கட்டுரைகள்

நமது தேசத்தின் சுதந்திரத்துக்கு எது அச்சுறுத்தல்?

-டி.ராஜா

தேசம் 75வது சுதந்திர தினத்தைத் கொண்டாடி வருகிறது. இந்தச் சூழலில் பிரிட்டிஷாருக்கு விசுவாகமாக இருந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பானது தேச விடுதலைக்கான மதச்சார்பற்ற, அனைவரையும் உள்ளடக்கிய போராட்டத்தின் மகத்தான பாரம்பரியத்தை அதன் வசமாக்கிக் கொள்ள முயலுவது வரலாற்று முரணாகும்.

75 ஆண்டுகளுக்கு முன்பு, பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கொடூரப் பிடியிலிருந்து மக்கள் விடுதலை பெற்றபோது, நமது தேசம் ஒரு முக்கியத்துவம் நிறைந்த வரலாற்றுக் கட்டத்தை அடைந்தது. பிரிட்டிஷ் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிரான அரசியல் சிந்தனைகள், சித்தாந்தங்களின் சங்கமம் மற்றும் நூற்றாண்டு காலமாக தொடர்ந்து நீடித்த வெகுமக்கள் போராட்டத்தின் விளைவாக தேசம் விடுதலைப் பெற்றது; பிரிட்டிஷ் கொடுங்கோன்மையின் பிடியிலிருந்து வெகுமக்கள் விடுவிக்கப்பட்டனர்.

தேச விடுதலைக்கான நமது போராட்டம் பிரிட்டிஷாரை வெளியேற்றுவதற்கான ஒரு இயக்கம் என்பதாக மட்டுமின்றி தேசத்தின் வருங்காலத்திற்கான ஒரு செயல்திட்டத்தையும் தன்னகத்தே கொண்டிருந்தது. நமது விடுதலைக்காகப் போரிட்ட மாபெரும் சித்தாந்தங்களுக்கு இடையேயான உரையாடலின் விளைவாகவே, ஏழ்மை, சமத்துவமின்மை ஆகியவற்றிலிருந்து தேசத்தை விடுவிப்பதற்கும், சமூக சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்குமான அத்தகைய செயல்திட்டமானது உதயமானது. அத்தகைய மாபெரும் சித்தாந்தங்களில் மகாத்மா காந்தியடிகளால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட காங்கிரஸ் இயக்கத்தின் கொள்கை மற்றும் திட்டங்கள், கம்யூனிஸ்ட்கள் மற்றும் சோசலிஸ்ட்களின் கொள்கை மற்றும் திட்டங்கள், மிகச்சிறந்த முறையில் டாக்டர் அம்பேத்கரால் முன்வைக்கப்பட்ட முற்போக்காளர்களின் சமூக சீர்திருத்த திட்டங்கள் ஆகியவை முதன்மையானவை ஆகும்.

சிந்தாந்த சிந்தனையோட்டங்களுக்கு இடையேயான உரையாடல்கள் மற்றும் விவாதங்கள் ஆகியவை தோற்றுவித்த விழுமியங்கள், காலனி ஆதிக்கத்திற்கு எதிரான நமது போராட்டத்தை மிகச்சிறப்பாக வரையறுத்தன; மதச்சார்பின்மையையும் மக்கள் நலனையும் மையமாகக் கொண்ட வருங்கால இந்தியக் குடியரசுக்கு ஒரு தீர்க்கமான வடிவத்தை வழங்கின. ஆனால், தற்போது அத்தகைய விழுமியங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தேச விடுதலைக்கான நெடிய போராட்டத்தில் எவ்விதத்திலும் பங்கேற்காது, பிரிட்டிஷாருக்கு ஆதரவாக நின்ற ஆர்.எஸ்.எஸ்.அமைப்பிடமிருந்து அந்த விழுமியங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தேச விடுதலைக்கு வித்திட்ட அந்த மகத்தான விழுமியங்களையும், அவை தற்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதையும் நாம் அறிந்து உணர வேண்டும். அவ்வாறு அறிந்து உணர்ந்திட அழிவுகர ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்த அடித்தளங்களையும், அந்த அடித்தளங்கள் எவ்வாறு நமது தேசத் தலைவர்களின் போராட்ட லட்சியங்கள் ஒவ்வொன்றுக்கும் எதிரானவையாக இருந்தன என்பதையும் நாம் ஆய்வு செய்திட வேண்டும்.

