இந்தியா

ஒன்றிய அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத மற்றும் தேச விரோத கொள்கைகளை அம்பலப்படுத்த ஆண்டு முழுவதும் போராட்ட இயக்கங்கள் – தொழிலாளர்களின் தேசிய மாநாடு அறைகூவல்!

தொழிலாளர்களின் தேசிய மாநாடு புதுடெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூசன் க்ளப் அரங்கத்தில் 2023 ஜனவரி 30 அன்று நடைபெற்றது.

இந்த மாநாட்டின் தொடக்க நிகழ்வாகப், பல்வேறு சமய நம்பிக்கைகள் மற்றும் பண்பாட்டு வழக்கங்களைக் கொண்ட மக்கள், ஒற்றுமையுடன், நல்லிணக்கத்துடன் வாழ்ந்திடுவதற்காக உயிர்த் தியாகம் செய்திட்ட மகாத்மா காந்தியடிகளின் நினைவுநாளை முன்னிட்டு, காந்தியடிகளுக்குப் புகழஞ்சலி செலுத்தப்பட்டது.

அமித் யாதவ்(ஐஎன்டியூசி), பினாய் விஸ்வம்(ஏஐடியுசி), க. அ. ராஜா ஸ்ரீதர்(எச்எம்எஸ்), கே ஹேமலதா(சிஐடியு), ஆர்.பராசர்(ஏஐயூடியூசி), ஜி.ஆர்.சிவ்ஷங்கர்(டியூசிசி), லதா பென் (சேவா), கே.கே.போரா(ஏஐசிசிடியூ), ரஷித் கான்(தொமுச), ஷத்ருஜித் சிங் (யூடியூசி) ஆகியோரைக் கொண்ட தலைமைக் குழு இம்மாநாட்டிற்குத் தலைமையேற்றது.

அனைத்து தொழில்களைச் சார்ந்த தேசிய சம்மேளனங்களின் தலைவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். அமைப்புசாரா தொழிலாளர், சுயதொழில் புரிவோர் என்று அனைத்து தரப்பு தொழிலாளர் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

ஐஎன்டியுசி துணைத் தலைவர் அசோக்குமார் சிங், ஏஐடியுசி பொதுச் செயலாளர் அமர்ஜித் கவுர், ஹர்பஜன் சிங் பொதுச் செயலாளர் எச்எம்எஸ், சிஐடியு பொதுச் செயலாளர் தபன் சென், ஏஐயூடியூசியின் நிர்வாகக்குழு உறுப்பினர் ராஜீந்தர் சிங்,கே.இந்து பிரகாஷ் மேனன், தலைவர் டியுசிசி, சோனியா ஜார்ஜ் தேசிய செயலாளர் சேவா, ராஜீவ் டிம்ரி, பொதுச் செயலாளர் ஏஐசிசிடியூ, மு. சண்முகம் எம்.பி.பொதுச் செயலாளர் தொமுச , அசோக் கோஷ் பொதுச் செயலாளர் யுடியுசி உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர்.

தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகள், பொதுத்துறையைத் தனியார்மயமாக்குவது, தேசத்தின் இயற்கை வளங்கள் மற்றும் சொத்துக்களை இந்திய மற்றும் அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தாரை வார்ப்பது, தேசத்தின் இறையாண்மை, சுயச்சார்பு, சுதந்திரம் ஆகியவற்றுக்குப் பேரபாயம் விளைவிக்கக்கூடிய சர்வதேச நிதி மூலதனத்திடம் இந்தியப் பொருளாதாரத்தை அடிபணியச் செய்வது ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதில் மேலும் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்பதைத் தலைவர்கள் வலியுறுதிப் பேசினார்கள்.

தங்களது உரையின் போது, அரசாங்கத்தின் முதலாளித்துவ ஆதரவுப் போக்கை அம்பலப்படுத்திய தொழிற்சங்க தலைவர்கள், ஹிண்டன்பெர்க் ஆய்வு அறிக்கை மற்றும் அதானி குழும நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆக்ஸ்பெம் அறிக்கையைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர்கள், அதிகரித்து வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கை நிலையை மிகவும் துன்பத்திற்கு உள்ளாக்குவதாகத் தெரிவித்தார்கள்.

அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்துள்ள இந்த அரசாங்கம், தங்களது வாழ்வாதார பிரச்சனைகளை முன்வைத்து ஒன்றுபட்டுப் போராடி வரும் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு மக்களின் கவனத்தை மடைமாற்றம் செய்திட வகுப்புவாதத்தையும், வெறுப்புணர்வையும் தூண்டும் சக்திகளை தற்போது அனுமதித்து வருகிறது.

அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிரான குரல்களை அரசாங்க அமைப்புகளைக் கொண்டு நெறிப்பதன் மூலம் நமது சமுதாயத்தின் மதச்சார்பற்ற ஜனநாயக விழுமியங்களைக் குழிதோண்டிப் புதைக்கிறது.

தேச ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தைப் பாதுகாத்திட, தேசநலன் கருதி இந்த அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத மற்றும் தேச விரோத கொள்கைகளை முறியடித்திட, தொழிலாளர்கள் அவரவர் தொழிற்சங்கத்தின் கீழ் ஒன்றிணைந்து, அனைத்து சக்திகளையும் ஒன்றுதிரட்டிப் போராடுவது என்று இம்மாநாடு தீர்மானம் ஏற்கிறது.

நவீன தாராளமய கொள்கைகளுக்கு எதிரான மாற்றை முன்வைக்கும் 14 அம்ச கோரிக்கைகளைத் தொழிலாளர்களின் இந்த தேசிய மாநாடு மீண்டும் வலியுறுத்துகிறது. அதன் அடிப்படையில், பின்வரும் போராட்ட இயக்கங்களை நடத்துவதென தீர்மானிக்கிறது.

2023 மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரையில் மாநில, மாவட்ட மற்றும் சம்பந்தப்பட்ட தொழில்துறை மாநாடுகளை/கூட்டங்களை நடத்துவது.

மாநாட்டு முடிவுகளின்படி, ஜூன் மாதம் தொடங்கி நடைபயணம், இருசக்கர வாகனம் மற்றும் ஜீப் வாகன ஊர்வலங்கள் நடத்துவது.

இந்தப் போராட்ட இயக்கங்கள் அனைத்தும், வெள்ளையனே வெளியேறு இயக்க தினமான ஆகஸ்ட் 09 முதல் மாநில அளவிலான இயக்கத்தில் சங்கமிக்கும்.

டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின் போது வலுப்பெற்ற விவசாயிகள்-தொழிலாளர்கள் ஒற்றுமை மேலும் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும்.

மாநாட்டுப் பிரகடனம் ஒருமனதாக ஏற்கப்பட்டது. இந்த ஆண்டின் இறுதியில் நாடு தழுவிய வேலைநிறுத்தம் மேற்கொள்ளுவது என்று இம்மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button