இந்தியா

தொழிலாளர் விரோத சட்டத் திருத்தத்தை தி.மு.க அரசாங்கம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் – ஏஐடியுசி தேசிய செயற்குழு வலியுறுத்தல்

ஏஐடியுசி தேசிய செயற்குழு இன்று (24.04.2023) வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பது பின்வருமாறு:

தினசரி வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக அதிகரிக்கும் தன்னிச்சையான முடிவை தமிழ்நாடு அரசாங்கம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று ஏஐடியுசி வலியுறுத்துகிறது.

தினசரி வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக அதிகரிக்கும் ஷரத்தைக் கொண்டுள்ள தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டம் 2023-ஐ தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றியுள்ளது. இதனை ஏஐடியுசி எதிர்க்கிறது; நிராகரிக்கிறது. சட்டமன்றத்தில் எந்த விவாதமுமின்றி, தொழிற்சங்கங்களுடன் எவ்வித கலந்தாலோசனையும் மேற்கொள்ளாமல் இந்தச் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தி.மு.கவுடன் கூட்டணியில் உள்ள சி.பி.ஐ, சி.பி.ஐ(எம்), காங்கிரஸ், வி.சி.க மற்றும் ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்தச் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. பல்வேறு தொழிலகங்கள் மற்றும் தொழிற்துறை சங்கங்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்தச் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டு இருப்பதாக சட்ட முன்வடிவிலேயே குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்தச் சட்டத்திருத்தம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், தொழிலாளர் விரோத போக்கும் கொண்டுள்ளது. இவ்வாறு முதலாளிகளுக்கு அதிகாரம் அளிப்பதும், அனைத்து ஒழுங்குமுறை விதிகளை மீறுவதற்கான முழு அதிகாரத்தை அவர்களுக்கு அளிப்பதும், தொழிலாளர்களைச் சுரண்டலுக்கும், மன உளைச்சலுக்கும், உடல்நல சீர்கேடுகளுக்கும் உள்ளாக்குவது கண்டிக்கத்தக்கதாகும்.

சட்டத்தில் இருந்து முதலாளிகளுக்கு அளிக்கப்படும் விதிவிலக்குகள் அனைத்தும் தொழிலாளர் நலன்களுக்கு எதிராகவே பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. வேலை நேரத்தை அதிகரிக்கும் இந்தச் சட்டத்திருத்தம் தொழிலாளர்களின் பணிச்சூழல் மற்றும் ஊதியத்தின் மீது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். மத்திய சட்டத் தொகுப்புகளை நிறைவேற்றிய மோடி அரசாங்கம் கூட, தொழிலாளர் மற்றும் தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, அவற்றை இப்போது வரையிலும் நடைமுறைப்படுத்தவில்லை. அதிகரிக்கப்பட்ட வேலை நேரம், தொழிலாளர்களின் உடல் மற்றும் மனநலத்தின் மீது, வயது, பாலினம் ஆகியவற்றைக் கடந்த, எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, இது போன்ற சட்டங்களைத் தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் அனுமதிக்க முடியாது. இது போன்ற தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை ஏஐடியுசி தொடர்ந்து எதிர்க்கும்.

இது போன்ற தொழிலாளர் விரோத சட்டங்களைத் தொழிலாளர்கள், குறிப்பாகத், தமிழ்நாட்டு தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் இணைந்து, மாநில மற்றும் தொழிற்துறை அளவிலான கூட்டு போராட்ட இயக்கங்கள் மூலமாக, ஒன்றுபட்டுப் போராடி முறியடிக்க வேண்டும் என்று ஏஐடியுசி அறைகூவல் விடுக்கிறது. தமிழ்நாட்டில், மாநிலம் தழுவிய பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களைத் தன்னெழுச்சியாக முன்னெடுத்த இணைப்புச் சங்கங்களுக்கு ஏஐடியுசி வாழ்த்து தெரிவிக்கிறது. 12.05.2023 அன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் நிறைவடைய இருக்கும் தொடர் போராட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள, தமிழ்நாட்டின் தொழிற்சங்கங்கள் எடுத்த கூட்டு முடிவுக்கு ஏஐடியுசி மையம் முழு ஆதரவு தெரிவிக்கிறது. இந்தப் பிரச்சனையை ஒரு கௌரவப் பிரச்சனையாகக் கருதாமல், தமிழ்நாடு தொழிற்சாலை சட்ட விதிகளில் கொண்டு வந்துள்ள தொழிலாளர் விரோத சட்டதிருத்தத்தை தி.மு.க தலைமையிலான தமிழ்நாடு அரசாங்கம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று ஏஐடியுசி வலியுறுத்துகிறது.

அமர்ஜீத் கவுர்
பொதுச் செயலாளர், ஏஐடியுசி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button