அரசியல் விடுதலையை நாம் வென்றெடுத்த போது இந்தியா எத்தகைய ஒரு அரசு முறையை ஏற்க வேண்டும் என்பது ஒரு பெரும் விவாதப் பொருளாக இருந்தது. இந்தியக் குடியரசு உருவாகிக் கொண்டிருந்த அந்த கால கட்டத்தில், 550க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் முழுமையாக இணைக்கப்பட வேண்டியிருந்தது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அமெரிக்க அரசாங்க முறை மற்றும் இங்கிலாந்தின் வெஸ்ட்மின்ஸ்டர் அரசாங்க முறை குறித்த ஆலோசனைகள் நடைபெற்று வந்தன. பெரும்பாலான தலைவர்களால் நாடாளுமன்ற ஜனநாயக முறை தேர்வு செய்யப்பட்டு நமது அரசியல் அமைப்பிலும் நாடாளுமன்ற ஜனநாயக முறையே ஏற்கப்பட்டது. தேச விடுதலையின் பொன் விழாவை முன்னிட்டு நாட்டு மக்களிடையே உரையாற்றிய அப்போதைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன், டாக்டர் அம்பேத்கர் உள்ளிட்ட அரசியல் அமைப்பு சட்டத்தின் சிற்பிகள் நாடாளுமன்ற ஜனநாயக முறையை ஏற்பது என்ற தீர்மானகரமான முடிவை மேற்கொண்டது பற்றி விரிவாக எடுத்துரைக்கும் போது கூறியதாவது: “இந்தியாவுக்கு நாடாளுமன்ற ஜனநாயக முறையை ஏற்படுத்தியதன் மூலம், அரசியல் அமைப்புச் சட்டத்தின் வரைவுக்குழு அதிக நிலைத்தன்மைக்கு (More Stability) பதிலாக அதிக பொறுப்புடைமையையே (More Responsibility) அதன் விருப்பத் தேர்வாகக் கொண்டிருந்தது. இந்த முறையின் கீழ் அரசாங்கமானது ஒவ்வொரு நாளும் உரைகல் கொண்டு பட்டை தீட்டப்படுகிறது.” கூட்டுப் பொறுப்பு எனும் இந்தக் கருத்தானது அரசின் மீதான ஆர்.எஸ்.எஸ்.-ன் நேரடி ஆதிக்கத்தின் காரணமாக தற்போது பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. நாடாளுமன்றத்தை செயல்திறனற்றதாக, தேவையற்றதாக சீர்குலைத்திட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஜனநாயக விரோத ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பிரதிநிதித்துவ ஜனநாயகக் கோட்பாடு, அரசியல் அமைப்பு சட்ட பாதுகாப்பு அரண்கள் குறித்து அதிருப்தி மட்டுமே கொண்டிருந்தது. ஐரோப்பிய பாசிஸ்ட்டுகளை உயர்த்திப் பிடித்துப் போற்றுவதும், பாசிச தத்துவத் தலைமையை வலியுறுத்துவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை ஜனநாயக சமூக அமைப்பின் செயல்பாட்டிற்கு பொருத்தமற்ற அமைப்பாக கட்டமைத்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் நிறுவனர் கே.பி.ஹெட்கேவரின் குருவான பி.எஸ்.மூஞ்சே இத்தாலியில் முசோலினியைச் சந்தித்து கூறியதாவது: “இந்தியா மற்றும் இங்கிலாந்தின் பொது மேடைகளில் பாசிச அமைப்புகளைப் போற்றிப் புகழ்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும் போதெல்லாம் எனது குரலை உயர்த்தி புகழ் முழக்கம் எழுப்பிட நான் தயங்க மாட்டேன். பாசிஸ்ட்டுகள் வெற்றியடை நான் வாழ்த்துகிறேன்.”

