கட்டுரைகள்

‘நேட்டோ’ எனும் எல்லை தாண்டிய பயங்கரவாதம்

– ஆனந்த் பாசு

நேட்டோ (NATO) எனப்படும் வட அட்லாண்டிக் உடன்படிக்கை அமைப்பின் உச்சி மாநாடு அண்மையில், ஜூன் மாத இறுதியில் ஐரோப்பாவில் உள்ள ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் நகரில் நடந்து முடிந்துள்ளது.

இந்த உச்சி மாநாட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பில், நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டொல்டென்பேர்க் பேசுகையில், ‘உச்சி மாநாடு முதல் முறையாக நேரடியாகச் சீனாவையும், நேட்டோ உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் நலன்களுக்குச் சீனா முன்னிறுத்தும் சவால்களையும் கவனத்தில் கொண்டிருக்கும்’ என்றும், ‘நேட்டோ உறுப்பு நாடுகள், தெற்கு அண்டைப் பகுதியில், ரஷ்யா மற்றும் சீனாவின் அதிகரித்து வரும் செல்வாக்கிற்குப் பதிலடி கொடுப்பதைப் பரிசீலிக்கும்’ என்றும் கூறி இருப்பது , உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தெற்கு அண்டைப் பகுதி என்பது, இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள இந்தியாவை உள்ளடக்கிய பிராந்தியத்தையே குறிக்கிறது. வாஷிங்டன் ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்ட, வட அட்லாண்டிக் உடன்படிக்கை அமைப்பு, 1949 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு இராணுவக் கூட்டணி. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில், மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் நிலைகொண்டிருந்த சோவியத் படைகளுக்கு எதிர் படையை இது உருவாக்க முயன்றது. இதன் இன்னொரு நோக்கம் சோவியத் யூனியன் முன்னெடுக்கும் கம்யூனிச சித்தாந்தப் பரவலைத் தடுத்து நிறுத்துவது.

பெல்ஜியம், கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஐஸ்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், நெதர்லாந்து, நோர்வே, போர்ச்சுகல், இங்கிலாந்தை உள்ளடக்கிய யுனைடெட் கிங்டம் மற்றும் அமெரிக்கா ஆகிய 12 நாடுகள் இதன் ஸ்தாபன உறுப்பினர்கள். பிறகு, கிரீஸ், துருக்கி (1952) ஆகிய நாடுகளும் இந்த ராணுவக் கூட்டமைப்பில் இணைந்தன. இந்த ராணுவக் கூட்டமைப்பிற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சோவியத் யூனியன் வார்சா ஒப்பந்த அமைப்பை 1955 ஆம் ஆண்டில் உருவாக்கியது.

இவ்விரு எதிரெதிர் ராணுவக் கூட்டணிகளும், ‘பனிப்போர்’ என்று பெயர் சூட்டப்பட்ட, பிரகடனப்படுத்தப்படாத நிழல் யுத்தத்தை நடத்தி வந்தது, இன்னொரு உலக யுத்தத்திற்கு இது அடிகோலுமோ என்கிற பேரச்சத்தை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியது. 90 களின் தொடக்கத்தில், சோவியத் யூனியன் எனும் பல்வேறு நாடுகளை உள்ளடக்கிய உலகின் ஆகப்பெரும் அரசியல் கட்டமைப்பு பிரிந்தவுடன், வார்சா ஒப்பந்த கூட்டமைப்பும் கலைக்கப்பட்டது. இந்த நிலையில், சோவியத் யூனியன் பிரிந்ததற்குப் பிறகு அதன் ஸ்தாபன நோக்கமான சோவியத் எதிர்ப்பு என்பதே நீர்த்துப் போய் விட்டதால், நேட்டோவின் இருத்தல், இயல்பாகவே கேள்விக்குள்ளாக்கப்பட்டது.

