுப்பூசியை வழங்கிட வேண்டும்.

இன்றைய ஊடகவியளார் சந்திப்பில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி, தமிழ்நாடு மருத்துவப் பணியாளர்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் பி.காளிதாசன், தமிழ்நாடு ஆரம்ப சுகாதார நிலைய ஆர்.சி.எச் தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் N.S.செல்வராஜ், மாநில துணைத்தலைவர் எஸ்.நிலா ஒளி, பாரா மெடிக்கல் கல்வி மற்றும் நலச்சங்கத்தின் நிர்வாகிகே. தினகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்படிக்கு,டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்,பொதுச் செயலாளர், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்.தொடர்புக்கு: 9940664343 9444181955

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button