உயர்மட்ட ஒற்றைத் தலைமைக்கு அடிபணிதல் எனும் விதியை ஆர்.எஸ்.எஸ். இன்றளவும் பின்பற்றி வருகிறது. இந்த நடைமுறை அவ்வமைப்பை ஜனநாயக அரசியல் முறைக்கு பொருத்தமற்றதாகச் செய்துவிடுகிறது. இதில்தான் ஜனநாயக விதிமுறைகள், நியமங்கள் மற்றும் பிரதிநிதித்துவம் ஆகியவற்றிற்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்.-ன் வன்மம் நிலை கொண்டுள்ளது. ஜனநாயகம் பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ்.-ன் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது என்று நாம் சொல்லும்போது, அதற்கான விஷக்கிருமிகளை ஆர்.எஸ்.எஸ்-ன் அடித்தளம் மற்றும் செயல்பாடுகளில் நாம் காண முடியும்.

நமது விடுதலைப் போராட்டத்தின் அடித்தளமாக விளங்கிய மற்றுமொரு முதன்மையான விழுமியம் மதச்சார்பின்மையாகும். பிரிட்டிஷாருக்கு எதிரான போராட்டத்தில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் தோளோடு தோள் நின்று களம் கண்டனர். எவ்வாறாயினும், படிநிலைகள் மற்றும் ஏற்றத்தாழ்வுகளை மையமாகக் கொண்ட இந்து தேசியத்தை நிறுவிட வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர்கள் மற்றும் தத்துவவாதிகளின் நோக்கம் என்பது அவர்களின் எழுத்துக்களில் இருந்து தெளிவாகத் தெரிகிறது. இந்த பேராபத்து குறித்து எச்சரித்த டாக்டர் அம்பேத்கர், “இந்து ராஜ்யம் எதார்த்தமாகும் பட்சத்தில், ஐயங்களுக்கு இடமின்றி, தேசத்திற்கு அது ஒரு மாபெரும் அழிவு ஆகும்.” என்று கூறினார். மதச்சார்பற்ற, சமூகநீதியின்பாற்பட்டதாக இந்திய அரசு திகழ்ந்திட வேண்டும்.

சமூகத்தில் பிளவையும், மோதலையும் உருவாக்கும் கருத்தாக்கத்தை முன்னெடுத்த இரண்டாம் சங்சாலக்கான எம்.எஸ்.கோல்வால்கர் எழுதியதாவது: “இந்துஸ்தானத்தில் உள்ள அந்நிய இனத்தவர்கள், ஒன்று, இந்துப் பண்பாட்டையும் மொழியையும் கட்டாயம் ஏற்க வேண்டும். அவர்கள் இந்து மதத்தைப் போற்றிப் புகழ்ந்திடவும், மதித்து ஒழுகிடவும் கற்றுக் கொள்ள வேண்டும்; இந்து பண்பாடு, இந்து தேசியம் மற்றும் இனத்தையும் போற்றுவதைத் தவிர வேறு எந்த ஒரு கருத்தையும் ஆதரிக்கக் கூடாது. தங்களின் தனித்தப் பண்புகளை விட்டொழித்து இந்துத்துவ இனத்தில் கலந்து விட வேண்டும். அல்லது, இந்து தேசியத்திற்கு அடிபணிந்தவர்களாக, குடிமக்களுக்கான உரிமைகள்கூட இல்லாமல், எவ்வித சிறப்பு சலுகைகளுமின்றி இந்திய நாட்டில் வசிக்கலாம்.”