ஆனால், உலக அமைதியை முன்னிட்டு, அது கலைக்கப்படுவதற்குப் பதிலாக புதிய நோக்கத்துடனும், செயல்திட்டத்துடனும் செயல்படும் என்று பிரகடனப்படுத்தப்பட்டு, அதன் செயல்பாடுகள் தொடர்ந்தன. துரதிருஷ்டவசமாக, சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்த பல ஐரோப்பிய நாடுகளும், நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக இணைந்தன. இதன் மூலம், வட அட்லாண்டிக் பிராந்தியத்தைத் தாண்டி, கிழக்கு நோக்கி நேட்டோ அமைப்பு விரிவடைந்தது. சோவியத்திலிருந்து பிரிந்த ரஷ்யாவின் அதிபர் போரிஸ் யெல்சின் இதை எதிர்த்தாலும், ஐரோப்பாவில் அமைதியைக் காப்பதற்கான முகாந்திரத்தில் அவருடன் சமாதான உடன்படிக்கை எட்டப்பட்டது. ஆனால், சமாதானத்திற்குப் பதிலாக, நேட்டோ அமைப்பு பல்வேறு நாடுகளின் பிரச்னைகளை ஊதிப் பெரிதாக்கி, அமெரிக்க ஏகாதிபத்தியம் புவிசார் அரசியலின் ஒற்றை துருவமாக உருவாகவே வழி வகுத்தது. இருப்பினும், பல வகையிலும் வல்லமை படைத்த ரஷ்யாவை அடக்கி ஒடுக்க, ஐரோப்பாவில் வேரூன்றிய நேட்டோ, மென்மேலும் கிளை பரப்ப முனைந்தது. இது ரஷ்யாவிற்கு ராணுவரீதியாக அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.

2014 ஆம் ஆண்டிலிருந்து, உக்ரைனைக் களமாகக் கொண்டு அமெரிக்க ஏகாதிபத்தியம், ரஷ்யா மீது மறைமுகமாக யுத்தம் நடத்தி வந்தது, ஒரு கட்டத்தில், பிரகடனப்படுத்தப்பட்ட ரஷ்ய-உக்ரைன் போராக வெடித்து, இன்றளவும் நடந்து வருகிறது. இதற்கிடையே, மாறி வரும் உலகில், கம்யூனிச நாடான சீனா ஒரு பெரும் சக்தியாக உருவெடுத்தது, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அரசியல் – பொருளாதார ரீதியாகவும், சித்தாந்த ரீதியாகவும், புதிய சவால்களை முன் நிறுத்தியது.
இந்தப் பின்புலத்தில், நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர், ஸ்டொல்டென்பேர்க்கின் அறிக்கை, நேட்டோவின் விரிவெல்லையை அசாதாரணமாக விரிவாக்குவதற்கு முன்மொழியப்படுகிறது என்பதையும், நேட்டோ, ரஷ்யாவுக்கு எதிராக மட்டுமல்ல, மாறாகச் சீனாவுக்கு எதிராகவும் செயல்படத் திட்டம் தீட்டி உள்ளது என்பதையும் தெளிவுபடுத்துகிறது.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நான்கு ஆசிய-பசிபிக் நாடுகளின் தலைவர்கள் முதல் முறையாக இந்த நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்து கொண்டது, அந்த ராணுவக் கூட்டணி ஆசிய-பசிபிக் நாடுகள் முழுவதும் தன் ஆதிக்கத்திற்குட்பட்டதாக்க முனைவதையே எடுத்துக் காட்டுகிறது. ஏற்கனவே, அமெரிக்கா, ஆஸ்திரேலியாவையும், ஜப்பானனையும், இந்தியாவுடன் சேர்த்து, சீனாவை இலக்கு வைக்கும் குவாட் (Quad) எனப்படும், நாற்கரப் பாதுகாப்பு பேச்சுவார்த்தைக் குழு அமைப்பைக் கட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா கூறி வருவது போல, நேட்டோ ஒன்றும் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்’ மட்டும் கவனம் செலுத்தப் போவதில்லை. மாறாக, அவ்வமைப்பின் துணைச் செயலாளர் ஜெனரல் மிர்சியா ஜியோனா, டென்மார்க் கோபன்ஹேகன் மாநாட்டில் கூறியதைப் போல, வல்லரசுப் போட்டியில் ரஷ்யா மற்றும் சீனா மீது, ஒருமுனைப்பட்டு பல முனைகளிலிருந்தும் தாக்குதல் நடத்தும். சீனாவின் எழுச்சி, சீன அணுஆயுத அதிகரிப்பு, அதிநவீன இராணுவத் தளவாடங்களில் அந்த நாடு பெரும் முதலீடு செய்து வருவது போன்றவை குறித்து நேட்டோ அமைப்பு கவலை கொள்வதற்கான காரணம், உண்மையில், அவ்வமைப்பை ஆட்டி வைக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு, அதன் ஒற்றை துருவ எதேச்சதிகாரத்திற்கு, சீனா பெரும் சவாலாக உருவாகியிருப்பதுதான்.