பிரிட்டிஷாரை விரட்டியடித்திட ஒட்டுமொத்த தேசமும் அணிதிரண்டு கொண்டிருந்தபோது, மக்களிடையே பகைமையை உருவாக்குவதில் ஆர்.எஸ்.எஸ். தீவிரமாக இருந்தது. ஹிட்லர் மற்றும் முசோலினியின் தீவிரத்தன்மை கொண்ட பிரிவினைவாத சித்தாந்தத்தில் இருந்து உத்வேகம் பெறும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர், இந்துகளை ஒன்றிணைத்து தங்களின் பிரிவினைவாத வலைக்குள் சிக்க வைத்திட இஸ்லாமியர் குறித்த அச்ச உணர்வை கண்டறிந்தனர். அவர்களின் இந்தச் சிந்தனைப் போக்கு தேசத்தின் கடந்த காலத்தின் மீது போர்ப் பிரகடனம் செய்திட ஆர்.எஸ்.எஸ்-ஐ தூண்டியது. இஸ்லாமியர்களை கொடூரமானவர்களாகச் சித்தரிக்கும் முயற்சிகள் தொடர்ந்தன. நமது விடுதலைப் போராட்ட இயக்கத்தின் மதிப்புமிக்க தலைவர்களில் ஒருவர் கூட முகலாயர்களைப் படையெடுப்பாளர்கள் என்றோ கொள்ளையர்கள் என்றோ புழுதிவாரி தூற்றியதில்லை. ஆனால், இஸ்லாமியர்கள் குறித்த நீண்ட கால மோதல்களும், முரண்பாடுகளும் ஆர்.எஸ்.எஸ்.க்கு அத்தியாவசியமானதாக இருந்தது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சர்தார் வல்லபாய் பட்டேலை வரித்துக் கொள்ள மிகக் கடுமையாக முயன்று வருகிறது. இந்திய தேசிய காங்கிரசின் கராச்சி மாநாட்டில் சர்தார் பட்டேல் ஆற்றிய வரலாற்று சிறப்புமிக்க தலைமை உரையில், “ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டுகளாக இந்தியா தொடர்ந்து சுரண்டப்பட்டு வருகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் பொருத்தவரையில், சுல்தான்கள் மற்றும் முகலாயர்கள் ஆட்சிக் காலங்களில் மட்டுமே இந்தியா சுரண்டப்படுகிறது. மேலும், பிரிட்டிஷார் மீதான அவர்களின் விசுவாசம் உறுதியாக உள்ளது. நமது தேசத்திற்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம்தான் எதிரியாக இருந்தது. ஆனால், வகுப்புவாத ஆர்.எஸ்.எஸ்.க்கு இஸ்லாமியர்கள்தான் எதிரிகள். நாம் எதனை எதிர்த்துப் போராடுகிறோம் என்பதில் கண்டறியப்படும் வேறுபாடுதான் இந்திய தேசிய வாதத்திற்கும் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் குறுகிய இந்துத்துவ தேசியவாதத்திற்கும் இடையிலான மிக முக்கியமான வேறுபாட்டை ஏற்படுத்துகிறது. தேசிய விடுதலைப் போராட்ட காலத்தின் முக்கியமான தருணத்திலும்கூட, ஆர்.எஸ்.எஸ். தேசத்திற்கு எதிராகவே நின்றது என்பது தெளிவாகிறது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ளபடி, விடுதலைக்கான நமது போராட்டத்தில் சமூக சீர்திருத்தம் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருந்தது. இந்த சமூக சீர்திருத்த செயல்திட்டத்தின் இருபெரும் கூறுகளாக சாதியும், சமூகத்தில் பெண்கள் நிலையும் தொடர்புடையவைகளாக இருந்தன. இந்தியாவில் நிலவும் சாதிய முறைக்கு மனுஷ்மிருதிதான் காரணம் என்று டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கூறினார். சாதிய இழிவுகளை எதிர்த்து 1927 ஆம் ஆண்டு டிசம்பர் 25 அன்று டாக்டர் அம்பேத்கர் பொதுவெளியில் மனுஸ்மிருதியைத் தீயிட்டு கொளுத்தினார். சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக கடுமையாகப் போராடிய டாக்டர் அம்பேத்கர், அரசியல் அமைப்புச் சட்டத்தின் மூலமாக வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிய பாதுகாப்புகளை உருவாக்கி அளித்து, அரசியல் சமத்துவத்தை நிறுவினார். ஆனால், பிராமனீய ஆர்.எஸ்.எஸ்.க்கு, சமூதாயத்தில் அதிகாரம் மற்றும் சட்டத்தின் ஊற்றாக மனுஸ்மிருதியே தொடர்ந்தது. அவர்களால் சமத்துவத்தை ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்து ஒருவார காலம் முடிவதற்குள்ளாக 1949 நவம்பர் 30 அன்று ஆர்.எஸ்.எஸ்.-ன் அதிகாரப்பூர்வ இதழான ஆர்கனைஸரில் பிரசுரமானது பின்வருமாறு: “மனுஸ்மிருதியில் உள்ள மனுவின் சட்டங்கள் உலக மக்கள் அனைவராலும் போற்றப்படுகிறது; அவர்களின் தன்னிச்சையான கீழ்படிதலையும் அனுசரித்தலையும் பெறுகிறது. ஆனால் நமது அரசியலமைப்புச் சட்ட பண்டிதர்கள் இதனை உணர்ந்தாரில்லை.”

“சாதிகள் தேசவிரோதமானவை” என்று டாக்டர் அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபையில் கர்ஜித்தார். சமூக வாழ்வில் சாதிகள் பிரிவினையை உண்டாக்குகின்றன. சாதிகளுக்கிடையே பகைமை மற்றும் பொறாமையை ஏற்படுத்துவதால் சாதிகள் தேசவிரோதமானவை ஆகும். சாதிய பாகுபாட்டை முன்னிறுத்தும் மனுஸ்மிருதியை உயர்த்திப் பிடிப்பதன் மூலம் ஆர்.எஸ்.எஸ். அதன் தேச விரோத தன்மையை மீண்டும் ஒரு முறை நிரூபித்து உள்ளது.

75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வரும் இத்தருணத்தில், பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை என்று நமது விடுதலைப் போராட்ட வீரர்கள் எதனைக் கருதினார்கள் என்பது குறித்து நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். அவர்களின் மகா உன்னதமான தியாகங்கள் குறித்தும், சுதந்திர இந்தியாவிற்கு எது தேவை என்று அவர்கள் விரும்பியது குறித்தும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக, சமத்துவ மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவுக்காகவே காந்தியடிகள், சுபாஷ் போஸ் தொடங்கி பகத்சிங், சந்திரசேகர ஆசாத் வரையிலான தியாகிகள் தங்களை அர்ப்பணித்தார்கள். இவர்களில் ஒருவர் கூட மத அடிப்படைவாத இந்து தேசத்திற்காக போராடியவர்கள் இல்லை என்பதை நாம் மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்ட வேண்டும்.

சுதந்திரத்தின் உண்மையான சாராம்சத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்றால் சுதந்திர இந்தியா பிரதிபலிக்கும் விழுமியங்கள், அவற்றுக்காக தியாகம் புரிந்தவர்கள், அந்த விழுமியங்களுக்கு இன்று அச்சுறுத்தல் உண்டாக்குபவர்களை நாம் அடையாளம் கண்டாக வேண்டும். நமது தேசத்தின் சுதந்திரத்திற்கு அடித்தளமாக அமைந்துள்ள ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் சமத்துவம் ஆகியவற்றிற்கு அச்சுறுத்தல் உண்டாக்குபவர்களே உண்மையில் தேச விரோதிகள் ஆவர்.

தேசப்பற்றுக்கான சான்றிதழ் வழங்கிடவும், சுதந்திரத்தை மறுவரையறை செய்திடவும், பிரிட்டிஷ் கைகூலிகளான ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தற்போது முயலுவது கேலிக்குரியதாக இருக்கிறது. சுதந்திரம் எதைக் குறிக்கிறது என்பதை உணர்ந்து அதனைப் பாதுகாத்திடப் போராட வேண்டியது, நமது கடமையாகும். சுதந்திரத்திற்காக நமது முன்னோர்கள் ஏற்றுக் கொண்ட கடும் துன்பங்ளை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். நமது தேசத்தின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் தீய சக்திகளை நாம் புறந்தள்ளும் சூழ்நிலை எழுந்துள்ளது.

தமிழில்: அருண் அசோகன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button