நேட்டோவுடன் இணைந்து, ஆசிய-பசிபிக் பிராந்தியம் முழுவதும் ராணுவக் கூட்டணி, ராணுவதள ஏற்பாடுகளைக் கட்டமைக்கும் அமெரிக்கத் தலைமையிலான முயற்சிகள் குறித்து சீனா ஆழமாகக் கவலைக் கொண்டுள்ளதாகக் கூறி உள்ளது. கடந்த மாதம், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாபிரிக்க நாடுகளின் பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங், உலக அரங்கில் மீண்டும் உருவாகியுள்ள ‘பனிப்போர் மனப்பான்மையை’ நிராகரிப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள், ரஷ்யாவை ஒடுக்கும் நோக்கில் சுமத்தி உள்ள தடையாணைகளுக்கு எதிராகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அண்மையில், சீன வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், ஆசியாவில் எதிர்விரோத முகாம்களை உருவாக்கும் ‘மிகவும் அபாயகரமான’ முயற்சியில் நேட்டோ ஈடுபட்டுள்ளதாக வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், ஐரோப்பாவின் ஸ்திரத்தன்மையை ஏற்கனவே சீர்குலைத்துள்ள நிலையில், நேட்டோ கூட்டணி, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தை உள்ளடக்கிய ஒட்டுமொத்த உலகிலும் அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கக் கூடாது’ என்றும் கூறியுள்ளார்.

எனவே, சீனாவுடனான பொருளாதார-அரசியல் உறவுகளை பலப்படுத்துவதற்குப் பதிலாக, உலக நாடுகள் பலவும் அமெரிக்காவுடன் இராணுவக் கூட்டணி அமைத்து, அமெரிக்காவின் ஏகாதிபத்தியப் போக்கிற்கு பலிகடாவாகி, மோதல் போக்கை வளர்த்தெடுப்பது, பனிப்போர் மனப்பான்மையையே குறிக்கிறது. இப்போது உக்ரைன்- ரஷ்யப் போரினால் உலகமே பெரும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், உலகப் போர்ச் சூழல் இந்த நிலைமையை இன்னும் மோசமாக்கும். நேட்டோ உச்சி மாநாடு, அணுஆயுத நாடுகளிடையே, உலகளாவிய அணு ஆயுதப் போர் அபாயத்தையே முன்னிறுத்தி உள்ளது.

இந்த மாநாட்டில் ஐரோப்பாவின் பின்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய இரு நாடுகள், துருக்கியின் ஆட்சேபணையைச் சரிக்கட்டி, புதிய உறுப்பினர்களாக நேட்டோ ராணுவக் கூட்டணியில் இணைவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவை இணையும் பட்சத்தில் நேட்டோ உறுப்பினர் நாடுகளின் எண்ணிக்கை 32 ஆக உயரும்.

“நேட்டோவின் விரிவாக்கம் உலக நாடுகளிடையே பதற்றத்தைக் குறைக்காது, மாறாக அதிகரிக்கவே செய்யும். பல தசாப்தங்களாக தீர்க்கப்படாத பிரச்னைகள் மேலும் முற்றவே இது வழி வகுக்கும். இவ்விரிவு, சித்தாந்த ரீதியான மோதல்களை மீண்டும் பற்ற வைக்குமேயானால், அது மிகவும் துரதிருஷ்டவசமானது. உலக நாடுகளுக்கிடையேயான மோதல் போக்குகள் உலகின் வளங்களை எல்லாம் உறிஞ்சிவிடும். இது இவ்வுலகின் முன்னுரிமை அல்ல.” என்று ‘தி எகனாமிக் டைம்ஸ்’ ஆங்கில தினசரிப் பத்திரிகை வெளியிட்டுள்ள ஒரு நேர்காணலில், மேனாள் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பங்கஜ் சரண் கருத்து தெரிவித்துள்ளார்.

புதியதோர் உலகம் செய்வோம் –
கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் !
பொதுவுடைமை கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோடதை எங்கள் உயிரென்று காப்போம்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button